Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 17 ஜூன், 2020

கும்பகர்ணனின் போர்!...

போர் தொடங்கியது. அரக்க சேனைகளும், வானர சேனைகளும் எதிர்த்துப் போர் புரிந்தன. வானர வீரர்கள் கற்களையும், மலைகளையும், பாறைகளையும் அரக்கர்கள் மீது எறிந்தனர். அரக்கர்கள் வில், வேல், சூலம் முதலிய ஆயுதங்களை வானரங்கள் மீது எறிந்தனர்.

அரக்கர்களின் வில்லில் இருந்து வெளிவந்த அம்பு பல வானரங்களை கொன்றது. பதிலுக்கு வானரங்களும் மலை, பாறை, கல், மரம் முதலியவற்றை தூக்கி எறிந்தனர். இப்படி போர் மிக கடுமையாக நடந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து கொண்டிருந்த தேவர்கள் திகைத்து நின்றனர். 

அப்பொழுது கும்பகர்ணன் போர்களத்திற்கு வந்தான். அவனிடம் பல வானரங்கள் அகப்பட்டனர். வானரங்கள் மலைகளை தூக்கி கும்பகர்ணன் மீது எறிந்தனர். ஆனால் அதை அவன் தூள் தூளாக்கினான்.

கும்பகர்ணன் தன்னிடம் அகப்பட்ட வானரங்களை வானத்தில் தூக்கி எறிந்தும், சில வானரங்களை வாயில் போட்டு உமிழ்ந்தும், சில வானரங்களை தன் கால்களால் மிதித்தும் கொன்றான். கும்பகர்ணன் இப்படி வானரங்களை கொன்று குவிப்பதை பார்த்த தேவர்கள் பயந்து ஓடினர். 

அப்போது நீலன், கும்பகர்ணன் மீது பெரும் மலையை தூக்கி எறிந்தான். கும்பகர்ணன் அதை தன் சூலத்தால் பொடி பொடியாக்கினான். பிறகு நீலன், கும்பகர்ணனின் தேரில் ஏறி அதிலிருந்த ஆயுதங்களை தூக்கி எறிந்தான். 

நீலன் எந்த ஆயுதங்களும் இல்லாமல் போர் புரிந்ததால், கும்பகர்ணனும் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தவில்லை. நீலன் கும்பகர்ணனை என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றான்.

அப்போது கும்பகர்ணன், நீலனை தன் கையால் ஒரு தட்டு தட்டினான். இதனால் நீலன் மயங்கி கீழே விழுந்தான். இதைப் பார்த்த அங்கதன், கும்பகர்ணன் மீது ஓர் மலையை தூக்கி வீசினான். கும்பகர்ணன் அந்த மலையை தன் கைகளால் தூள் தூளாக்கினான். 

பிறகு அவன் அங்கதன் மீது ஓர் அம்பை ஏவினான். அங்கதன் அந்த அம்பை தன் கைகளால் பிடித்து கும்பகர்ணன் மீது எறிய ஓடி வந்தான். அப்போது கும்பகர்ணன், அங்கதனை பார்த்து, வானரமே! நீ யார்? வாலியின் மகனா? இல்லை சுக்ரீவனா? இல்லை இலங்கைக்கு தீ வைத்த அனுமனா? என்றான். அங்கதன், அரக்கப்படை தலைவனே! உன் அண்ணனான இராவணனை தன் வாலில் கட்டி, இரத்தம் சிந்த எட்டு திசைகளிலும் தாவி போர் புரிந்த வாலியின் மகன் நான். என் பெயர் அங்கதன்.

என் தந்தையை போலவே நானும் உன்னை என் வாலில் கட்டி இராமரின் பாதங்களில் வீழ்த்துவேன் என்றான். அப்போது கும்பகர்ணன், நீ சொல்வது சரிதான். உன் தந்தையை தன் ஓர் கணையால் வீழ்த்திய இராமனுக்கு நீ செய்ய வேண்டிய தொண்டு மிகவும் பாராட்டத்தக்கது என நகைத்தான். 

அப்போது அங்கதன், மலைகளை தூக்கி கும்பகர்ணன் மீது வீசினான். அம்மலை கும்பகர்ணன் மீது பட்டு பொடியானது. கும்பகர்ணன், தன் சூலாயுதத்தை அங்கதன் மீது வீசினான். அங்கதன் அந்த சூலாயுதத்தை தன் கைகளால் பிடித்து கும்பகர்ணன் மீது திருப்பி எறிந்தான். 

கும்பகர்ணன் அந்த சூலாயுதத்தை பொடி பொடியாக்கிவிட்டு அங்கதன் மார்பில் ஓங்கி குத்தினான். இதனால் அங்கதன் அந்த இடத்தில் மயங்கி விழுந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக