Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 3 ஜூன், 2020

அசுவத்தாமன் பாண்டவர்களின் புதல்வர்களை அழித்தல்..!

அசுவத்தாமன் செய்த தவம் பலித்தது. இறைவன் அவன்முன்பு தோன்றி, என்னை நினைத்து எதற்காக தவம் செய்தாய்! உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார். 

அசுவத்தாமன் இறைவனிடம் பாண்டவர்களை கொல்வதற்கு எனக்கு ஓர் அஸ்திரத்தை வரமாக அளித்து உதவுங்கள் என்று கேட்டான். இறைவனும் அவனுடைய விருப்பப்படியே ஓர் அஸ்திரத்தை வரமாக கொடுத்து விட்டுச் சென்றார். 

இறைவனிடம் அஸ்திரத்தை பெற்ற பின்பு அசுவத்தாமன் புதிய ஊக்கம் பெற்று கிருபாச்சாரியையும், கிருதவன்மாவையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு மீண்டும் பாண்டவர்களின் பாசறையை நோக்கிச் சென்றான். மீண்டும் இவர்கள் வருவதைக் கண்டு பூதம் ஆவேசமாகப் பாய்ந்தது.

ஆனால் அசுவத்தாமன் தன்னிடமிருந்த தெய்வீக அஸ்திரத்தைக் காட்டியவுடன் பூதம் பயந்து அங்கிருந்து ஓடிவிட்டது. பூதம் ஓடியபின்பு தன்னோடு வந்திருந்த இருவரையும் பாசறை வாயிலில் காவல் வைத்துவிட்டு ஆயுதங்களோடு அசுவத்தாமன் மட்டும் பாசறைக்குள் நுழைந்தான். 

அங்கு அவன் எதிர்பார்த்தது போல் பாண்டவர்கள் பாசறையில் இல்லை, படை வீரர்களும், துஷ்டத்துய்ம்மனும் மட்டும் உறங்கிக்கொண்டிருந்தனர். துஷ்டத்துய்மன் உறங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அசுவத்தாமன் அவனை வெட்டிப் படுகொலை செய்தான். அந்த சத்தத்தில் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட சிகண்டி முதலிய பாஞ்சால தேசத்து வீரர்கள் அசுவத்தாமனை எதிர்த்தனர்.

ஆனால் அவனிடமிருந்த ஆயுதத்தால் அவர்களையும் கொன்று வீழ்த்தினான். அப்போது பாண்டவர்களின் புதல்வர்கள் ஐந்து பேரும் எழுந்து அசுவத்தாமனைத் தாக்க முயன்றனர். பாண்டவர்களின் புதல்வர்களும் பார்ப்பதற்கு பாண்டவர்களைப் போலவே இருந்ததால் அசுவத்தாமன் அவர்களை பாண்டவர்கள் என்று எண்ணிக் கொண்டு துரியோதனனிடம் வாக்களித்தபடி அவர்கள் ஐந்து பேருடைய தலைகளையும் அறுத்துத் தள்ளிவிட்டான். அசுவத்தாமன், பாண்டவர்கள் பாசறையிலிருந்த அனைவரையும் வென்று முடித்தபின் பாண்டவர்களின் புதல்வர்களின் ஐந்து தலைகளையும் எடுத்துக்கொண்டு சமந்த பஞ்சக மலைக்கு கிளம்பினான்.

அங்கு துரியோதனன் இருந்த பூந்தோட்டத்திற்குள் நுழைந்து, துரியோதனனிடம்! என் சபதத்தை நிறைவேற்றிவிட்டேன். உன்னிடம் கூறிய படி பாண்டவர்களின் தலைகளை அறுத்துக்கொண்டு வந்துவிட்டேன்! என்று கூறித் தலைகளை துரியோதனன் முன்பு வீசி எறிந்தான். துரியோதனன் மெல்ல எழுந்து தனக்கு முன் இருந்த தலைகளை உற்றுப் பார்த்தான். அடுத்த கணம் அசுவத்தாமனை பார்த்து, பாண்டவர்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்களின் புதல்வர்களை கொன்று தலையை கொண்டு வந்திருக்கிறாயே! என்று அசுவத்தாமனிடம் கடுமையாக பேசினான். தலைகளை வெட்டிக்கொண்டு வந்ததற்கு துரியோதனன் தன்னைப் பாராட்டி நன்றி கூறுவான் என்று எதிர்பார்த்த அசுவத்தாமனுக்குப் பெரிதும் ஏமாற்றமாக இருந்தது.

தான் வெட்டியது பாண்டவர்கள் தலைகள் என்று எண்ணிக் கொண்டிருந்த அசுவத்தாமனுக்கு இப்போது பாண்டவர்களின் புதல்வர்கள் தலைகளை வெட்டி விட்டோம் என்று உணர்ந்தபோது மன வேதனையில் துரியோதனன் முன்பு தலைகுனிந்து நின்றான். பிறகு அசுவத்தாமன் அங்கிருந்து புறப்பட்டு பாசறைக்கு வந்து கிருபாச்சாரியனையும், கிருதவன்மனையும் அழைத்துக் கொண்டு வியாசர் வசித்து வந்த ஆசிரமத்தை நோக்கிச் சென்றான். அசுவத்தாமன் சென்றபின்பு சஞ்சயன் சமந்த பஞ்சகத்துப் பூஞ்சோலைக்கு வந்து மரணப்படுக்கையிலிருந்த துரியோதனனைச் சந்தித்தான். துரியோதனன் சஞ்சயனிடம்! இன்னும் சில விநாடிகளில் நான் இறந்து விடுவேன். இறப்பதைப்பற்றி எனக்குப் பயமில்லை. என்னைப்போன்று வாழ்நாள் முழுவதும் தீமையே செய்து வாழ்ந்த யாருக்கும் இப்படிப்பட்ட மரணம் தான் கிடைக்கும் என்று கூறினான்.

துரியோதனனின் உயிர் மெல்லப் பிரிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவன் செய்த தீமைகளை எண்ணிக் கண்ணீர் விட்டான். பிறகு சஞ்சயனிடம் அஸ்தினாபுரத்துக்குச் சென்று என் பெற்றோரிடம் என்னுடைய மரணச் செய்தியை தெரிவிக்க வேண்டும் என்று கூறினான். உங்கள் மகன் துரியோதனன் நிமிர்ந்த தலையுடன் வணங்காமுடி மன்னனாக அரசாண்டான். ஆனால் இப்போது குனிந்த தலையுடன் குற்றங்களை எண்ணி வருத்தத்துடன் சமந்த பஞ்சகத்துப் பூஞ்சோலையில் ஒரு குற்றவாளியாக மரணத்தை நோக்கி காத்து கொண்டிருக்கிறான் என்று அவர்களிடம் சொல்ல வேண்டும் என்றான். பின்பு துரியோதனன் இரு கைகளையும் தூக்கி சஞ்சயனுக்கு நமஸ்காரம் செய்ததும், அவன் உயிர் பிரிந்தது. துரியோதனனுடைய மரணத்தை சஞ்சயன் காண விரும்பாமல் அங்கிருந்து புறப்பட்டு அஸ்தினாபுரத்திற்கு சென்றான்.

சஞ்சயன் அங்கு சென்று திருதராஷ்டிரனுக்கும் காந்தாரிக்கும் துரியோதனனுடைய மரணச் செய்தியைத் தெரிவித்து ஆறுதல் கூறினான். வியாசர் ஆசிரமத்தை அடைந்த அசுவத்தாமன் முதலிய மூவரும் வியாச முனிவரை வணங்கி நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் அவரிடம் கூறினர். வியாச முனிவர் அசுவத்தாமனிடம் நீ செய்தது பெரும் பாவச் செயல். அந்தப் பழியைப் போக்கிக் கொள்வதற்கு தவம் செய்வதை தவிர வேறு வழியில்லை. நீயும் கிருபாச்சாரியனும் இந்த ஆசிரமத்தில் தங்கி உங்கள் பழி, பாவம், நீங்க வேண்டுமென்று இறைவனை நோக்கி நீண்ட நாள் பெருந்தவம் செய்யுங்கள். கிருதவன்மன் அவனுடைய நாட்டுக்குத் திரும்பிச் செல்லட்டும் என்று யோசனை கூறினார். வியாசர் கொடுத்த யோசனைப்படி அசுவத்தாமனும், கிருபாச்சாரியனும், தவம் செய்யத் தொடங்கினர். கிருதவன்மன் வியாசரை வணங்கிவிட்டு தன் நாட்டிற்கு திரும்பிச் சென்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக