பலியான குழந்தையின் பெயர் விஷ்ணு தேவ். சிறுவன் தனது தந்தை பூபதியுடன் தொட்டியம், அருகிலுள்ள அழகரை கிராமத்தில் வசித்து வந்தார். தினசரி கூலித் தொழிலாளியான, குழந்தையின் தந்தையும் அவரது மூத்த சகோதரர் கங்காதரனும் காவிரி ஆற்றில், மீன் பிடிக்க வெடிபொருட்களைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
செவ்வாய்க்கிழமை, கங்காதரன் தனது நண்பர்களான மோகன்ராஜ் மற்றும் தமிழரசன் ஆகியோருடன் இணைந்து, பாப்பாபட்டி கிராமத்தில் கல் குவாரி ஒன்றில் பணிபுரியும் செல்வகுமாரை அணுகி, காவிரி ஆற்றில் மீன்பிடிக்க மூன்று ஜெலட்டின் குச்சிகளை வாங்கினார். (நீரோட்டம் பகுதியில் வலையை விரித்து, மீன்களை பயமுறுத்தி வலையில் விழ வைக்க வெடிபொருளை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்).
பின்னர் அவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது இரண்டு ஜெலட்டின் குச்சிகளைப் பயன்படுத்தி விட்டு, மீதமான ஒன்றைக் வீட்டிற்கு கொண்டு வந்திருக்கின்றனர். இதனை பிஸ்கட் எனக் கருதிய விஷ்ணு, அந்த ஜெலட்டின் குச்சியை எடுத்து கடித்திருக்கிறான். அவனது வாயில் குச்சி வெடித்து பலத்த காயம் ஏற்பட்டது.
சத்தம் கேட்டதும், பூபதியும், கங்காதரனும் சிறுவனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிறுவன் வழியிலேயே இறந்துவிட்டான். பின்விளைவுகளுக்கு பயந்து, குழந்தை இறந்ததை மறைத்து, அதே இரவில் இறுதி மரியாதைகளை நடத்திவிட்டனர்.
இதுகுறித்து, தகவல் அறிந்த முசிறி டி.எஸ்.பி.செந்தில்குமார், கங்காதரன், மோகன்ராஜ், பூபதி மற்றும் செல்வராஜ் ஆகியோரை கைது செய்தார். தப்பி ஓடிய தமிழரசன் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக