Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 23 ஜூன், 2020

முட்டாள்களுக்கு வீண் உபதேசம்

வளையப்பட்டி என்ற ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரிடம் இரண்டு கழுதைகள் இருந்தன. அவை இரண்டும் ஒரு நாள் மிகவும் வருத்தத்துடன் பேசிக்கொண்டன. நாம் சுமந்து வரும் அழுக்கு துணிகள் மட்டும் சலவை செய்ததும் வெண்மையாக தெரிகின்றது! ஆனால், நாம் மட்டும் ஏன் அந்த துணிகளைப் போன்று வெண்மையாக மாற முடியவில்லை? என்று தங்களுக்குள் கேட்டுக்கொண்டன.

 அந்தப் பக்கமாக வந்த ஒரு ஆடு கழுதைகளின் முட்டாள் தனமான பேச்சை கேட்டு சிரித்தது. பின் கழுதைகளே! நலமா? என்று கேட்டது. ஆடே! நலம்தானே? எங்கள் சந்தேகத்தை தீர்க்க யாரும் வரவில்லையே என்று நினைத்தோம். நல்ல வேளை நீ வந்தாய்! என்று சொல்லி கழுதைகள் இரண்டும் ஆட்டினைப் பார்த்தன. கழுதைகளே! நீங்கள் பேசிக்கொண்டிருந்ததை நானும் கேட்டேன். உங்கள் முட்டாள் தனமான சந்தேகத்தை எப்படிப் போக்குவதென்று எனக்குத் தெரியவில்லை என்று கூறியது ஆடு.

 இதைக் கேட்ட கழுதைகளுக்கு கோபம் வந்தது. ஆடே! எங்களைப் பார்த்து முட்டாள்கள் என்று கூறுகிறாயா? எங்கள் சந்தேகத்திற்கு உன்னால் விடை கூற முடிந்தால் கூறு இல்லையேல் இந்த இடத்தை விட்டு ஓடு என்று கோபமாக கூறின. கழுதைகளே! நீங்கள் என் மீது ஏன் இப்படி கோபப்படுகிறீர்கள்? துணிகளும் நீங்களும் ஒன்றா? முட்டாள்தனமான உங்கள் கேள்விக்கு என்னால் எப்படி பதில் கூற முடியும்? அப்படியே நான் பதில் கூறினால் நானும் உங்களோடு சேர்ந்து முட்டாளாகிவிடுவேன் என்று கூறியது. பொறுமை இழந்த கழுதைகள் இரண்டும் தங்கள் கால்களால் ஆட்டினை எட்டி உதைத்தன. வலி தாங்காமல் நொண்டி நொண்டி நடந்து சென்றது ஆடு.

நீதி : 

முட்டாள்களிடம் பேசாமல் இருப்பதே நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக