Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 2 ஜூன், 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 033

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் !!

உமாதேவியார் வழிபட்ட தலங்களில் பெருமைமிக்க தலம்தான் காஞ்சி. இத்திருத்தலத்தில் ஏகாலியர் மரபில் தோன்றியவர்களில் ஒருவர்தான் திருக்குறிப்புத் தொண்ட நாயனார். இவர் சிவபெருமானின் மீது மிகுந்த அன்பும், பக்தியும் கொண்டு எந்நேரமும் எம்பெருமானை வணங்கி வந்தார். அடியார்களுக்கு செய்யும் திருப்பணியானது சிவபெருமானுக்கு செய்யும் திருப்பணியாகும் என கருதி அடியார்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றினார். சிவனடியார்களின் உள்ளத்தின் திருக்குறிப்பை உணர்ந்து அவர்களுக்கு பணிவிடை செய்யும் தன்மையில் நிலைத்த மேன்மையால் இவருக்கு 'திருக்குறிப்புத் தொண்டர்" என்ற சிறப்புப்பெயர் கிடைத்தது.

திருக்குறிப்புத் தொண்டனார் அடியார்களின் உடைகளில் இருக்கும் மாசுக்களை அகற்றுவதால் தமது பிறப்பில் உள்ள மாசுக்கள் யாவும் அழிக்கப்படும் என்பதை உணர்ந்து அடியார்களின் ஆடைகளில் உள்ள மாசுகளை நீக்கும் பணியான துணிகளை துவைத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டார். திருக்குறிப்புத் தொண்டனார் செய்து வரும் திருப்பணியால் மகிழ்ந்த எம்பெருமான் அடியாரின் பக்தியையும், கீர்த்தியையும், அன்பையும் உலகறியச் செய்ய வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார். அதற்காக எப்போதும் போல் தமது திருவிளையாடல்களையும் நிகழ்த்த துவங்கினார்.

அதற்கான காலமும் நெருங்கத் துவங்கியது. அதாவது, எம்பெருமான் குளிர்காலத்தில் ஒரு சிவபக்தர் வேடங்கொண்டு மெலிந்த சரீரத்தையுடைய ஒரு வறியவர் போலாகி, அழுக்கடைந்த கந்தையுடன், திருநீறு பூசிய மேனியுடன் திருக்குறிப்புத் தொண்டர் இல்லத்திற்கு எழுந்தருளினார். குளிர்காலம் என்பதினால் நடுங்கி கொண்டே இருந்தார் அடியார் வேடத்தில் இருந்த எம்பெருமான். அடியாரின் வருகையை கண்டதும் தொண்டர் விரைந்து அடியாரிடம் சென்று அடிபணிந்து அவரை வரவேற்று அமரச் செய்தார்.

மெலிந்த உடல் கொண்டு திருவெண்ணீறு பூசிய அங்கமானது அழுக்கடைந்த கந்தல் துணி அணிந்திருப்பதைக் கண்டு மனம் வருந்தினார் திருக்குறிப்புத் தொண்டர். பின்பு தமது மனதில் எழுந்த ஐயத்தை அடியாரிடம் வினவினார். அதாவது அடியாரை வணங்கி... ஐயனே...!! தங்கள் தேகம் சொல்ல இயலாத அளவிற்கு உள்ளது... என்ன காரணம்? என்று வினவினார். அதற்கு சிறுபுன்னகை மட்டும் அளித்தார் அடியார் உருவத்தில் இருந்த எம்பெருமான். அந்த புன்னகையின் பொருளை யாதென்று புரியாமல் நின்று கொண்டிருந்தார் திருக்குறிப்புத் தொண்டர்.

அடியார் வடிவத்தில் இருந்த எம்பெருமானிடம் நாயனார் தேவரே...!! எம்முடைய இல்லத்தில் தாங்கள் எழுந்தருளியது எமது பாக்கியம். மேலும் தாங்கள் எமக்கு மேற்கொண்டு புண்ணியம் உண்டாக தங்களின் ஆடைகளை சுத்தம் செய்ய எனக்கு அனுமதி தரவேண்டும் என்றும், தங்கள் மேனியில் உள்ள திருநீறு போல் உங்கள் ஆடையை சுத்தமாக வெளுத்துத் தருகிறேன் என்றும் பணிவோடு கேட்டார்.

திருக்குறிப்புத் தொண்டர் மொழிந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்தவர் போல் பாவனை செய்தார் அடியார் உருவத்தில் இருந்த எம்பெருமான். தொண்டரே...! இந்த கந்தல் உடையையும் உம்மிடம் கொடுத்துவிட்டால் யாம் என்ன செய்வது? இந்த காலமானது குளிர்காலம். இந்த உடையையும் உன்னிடம் கொடுத்துவிட்டால் என் நிலைமை என்னவாகும்? என்னால் இதை சிந்தித்து பார்க்கவே முடியவில்லை என்று கூறினார்.

அடியாரின் கூற்றுகளை கேட்டதும் திருக்குறிப்புத் தொண்டர் சற்று மனவேதனை அடைந்தார். இருப்பினும் அடியாரிடம் தாங்கள் இவ்விதம் உரைத்தல் ஆகாது என்று கவலை கொண்ட முகத்துடன் கூறினார். இதனைக் கேட்டதும் சற்று சிந்திப்பது போல் அடியார் உருவத்தில் இருந்த எம்பெருமானும் பாவனை செய்தார். சிறிது யோசனைக்கு பின் மாலை மயங்குவதற்குள் எம்முடைய உடையை துவைத்து சுத்தமாக உலர்த்தி எம்மிடம் சேர்ப்பிக்க முடியும் என்றால் யாம் என்னுடைய உடையை உம்மிடம் கொடுகின்றோம் என்று கூறினார்.

அதனைக் கேட்டதும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்தி நீங்குவதற்குள் தங்களின் துணியை சுத்தமாக வெளுத்துக்கொண்டு வந்து தருகிறேன் என உறுதி கூறினார். தொண்டரைச் சோதிக்க வந்த அம்பலவாணர் தமது திருவிளையாடலை துவங்கினார். அதாவது தன்னிடம் இருந்த கந்தல் துணியைக் கொடுத்தார். அடியாரிடம் இருந்து பெற்றுக் கொண்ட கந்தல் துணியைக் கண்களில் ஒற்றிக்கொண்டு துணிகளை வெளுப்பதற்கான நீர் தேக்கம் நிறைந்துள்ள பகுதிக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் புறப்பட்டார். நீர் நிறைந்த பகுதியை அடைந்ததும் தொண்டர் ஆடையைத் துவைக்கத் தொ‌டங்கினார்.

எம்பெருமான் தமது விளையாட்டின் அடுத்த கட்டமாக வருணனை நினைத்தார். வருணனும் அவ்விடம் தோன்றினார். எம்பெருமான் வருணனுக்குக் கட்டளையிட்டார். உடனே வருணபகவான் பூலோகத்திற்கு வந்தார். வருணபகவான் தனது சக்தியினால் அனல் சூழ்‌ந்த வானம் திடீ‌ரென்று மறைக்கப்பட்டு கார் மேகங்களால் எங்கும் சூழப்பட்டது. மேகங்கள் சூளுகையால் எங்கும் இருட்டாக தோன்ற துவங்கியது.

அடியாரின் துணியை வெளுக்கச் சென்ற நாயனார், அங்கு நிகழும் மாற்றங்களை கண்டதும் தொண்டரின் இதயத்தில் இருள் சூழ்ந்தது. என்ன செய்வது? என்று புரியாமல் கண் கலங்கினார். இடியும், மின்னலும் ஒன்றொடொன்று கலந்து மழை பயங்கரமாகப் பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்திற்குள் மழை நின்றுவிடும் என்று எண்ணி ஏமாற்றம் அடைந்தார். மழை நிற்பதற்கான அறிகுறிகள் எதுவும் புலப்படவில்லை. பொழுது மட்டும் போய்க் கொண்டே இருந்தது.

ஆற்றங்கரைக்கு துணி வெளுக்க வந்த நாயனார் என்ன செய்வது? என்று தெரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தார். மேலும் நாயனாருக்கு நடுக்கம் ஏற்பட்டது. பெய்து கொண்டிருந்த மழையினாலோ அதனால் ஏற்பட்ட குளிரினாலோ நடுக்கம் ஏற்படவில்லை. அவர் அடியாரின் மீது கொண்டுள்ள பக்தியால் நடுக்கம் ஏற்படத் துவங்கியது. அது மட்டுமல்லாமல் அவருடைய கண்களில் கண்ணீர் மல்க துவங்கியது. அதனால் மனம் வருந்தி கொண்டிருந்தார். அனைத்தும் உணர்ந்த கங்கையை சிரத்தில் சூடிய எம்பெருமானே... நான் என்ன செய்வேன்? அடியாருக்கு செய்து கொண்டிருந்த திருப்பணியானது பாதிக்கப்பட்டுள்ளது? தொண்டருக்கு செய்யும் திருப்பணியில் இப்படியொரு பேரிடி வீழ்ந்து விட்டதே...

மழை ஆரம்பிக்கும்போதே வீட்டிற்குச் சென்று காற்றாட உலர்த்தியிருந்தால் கூட இந்நேரம் உலர்ந்திருக்குமோ? அவ்வாறு செய்யாமல் மழை நின்றுவிடும் என்று காலம் தாழ்த்தி இப்பொழுது ஈரத்துணியோடு நிற்கிறேன். எம் வீடு தேடி வந்த அடியாருக்கு என்ன பதில் கூறுவேன்? என்று மனதில் நினைத்த வண்ணம் கவலை கொண்டார். தள்ளாத வயதில் அப்பெரியவருக்கு இந்த அளவிற்கு கொடுமையைச் செய்த பாவியாகிவிட்டேனே? அந்தி சாய்வதற்குள் துணிகளை துவைத்து தருகிறேன் என்று வீரம் பேசிய நான் வெறும் வீணாகி விட்டேனே? அடியார்க்குத் துரோகியாக மாறிய பின்னும் இந்தப்பாவி உயிரை வைத்துக் கொண்டு உலகில் வாழ்வதா? ஆகாது... ஆகவே ஆகாது... என்று எண்ணினார்.

பின் திருக்குறிப்புத் ‌தொண்டர் துணி துவைக்கும் கருங்கல்லை நோக்கினார். தம் தலையைப் பாறையில் மோதி உடைத்துக் கொள்வதற்காக சென்றார். அதற்குமேல் தொண்டனைச் சோதனை செய்து புண்படுத்த விரும்பவில்லை ‌எம்பெருமான்... தொண்டரைக் காக்க திருவுள்ளம் பற்றினார். திருக்குறிப்புத் தொண்டர் தலை, கல்லில் மோதிச் சிதையுறுவதற்குள் எம்பெருமானின் மலர்க்கை பாறையில் இருந்து வெளிப்பட்டு அவரது தலையை பாறை மேல் படாமல் தாங்கிக் காத்தது. அருட்கரம் ஒன்று தம் தலையைத் தடுத்ததைக் கண்டு திருக்குறிப்புத் தொண்டர் திகைத்தார். அப்‌பொழுது ஆகாயத்தில் ஒரு பேரொளி பிறந்தது.

உமையாளுடன் விடையின் மீது காட்சியளித்தார் சிவபெருமான். திருக்குறிப்புத் தொண்டர் கீழே விழுந்து எழுந்து அவர்களை வணங்கினார். எம்பெருமான் அடியவரைத் திருமுகம் மலர நோக்கி மூன்று உலகத்திற்கும் உம்முடைய பெருமையையும், புகழையும் வெளிப்படுத்தினோம். இனிமேல் கயிலைக்கு வந்து எம்முடனே இருப்பீராக...!! என்று பேரருள் பாலித்தார். திருக்குறிப்புத் தொண்டர் பல காலம் உலகில் வாழ்ந்து திருத்தொண்டுகள் பல செய்தார். இறுதியில் இறைவன் மலரடி அணைந்து மகிழும் பேரின்பத்தைப் பெற்றார் திருக்குறிப்புத் தொண்ட நாயனார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக