திருநாவுக்கரசு நாயனார் !!
பல்லவ நாட்டின் விழிகளாக திருமுனைப்பாடி அமைந்துள்ளது. இவ்விடத்தில் மிக உயர்ந்த மாடங்களும், கோபுரங்களும், பண்டக சாலைகளும், மணிமண்டபங்களும், சிவத்தலங்களும் நிறைந்துள்ளன. புதிய மலர் கொத்துக்களைத் தாங்கிக் கொண்டு பெருகி ஓடிவரும் பெண்ணையாற்றின் பெருவளத்தினால் செந்நெல்லும், செங்கரும்பும் செழித்து காணப்பட்டன.
அங்கு வாழ்ந்து வந்த மக்கள் நல்லொழுக்கத்திலும், நன்னெறியிலும் சிறந்தவர்களாக திகழ்ந்தனர். திருமுனைப்பாடி நாட்டில் அமைந்துள்ள ஓர் ஊர்தான் திருவாமூர். அங்கு பல குலத்தினர் வாழ்ந்து வந்தனர். அதில் சிறந்து விளங்கிய வேளாளர் குலத்தில் குறுக்கையர் குடியில் புகழனார் என்னும் நாமம் கொண்ட சிவத்தொண்டர் ஒருவர் இருந்தார்.
அவர் மனைவியார் மாதினியார் என்று அழைக்கப்படும் பெருமனைக் கிழத்தியர். அம்மையார் பெண்களுக்கு உண்டான மென்மையும், நாணமும் கொண்ட தன்மை உடையவராக விளங்கினார்கள். தம்பதிகள் இருவரும் இல்லற நெறி உணர்ந்து வள்ளுவன் உரைத்த வாக்குக்கு ஏற்ப வாழ்ந்தனர். இல்லறமும் நல்லறமாக நடத்திக் கொண்டு வாழ்ந்து வந்த தம்பதிகளுக்கு இறைவன் அருளால் மாதினியார் கருவுற்றாள்.
அம்மையார் மணி வயிற்றில் திருமகளே வந்து தோன்றினாற்போல் அருள்மிக்க அழகிய பெண்குழந்தை பிறந்தது. அப்பெண் குழந்தைக்குத் திலகவதி என்று திருநாமம் சூட்டிப் பெற்றோர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். திலகவதியார் தளிர்நடை பயின்று குழந்தைப்பருவம் அடையும் நாளில் அம்மையார் மீண்டும் கருவுற்றார். அம்மையார் மணிவயிற்றிலிருந்து எம்பெருமானின் அருள்வடிவமாக... சைவம் ஓங்க... தமிழ் வளர... கலைகள் செழிக்க... மருள் எல்லாம் போக்கும் அருள் வடிவமாக கோடி சூரியப் பிரகாசத்துடன் கூடிய ஆண்குழந்தை பிறந்தது. பெற்றோர்கள் அந்த ஆண்குழந்தைக்கு மருள் நீக்கியார் என்று நாமகரணம் சூட்டினார்கள்.
மருள் நீக்கியார் முற்பிறவியில் வாகீச முனிவராக இருந்தார். முனிவர் எம்பெருமானின் திருவடியை அடைய திருகைலாயத்தில் அமர்ந்து அருந்தவம் புரிந்து வந்தார். ஒரு சமயத்தில் இராவணன் புஷ்பக விமானத்தில் திருகைலாயத்திற்கு வந்து கொண்டிருந்தான். புஷ்பக விமானம் கைலாய மலைக்கு அருகில் சென்றதும் அங்கு எழுந்தருளியிருந்த நந்தியெம்பெருமான் இராவணனிடம் இப்புண்ணிய மலை எம்பெருமான் எழுந்தருளி இருக்கின்ற திருமலை ஆகும்.
ஆகையால் நீ வலது பக்கமாக சென்று வருவாயாக...!! என்று பணிந்தார். ஆனால் அறிவு இழந்த இராவணன் நந்தியெம்பெருமானுடைய பெருமையையும், எம்பெருமானின் மீது கொண்டுள்ள பக்தியின் வலிமையையும் உணராமல் இருந்தான். மேலும் மந்தி போல் முகத்தை வைத்துக் கொண்டிருக்கும் நீ இந்த மாவீரன் இராவணனுக்கா அறிவுரை கூறுகின்றாய்? என்று கோபத்தோடு கூறினான்.
இராவணன் கூறிய வார்த்தைகளால் அளவு கடந்த கோபம் கொண்ட நந்தியெம்பெருமான் அப்படியென்றால் நீ ஆட்சி செய்யும் உன் நாடும், உன் வீரமும் குரங்கினாலேயே அழிந்து போகட்டும் என்று கூறிச் சாபம் கொடுத்தார். இதனால் கோபம் கொண்ட இராவணன் என்னைத் தடுத்து நிறுத்திய இந்த கைலாய மலையை அடியோடு பெயர்த்து நான் ஆட்சி செய்யும் எனது நாட்டிற்கு எடுத்து செல்கிறேன் என்று கூறி தனது தவ வலிமையால் இருபது கரங்களாலும் மலையை தூக்க துவங்கினான்.
அச்சமயத்தில் பார்வதி தேவியுடன் நவமணி பீடத்தில் எழுந்தருளியிருந்த எம்பெருமான், இராவணின் இச்செயலால் மிகுந்த கோபம் கொண்டு தமது தண்டை சிலம்பணிந்த சேவடி பாதப்பெருவிரல் நுனி நகத்தால் லேசாக அழுத்தினார். அக்கணத்தில் இராவணனது இருபது கரங்களும் கைலாய மலையினடியில் சிக்கியது. மலை அடிவாரத்தில் இராவணன் கரங்களை அசைக்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்தான். அதனால் ஏற்பட்ட வலியினால் ஓலக்குரல் எழுப்பினான். அவ்வேளையில் அந்த மலையில் தவமிருந்து வந்த அருந்தவசியான வாகீசரின் செவிகளில் இராவணனின் குரல் வீழ்ந்தது.
இக்குரலைக் கேட்டதும் குரல் வந்த திசையை நோக்கி சென்றார். அங்கு வந்து இராவணனின் நிலையைக் கண்டு வாகீசரின் மனம் இளகியது. இராவணன் மீது கொண்ட அன்பினால் அவனது துயரம் நீங்குவதற்கு நல்லதொரு உபாயம் சொன்னார். அதாவது எம்பெருமான் இசைக்கு கட்டுப்பட்டவர் என்றும், அவரை இசையால் நீ வசப்படுத்தினால் உனக்கு இத்துயரத்திலிருந்து விடுபடுவதற்கு உகந்த வழி கிடைக்கும் என்றும் கூறினார். வாகீச முனிவரின் அருளுரை கேட்ட இராவணன் தனது உடம்பில் உள்ள நரம்பை யாழாக்கி பண் இசைத்தான். எம்பெருமானின் திருவடிகளை போற்றி பணிந்தான்.
எம்பெருமான் அடியாரின் அன்பிற்கு கட்டுப்பட்டவர் அல்லவா?. இராவணன் இசைத்த இசையில் எம்பெருமான் கொண்ட கோபமானது குறைந்து எம்பெருமானின் மனமானது குளிரத் துவங்கியது. முழுவதுமாக சினம் குறைந்த எம்பெருமான் இராவணனின் பிழையைப் மன்னித்து இராவணன் முன்னால் பிரசன்னமானார். இராவணன் அனுபவித்து கொண்டிருந்த இன்னல்களில் இருந்து அவனை விடுவித்து தன்னை இசையால் மயக்கிய ராவணனுக்கு சந்திஹாஸம்ய என்னும் வாள் ஒன்றை அளித்ததோடு மட்டுமல்லாமல் இந்த பூவுலகில் ஐம்பது லட்சம் ஆண்டுகள் உயிர்வாழும் பெரும் பேற்றினையும் அளித்தார். இராவணன் எம்பெருமானைத் தோத்திரத்தால் போற்றி வழிபட்டான். பரமன் அளித்த வரத்தினாலும், அவர் அளித்த வாளுடன் தனது ராஜ்ஜியமான இலங்கைக்கு பெரும் மகிழ்ச்சியுடன் சென்றான்.
ஆனால் நந்திதேவருக்கு மட்டும் வாகீச முனிவர் செயலால் அவர் மீது மிகுந்த சினம் உருவாகியது. அந்த கோபத்தின் விளைவாக வாகீச முனிவர் நந்திதேவரிடம் சாபத்தை பெற்றார். அதாவது, அசுரகுல வேந்தராகிய இராவணனுக்கு நீர் செய்த உதவி என்பது குற்றமாகும். நீர் செய்த இப்பிழைக்கு பூலோகத்தில் பிறப்பாயாக...!! என்று சாபம் கொடுத்தார். அவர் அளித்த அந்த சாபத்தின் விளைவாக வாகீச முனிவர் மாதினியார் மணிவயிற்றில் அவதரித்தார். அதன் பின் திலகவதியும், மருள் நீக்கியாரும் பிறந்தனர். அவர்கள் நல்ல குணம் மற்றும் பண்புகளுடனும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து குழந்தைப் பருவத்தைக் கடந்தனர். இருவரும் கல்வி வேள்விகளில் மேம்பட்டு சகல கலா வல்லவர்களாக விளங்கினர்.
காலம் கடந்து பனிரெண்டாவது அகவையை எடுத்து வைக்க துவங்கிய காலத்தில் திலகவதியை மணம் முடித்து வைக்க பெற்றோர்கள் விரும்பினார்கள். தனது மகளுக்கான வாழ்க்கை துணையை முடிவு செய்தனர். திலகவதியை மணக்க போகும் மணாளன் அரசனிடம் சேனாதிபதியாக பணியாற்றும் கலப்பகையார் என்னும் வீரர் ஆவார். தனது மகளுக்கான திருமண ஏற்பாடுகளை முன்னின்று கவனிக்க துவங்கினார் புகழனார். ஆயினும் காலம் என்பது பொன் போன்றது அல்லவா? காலம் தனது பணியை செய்யத் தொடங்கியது.
அதாவது, மகளுக்கான திருமண ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த அந்த மகிழ்ச்சியான தருணத்தில் யாவரும் எதிர்பாராதவிதமாக குணத்தாலும் மற்றும் பண்புகளாலும் கல்வி, வேள்விகள் என அனைத்திலும் குணவதியாக திகழ்ந்து கொண்டிருந்த திலகவதி அம்மையாரின் தந்தையார் விண்ணுலகம் ஏய்தார். தந்தையாரின் மறைவு என்பது குடும்பத்திலிருந்த அனைவருக்கும் மிகப்பெரிய இழப்பாக இருந்தது. தனது கணவர் மறைந்துவிட்டார், இனி அவரை காண இயலாது என்ற எண்ணமும், அவருடைய இழப்பும் தாங்க இயலாத மாதினியாரும் தனது கணவர் சென்ற இடமான எம்பெருமானின் திருவடியில் சென்று ஒடுங்கி நின்றாள்.
தாய், தந்தையர்கள் இருவரும் மறைந்த நிலையில் திலகவதியாரும், மருள் நீக்கியாரும் என்ன செய்வது? என்று புரியாமல் பெரும் துயரத்தில் வாடத் துவங்கினர். இந்த நிலை என்பது இதோடு நில்லாமல் முப்பிறவியில் நாம் செய்த வினை என்பது நமது நிழல் போல் தொடர்ந்து இப்பிறவில் நாம் விதி பலனை அனுபவிக்க வேண்டும் என்ற கட்டாயத்தின் அடிப்படையிலேயே அடுத்தடுத்த இழப்புகளையும் அவர்கள் சந்திக்க துவங்கினர்.
அதாவது, கெட்ட குடியே கெடும் என்பது போல திலகவதி அம்மையாருக்கு மணமகனாக நிச்சயிக்கப்பட்டிருந்த கலிப்பகையார் போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தார். என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது? என்று கூட புரியாத வயதில் இந்தச் செய்தியைக் கேட்டதும் திலகவதி அம்மையார் மனம் உடைந்த நிலையில் மிகவும் துன்பத்தில் ஆழ்ந்தார். தங்களது வாழ்க்கையில் ஒரு புறம் பெற்றோர்களின் இறப்பும், மறுபுறம் அவர்களால் நிச்சயிக்கப்பட்ட மணமகன் இறப்பும், அம்மையாரின் வாழ்க்கையில் மாறுபட்ட நிலைகளை உருவாக்கத் தொடங்கியது. பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு இறந்த மணாளனை கண்ட மாத்திரத்தில் திலகவதி அம்மையார் அவரை தனது கணவனாகவே எண்ண துவங்கினார். நினைவுகளுடன் அவருடன் வாழ்ந்து கொண்டிருந்தார். இந்நிலையில் தான் கண்ட கனவுகள் அனைத்தும் உடைக்கப்பட்டது.
அதாவது ஒளி இல்லாமல் மலர்ச்சியை இழக்கும் மலர்போல், துன்பங்கள் படர்ந்த இந்த நிலையில் என்ன செய்வதென்று புரியாமல் இனியும் இந்த உடலில் உயிர் இருக்க வேண்டுமா? என் கணவர் சென்ற இடத்திற்கு சென்று விடுகின்றேன் என்று மனதளவில் எண்ணத் துவங்கினார். இந்த எண்ணத்தின் காரணமாக தனது உயிரை போக்கிக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளத் துவங்கினாள். இதை அறிந்த மருள்நீக்கியார் தமது தமக்கையாரிடம் சென்று என் உடன்பிறந்த என் அருமை சகோதரியே...!! நமது பெற்றோர்கள் இருவரும் நம்மை விட்டு அகன்றுவிட்டனர். அவர்கள் இல்லாத இந்த உலகில் உம்மை அவர்களாக எண்ணி எனது மனமானது ஓரளவு உறுதியுடன் இருந்து கொண்டிருக்கின்றது.
எனக்கு இன்று உலகில் அச்சாணியாக இருக்கின்ற தாங்களும் என்னை தனிமையில் விட்டுச் சென்றால் நான் என்ன செய்ய இயலும்? யாம் யாருக்காக வாழ வேண்டும்? இந்த தரணியில் எமெக்கென்று எவர் உள்ளார்? ஆகையால் தங்களுக்கு முன்பாகவே யான் எமது உயிரைத் துறப்பது என்பது திண்ணம் என்று கூறி அழுதார். தனது உடன் பிறந்தோரின் கூற்றுக்களை கேட்டதும் அவன் மீது கொண்ட அளவற்ற அன்பினாலும், பாசத்தினாலும் தான் எடுத்த முடிவை மாற்றிக்கொண்டார் திலகவதியார்.
தமது பெற்றோர்கள் இல்லாத தமது உடன்பிறந்தவனுக்கு தானே எல்லாமுமாக இருந்து அவனுக்காக வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்டார் திலகவதி அம்மையார். ஆயினும் இனி மேற்கொண்டு வைரம், தங்கம் போன்ற அணிகலன்கள் மற்றும் பளபளக்கும் புதிய ஆடைகள் என யாவற்றையும் வெறுத்து உலகப்பற்றில் இருந்து விடுபட்டு எல்லா உயிர்களிடத்திலும் அன்பு கொள்ளும் சிறந்ததொரு மங்கையாக தனது சகோதரருடன் வாழ முடிவு கொண்டார். தமக்கையார் தனக்காக தனது முடிவுகளை மாற்றிக் கொண்டு தன்னுடன் வாழ விரும்பியதை அறிந்ததும் மருள் நீக்கியார் தன்னிடம் இருந்த அனைத்து துன்பங்களையும் களைந்து மனமகிழ்ச்சி கொண்டார். இந்த நிகழ்வானது அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. மருள் நீக்கியார் தனது மனதளவில் யாவற்றையும் சிந்திக்கத் தொடங்கினார்.
இந்த உலகில் யாவும் நிலையாமை என்ற உண்மையை உணரத் துவங்கினார். அதாவது, இந்த உலகில் உயிர்களின் இளமைப்பருவம் என்பதும், அவர்கள் கொண்டுள்ள செல்வச்செழிப்பு என்பதும் நிலையாமையே என்பதை நன்கு உணர துவங்கினார். இந்த எண்ணங்களானது அவரை சிறந்ததொரு வழியில் அவரை பயணிக்கத் துவங்க வைத்தது. இந்த எண்ணத்தின் விளைவாகவே அவரை நல்லறங்கள் செய்வதில் ஈடுபடுத்த துவங்கியது. தன்னிடமுள்ள செல்வங்களைக் கொண்டு திருவாமூரில் பல அறப்பணிகளை செய்ய துவங்கினார். பழுதடைந்த சாலைகளை செப்பனிட்டார். மக்களுக்கு தேவையான தண்ணீர் பந்தல்களையும் அமைத்துக் கொடுத்தார். நகரத்தில் இருக்கும் காலிமனைகளில் அழகிய சோலைகளை வடிவமைத்தார். பல நீர்நிலைகளை புதிதாகவும், பழுதடைந்த நீர்நிலைகளையும் புதுப்பிக்க தேவையான பொருள் உதவிகளையும் செய்தார். தமது உறவினர்களை வரவழைத்து அவர்களுக்கு வேண்டியவற்றை கொடுத்து அவர்களிடம் பகிர்ந்து உறவாடி கொண்டிருந்தார்.
தம்மை நாடி வந்த புலவர்கள் மற்றும் வறுமை நிலையில் உள்ள புலவர்களையும் அறிந்து அவர்கள் முகம் மாற பல பரிசுகள் என அனைத்தும் அளித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொண்டிருந்தார். இத்தகைய பெருமைக்கு உரியவராக இருந்தார் மருள் நீக்கியார். இத்தகைய அறநெறியில் சிறு இடர்பாடுகளும் ஏற்படாத வண்ணம் வாழ்ந்து வந்த மருள் நீக்கியார். உலக வாழ்க்கையில் பற்றற்று வாழவேண்டிய சமயம் எதுவென்று ஆராய்ச்சிகளை மேற்கொள்ள துவங்கினார். அந்த ஆராய்ச்சியின் விளைவு என்பது சமண சமயமே உலகில் பற்றற்று வாழ்வதற்கு சிறந்ததொரு சமயமாக அவர் எண்ண துவங்கினார்.
ஐந்தெழுத்து மந்திரத்தின் மகிமையும், திருநீறு பூசுவதன் திறத்தையும் உணர்ந்த மருள் நீக்கியார் சமண நூல்களைக் கற்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு சமண சமயத்தில் இணையத் துவங்கினார்.
சமண நூல்களைக் கற்று அறியும் பொருட்டு தமது நகரத்திற்கு அருகில் உள்ள பாடலிபுரத்திற்கு சென்று அங்குள்ள சமணப் பள்ளியில் மாணவராக சேர்ந்தார் மருள் நீக்கியார். அவ்விடத்தில் சில காலம் தங்கியிருந்து சமண நூல்களை கற்றறிந்து வல்லுனராக திகழ்ந்தார். சிறிது காலத்திற்குள்ளாகவே சமண சமயத்தில் இருந்த அனைத்து கருத்துக்களையும் படித்து கற்றுணர்ந்தார். மருள்நீக்கியாரின் புலமையைப் பாராட்டி அவருக்கு அங்கிருந்த சமணர்கள் 'தருமசேனர்" என்னும் சிறந்த பட்டத்தை கொடுத்து அவரை கௌரவித்தனர். மேலும் மேலும் அவர் சமண சமயத்தில் பலவிதமான ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ளத் துவங்கினார்.
இந்த ஆராய்ச்சியின் விளைவு அவரை ஒரு முறை பௌத்திரர்களுடன் வாதாட வைத்தது. அந்த வாதத்தில் பௌத்திரர்களின் அனைத்து வாதங்களுக்கும் பதில் அளித்து இறுதியில் மருள் நீக்கியாரே வெற்றி வாகையும் சூடினார். அந்த வெற்றி வாகையானது சமண தலைமைப் பதவியையும் பெற்றுக் கொடுத்தது. மேகங்கள் சூழ்ந்த ஆகாயத்தில் உருவாகும் மழையும், இடியும் அவை சென்றடையும் இடங்களை பொருத்து மாறுபடுகின்றன. அதைப்போலவே சமண சமயத்தில் ஆழ்ந்த ஞானத்தையும், தலைமை பதவியையும் வகித்து கொண்டிருந்த மருள் நீக்கியாருக்கு நேரெதிராக அவரது தமக்கையாரான திலகவதி அம்மையார் தமது வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொண்டார்.
திலகவதி அம்மையார் சைவ சமயத்தில் மிகுந்த பற்று கொண்டவராகவும், சிவநெறியையும், எம்பெருமானையும் காலம் பொழுது என அனைத்து நேரங்களிலும் ஒழுகினார். தம்முடைய இப்பிறப்பும் அவர் அளித்த சித்தத்தையும் சிவனுக்காக அர்ப்பணித்த திலகவதியார் திருக்கெடிலத்தின் வடகரையில் அமைந்துள்ள திருவதிகை வீரட்டானத்தில் மடம் ஒன்றை அமைத்துக் கொண்டாள். அங்கு வீற்றிருந்த வீரட்டானேசுரருக்குத் திருத்தொண்டுகள் பல புரியத் தொடங்கினாள்.
தினந்தோறும் திலகவதியார் ஆதவன் உதிப்பதற்கு முன்பாகவே துயிலெழுந்து தூய நீராடி திருத்தலத்தின் முன்பாக கோமாய நீரால் சுத்தமாக மெழுகி அழகிய வண்ணத்துடன் கோலமிடுவாள். நந்தவனம் சென்று தேனீக்களால் தேன் எடுக்கப்படாத அழகிய மலர்களைக் கொய்து வந்து மாலைகள் தொடுத்து எம்பெருமானுக்கு சாற்றி வணங்கி வழிபடுவாள். இவ்வாறு அம்மையார் கோவிலில் பரமனை வழிபட்டு கொண்டிருந்த காலத்தில் மருள்நீக்கியார் சமண சமயத்தில் புலமை பெற்று அச்சமயத்திலேயே மூழ்கி வாழ்கிறார் என்ற செய்தி கேட்டாள். அந்த செய்தியை கேட்ட மாத்திரத்தில் மனதளவில் அளவுக்கடந்த துயரமடைந்தாள்.
தமது துயரத்தை எவரிடம் பகிர்வது என்று புரியாமல் அனைத்தும் உணர்ந்த சர்வ ஞானியான எம்பெருமானிடம் தமது மனதில் இருந்த எண்ணங்களை கூறத் துவங்கினார். தமது சகோதரனை எப்படியாவது சமணத்தைத் துறந்து சைவத்தில் சேரச் செய்ய முயற்சித்தாள். நாள்தோறும் எம்பெருமானிடம் தமது எண்ணங்களை விண்ணப்பம் செய்தாள்.
திலகவதியின் எண்ணம் ஈடேறக்கூடிய காலகட்டமும் வரத்தொடங்கியது. பரம்பொருளான எம்பெருமானை வணங்கிவிட்டு துயிலில் ஆழ்ந்த திலகவதியின் கனவில் எழுந்தருளிய எம்பெருமான் கவலை கொள்ள வேண்டாம் திலகவதியே...! முற்பிறவியில் மருள்நீக்கியார் ஒரு முனிவராக இருந்து என்னை அடைய அருந்தவம் புரிந்து கொண்டிருந்தார். இப்பிறவியில் அவனை சூலை நோயால் தடுத்தாட்கொள்வோம் என்று கூறி மறைந்தார்.
எம்பெருமானின் திருவுருவத்தை கண்டதும் கனவிலிருந்து விழித்த திலகவதி அம்மையாருக்கு அக்கணத்தில் மனதில் இருந்த கவலைகள் யாவும் நீங்கின. சிந்தையில் எம்பெருமானின் சிந்தனையுடன் மகிழ்ச்சி கொண்டாள். அன்றிரவு துயில் கொள்ளவே மறந்து தனது உடன்பிறந்தவர் மனம் திருந்தி வரும் நன்னாளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தான்.
எம்பெருமானும் தான் உரைத்தபடி மருள்நீக்கியாரை ஆட்கொள்ள திருவுள்ளம் கொண்டார். மருள்நீக்கியாரின் உடலில் சூலை நோய் உண்டாக்க செய்தார். சூலைநோயானது அவரது உடல்நலத்தை முழுவதையும் பாதித்தது. கொடிய நஞ்சுக்கள் தரக்கூடிய வேதனையையும், வலியையும் தனது உடலில் புகுந்த சூலை நோயானது மருள்நீக்கியாருக்கு கொடுக்கத் துவங்கியது. சூலை நோய் தந்த வலியாலும், வேதனையாலும் மருள்நீக்கியார் உடல் சோர்ந்து, பலம் இழந்து சோர்வாக காணப்பட்டார்.
அந்த வலியிலும், சோர்வு நிலையிலும் சமண சமயத்தில் தாம் பயின்ற மணி மந்திரத்தை பயன்படுத்தி நமது உடல்நலத்தைப் பேணிக்காக்க முயற்சிகளை மேற்கொண்டார். அவர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் அவர் எதிர்பார்த்த முடிவினை தரவில்லை. காலங்கள் ஆக ஆக அவருக்கு ஏற்பட்ட வலிகளும், வேதனைகளும் அதிகரிக்கத் தொடங்கின. வேதனை அதிகரிக்க அதிகரிக்க அவர் நீர் இல்லா மீனை போல துடிதுடிக்க துவங்கினார். பின்பு சிறிது நேரத்திலேயே உடலில் பலம் இல்லாமல் மயக்க நிலைக்குச் செல்லத் தொடங்கினார்.
மருள்நீக்கியார் மயக்க நிலைக்கு சென்றதை அறிந்ததும் மற்ற சமண குருமார்கள் அவ்விடத்தில் ஒன்றுதிரண்டு சமண சமய நூல்களில் கூறப்பட்டுள்ள அனைத்து நெறிமுறைகளையும் கையாண்டு அவருக்கு ஏற்பட்ட சூலை நோயை குணப்படுத்த முயன்றனர். இருப்பினும் அவர்களின் முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்கவே இல்லை. சமண குருமார்கள் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளால் மருள்நீக்கியாரின் வலியானது குறையாமல் மென்மேலும் அதிகரிக்கத் துவங்கியது.
சமண குருமார்களும் தொடர்ந்து மருள்நீக்கியாருக்கு மயிற்பீலியைக் கொண்டு தடவுவதும், குண்டிகை நீரை மந்திரித்து அவரை குடிக்கச் செய்வதுமாகவே இருந்தனர். இறுதியில் சமண குருமார்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தக் கொடிய நோயை எங்களால் தீர்க்க முடியவில்லை என்று தங்களது தோல்வியை ஏற்றுக்கொண்டனர். சமணர்கள் அனைவரும் அவரைவிட்டு சென்றனர். மருள்நீக்கியார் தனக்கான இறுதிக் காலம் நெருங்கியது போல எண்ணத் துவங்கினார். பின்பு தமது தமக்கையுடன் தனக்கான இறுதி வாழ்க்கை இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.
அவ்வேளையில் சமையலறையில் இருந்த சமையற்காரரை அழைத்து தமக்கு ஏற்பட்டுள்ள இந்நிலையை எடுத்துரைத்து தமது தமக்கையை இங்கு அழைத்து வருமாறு அனுப்பி வைத்தார். சமையற்காரர் மருள்நீக்கியாரின் எண்ணம் அறிந்து இரவு பொழுதிலேயே பாடலிபுரத்தை விட்டு அகன்று, பொழுது விடியும் நேரத்தில் திருவதிகையை வந்து அடைந்தனர். நெடுந்தூர பயணத்தின் இறுதியாக மருள்நீக்கியாரின் தமக்கையார் குடில் அமைந்திருக்கும் இடத்தை அறிந்து அவ்விடத்திற்கு விரைந்து சென்றார். பின்பு தமக்கையாரை நேரில் கண்டு அவரிடம் தான் யார் என்றும், தான் வந்த செய்தி என்னவோ அந்த செய்தியை உரைக்கத் தொடங்கினார்.
அதாவது தங்களின் உடன்பிறந்தவரான மருள்நீக்கியாருக்கு மிகக் கடுமையான சூலை நோய் ஏற்பட்டிருப்பதாகவும், அந்நோயை குணப்படுத்துவதற்காக மருத்துவர்கள் மற்றும் சமண குருமார்கள் பலர் முயன்றும் அதில் தோல்வி அடைந்து அவரைக் கைவிட்டு போயினர். தமக்கு ஏற்பட்டுள்ள இந்த கொடுமையான நிலையை தங்களிடம் உரைத்து வரும்படி தங்களின் தமையன் அனுப்பி வைத்ததாக கூறினார். சகோதரனின் நிலையை அறிந்ததும் அம்மையாருக்கு மிகவும் வேதனையாகவும், சமையற்காரர் உரைத்த செய்தியானது நெருப்பாக அவரை சுடத் துவங்கியது. அம்மையார் மிகுந்த மன வேதனைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானார்.
சமையற்காரர் உரைத்த தகவலால் சகோதரனை காண வேண்டும் என்ற எண்ணமும் அம்மையாருக்கு அதிகரிக்கத் துவங்கியது. இருப்பினும் சமணர்களின் மீது வெறுப்புக் கொண்ட அம்மையார் சமையற்காரரை நோக்கி சமணர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு என்னால் ஒருபோதும் வர இயலாது என்று எனது சகோதரனிடம் சென்று உரைப்பாயாக... என்று கூறி சமையற்காரரை அனுப்பி வைத்தார் திலகவதி அம்மையார். சமையற்காரர் அம்மையாரிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு பாடலிபுரத்தை வந்தடைந்தார். சமையற்காரர் சென்றதும் அவர் திரும்பி வருவதற்கான காலத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தார் மருள்நீக்கியார்.
மருள்நீக்கியாரின் எண்ணம் போலவே சமையல்காரரும் விரைந்து வந்தார். பின்பு மருள்நீக்கியாரை வணங்கி அம்மையார் உரைத்த பதிலை மருள்நீக்கியாரிடம் கூறினார். தனது தமக்கையாரிடம் இருந்து எதிர்பாராத இந்த முடிவை கேட்டதும் மருள்நீக்கியார் மிகவும் சோர்வாக காணப்பட்டார். வேறு எவ்வழியிலும் தமது தமக்கையை இவ்விடத்திற்கு வர வைக்க இயலாது என்பதை நன்கு உணர்ந்த மருள்நீக்கியார் இவ்விடத்தை விட்டு செல்ல முடிவு கொண்டார்.
இந்த முடிவு எடுத்த பின்னர் தமது உடலில் ஏற்பட்ட சூலை நோயின் வீரியமானது குறையத் துவங்கியது போல எண்ணத் துவங்கினார். பாயினால் அணியப்பட்ட உடையை களைந்தார். கமண்டலத்தையும், மயிற்பீலியையும வெறுத்து ஒதுக்கி தூய வெண்ணிற ஆடையை அணிந்து கொண்டு, சமணர்கள் எவரும் அறியாவண்ணம் இரவோடு இரவாக அங்கிருந்து தமது பணியாளுடன் புறப்பட்டுத் திருவதிகையை அடைந்தார். அம்மையார் தங்கியிருக்கும் மடத்துக்குள் புகுந்தார் மருள்நீக்கியார்.
மடத்துக்குள் ஐந;தெழுத்து மந்திரத்தை மனதில் நினைத்து அமர்ந்திருந்த தமக்கையை நமஸ்கரித்தார் மருள்நீக்கியார். திலகவதியார் ஒருபுறம் மகிழ்ச்சியும், மறுபுறம் வேதனையும் கொண்டார். மருள்நீக்கியார் மனவேதனையுடன் திலகவதியாரிடம் தமக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தை பற்றி கூறினார். நம் குலத்தை சேர்ந்த முன்னோர்கள் செய்த தவப்பயனால் அவதாரம் செய்த என் சகோதரியே... என் குடலுள் புகுந்து என் உடலை வருத்திக் கொண்டு இருக்கும் இந்த கொடிய சூலை நோயில் இருந்து என்னை காப்பாற்ற வேண்டும் என்று கண்களில் நீர் மல்க தமக்கையின் பாதங்களின் முன் நின்றுக் கொண்டிருந்தார் மருள்நீக்கியார்.
திலகவதியார் தனது சகோதரனின் நிலையைக் கண்டு மனம் உருகினார். நல்ல கொள்கைகளையும் கருத்துக்களையும் கொண்ட பல காலங்களாக நமது முன்னோர்கள் வழிபட்டு வந்த சமயத்தினை விடுத்து வேறு சமயத்தில் இணைந்தது தவறு என்பதை உணர்வாயாக என்று கூறினார். அம்மையாருடைய அன்பும், பாசத்துடன் கூடிய அருள் மொழியையும் கேட்டதும் தனது உடலில் ஏற்பட்டிருந்த சூலை நோயின் வீரியமானது குறையத் துவங்கியது போல எண்ணத் துவங்கினார் மருள்நீக்கியார்.
பின்பு தனது சகோதரியின் பாதங்களைத் தொட்டு தனது கரங்களால் தனது கண்களில் ஒற்றிக் கொண்டு வலி குறைந்த நிலையில் மெதுவாக எழுந்தார். சூலை நோயினால் ஏற்பட்ட வலியினால் கண்கலங்கி கொண்டிருந்த சகோதரனை கண்ட திலகவதியார் கண் கலங்க வேண்டாம் சகோதரா... உனக்கு ஏற்பட்டுள்ள இந்த நோய்க்கு காரணம் எம்பெருமானின் திருவருளே ஆகும். முப்பிறவியில் நீர் செய்த அறச்செயலின் பயனாக எம்பெருமான் உன்னை மீண்டும் அவரது அடியாராக ஏற்றுக்கொள்வதற்காகவே இம்முறையில் உம்மை ஆட்கொண்டார் என்று கூறினார்.
திலகவதியாரோ தன் சகோதரனிடம் உலகத்தில் உள்ள இன்பங்கள் யாவற்றையும் துறந்து எதன்மீதும் பற்று இல்லாத சிவனடியார்களை வழிபட்டு சிவ தொண்டுகள் பல புரிவதன் மூலம் உன்னைப் பற்றிய மற்ற நோய்களும் உன்னை விட்டு அகன்றுவிடும் என்று கூறினார். மருள்நீக்கியார் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்தை பின்பற்ற வேண்டும் என்பதை எண்ணத் தொடங்கிய திலகவதியார் திருத்தலத்தில் இருந்து திருவெண்ணீற்றினை எடுத்து ஐந்தெழுத்து மந்திரத்தை மனதில் எண்ணிய வண்ணம் தனது சகோதரனுக்கு கொடுத்தார். அம்மையார் அருளி கொடுத்த திருவெண்ணீற்றினை கரம் தாழ்ந்து பணிந்து பெற்றுக்கொண்டார் மருள்நீக்கியார்.
எனக்கு இவ்வுலகில் பற்றற்ற பெருவாழ்வு மீண்டும் கிட்டியது என்றும், பரமனை எப்பொழுதும் எந்த வேளையிலும் பணிந்து மகிழும் திருவாழ்வு மீண்டும் கிடைக்கப்பெற்றேன் என்றும் கூறினார். தமக்கையார் கொடுத்த திருவெண்ணீற்றினை தனது நெற்றியிலும், தனது உடலிலும் பூசிக்கொண்டார். திருவெண்ணீற்றின் மகிமையால் மருள்நீக்கியாரின் உடலில் ஏற்பட்ட சூலை நோயானது படிப்படியாக குறையத் துவங்கி முற்றிலும் இல்லாத நிலைக்கு மாறியது.
சூலை நோயினால் ஏற்பட்ட வலிகள் முற்றிலுமாக நீங்கியவுடன் திருத்தொண்டரான மருள்நீக்கியார் மிகவும் மனம் மகிழ்ந்தார். பெருவாழ்வு பெற்ற மருள்நீக்கியார் சிறுவயதில் எவ்விதம் சைவ சமயத்தை தமது பெற்றோர்கள் கற்பித்த வண்ணம் பின்பற்றினாரோ அவ்வகையிலேயே மீண்டும் சைவ சமயத்தினை பின்பற்றி சைவராக திகழத் தொடங்கினார். சைவராக திகழ்ந்து கொண்டிருந்த தனது சகோதரனை அழைத்துக்கொண்டு திருவலகும், திருமெழுகுத் தோண்டியும் எடுத்துக் கொண்டு கோவிலுக்கு வந்தடைந்தார்கள்.
மருள்நீக்கியார் தனது சகோதரியுடன் திருத்தலத்தை வலம் வந்து எம்பெருமானின் முன் வணங்கி நின்றார். எம்பெருமான் சன்னதியில் எதுவும் அறியாமல் சைவ பழமாக நின்று கொண்டிருந்த மருள்நீக்கியாரின் மீது அனைத்தும் உணர்ந்த பேரொளிப் பிழம்பான எம்பெருமானின் திருவருளும், அவர்தம் அருட்பார்வையும் பொழியத் துவங்கியது.
பரமனின் அருட்பார்வையால் தமிழ் பாமாலை சாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உதித்தது. உணர்ச்சிகள் யாவும் ஊற்றாக தடையில்லாமல் பெருகத் துவங்கியது. சூலை நோயினால் ஏற்பட்ட வலிகள், வேதனைகள், சோர்வு மற்றும் மாயையில் இருந்து விடுபட்டு கூறிறாயினைவாயு விலக்கிலீர் என்று தொடங்கும் பதிகத்தினைப் பாடினார். அவர் இப்பதிகத்தை பாடி முடித்ததும் அவரை துன்புறுத்திக் கொண்டிருந்த சூலை நோயானது அவரை விட்டு அறவே நீங்கியது. எம்பெருமானின் திருவருளை எண்ணி வியந்து போற்றி திலகவதியார் கண்ணீர் விட்டாள். மருள்நீக்கியார் சிரத்தின் மீது கரம் குவித்து நின்று மெய்யுருகி வேண்டினர்.
தங்கள் அருளால் நான் புதிய பிறப்பையும், அருளையும் பெற்றேன். இந்நாள்வரை யாம் செய்த பிழைகளை மன்னித்து மீண்டும் எம்மை தங்களின் அடியனாக ஏற்றுக் கொண்டதை எண்ணி மகிழ்வதாக கூறினார். மேலும் தன் இரு விழிகளிலும் கண்ணீர் மல்க நிலத்திலேயே விழுந்து புரண்டு எதையும் உணராமல் சமண சமயத்தில் விழுந்து எழுமாறு அறியாது மயங்கிய இந்த பாவியின் தவறினை உணர்த்தினீர்கள் என்றும், மோட்ச நாதனாகிய சிவபெருமானுடைய திருவடியை அடைந்து யாவருக்கும் கிடைக்காத இந்தப் பேரின்பவாழ்வைப் பெறுவதற்கு காரணமாக இருந்த இந்த சூலை நோய்க்கு என்ன பிரதியுபகாரஞ் செய்வேன் என்று உரைத்துக் கொண்டிருந்தார்.
எம்பெருமானை வணங்கி கொண்டிருந்த அவ்வேளையில் பரந்து விரிந்த இந்த விண்வெளி அண்டத்தில் இருந்து ஓர் அசரீரி கேட்டது. இனிய தமிழ் சொற்கள் கொண்ட செந்தமிழ்ப் பாக்களால் திருப்பதிகத் தொகையை பாடிய தொண்டனே...!! இனி நீ நாவுக்கரசு என்று நாமத்தால் ஏழுலகத்தில் உள்ள அனைவராலும் அழைக்க பெறுவாய் என அசரீரி வாக்கு அளித்தது. அசரீரி கூறியதை கேட்ட திருநாவுக்கரசு நாயனார் நெடுங்காலமாகத் தம்மை நிந்தித்து கொண்டிருந்த இந்த சிறிய அடியேனுக்கு இப்பெரு வாழ்வை தந்தருளினாரே...! என்று உரைத்துக் கொண்டே அம்பலவாணரை வணங்கினார்.
அசரீரி கூறியது போலவே அப்பொழுதில் இருந்து மருள்நீக்கியார் திருநாவுக்கரசு என்னும் திருநாமத்தால் அனைவராலும் அழைக்கப்பட்டார். எம்பெருமானின் ஆசியையும், அருள் பார்வையையும் எண்ணி மகிழ்ச்சி அடைந்த திலகவதியார் தமது சகோதரன் சமண சமயத்தின் மீதிருந்த பித்து மற்றும் அவனின் உடலில் இருந்து வாட்டி வதைத்த சூலைப் பிணியும் நீங்கியதைக் கண்டு இன்பம் கொண்டாள். திருநாவுக்கரசர் சிவ சின்னங்களைத் தரித்துக் கொண்டு சைவ திருத்தோற்றம் கொண்டார். அதாவது அவரின் சிரசிலும், கண்டத்திலும், கரங்களிலும் ருத்திராட்ச மாலைகள் அணியெனத் திகழ்ந்தன.
திருவெண்ணீறு அவரது காயம் முழுவதும் மதியின் ஒளியை போல் பிரகாசிக்க துவங்கியது. அவரது மனமானது ஐந்தெழுத்து மந்திரத்தை என்றும் மறவாமல் நினைத்திருக்க திருத்தொண்டுகள் பல புரியத் தொடங்கின. இங்ஙனம் நாவுக்கரசர் எம்பெருமானின் திருவடிக்கு மனதாலும், வாக்காலும், காயத்தாலும் உழவாரப் பணிகள் மற்றும் சைவத் தொண்டு புரிந்தார். மருள்நீக்கியார் சமண சமயத்தை விடுத்து சைவ சமயத்தை பின்பற்றி வருகின்றார் என்ற செய்தியானது பாடலிபுரத்தின் இருக்கின்ற சமணர்கள் கேள்வியுற்றனர்.
இதனால் மிகவும் கோபம் கொண்ட சமணர்கள் பல சமயங்களைச் சார்ந்த சான்றோர்கள் ஆன்றோர்கள் என அனைவரிடமும் வாதாடி அவர்களை வெற்றி கொண்டார். தமது சமயத்தை அனைவரின் மத்தியில் எடுத்துச் சென்று நிர்வகித்து கொண்டிருந்த தர்மசேனர் தமக்கு ஏற்பட்ட இந்த ஒரு சூலை நோயால் தான் பின்பற்றி கொண்டிருந்த சமயத்தை சார்ந்த எவராலும் நீக்க முடியாமல் போனது. ஆனால் இந்த நோயை தீர்க்கும் பொருட்டு திருவதிகையில் சென்று முன்னர் போலவே சைவ சமயத்தை பின்பற்றத் தொடங்கியுள்ளார். அவர் சைவத்தை பின்பற்றத் தொடங்கிய உடனே அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த சூலை நோயானது முற்றிலுமாக நீங்கி விட்டது. ஆனால் இனி நமது சமயம் அழிவதற்கான சூழல்கள் ஏற்பட்டு உள்ளது என்பதைக் யோசித்துக்கொண்ட சமணர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒரு முடிவு எடுத்தனர்.
ஒன்று திரண்ட சமணர்கள் அனைவரும் தர்மசேனருக்கு எதிராக செயல்படத் துவங்கினர். ஒரு தர்மசேனருக்கு ஏற்பட்ட சூலை நோயை சமண சமயத்தை சேர்ந்த எவராலும் குணப்படுத்த முடியாமல் போனதையும், அவர் சைவ சமயத்தை பின்பற்ற துவங்கியவுடன் அவருக்கு ஏற்பட்ட சூலை நோயானது குணமாக துவங்கியது என்பதையும் அரசர் அறிந்தால் நம் மீது சினம் கொள்வார். மேலும் அரசரும் சமண சமயத்தை பின்பற்றுவதை தவிர்த்து சைவ சமயத்தை தழுவ துவங்கிவிடுவார்.
இது நம் சமயத்தை விருத்தியடைவதை தவிர்க்கக்கூடிய ஒன்றாக இருக்கக்கூடிய செயலாகும். இனி இதை எவ்விதம் கையாண்டு தங்களது சமயத்திற்கு ஏற்பட்ட இந்த இன்னல்களை தவிர்க்க இயலும் என்று அனைவரும் சிந்தித்து தங்களுக்குள் கலந்து ஆலோசித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் ஆலோசனையால் ஒரு நயவஞ்சகமான ஒரு நாடகமும் அங்கே அரங்கேறத் துவங்கியது.
நற்சிந்தனைகளை இழந்த சமணர்கள் அனைவரும் ஒன்று திரண்டு பெரும் கூட்டமாக பல்லவ மன்னனை காண அவரின் அரண்மனைக்கு சென்றனர். அங்கு அரண்மனையில் வீற்றிருந்த அரசனைக் கண்டு, அவரை வணங்கி நிகழ்ந்தவற்றை தங்களுக்கு தகுந்தவாறு மாற்றி உரைக்கத் துவங்கினர். அதாவது எங்களுக்கெல்லாம் தலைவராக இருந்து வந்த தர்மசேனர் தன்னுடைய சகோதரியான திலகவதியார் சைவ சமயத்தினை பின்பற்றுகிறார் என்ற எண்ணம் கொண்டதாக கூறினார்கள்.
மேலும் அதனால் தாமும் அவரைப்போலவே சைவ சமயத்தை பின்பற்ற வேண்டும் என்று எண்ணம் கொண்டு சமண சமயத்தை விட்டு செல்ல ஒரு நாடகம் நடத்தி உள்ளார். அதாவது தமக்கு சூலை நோய் ஏற்பட்டு அதனால் மிகுந்த துன்பத்தில் இருப்பதாக நாடகமாடி அந்த சூலை நோயை சமண சமயத்தை சேர்ந்த எவராலும் குணப்படுத்த முடியவில்லை என்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கினார். அதனால் எங்களிடமிருந்து பிரிந்து அவரின் தமக்கையாரிடம் சென்று முன்னர் போலவே சைவ சமயத்திலேயே பிரவேசித்து கொண்டு நம்முடைய கடவுளை அவர் நிராகரித்து கொண்டு இருக்கின்றார் என்று கூறினார்கள்.
இவர்கள் கூறியதை கேட்ட பல்லவ மன்னர் சினம் கொண்டு சமணர்களை கண்டு எதற்கும் கவலை கொள்ள வேண்டாம். நமது சமயத்தின் புகழை கெடுத்த அந்த தர்மசேனருக்கு தகுந்த தண்டனை அளிக்க ஒரு போதும் தயக்கம் கொள்ள மாட்டேன் என்று அவர்களிடம் கூறினார். அப்பொழுது அரசன் சபையில் இருந்து வந்த மந்திரியாரை நோக்கி சமணர்களால் குற்றம்சாட்டப்பட்ட அக்கயவனை பிடித்துக் கொண்டு வாருங்கள் என்று கட்டளை பிறப்பித்தார்.
மன்னரின் உத்தரவிற்கு கீழ்ப்படிந்த அமைச்சர்கள் சேனைகள் சூழ திருநாவுக்கரசரை அழைத்து வருவதற்காக அவர் இருக்கும் திருவதிகை நகரத்தை அடைந்தனர். திருநீறு அணிந்து பொலிவுடன் அமர்ந்திருந்த திருநாவுக்கரசரை அணுகி தர்மசேனரே...!! பல்லவ மன்னனான மகேந்திரவர்மன் தங்களை உடனடியாக அரசவைக்கு அழைத்து வருமாறு எங்களுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார். ஆகையால் இக்கணமே அனைத்து வேலைகளையும் விடுத்து... எங்கள் சேனையுடன் நீர் புறப்பட்டு வரவேண்டும்... என்று அரசர் தோரணையில் மன்னன் உரைத்த ஆணையை பிறப்பித்தனர் அமைச்சர்கள்.
தேவ அசுரர்கள் இணைந்து அமுதம் கடையும்போது கிடைத்த நஞ்சையும் அமுதாக உண்ட எம்பெருமானின் திருவடியில் தஞ்சம் புகுந்த திருநாவுக்கரசர் மனதில் சற்றும் பயமில்லாது நிமிர்ந்த நெஞ்சுடன் 'நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்" என தொடங்கும் மறுமாற்றத் திருத்தாண்டகத் திருப்பதிகத்தை அவ்விடத்திலேயே பாடினார்.
அவர் அப்பதிகத்தை பாடி முடித்ததும் திருப்பதிகத்தின் சுவையிலேயே அங்கு வந்த அனைத்து அமைச்சர்களும் மெய்யுருகி நின்றனர். அவ்வேளையில் அவர்கள் தாம் இழைத்த பிழையினை உணர்ந்தனர். திருநாவுக்கரசரின் மலர்போன்ற பாதத்தினை போற்றி வணங்கி... அரச தோரணையை விடுத்து ஐயனே...! நாங்கள் இழைத்த பிழையை தயவு கூர்ந்து மன்னித்தருள வேண்டும் என்று உரைத்து எங்களுடன் தாங்கள் எழுந்தருள வேண்டும் என்று பணிவன்புடன் வேண்டிக் கொண்டனர் அமைச்சர்கள்.
அமைச்சர்களின் இவ்விதமான மனமாற்றத்தை கண்டதும் திருநாவுக்கரசர் தமக்கு ஏற்படும் வினைகளுக்கெல்லாம் எம்பெருமான் எப்பொழுதும் தம்மோடு துணை நின்றும், எம்மை காத்துக் கொண்டும் இருக்கின்றார் என்று மொழிந்த வண்ணம் அவர்களுடன் புறப்பட்டார். மந்திரிகள் திருநாவுக்கரசரை அவர்கள் அரசர் வீற்றிருக்கும் சபைக்கு அழைத்து சென்று நிறுத்தினார்கள். பல்லவ மன்னனின் முன்னால் சிவஜோதி வடிவமாக திருநாவுக்கரசர் மனதில் எவ்விதமான அச்சமும் இன்றி தலைநிமிர்ந்து நின்று கொண்டிருந்தார்.
நல்ல அறங்களை செய்து தூய மனதுடன் நின்று கொண்டிருந்த திருநாவுக்கரசரின் முன்னால் அறம் சார்ந்த எண்ணங்களை விடுத்து வஞ்சனை எண்ணம் கொண்ட சமணத்துறவிகள் அவ்விடத்திலேயே நின்றுகொண்டிருந்தனர். சமண சமயத்தை பெரிதும் பின்பற்றி வந்த பல்லவ மன்னன் அறம் சார்ந்த செயல்களை மறந்து அரியாசனத்தில் அமர்ந்து இருந்தார். வேந்தர் சமணர்களை நோக்கி இந்த தர்மசேனர் செய்த பிழைக்கு என்ன தண்டனை அளிக்க வேண்டும்? என்று கேட்டார்.
மன்னர் உரைத்ததை கேட்டுக்கொண்டிருந்த மதியற்ற சமண மத குருமார்கள் மிகுந்த கோபத்துடன் அரசரை நோக்கி திருநீற்றை அணிந்து கொண்டிருந்த இந்த தர்மசேனரை சுண்ணாம்புக் காளவாயில் தள்ள வேண்டும் என்று கூறினார்கள். அரசரும் எந்தவிதமான விசாரணையும் இன்றி சமண சமயத்தின் மீது கொண்ட பற்றினால் குருமார்கள் உரைத்தபடியே அமைச்சர்களிடம் தர்மசேனரை சுண்ணாம்புக் காளவாயில் தள்ளுமாறு கட்டளையைப் பிறப்பித்தார்.
மன்னரின் ஆணையை மீறி எதுவும் செய்ய இயலாத அமைச்சர்களும் அவரின் ஆணைக்கு கட்டுப்பட்டு ஏவலர்களை அழைத்து திருநாவுக்கரசரை கொழுந்துவிட்டு எரியும் தீயுடன் கூடிய சுண்ணாம்புக் காளவாயில் விடுத்து கதவை அடைத்து வெளியே காவல் புரிந்து கொண்டு இருந்தனர். நீற்றறையில் அடைக்கப்பட்ட திருநாவுக்கரசர் எம்பெருமானின் திருவடிகளை மனதால் நினைத்து அமர்ந்த நிலையில் சிவனடியார்களுக்கு இவ்வுலகத்தில் துன்பம் ஏற்படுவது உண்டோ? என்று எம்பெருமானை தியானித்து 'மாசில் வீணையும் மாலை மதியமும்" என்னும் பாடலை பாடி தொழுது கொண்டிருந்த வேளையில் எம்பெருமானின் அருளால் அவ்விடமே அவருக்கு தகுந்தாற்போல் மாற்றம் அடையத் துவங்கியது.
அதாவது வெப்பம் மிகுந்த அந்த கனல் சூழ்ந்த சுண்ணாம்பு நீற்றறையானது குறைவான வெயிற்காலத்தில் வீசும் குளிர்ந்த தென்றலை போன்றும், மதியின் வருகையால் ஏற்படும் குளிர்ச்சி போன்றும் காணப்பட்டதால் திருநாவுக்கரசருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஏழு நாட்கள் கடந்த பின்னர் பல்லவ மன்னரின் கட்டளைப்படி சமண குருமார்கள் அறையைத் திறந்து பார்க்க வந்தனர். கரிய மேகக்கூட்டம் ஒன்று திரண்டு வந்தாற்போல் நீற்றறையை சமணர்கள் திறந்ததும் அங்கு அவர்கள் கண்ட காட்சிகள் அவர்களை பெரும் வியப்பில் ஆழ்த்தியது.
அம்பலவாணரின் அருளால் நிகழ்ந்த நிகழ்வை கண்டதும் அங்கு இருந்தவர்கள் அனைவரும் திகைப்பில் ஆழ்ந்தனர். அதாவது அந்த களத்தில் ஏழு நாட்கள் இருந்தும் அவரின் உடலில் எவ்விதமான காயமும், ஊனமும் ஏற்படாமல் களத்தில் எவ்விதம் அடைக்கப்பட்டாரோ அவ்விதமே வெளியில் வந்தார். இதை சற்றும் எதிர்பாராத சமணர்கள் மிகுந்த கோபத்துடன் மன்னரிடம் விரைந்து சென்று அரசே...! தர்மசேனர் நமது சமண நூல்களில் எந்த சூழ்நிலையிலும் இறப்பு என்பது ஏற்படாமல் இருப்பதற்கான மந்திரத்தை இடைவிடாது ஜெபித்து அவர் மரணம் ஏற்படாமல் உயிர் வாழ்ந்துள்ளார் என்று கூறினார்கள்.
சமணர்கள் கூறியதை கேட்டதும் பல்லவ மன்னர் அப்படியாயின் நாம் தர்மசேனரை எவ்விதம் தண்டிக்க முடியும் என்று வினவினார். மன்னர் இவ்விதம் கேட்டதும் சமணர்கள் அனைவரும் சிந்திக்க தொடங்கினார்கள். நினைவு இருந்தால் மட்டுமே மந்திரமானது சொல்ல இயலும். ஆகவே முதலில் அவரை நினைவு இழக்க செய்தால் அவரால் மந்திரத்தை முறையாக ஜெபிக்க இயலாது. ஆகையால் அவர் உண்ணும் உணவில் நஞ்சினை கலந்து கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள் சமணர்கள்.
பல்லவ மன்னர் மதி இழந்த சமணர்களின் கூற்றுக்கு இணங்கி அவர்கள் விருப்பப்படியே தர்மசேனரைக் கொல்வதற்கான ஆணையைப் பிறப்பித்தார். அதாவது அவருக்கு நஞ்சு கலந்த பால் சோற்றை தயார் செய்து அதை திருநாவுக்கரசர் உண்ணுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த பால் சோற்றை சமணர்கள் எடுத்துக்கொண்டு தர்மசேனரான திருநாவுக்கரசரை அணுகி இதை உண்ணுமாறு கூறினார்கள்.
சமணர்களின் எண்ணத்தை அறிந்து கொண்ட திருநாவுக்கரசர் விஷம் கலந்த பால் சோற்றை கரங்களில் ஏந்தி கொண்டு நாதனுக்கு நஞ்சும் அமிர்தமாகும் என்று உரைத்துவிட்டு நஞ்சு கலந்த உணவினையும் இன்முகத்தோடு உண்ணத் தொடங்கினார். திருப்பாற்கடலை கடையும் பொழுது வாசுகி என்ற பாம்பினால் வெளியிடப்பட்ட ஆலகால விஷத்தினால் தேவ அசுரர்கள் பாதிக்கப்படாமல் இருக்க அந்த ஆலகாலத்தை அமிர்தம் போல் உண்டு அனைவரையும் காப்பாற்றிய நீலகண்டர், திருநாவுக்கரசருக்கு அளிக்கப்பட்ட நஞ்சு கலந்த பால் சோற்றையும் அமிர்தமாக்கி அருளினார்.
அமிர்தத்தை உண்ட தேவர்கள் எவ்விதம் பொலிவுடன் காணப்பட்டார்களோ அவ்விதமே திருநாவுக்கரசரும் முன்பை விட மிகுந்த பொலிவுடனும், மகிழ்ச்சியுடனும் காணப்பட்டார். சிறிது நேரம் கழித்து சமணர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் நஞ்சு கலந்த உணவினை உண்டதினால் திருநாவுக்கரசர் இறந்திருப்பார் என்று எண்ணினார்கள். இனி எவராலும் தங்களது சமயத்தினை அழிக்க இயலாது என்ற இறுமாப்புடனும், மிகுந்த மகிழ்ச்சியுடனும் திருநாவுக்கரசரை காண வந்து கொண்டிருந்தனர்.
திருநாவுக்கரசர் அந்த நஞ்சு கலந்த உணவை உண்ட பின்பு உயிருடன் இருப்பதை கண்ட சமணர்கள் திகைப்பில் ஆழ்ந்தனர். நஞ்சுகலந்த அந்த பால்சோறானது இவனுக்கு அமிர்தம் ஆகியதோ? இவன் உயிருடன் இருக்கும் வரை நம் சமயத்திற்கு பெரிய ஆபத்து என்றும், தங்களது சமூகத்திற்கான அந்திம காலம் வந்துவிட்டதோ? என்ற அச்சமானது அவர்களை துரத்த துவங்கியது.
இனி இவரை மேற்கொண்டு அழிக்காவிட்டால் நம் சமயம் அழிவை நோக்கி சென்றுவிடும் என்பதை உணர்ந்த சமணர்கள் திருநாவுக்கரசரை வேறு ஏதாவது விதத்தில் தண்டிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். இங்கு நிகழ்ந்த நிகழ்வானது தங்களுக்கு தகுந்தாற்போல் மன்னரிடம் எடுத்துரைக்க துவங்கினர் சமணர்கள்.
அதாவது தங்கள் சமயத்தில் கூறப்பட்டு இருக்கும் நஞ்சு முறிவு மந்திரத்தை பயன்படுத்தி இந்நாள் வரை திருநாவுக்கரசர் தன்னை காப்பாற்றி கொண்டு உள்ளார் என்று கூறினார்கள். அதற்கு மன்னரோ நாம் செய்யும் செயல்களின் தன்மைகள் அறிந்து தன் உயிரை காத்து கொண்டுள்ளார் எனில் நாம் மேற்கொண்டு எவ்விதம் இவர் செய்த செயலுக்கான தண்டனையை அளிப்பது என்று வினவினார்.
மன்னரின் கூற்றுகளில் இருந்து சமணர்கள் இம்முறையில் நாம் அவருக்கு அளிக்கும் தண்டனையில் இருந்து அவரால் தப்பிக்க இயலாது என்று கூறினார்கள். மன்னரோ எந்தவிதமான தண்டனையை அளிக்க இருக்கின்றீர்கள்? என்று வினவினார். தாம் என்ன செய்கின்றோம் என்பதை உணராமல் அவர் மீது கொண்ட சினத்தினால் மதி இழந்த சமணர்கள் மதம் கொண்ட களிறினால் இடறச்செய்து அவரை கொன்று விட வேண்டும் என்று கூறினார்கள்.
மன்னரும் சமணர்களின் கூற்று படி மதம் கொண்ட களிறினால் மாய்த்துவிடுவோம் என்று உரைத்து, உடனே அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் படி கட்டளையை பிறப்பித்தார். அரசரின் ஆணையை நிறைவேற்றும் பொருட்டு மதம் பிடித்த யானை இருக்கும் இடத்திற்கு திருநாவுக்கரசரை அழைத்து சென்றனர். பின்பு கைவிலங்குகளால் பூட்டப்பட்டு இருந்த மத யானையானது கைவிலங்கில் இருந்து விடுதலை பெற்று சுதந்திரமாக மதம் கொண்டு அலைந்து கொண்டிருந்தது.
யானைக்கு எதிரில் திருநாவுக்கரசர் நிறுத்தப்பட்டார். தம்மை நோக்கி மதம் பிடித்த யானை எவருடைய கட்டுப்பாடும் இல்லாமல் வந்து கொண்டிருப்பதை உணர்ந்து மனதில் எந்தவிதமான அச்சமும், பயமுமின்றி இருந்தார். மேலும் சிவபெருமானின் சிந்தனைகளோடு அவரின் திருவடிகளை எண்ணிய வண்ணம் 'சுண்ணவெண் சந்தனச் சாந்தும்" எனத் துவங்கும் பாடலை பாடி அப்பாடலின் இறுதியில் 'அஞ்சுவது யாதொன்றுமில்லை அஞ்ச வருவது மில்லை" என்று அமையுமாறு திருப்பதிகம் அமைத்தார் திருநாவுக்கரசர்.
தர்மசேனரை நோக்கி மிகுந்த வேகத்துடன் சென்று கொண்டிருந்த யானையைக் கண்டதும் சமணர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். யானை செல்லும் வேகத்தை பார்த்தால் தர்மசேனர் உயிர் பிழைப்பது என்பது எளிதான காரியமல்ல என்பதை அறிந்து மனம் மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் அங்கு நிகழ்ந்ததோ அவர்கள் எதிர்பார்க்காத ஒன்றாகும்.
நாயனாருக்கு அருகில் சென்றதும் யானையின் மதமானது மறையத் துவங்கியது. மதம் குறைந்த யானையானது தமது தும்பிக்கையை தூக்கிய வண்ணம் நாயனாரை வலம் வந்து அவரின் அருகிலேயே அமைதியாக நின்று கொண்டிருந்தது. அங்கு நிகழ்ந்து கொண்டிருந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத சமணர்கள் யானை பாகனுக்கு தர்மசேனரை கொல்ல வேண்டுமென்று யானையிடம் கூறுமாறு உத்தரவிட்டனர்.
அவர்களின் ஆணைக்கு ஏற்ப யானை பாகனும் தன்னிடம் உள்ள அங்குசத்தினாலே யானையை குத்தி திருப்பி தர்மசேனரை கொல்லவேண்டும் என்கின்ற எண்ணத்தை யானையிடம் உருவாக்கினார். அதுவரை அமைதியாக அவரிடம் இருந்து வந்த மத யானைக்கு உடனே மதம் பிடித்தது. துதிக்கையால் தன்னை வளர்த்த மற்றும் அடக்கியாண்டு கொண்டிருந்த பாகர்களைத் தனது துதிக்கையால் தூக்கி எடுத்து அவர்களை வீசி எறிந்து கொன்றது. அதோடு மட்டும் யானை அடங்கவில்லை.
அவ்விடத்தில் இருந்த சமணர்களின் மீது பாய்ந்து அவர்களையும் காலால் மிதித்துத் தந்தத்தால் குத்திக் கிழித்தது. பலரை துதிக்கையால் தூக்கி எறிந்து கொன்று குவித்தது. யானையின் மதத்தைப் பார்த்து சமணர்கள் மட்டுமின்றி அந்நகரத்தில் உள்ளவர்கள் எல்லோரும் தங்களது உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேரிடுமோ என்று அச்சம் கொண்டனர். இந்த யானையின் செயலால் வேந்தரின் கீர்த்திக்கும் கலங்கம் ஏற்பட்டது.
யானையின் பிடியில் இருந்து தப்பி பிழைத்த சில சமணர்கள் வேந்தரிடம் சென்று நிகழ்ந்தவற்றை கூறிக் கொண்டிருந்தனர். தர்மசேனர் நம்முடைய சமய நூல்களில் கற்றுக்கொண்ட மந்திரத்தின் பலத்தினாலே நாங்கள் அனுப்பிய யானையைக் கொண்டே எங்கள் வலிமையைச் சிதைத்துள்ளான் என்று எப்போதும் போல் சூழ்நிலைக்கு தகுந்ததாற்போல் கூறிக் கொண்டிருந்தார்கள்.
பலமுறை முயன்றும் தர்மசேனரை கொல்ல முடியாத வேந்தரும் இந்த செயலினால் எமது கீர்த்தியும் பாதிக்கப்பட்டது என்ற கோபத்தில் சமணர்களை நோக்கி இனி யாது செய்வோம்? என்று வினாவினார். மன்னரின் கோபத்தைக் கண்டதும் சமணர்களும் சிறிது தயக்கம் கொள்ளத் துவங்கினர். இம்முறை நன்றாக யோசித்த சமணர்கள் வேந்தரிடம், வேந்தே...! தர்மசேனரை ஒரு கல்லில் கட்டி கடலின் நடுவில் இறக்கிவிட வேண்டும் என்றனர்.
அந்த நிலையிலும் சமணர்களின் ஆணவம் சற்றும் குறையவில்லை. அவர்களின் முடிவுகளில் தலைவணங்கிய வேந்தன் திருநாவுக்கரசரை கல்லோடு கட்டிக் கடலில் கொண்டு போய்த் தள்ளிவிடுங்கள் என்று தனது மந்திரிகளுக்கு ஆணையை பிறப்பித்தார். அரசரின் ஆணைக்கு கட்டுப்பட்ட மந்திரிகளும் கொலைத்தொழில் செய்வோரை அணுகி தகுந்த பாதுகாப்புடனும், காவலோடும் தர்மசேனரைக் கொண்டுபோய் கல்லோடு சேர்த்துக் கயிற்றினால் கட்டி ஒரு படகில் ஏற்றி சமுத்திரத்திலே விழும்படி தள்ளிவிடுங்கள் என்று கூறினார்கள்.
அவர்களும் திருநாவுக்கரசரை படகில் ஏற்றிக் கொண்டு சமணர்களுடன் கடலுக்கு புறப்பட்டனர். நடுக்கடலுக்கு சென்றதும் அவரைக் கல்லோடு கட்டி கடலில் வீழ்த்திவிட்டு கரைக்கு சமணர்கள் திரும்பினர். கடலினுள் வீழ்ந்த திருநாவுக்கரசர் எப்படி வேண்டுமானாலும் ஆகட்டும் என நினைத்துக்கொண்டே 'சொற்றுணை என அடியெடுத்து நற்றுணையாவது நமசிவாயவே" என்று பதிகம் பாடி கடலில் மூழ்கினார்.
அப்போது எம்பெருமானின் அருளால் கயிறு அறுந்தது. கடல் மன்னனாகிய வருணன் திருநாவுக்கரசரை அலைகளாகிய கைகளால் திருமுடிமேல் தாங்கிக் கொண்டுவந்து திருப்பாதிரிப்புலியூர் என்னும் தலத்தின் பக்கத்தில் கொண்டு வந்து சேர்த்தார். திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சிவனடியார்கள் இச்செய்தியை கேட்டு மகிழ்ந்தனர். எல்லோரும் ஒன்றுகூடி ஆரவாரத்துடன் திருநாவுக்கரசரை வரவேற்றனர்.
திருப்பாதிரிப்புலியூரில் இருந்த சிவனடியார்கள் திருநாவுக்கரசரை வரவேற்று, உபசரித்து விண்வெளியில் உள்ள தேவர்களுக்கும் கேட்கும் வண்ணம் சிவநாமத்தை எழுப்பிக் கொண்டு திருநாவுக்கரசரை திருப்பாதிரிப்புலியூர் ஐயனின் திருக்கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். எம்பெருமானின் மீது கொண்ட பக்திக்கும், அடியார்கள் தம்மிடம் கொண்ட அன்பிற்கும் அடிபணிந்தவாறு எம்பெருமானின் நாமத்தை உரைத்த வண்ணம் சிவனடியார்களோடு ஆலயத்திற்கு சென்று அங்கே வீற்றிருக்கும் மதி சூடிய முக்கண்ணனை வணங்கி 'ஈன்றாளுமாய்" என்னும் திருப்பதிகம் பாடிக்கொண்டு அங்கே சிலநாள் தங்கியிருந்தார்.
கண்டத்தில் ருத்திராட்ச மாலையும், மேனி முழுவதும் திருவெண்ணீர் பூசிய வண்ணம் கரங்களில் உழவாரம் எந்தியவாறு திருநாவுக்கரசர் நின்ற நிலையைக் கண்ட அன்பர்கள் பேரானந்தம் கொண்டார்கள். அவர் அந்நிலையில் இருந்து பல சிவத்தொண்டுகள் புரியத் துவங்கினார். பல தலங்களுக்கு சென்று உழவார பணியும், எம்பெருமான் பற்றிய கீர்த்திகளையும் பாடத் துவங்கினார். திருநாவுக்கரசரின் செல்வாக்கு மக்களிடையே பரவத் துவங்கியது. இந்நிலையில் திருநாவுக்கரசர் உயிருடன் இருந்து பல சேவைகளும், சிவாலயங்களில் உழவார பணிகளை மேற்கொள்ளும் செய்தியானது பல்லவ மன்னருக்கு ஒற்றர்கள் மூலம் தெரிய வந்தது.
இச்செய்தியை கேள்வியுற்றது முதல் பல்லவ மன்னனின் மனமானது பலவிதமான குழப்பங்களுக்கு ஆளாக துவங்கியது. அதாவது, சமணர்களின் அறிவுரைகளை கேட்டு தவறான முடிவுகளை செய்து விட்டோமோ? என்று எண்ணத் துவங்கினார். பின்னர் ஒற்றர்களிடம் திருநாவுக்கரசரின் செயல்பாடுகளை அறிந்து வந்து உரைக்குமாறு கட்டளை பிறப்பித்தார். அவர்களும் திருநாவுக்கரசரின் செயல்பாடுகளை அறிந்து வந்து மன்னரிடம் எடுத்துரைத்தனர்.
ஒற்றர்கள் கூறியதைக் கேட்டதும் பல்லவ மன்னரின் மனமானது சமண சமயத்தை வெறுக்க வைத்து அவர் மனம் சைவ சமயத்தை நாடத் துவங்கியது. அவருடைய மனமானது முழுவதுமாக மாற்றம் அடைந்தது. அவருடைய மதியும் தெளிவடையத் துவங்கியது. பின்பு சமணர்களின் மீது வெறுப்பு கொண்டு எஞ்சிய சமணர்களை தனது ராஜ்ஜியத்தில் இருந்து விரட்டினார். பின்பு தாம் செய்த செயலுக்காக திருநாவுக்கரசரை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எண்ணினார். திருநாவுக்கரசர் இருக்கும் இடத்தை அறிந்து அங்கு வேந்தர் சென்றார்.
திருநாவுக்கரசர் வேறு சிவ ஆலயங்களை தரிசிக்க அவ்விடம் விட்டு சென்றார். பல சிவதலங்களை தரிசித்து திருவதிகையை வந்தடைந்தார். திருவதிகையை நோக்கி திருநாவுக்கரசர் வந்து கொண்டு இருக்கிறார் என்ற செய்தியை அறிந்த திருவதிகை வாழ் மக்கள் அவரை வரவேற்க பல ஏற்பாடுகளை செய்யத் துவங்கினார்கள். எம்பெருமானின் வடிவமாகவும், தமிழுக்கு வேந்தரான உருவமாகவே திருநாவுக்கரசர் வந்துக் கொண்டு இருந்தார்.
திருவதிகைத் தொண்டர்களும், அன்பர்களும் இன்னிசை முழக்கத்தோடும், வேத ஒலியோடும், அவ்வூரின் எல்லையிலேயே திருநாவுக்கரசரை வணங்கி வரவேற்று, நகருக்குள் அழைத்துச் சென்றனர். அவரது அன்புத் திறத்தையும், பக்தி திறத்தையும், அருட்திறத்தையும் எண்ணி விம்மித முற்றனர். இவ்வாறு அன்பர்கள் சூழ்ந்துவர, வீதிவழியே வலம் வந்த திருநாவுக்கரசர், ஆலயத்தை அடைந்து திருவீரட்டானேசுவரரைப் பார்த்து, 'இறைவன் தன்னை ஏழையேன் நான் பண்டிகழ்ந்தவாறே" என்று முடியும் திருத்தாண்டகப் பதிகத்தைப் பாடிப் பரமனைப் பேணினார்.
திருநாவுக்கரசர் வீரட்டானேசுவரர் மீது கொண்ட காதலால் அத்திரு நகரிலேயே சில நாட்கள் தங்கி இருந்து, பைந்தமிழ்ப் பாமாலையால் கோர்க்கப்பட்ட அணிகலன் போல, பல திருப்பதிகங்களைப் எம்பெருமான் மீது பாடி வழிபட்டு உளவாரப் பணி செய்து கொண்டிருந்தார். தமது ஒற்றர்கள் மூலம் திருநாவுக்கரசர் திருவதிகைத் தலத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை பாடி உளவாரப் பணிகளை செய்து கொண்டு இருக்கின்றார் என்னும் செய்தியை அறிந்து கொண்ட மன்னன், அவரை காண நால்வகைப் படைகளுடன் மங்கல வாத்தியங்கள் ஒலிக்க திருவதிகையை நகரத்தை அடைந்தான்.
திருமடத்தில் தங்கியிருக்கும் திருநாவுக்கரசரை கண்டதும் அவருடைய மலரடியில் வீழ்ந்து வணங்கி தங்களை பற்றி எதுவும் அறியாமல் சமணர்களுடைய துர்போதனைகளால் மதி இழந்து, அவர்களின் இசைகளுக்கு இசைந்து, தங்களுக்கு பல்வேறு முறைகளில் தீங்கு இழைத்துவிட்டேன் என்றும், தான் செய்த பிழையை மன்னிக்க வேண்டும் என்றும் வேண்டி நின்றார். திருநாவுக்கரசருக்கும் மன்னரின் செயல்கள் அதிர்ச்சி அளிக்க கூடியதாக இருந்தாலும் எல்லாம் எம்பெருமானின் செயலாகும். இதில் நாம் அனைவரும் ஒரு கருவிகளே... எல்லாம் அவன் சித்தம் போல் என்றுரைத்து தனது அடியில் இருந்த மன்னரை எழுப்பி அவரை மன்னித்தார்.
தாம் செய்த செயல்களை தவறு என்று உணர்ந்து, தம் முன்னால் ஏதும் அறியாத சிறு பாலகர் போல் நிற்கும் பல்லவ மன்னனுக்கு திருநாவுக்கரசர் ஐந்தெழுத்து மந்திரத்தை மனதில் எண்ணிய வண்ணம் திருவெண்ணீறு கொடுத்தார். மன்னர் திருநாவுக்கரசர் அளித்த திருவெண்ணீற்றை மிகுந்த பக்தியோடு பெற்றுக்கொண்டு தனது நெற்றியிலும், திருமேனியிலும் பூசிக்கொண்டவாறு திருநாவுக்கரசரை பணிந்து நின்றார். பின்பு மன்னரும் சைவ சமயமே மெய்யென்று உணர்ந்து கொண்டேன் என்று உரைத்தார்.
அதுமட்டுமல்லாமல் இனி மேற்கொண்டு சைவ சமயத்திலேயே இருப்பதாக கூறி சிவபெருமானை மனமுருகி வழிபட துவங்கினார். சில நாட்கள் திருநாவுக்கரசருடன் தங்கியிருந்து மனம் மகிழ்ந்த மன்னர், ஒருநாள் அவரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு தனது நகரமான பாடலிபுரத்திற்குப் புறப்பட்டார். பாடலிபுரத்திற்கு வந்ததும் முதல் பணியாக தனது அரசாட்சியில் இருக்கும் சமணர்களின் பள்ளிகளையும், பாழிகளையும் இடித்து தள்ள ஆணையிட்டார். பின்பு அவ்விடத்தில் கிடைக்கும் கற்களை கொண்டு திருவதிகைக்கு கொண்டுவந்து பரமனுக்கு திருவதிகையில் குண பாலீசுரம் என்னும் திருக்கோவிலைக் கட்டி சைவ சமயத்திற்குச் சிறந்த தொண்டாற்ற தொடங்கினார்.
திருநாவுக்கரசர் எம்பெருமானின் மீது கொண்ட பக்தியாலும், அன்பாலும் சிவத்தலங்களைத் தரிசித்து வர திருவதிகைப் பெருமானை வணங்கி தமது சிவயாத்திரையைத் தொடர்ந்தார். மனதில் பரமனை எண்ணி அவரை தரிசனஞ்செய்து திருப்பதிகம் பாட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு திருவதிகையில் இருந்து விடைபெற்றுக்கொண்டு திருவெண்ணெய்நல்லூர், திருவாமாத்தூர், திருக்கோவலூர் முதலிய தலங்களுக்கு சென்று எம்பெருமானை வணங்கி பதிகம் பாடிக்கொண்டு பெண்ணாகடத்திற்கு சென்று திருத்தூங்கானை மாடமென்னும் ஆலயத்திற்கு சென்றார்.
பெண்ணாகடத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை தமது விழிகளில் காணும் காட்சிகள் யாவும் உண்மையா? என்று எண்ணும் விதத்தில் அமைந்திருந்தது. செம்மொழியான பைந்தமிழில் பரம்பொருளை எழிலும், பொருளும் கொண்ட சொற்களால் உருவாக்கப்பட்ட பாமாலையை சாத்திப் போற்றினார். அவ்விதம் போற்றும்போது எம் மனதில் இருந்து எம்மை ஆட்கொண்டு எமக்கு அருள்புரியும் அருள் வடிவமே! இந்த அடியேனின் மனதில் நீங்காத கவலை ஒன்று உள்ளிருந்து வாட்டி வதைக்கின்றது. அதாவது, தங்களை பற்றி உணராமல் யாம் சில காலம் சமண மதத்தில் இணைந்து அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைத்த எமக்கு இவ்வுலகில் உயிர் வாழ விருப்பம் கொள்ளவில்லை என்றார்.
அடியேனாகிய நான் உலகில் உமது திருநாமத்தை எண்ணி போற்றி மகிழ்ந்து வாழ வேண்டுமென்றால் தேவர்களுக்கு தேவரான... சடைமுடி நாதரான... தாங்கள் திருவுள்ளம் கொள்ள வேண்டும் என்றார். அது மட்டுமல்லாமல் இந்த ஏழையின் வெண்ணீறு அணிந்த மேனியிலே உமது இலச்சினையாகிய சூலத்தையும், இடபத்தையும் அடியேன் மேல் பொறித்தருள வேண்டும் என்று வேண்டினார் திருநாவுக்கரசர். இவ்விருப்பத்தை மனதில் கொண்டு 'பொன்னாற் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம்" எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடினார்.
தமது எண்ணத்தை மனதில் கொண்டு எம்பெருமானின் மீது பதிகம் பாடி முடித்தார். திருநாவுக்கரசர் பாடிய செம்மொழியால் மனம் மகிழ்ந்த மதி சூடிய சிவபெருமான் அடியாரின் விருப்பம் நிறைவேறும் பொருட்டு அருள்புரிந்தார். அத்திருத்தலத்தில் இருந்த மக்கள் கூட்டத்தில் எவருக்கும் அறியாவண்ணம் பூதகணம் ஒன்று தோன்றி திருநாவுக்கரசரின் தோள்களில் அவரின் விருப்பத்திற்கு ஏற்ப சூலமுத்திரையையும், இடபமுத்திரையையும் பொறித்துவிட்டு அவ்விடத்தை விட்டு மறைந்தது.
திருநாவுக்கரசர் தமது தோள்களில் விருப்பத்திற்கேற்ப சூலமுத்திரை, இடபமுத்திரை இருப்பதை கண்டதும் அவர் அடைந்த மகிழ்ச்சி என்பது எல்லை இல்லாத வகையில் இருந்தது. அவ்வேளையில் அவரையும் அறியாமல் எம்பெருமானின் திருவருளை நினைத்து அவரது விழிகளில் இருந்து ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது. இவ்வுலகில் எவருக்கும் கிடைக்காத அந்த இனிமையான தருணத்தில் விண்ணுலகில் இருந்த தேவர்கள் யாவரும் மலர் மாரி பொழிந்தனர். ஆலயத்தில் மறையொலி ஒன்று உருவாகியது.
மறையொலியினால் அங்கே அருள் ஒளியும் பிறந்தது. அவ்விடத்தில் தோன்றிய காட்சியை கண்டதும் தம்மை மறந்த நிலையில் எம்பெருமானின் பாத கமலங்களில் விழுந்து வணங்கினார் திருநாவுக்கரசர். பல யுகங்களாக தவமிருக்கும் தவசிகளும், அமரர்களும், திருமூர்த்திகளும் போற்றி வணங்கும் எம்பெருமானின் திருவடியில் அன்பின் வடிவமாய் அண்ணன் அம்மையப்பரை எண்ணி மனமகிழ்ச்சி கொண்டார். அத்தலத்தில் சில காலம் தங்கியிருந்து பரமனை சிந்தையில் நிறுத்தி செந்தமிழ்ப் பாமாலை சாத்தி திருத்தொண்டுகள் பல புரிந்து கொண்டிருந்தார்.
திருநாவுக்கரசர் ஒருநாள் பெண்ணாகடத்திலிருந்து புறப்பட்டார். பின்பு அங்கிருந்து திருவரத்துறைக்கும், திருமுதுகுன்றுக்கும் சென்று பரம்பொருளான எம்பெருமானை தரிசனம் செய்து திருப்பதிகம் பாடிய வண்ணம் கிழக்கே நிவாக்கரையின் வழியாக தனது பயணத்தை மேற்கொண்டு சிதம்பரத்தினை (தில்லை) வந்தடைந்தார். திருநாவுக்கரசர் எம்பெருமான் வீற்றிருக்கும் திருத்தலத்தின் கோபுரத்தை தன் விழிகள் மூலம் கண்டதும் அவர் கண்களில் இருந்து நீர்மல்க சிவநாமத்தைப் பாடிப் பணிந்தார்.
திருநாவுக்கரசர் தில்லைக்கு வந்தடைந்த தகவலானது அங்கு வாழ்ந்து வந்த அந்தணர்களுக்கு தெரிந்ததும் அவரை கண்டு இன்முகத்தோடு வரவேற்றனர். தில்லைவாழ் அந்தணர்கள் சூழ சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலின் மேற்கு ராஜகோபுரத்தின் வழியாக சென்று நடராஜரை தரிசித்தார். திருத்தலத்தில் ஆனந்தத் தாண்டவம் ஆடும் பொன்னம்பலத்தரசரை கண்டு மனமுருகி அவரை வழிபட்டார்.
இரண்டு கரங்களும் சிரசின் மேலே குவிய.... இரண்டு கண்களில் இருந்தும் ஆனந்த பாஷ்பஞ்சொரிய 'கையுந் தலைமிசை புனையஞ்சலியன" எனத் தொடங்கும் செந்தமிழ் பதிகத்தைப் பாடினார். எம்பெருமானின் ஆனந்த வடிவத்தைப் பார்த்து பார்த்து அகம் மகிழ்ந்து கொண்டிருந்த அதாவது, அக்னிக்கு இடப்பட்ட வெண்ணெயை போல் மனமுருகி கொண்டிருந்த திருநாவுக்கரசருக்கு அவ்வேளையில் அம்பலவாணரின் பாத கிண்கிணிகள் பரதம் ஆட அரவத்தை ஆரமாக அணிந்த அழகிய வெண்ணீறு துலங்கும் மலர்க்கரங்கள் அபிநயத்தோடு புலப்படுவது போல் கண்டார்.
அந்தநிலையில் இருந்து இறைவன் தன்னை நோக்கி, என்று வந்தாய்? என்று கேட்பது போன்ற குறிப்பை புலப்படுத்த நடனம் புரிகின்றார் என்று உணர்ந்து கொண்டவராய் எம்பெருமானின் திருவருளால் 'கருநட்ட கண்டனை" என்னும் விருத்தத்தையும் 'பத்தனாய்ப் பாடமாட்டேன்" என்னும் நேரிசையையும் பாடிப் பணிந்து கொண்டிருந்தார் திருநாவுக்கரசர். பரமனை தன் விழிகள் குளிர தரிசனம் செய்து திருக்கோவிலிலும், திருவீதிகளிலும் உழவார பணிசெய்து எம்பெருமானை வணங்கி பாமாலை பல இயற்றி அங்கே சில காலம் தங்கியிருந்தார்.
எம்பெருமானை தரிசித்து கொண்டிருந்த வேளையில் 'அன்னம் பாலிக்குந் தில்லைச் சிற்றம்பலம்" என்னும் திருக்குறுந்தொகையை பாடினார். பின் அங்கிருந்து புறப்பட்டு திருவேட்களத்துக்குச் சென்றார். அங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை தரிசனம் செய்து திருப்பதிகம் பாடினார்.
திருநாவுக்கரசர் தனது பயணத்தை தொடர்ந்த வண்ணம் திருக்கழிப்பாலையை அடைந்து சுவாமியை தரிசனம் செய்து திருப்பதிகங்கள் பாடிக்கொண்டு அங்கே சில காலம் தங்கியிருந்தார். பின் அவ்விடத்திலிருந்து விடைபெற்று பயணம் மேற்கொள்ளும் வழியிலே, 'பனைக்கை மும்மத வேழமுரித்தவன்" என்று எடுத்து 'அம்பலக்கூத்தனைத் தினைத்தனைப் பொழுதும்மறந் துய்வனோ" என்னும் திருக்குறுந்தொகை பாடிக்கொண்டு, சிதம்பரத்திற்கு அருகிலுள்ள கோவில்களுக்குச் சென்று 'அரியானை யந்தணர் தஞ்சிந்தை யானை" என்னும் பெரிய திருத்தாண்டகம் பாடிக்கொண்டு திருக்கோவிலிற்கு சென்று, சபாநாதரைத் தரிசித்து வணங்கி, 'செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா வெறிக்கும்" என்னும் திருநேரிசை பாடினார்.
திருநாவுக்கரசர் அங்கே தங்கியிருந்து பதிகம் இயற்றியும், உழவாரத்தொண்டு செய்து கொண்டிருக்கும் நாட்களில் ஒருநாள் சீர்காழியிலே பரமசிவனது திருவருளினால் உமாதேவியார் ஞானப்பாலை ஊட்ட... வேதார்த்தங்களைத் தமிழிலே தேவாரமாகப் பாடியருளுகின்ற திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடைய மகிமையை அடியார்கள் பேசி கொண்டிருப்பதைக் கேள்வியுற்று அவருடைய திருவடிகளை வணங்க வேண்டும் என்னும் ஆசை அவர் மனதில் தோன்றியது.
அதனால் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் சபாநாயகரைத் தொழுது அவரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு புறப்பட்டு திருவீதியிலே அங்கப்பிரதட்சணம் செய்து அத்திருப்பதியின் எல்லையைக் கடந்து திருநாரையூரைப் பணிந்து பாடி சீர்காழி பதியின் எல்லையை வந்தடைந்தார். திருநாவுக்கரசர் சீர்காழிக்கு வருகை தந்து கொண்டு இருக்கின்றார் என்ற செய்தியை அறிந்த திருஞானசம்பந்தமூர்த்தி அவரை காண அத்தியந்த ஆவல் கொண்டு அடியார்கள் சூழ புறப்பட்டுச் சென்று திருநாவுக்கரசரை அகமும், முகமும் மலர எதிர்கொண்டு வரவேற்றார்.
தமது எதிரில் தோணியப்பருக்குத் திருத்தொண்டு செய்து வரும் திருஞானசம்பந்தமூர்த்தி வந்துள்ளார் என்பதை அறிந்ததும் மட்டற்ற மகிழ்ச்சி கொண்ட திருநாவுக்கரசர் திருக்கூட்டத்தின் இடையே சென்று அவருடைய திருவடிகளில் பணிந்தார். யாவரும் எதிர்பாராத இந்த நிகழ்வில் திருஞானசம்பந்தமூர்த்தி தம்முடைய திருக்கரங்களினால் திருநாவுக்கரசரின் திருக்கரங்களைப் பிடித்து எழுப்பி தாமும் வணங்கினார்.
திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசரை தமது தந்தைக்கு இணையாக... மனதார அவரை நோக்கி... அப்பரே...!! என்று அழைத்தார். திருஞானசம்பந்தர் தம்மை அப்பரே...! என்று அழைத்ததும் தமது செவிகளால் கேள்வியுற்ற திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தரை நோக்கி அடியேன் என்று தமது மனதில் உருவான அன்பை வெளிப்படுத்தினார். அந்த நிலையில் அங்கிருந்த அனைவருக்கும் எம்பெருமானின் அருள்பெற்ற அருட்கடலும், அன்புக்கடலும் ஒன்றோடு ஒன்று கலந்து இணைந்தாற் போன்று தோன்றியது. அவ்விருகடல்களும் இணைந்து அடியார்கள் புடைசூழ மங்கல இசையுடன் தோணியப்பர் ஆலயத்தை வந்தடைந்தனர். திருக்கோபுரத்தை வழிபட்ட இருவரும் வானளாவி ஓங்கி நிற்கும் விமானத்தை வலம் வந்து தொழுதனர்.
திருஞானசம்பந்தர் அப்பரடிகளைப் பார்த்து அப்பரே...!! உன்னுள் இருந்து உம்மை ஆட்கொண்டருளிய பரம்பொருளான எம்பெருமானை இன்பத்தமிழால் பாடுவீராக...!! என்று வேண்டினார். மகிழ்ச்சி பெருங்கடலில் மூழ்கி தம்மை மறந்த நிலையில் நின்ற அப்பரடிகள் திருத்தோணியப்பரை மனதில் எண்ணியவாறு 'பார் கொண்டு முடி" என்னும் பைந்தமிழ்ப் பாமாலை சாத்தித் திருத்தோணியப்பரையும், பெரியநாயகியம்மையாரையும் பணிந்து பாடினார்.
அப்பர் அடிகளாரின் திருப்பதிகம் பாடி முடித்ததும் கலை ஞானக் கடலில் சிறு பாலகனாக இருக்கும் திருஞானசம்பந்தர் அருள் கடலில் அரசராக திகழும் அப்பர் அடிகளாரிடம் தமது மனதில் எழுந்த விருப்பத்தை தெரிவித்தார். அதாவது தம்முடன் சிறு காலம் தங்கிருக்க வேண்டும் என்பது அவரின் ஆசையும், விருப்பமும் ஆகும். சம்பந்தர் விருப்பத்திற்கிணங்கி அப்பரடிகளும் சீர்காழியில், திருஞானசம்பந்தருடன் சில காலம் தங்கி இருந்தார்.
இவ்விரு சிவனடியார்களும் நாள்தோறும் எம்பெருமானை வணங்கி பல பதிகங்களை பாடிப் பணிந்து வந்தனர். சீர்காழிப்பதியிலுள்ள மெய்யன்பர்கள் அருள்பெற்ற இந்த நாயன்மார்களின் செந்தமிழ்த் தேன் சிந்தும் பக்திப் பாடல்களைப் பருகிப் பெருமிதம் பொங்கினர். இவ்வடியார்கள் சீர்காழியில் இருக்கும் காலம் வரை நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது போல மகிழ்ச்சியான சூழல்கள் நிலவியது.
பொருள் செல்வத்தினால் கிடைக்கும் மகிழ்ச்சியை காட்டிலும் பைந்தமிழினால் அழகிய சொற்கள் இவர்களால் பாடப்பெற்ற பதிகங்களை கேட்கும்போது அவ்விடத்தில் இருந்த மானுடவினம் அடைந்த மகிழ்ச்சி என்பது அளவில்லாததாகும். ஒருநாள் சோழநாட்டிலுள்ள திருத்தலங்களை எல்லாம் தரிசித்து வரவேண்டும் என்று ஆராக் காதலுடன் இரு ஞானமூர்த்திகளும் சீர்காழியை விட்டுப் புறப்பட்டனர்.
திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் இணைந்து பல சிவதலங்களைத் தரிசித்தவாறு திருகோலக்கா என்னும் தலத்தை வந்தடைந்தனர். அங்கு இருவரும் எம்பெருமானை தரிசித்து மனம் குளிர்ந்தனர். திருஞானசம்பந்தமூர்த்தி அப்பர் அடியார்களிடம் விடைபெற்றுக்கொண்டு சீர்காழிக்குத் திரும்பினார்.
அப்பமூர்த்தி திருக்கருப்பறியலூர், திருப்புன்கூர், திருநீடூர், திருக்குறுக்கை, திருநன்றியூர், திருநனிப்பள்ளி முதலிய தலங்களை வணங்கி கொண்டு காவேரியாற்றின் இருகரை வழியாக சென்று திருச்செம்பொன்பள்ளி, திருமயிலாடுதுறை, திருத்துருத்தி, திருவேள்விக்குடி, திருவெதிர்கொள்பாடி, திருக்கோடிக்கா, திருவாவடுதுறை, திருவிடைமருதூர், திருநாகேசுவரம், திருப்பழையாறை என்கின்ற தலங்களைப் பணிந்து பாடி திருச்சத்தி முற்றத்தை அடைந்தார்.
உமாதேவியார் போற்றி பணிந்த புனிதத்தலமாக கருதப்பட்ட திருச்சத்தி முற்றத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வணங்கி வழிபட்டார். அப்பரடிகள் அவ்வூரில் தங்கியிருந்து எம்பெருமானுக்கு உழவார பணிகளை செய்து மனம் மகிழ்ந்தார். திருநாவுக்கரசரின் வருகையால் திருச்சத்தி முற்றத்தில் இருந்த பக்தக்கோடிகள் மனமகிழ்ச்சி அடைந்தனர்.
ஆன்மீக அன்பர்களும் அப்பரடியாருக்கு உறுதுணையாக நின்று அவருக்கு வேண்டிய பணிகளை செய்து கொண்டிருந்தனர். திருநாவுக்கரசர் உழவார பணிபுரிந்து பரமனை வழிபட்டார். அவ்விதம் வழிபடும்போது அப்பரடிகள் எம்பெருமானிடம் கூற்றவன் வந்து எனது உயிரைக் கவர்ந்து செல்லும் முன் உமது திருவடி அடையாளம், அடியேன் சென்னிமீது பதியுமாறு வைத்து அருள வேண்டும் என்ற கருத்தமைந்த 'கோவாய் முடுகி யடுதிறற் கூற்றங் குமைப்பதன்முன் பூவா ரடிச்சுவ டென்மேற் பொறித்துவை" என்னும் திருப்பதிகத்தைப் பாடினார்.
அப்பர் அடிகளாரின் திருப்பதிகத்தால் மனமகிழ்ச்சி அடைந்த எம்பெருமான் திருநல்லூருக்கு வா என்று அப்பரடிகளுக்கு அருள்புரிந்தார். எம்பெருமானின் திருவருளால் அடிகள் ஆனந்தம் மேலிட அந்த பொழுதினிலே திருச்சத்தி முற்றத்தை விட்டு திருநல்லூரை நோக்கி தமது பயணத்தை துவங்கினார். திருநல்லூர் என்னும் பழம்பதியை வந்தடைந்தார். அப்பமூர்த்தி திருநல்லூரிலே சென்று எம்பெருமானை வணங்கி எழும்போது கருணைக் கடலாகிய நல்லூர்ப் பெருமானார்(எம்பெருமான்), திருச்சத்தி முற்றத்தில் உள்ளம் உருக என்னிடம் வேண்டியதற்கு ஏற்ப உனது எண்ணத்தை முடிக்கின்றோம் என்று திருவாய் மலர்ந்து, தமது திருப்பாத மலர்களை அப்பர் அடிகளாரின் சென்னியின் மீது சூட்டி அருளினார்.
எம்பெருமானின் கருணைக் கடலில் மூழ்கி கரை காணாமல் தத்தளித்துப் போன அப்பரடிகள் 'நினைந்துருகு மடியாரை" என்று திருத்தாண்டக மெடுத்து, திருப்பபாட்டிறுதிதோறும் 'திருவடி யென்றலைமேல் வைத்தார்நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே" என்று பாடியருளினார். இன்னும் பல திருப்பதிகங்கள் பாடிக்கொண்டு சில நாட்கள் திருநல்லூரில் தங்கியிருந்தார். அங்கு தங்கியிருந்த நாட்களில் திருக்கருகாவூர், திருப்பாலைத்துறை முதலாகிய தலங்களுக்குச் சென்று எம்பெருமானை தரிசனம் செய்து கொண்டு திருநல்லூருக்குத் திரும்பினார்.
சிலநாட்கள் சென்றபின் அப்பமூர்த்தி திருநல்லூரிலிருந்து விடைபெற்று திருப்பழனத்தை வணங்கிக் கொண்டு திங்கள%2Bரின் வழியாகச் சென்று கொண்டிருந்தார். அவ்விதம் செல்லும்பொழுது அவ்வூரிலே அப்பூதியடிகணாயனார் என்பவர் தான் பெற்ற புத்திரர்களுக்கு மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்றும் திருநாமம் சூட்டி மகிழ்ந்தார். அதுமட்டுமல்லாமல் அவரால் செய்யப்பட்ட தண்ணீர் பந்தல்கள், மடங்கள், சாலைகள், குளங்கள் முதலானவற்றிற்கெல்லாம் திருநாவுக்கரசரின் பெயரையே சூட்டியுள்ளார் என்னும் செய்தியை அறிந்தார்.
திருநாவுக்கரசர் இறைவனைத் தரிசிக்க திங்கள%2Bர் வருகை தந்தார். அவ்விடத்தில் பெரிய தண்ணீர் பந்தல் ஒன்றைப் பார்த்தார். கோடைக்காலத்தின் கொடுமை தெரியாதிருக்கும் வண்ணம் பந்தலைச் சற்றுப் பெரிதாகப் போட்டுக் கீழே மணலைப் பரப்பி குளிர்ந்த நீரை நிறையக் கொட்டி வைத்திருந்தனர். இதனால் அங்கு தண்ணீர் அருந்திவிட்டு தங்குபவர்களுக்குச் சற்று வெம்மையைத் தணித்துக் கொள்ளவும் மார்க்கமிருந்தது.
அருளுடையார் திருவுள்ளத்தைப் போல் குளிர்ந்த தன்மையுடையதாய் அந்த தண்ணீர் பந்தல் அமைந்துவிட்டதால் அந்நிழலில் எப்பொழுதும் ஜனங்கள் திரள்திரளாக வந்து தங்கிச் சென்ற வண்ணமாகவே இருப்பர். இப்பந்தலைப் பார்த்த அப்பர் அடிகள் இவற்றையெல்லாம் எண்ணி உள்ளம் மகிழ்ந்தார். அத்தோடு இவர் பந்தலின் எல்லா பாகங்களிலும் அழகுபட திருநாவுக்கரசு என்று எழுதியிருப்பதையும் பார்த்தார். தமது பெயரை பந்தல் முழுவதும் இருப்பதைக் கண்டதும் அடியாருக்கு வியப்பும், ஆச்சரியமும் ஏற்பட்டது. பின்பு அங்கு இருந்தவர்களை நோக்கி இந்த தண்ணீர் பந்தலுக்கு திருநாவுக்கரசர் என்று பெயரிட்டவர் யார்? என்று கேட்டார்.
திருநாவுக்கரசர் அங்கு இருந்தவர்களை நோக்கி இந்த தண்ணீர் பந்தலுக்கு திருநாவுக்கரசர் பெயரிட்டவர் யார்? என்று கேட்டதும், அங்கு கூடி இருந்தவர்களில் ஒருவர் இந்த தண்ணீர் பந்தலுக்கு இப்பெயரை வைத்தவர் அப்பூதி அடிகள் என்பவர்தான் என்று கூறினார். அவர்தான் இந்த தண்ணீர் பந்தலை அமைத்து அடியார்களுக்கும், மக்களுக்கும் நற்பணிகளை ஆற்றி வருகின்றார். இவை மட்டும் அல்லாமல் அவரால் அமைக்கப்பட்டுள்ள சாலைகளுக்கும், குளங்களுக்கும் திருநாவுக்கரசர் என்னும் இப்பெயரையே சூட்டியுள்ளார் என்று மிகவும் பெருமையுடன் கூறினார்.
அடிகளார் கூறியதை கேட்டதும் திருநாவுக்கரசருக்கு தனது பெயரை சூட்டியிருக்கும் அப்பூதி அடிகளாரை காண வேண்டும் என்ற விருப்பம் உருவாகியது. பின்பு அங்கிருந்தவர்களிடம் அப்பூதி அடிகளார் யார்? என்றும், அவர் இருக்கும் இடத்தை உரைக்குமாறும் வினவினார். அடியார்களின் சிலர் அப்பூதி அடிகளார் இருக்குமிடத்திற்கு அழைத்துச் செல்கின்றோம் என்றுரைத்து அப்பூதி அடிகளாரின் இருப்பிடத்திற்கு திருநாவுக்கரசரை அழைத்துச் சென்றனர்.
அப்பூதி அடிகளார் தமது இல்லத்தில் சிவநாம சிந்தனையுடன் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது தனது இல்லத்தை நோக்கி அடியவர்கள் கூட்டம் ஒன்று வந்து கொண்டிருப்பதைக் கண்டதும், யாரோ ஒரு பெரிய சிவனடியார் இங்கு வந்துள்ளார்கள் என்பதையும், அவர் தனது இல்லத்திற்கு வந்து கொண்டிருக்கிறார் என்பதையும் புரிந்து கொண்டார். அதை உணர்ந்ததும் இல்லத்திலிருந்து வாசலுக்கு வந்து அவர்கள் அனைவரையும் இருகரம் கூப்பி வரவேற்க துவங்கினார்.
அடியவர் கூட்டத்தில் இருந்த ஒருவர் இந்த அடியார் தங்களை காண தங்களின் இல்லத்திற்கான வழியை வினவினார். அதற்காக அவரை இங்கே அழைத்து வந்தோம் என்று கூறினார். அப்பூதி அடிகளும் திருநாவுக்கரசரை வணங்கி அவரை தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்று அவரை ஆசனத்தின் மீது அமர வைத்தார். பின்பு அவரிடம் தாங்கள் யார்? என்றும், தாங்கள் எதற்காக என்னை காண வேண்டும்? என்றும், யான் தங்களுக்கு ஏதாவது பணி செய்தல் வேண்டுமா? என்றும் மிகவும் பணிவுடன் உள்ளம் உருக வினவினார்.
அதற்கு திருநாவுக்கரசரோ... தான் திருச்சடையானைத் திருப்பழனத்திலே தரிசித்து விட்டு திங்கள%2Bரில் இருக்கும் முடியானை வணங்கும் பொருட்டு தங்கள் ஊர் வந்திருப்பதாக கூறினார். அவ்வாறு வரும் வழியில் உங்களால் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலைக் கண்டதாகவும் அங்கு இளைப்பாறி கொண்டு இருந்தபோது தங்களை பற்றி கேள்விப்பட்டேன் எனவும் கூறினார்.
திருநாவுக்கரசர் தண்ணீர் பந்தல் போடப்பட்ட இடத்தில் இருந்தவர்களில் சிலர் உங்களைப் பற்றி கூறிக்கொண்டிருந்ததை கேட்டறிந்தேன் என்றார். மேலும், தாங்கள் அடியாருக்கு வேண்டிய உதவிகள் செய்து வருவதையும், மற்றவர்களுக்கு உதவும் வகையில் செயல்களை புரிவதில் சிறந்தவர் என்பதையும் அறிந்தேன். அதை அறிந்ததும் உங்களை காண வேண்டும் என்ற ஒரு எண்ணம் தோன்றியது. அதற்காகவே யாம் அவர்களிடம் தங்களது இல்லத்திற்கான வழிகளை கேட்டறிந்து இவ்விடம் வந்திருப்பதாக கூறினார்.
இவ்விதம் திருநாவுக்கரசர் எடுத்து கூறியதும் தங்களின் எண்ணப்படியே அனைத்தும் நன்மையாக நடைபெறும் என்று கூறினார் அப்பூதி அடிகளார். பின்பு திருநாவுக்கரசர் மீண்டும் அப்பூதி அடிகளாரிடம் தனது மனதில் எழுந்த ஒரு ஐயரைப் பற்றி கேள்விகள் கேட்க தொடங்கினார். அதாவது, தாங்கள் செய்யும் அனைத்து நற்செயல்களுக்கும் தங்களின் பெயர்களை எவ்விடத்திலும் உபயோகிக்காமல் மற்றொருவரின் பெயரை உபயோகிக்கின்றார்களே... இதற்கு ஏதாவது உட்பொருள் இருக்கின்றதா? என்பதை யாம் அறிந்து கொள்ள இயலுமா?
அப்பூதி அடிகளார் திருநாவுக்கரசர் கூறியதைக் கேட்டதும் மனதில் ஒருவிதமான வருத்தம் அடைந்தார். ஏனெனில் திருநாவுக்கரசரை யார் என்று அறியாமல் இவர் மற்றொருவர் என்று உரைத்தது இவர் மனதை பெரிதும் காயப்படுத்தியது. மனதில் பட்ட காயமானது அவர் கண்களிலும், அவர் பேசும் வார்த்தைகளிலும் வெளிப்பட தொடங்கியது. அதாவது, திருநாவுக்கரசர் யாரென்று அறியாமல்... நீர்! மற்றொருவர் என்று கூறுகிறீர்களே என்று அவர் மீது கோபம் கொண்டு பேசத் துவங்கினார். சைவ திருக்கோலம் பூண்டுள்ள தாங்களே இப்படி ஒரு கேள்வியைக் கேட்கலாமோ? யார் நீங்கள்? எங்கிருந்து வந்து இருக்கின்றீர்கள்? உமது பூர்வீகம் என்ன? என்று சினம் கொண்டு அவரிடம் ஒவ்வொரு கேள்விகளாக கேட்க தொடங்கினார்.
திருநாவுக்கரசரோ எவ்விதமான கோபமும் இல்லாமல் அடியாரே அமைதி கொள்வீர்களாக...! சினம் வேண்டாம். அடியேனுக்கு அவரை பற்றி தெரியாததால்தான் யாம் தங்களிடம் அவரை பற்றி கேட்டேன் என்று கூறினார். அப்பூதி அடிகளார் அவரின் அறியாமை எண்ணி உம்மொழியை யாம் ஏற்கின்றோம் என்றுரைத்து திருநாவுக்கரசரையே யார் என்று கேட்டீர் அல்லவா? கூறுகிறேன் கேட்பீர்களாக.... என்று அவரைப் பற்றி கூற தொடங்கினார்.
அப்பூதி அடியார், சமணத்தின் காரணமாக அறநெறி தவறி நெறி இழந்த மன்னனுக்கு நல்ல அறிவை புகட்டி சைவ சன்மார்க்கத்தின் நெறியை உலகோருக்கு அறியும் வகையில் உணர்த்தியவர் திருநாவுக்கரசர். இறைவனுக்கு செய்யும் திருத்தொண்டால் இம்மையிலும் வாழலாம் என்ற மெய் நிலையை நிரூபித்துக் காட்டிய ஒப்பற்ற தவசீலர் திருநாவுக்கரசர் ஆவார். அவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்த அடியாரின் திருப்பெயரை தான் செய்யும் நற்பணிகளுக்கு எல்லாம் சூட்டியுள்ளோம் என்பதை உம்மால் புரிந்துகொள்ள முடியவில்லையா? இவ்வளவு சிறப்பு வாய்ந்த அடியாரை பற்றி அறியாது தாங்கள் அவரை மற்றொருவர் என்று உரைக்க எம்புலன்கள் கேட்க நான் என்ன பாவம் இழைத்தேனோ? என்று கூறினார்.
மேலும், என்னுடைய தேவருக்கு இப்படி ஒரு நிலை தங்களைப் போன்ற ஒரு அடியார்களால் ஏற்படும் என்று என்னால் எள்ளளவும் நினைக்க இயலவில்லையே! என்றெல்லாம் பலவாறு தனது மனதில் இருந்து வந்த கவலைகளை உரைத்து வெளிப்படுத்தினார் அப்பூதி அடிகளார். அடிகளார் தம்மீது கொண்டுள்ள வியக்கத்தக்க பக்தியையும், அன்பையும் கண்டு அப்பர் சுவாமிகள் அப்பூதியடிகளைப் பார்த்து, சைவம் அடைந்து வாழ்வு பெற்ற சிறுமையோனாகிய நாவுக்கரசன் யானே! என்றார். திருநாவுக்கரசர் இவ்வாறு கூறியதை கேட்டு அப்பூதி அடிகள் மெய் மறந்து நின்றார்.
அவரின் கைகள் இரண்டும் அவரை அறியாமல் சிரமேற் குவிந்தன. கண்கள் குளமாகி ஓடின. மெய் சிலிர்த்தது. பெருமகிழ்ச்சி கொண்ட அப்பூதி அடிகள், அன்பின் பெருக்கால் திருநாவுக்கரசரின் மலர் அடிகளில் வீழ்ந்து இரு கைகளாலும் காலடிகளைப் பற்றிக் கொண்டார். அப்பர் அடிகளும் அப்பூதி அடிகளை வணங்கி, ஆலிங்கனம் செய்து கொண்டார். இருவரும் ஆனந்தக் கடலில் மூழ்கினர். அப்பூதி அடிகளாரின் இல்லத்தில் கூடியிருந்த அன்பர்கள் திருநாவுக்கரசரைப் பணிந்தனர். அவரது அடக்கத்தையும், பெருமையையும் வானளாவப் புகழ்ந்தனர்.
கைலாச வாசனே! நேரில் வந்ததுபோல் பெருமிதம் கொண்ட அப்பூதி அடிகள், சற்று முன்னால் தாம் சினத்தோடு பேசியதை மன்னிக்கும்படி அப்பர் அடிகளிடம் கேட்டார். அப்பூதியார், உள்ளமும் உடலும் பொங்கிப் பூரிக்க உள்ளே ஓடி மனைவி மக்களை அழைத்து வந்தார். எல்லோரும் சேர்ந்து திருநாவுக்கரசரின் மலரடியை பன்முறை வணங்கினர். பிறகு அப்பூதி அடிகள், திருநாவுக்கரசரை வழிபாட்டிற்கு எழுந்தருளச் செய்தார். பாத கமலங்களைத் தூய நீரால் கழுவிப் புத்தம் புது நறுமலரை குவித்து திருநாவுக்கரசரை வணங்கினார். அவரது பாதங்களைக் கழுவிய தூய நீரைத் தம்மீதும், தம் மனைவி மக்கள் மீதும் தெளித்துக் கொண்டார்.
திருநாவுக்கரசர் அப்பூதி அடிகளின் அன்பிற்கு கட்டுப்பட்டு உலகையே மறந்தார். பிறகு திருநீற்றை எடுத்து அப்பூதி அடிகளுக்கும், அவர் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் அளித்தார். அடிகளும், அவர்தம் குடும்பத்தினரும் நெற்றி முழுமையும், மேனியிலும் திருநீற்றைப் பூசிக் கொண்டனர். அப்பூதி அடிகள் திருநாவுக்கரசரிடம், ஐயனே... எமது இல்லத்தில் திருவமுது செய்து எமக்கு அருள் புரிய வேண்டும் என்று பணிவன்புடன் வேண்டி நின்றார். அப்படியே ஆகட்டும் என்று அடியாரின் அன்புக் கட்டளைக்கு அடிபணிந்தார் திருநாவுக்கரசர்.
திருநாவுக்கரசர் சம்மதிக்கவே அகம் மகிழ்ந்துபோன அப்பூதி அடிகளும், அவர் மனைவியும், என்ன பேறு பெற்றோம்? இங்கே அமுதுண்ண ஐயன் இசைந்தது. அம்பலத்தரசரின் திருவருட் செயலன்றோ இஃது என்று எண்ணி மகிழ்ந்தனர். அவரது மனைவி அறுசுவை அமுதிற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினாள். சற்று நேரத்தில் நால்வகையான அறுசுவை உண்டி தயாரானது.
அப்பூதி அடிகளாரின் மனைவியார், பெரிய திருநாவுக்கரசிடம் வாழையிலையை அறுத்து வருமாறு கூறினாள். அன்னையாரின் கட்டளையை கேட்டு மூத்த திருநாவுக்கரசு தனக்கு இப்படியொரு அரும்பணியை நிறைவேற்றும் பாக்கியம் கிடைத்ததே என பூரித்துப் புளகாங்கிதம் அடைந்து இலை எடுத்துவர தோட்டத்திற்கு விரைந்தோடினான். பின்புறம் அமைந்திருந்த தோட்டத்திற்குச் சென்ற அக்குமாரன் பெரியதொரு வாழைமரத்திலிருந்து குருத்தை அரியத் தொடங்கினான். அப்பொழுது வாழைமரத்தின் மீது சுற்றிக் கொண்டிருந்த கொடிய பாம்பு ஒன்று அச்சிறுவனின் கையை வளைத்துக் கடித்தது. பயங்கரமாக அலறினான் பெரிய திருநாவுக்கரசு.
கையில் பாம்பு சுற்றியிருப்பதைப் பார்த்ததும் அவசர அவசரமாக உதறித் தள்ளினான். பாம்பு கடித்ததைப்பற்றி அப்பாலகன் வருந்தவில்லை. உயிர்போகும் முன் பெற்றோர்கள் இட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்பதைப் பற்றித்தான் கவலைப்பட்டான். தன்னைப் பாம்பு கடித்த விஷயத்தை எவரிடமாவது கூறினால் நல்லதொரு காரியத்திற்குத் தடை ஏற்பட்டு விடும் என்று எண்ணி பேசாமல் தன் கடமையைச் செய்யக் கருதினான். அதுவரை விஷம் தாங்குமா என்ன? பாலகனின் உடம்பில் ஏறிய விஷம் சிறுகச்சிறுக தன் வேலையைச் செய்யத் தொடங்கியது. இலையும் கையுமாக வீட்டிற்குள்ளே ஓடினான் அப்பாலகன்.
பாலகன் தன் பெற்றோரிடம் இலையைக் கொடுப்பதற்கும், விஷம் உடலெங்கும் பரவி அவன் சுருண்டு விழுந்து உயிரை விடுவதற்கும் சரியாக இருந்தது. மகன் சுருண்டு விழுந்ததை கண்டு பெற்றோர்கள் ஒரு கணம் பயந்தனர். மகனுக்கு என்ன நேர்ந்தது என்பதைக்கூட உணர முடியாத நிலையில் சற்று நேரம் செயலற்று நின்றார்கள். நீலம் படிந்த மகனின் உடலைப் பார்த்ததும் பாம்பு கடித்து இறந்தான் என்பதை உணர்ந்தனர். பெற்றோர்கள் உள்ளம் பதைப்பதைத்து போனது. அவர்களுக்கு அலறி அழ வேண்டும் போல் இருந்தது. ஆனால், என்ன செய்ய முடியும்? மனதில் எழுந்த துக்கத்தை அடக்கிக் கொண்டனர்.
மகனின் உயிரைக் காட்டிலும் தொண்டருக்கு வேண்டிய பணிகளை செய்வதே முதன்மையான கடமையாகும் என்பதை மனதில் நிறுத்திக் கொண்டு தொண்டருக்கு தெரியாத வகையில் தன் மகனின் உடலைப் பாயால் சுற்றி ஒரு மூலையில் ஒதுக்கமாக வைத்தனர். மனதில் இருந்து வந்த சோகங்கள் யாவற்றையும் அகத்தே வைத்துக்கொண்டு முகத்தில் மகிழ்வுடன் காட்சி அளித்தனர். எவ்விதமான தடுமாற்றமும் இன்றி மலர்ந்த முகத்துடன் அப்பூதி அடிகளார் அப்பர் அடிகளை அமுதுண்ண அழைத்தார். பின்பு அவருடைய திருவடிகளை தூய நீரால் சுத்தம் செய்து ஆசனத்தில் அமரச் செய்தார்கள்.
ஆசனத்தில் அமர்ந்த திருநாவுக்கரசர் அனைவருக்கும் திருநீறு அளிக்கும்போது அனைவரும் இருந்த போதும் அப்பூதி அடிகளின் மூத்த மகனான திருநாவுக்கரசனைக் காணாது வியப்பு ஏற்பட பின்பு அவர்களிடம் மூத்த மகன் எங்கே? என்று கேட்டார். இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத அப்பூதி அடியார் என்ன சொல்வது? என்று புரியாமல் தவித்து கொண்டிருந்தார். அப்பொழுது அவரையும் அறியாமல் அவருடைய கண்கள் கலங்க துவங்கியது. அப்பூதி அடியார்களிடம் காணப்பட்ட இந்த மாறுதல்களை கண்டதும் இங்கு ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார் திருநாவுக்கரசர்.
மீண்டும் திருநாவுக்கரசர் அப்பூதி அடியாரை நோக்கி மூத்;த மகன் எங்கே? என்று கேட்பதற்குள் அப்பூதி அடியார் திருநாவுக்கரசரிடம் என்னுடைய மூத்த புதல்வன் இந்நிலையில் இங்கு உதவான் என்று கூறினார். அப்பூதி அடியாரின் கூற்றினை கேட்ட திருநாவுக்கரசர் தாங்கள், என்னிடம் ஏதோ உண்மையை மறைக்க முயல்கின்றீர்கள். உங்கள் பதில் என் உள்ளத்திற்கு திருப்தியை அளிக்கவில்லை என்று கூறினார். திருநாவுக்கரசரின் பதிலால் இனியும் உண்மையை மறைக்க இயலாமல் நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தையும் விளக்கமாக எடுத்துக்கூறினார் அப்பூதி அடிகள்.
அப்பூதி அடிகளார் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் கூறியதை கேட்ட பின்பு மனம் வருந்திய திருநாவுக்கரசர் என்ன காரியம் செய்தீர்கள்? என்று அவரை கடிந்து கொண்டே மூத்த மகன் திருநாவுக்கரசின் உடலைப் பார்க்க உள்ளே சென்றார். திருநாவுக்கரசின் உடலைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். அவரின் மனதில் பல கேள்விகளுடன் என்ன செய்வது? என்று அறியாமல் மனம் வெதும்பினார். பின்பு இனியும் காலம் தாமதிக்காமல் இறந்த புதல்வனின் பூத உடலை எடுத்துக்கொண்டு திருக்கோவிலுக்கு வருக... என்று கூறியவாறு கோவிலுக்குப் புறப்பட்டார்.
அப்பூதி அடிகளாரின் பாலகனைத் தூக்கிக்கொண்டு கோவிலுக்கு சென்று கொண்டிருக்கும் செய்தியை அறிந்ததும் ஊர் மக்கள் அவ்விடம் திரண்டனர். திருத்தலத்திற்கு சென்றதும் புதல்வனின் உடலை வைத்துவிட்டு திங்கள%2Bர் பெருமானை திருநாவுக்கரசர் மெய் மறந்து உருகிப் பாடினார். ஒன்று கொல்லாம் என்னும் திருப்பதிகத்தை திருநாவுக்கரசர் பாடினார். திருநாவுக்கரசரின் பக்தியிலேயே பரம்பொருளின் அருள் ஒளி பிறந்தது. பரம்பொருளின் அருள் ஒளி பட்டதும் மூத்த திருநாவுக்கரசு உறக்கத்தில் இருந்து எழுந்திருப்பவன் போல் எழுந்தான்.
பாலகன் தூக்கத்தில் இருந்து எழுந்து அப்பரடிகளின் காலில் விழுந்து வணங்கினான். அங்கு கூடி இருந்த அனைவருக்கும் உயிரிழந்த பாலகன் உயிர் பெற்று வருவதைக் கண்டதும் வியப்படைந்தனர். அப்பரடிகளின் பக்திக்கும், அருளுக்கும், அன்பிற்கும் அனைவரும் தலை வணங்கி நின்றனர். ஆலயத்திற்குள் கூடியிருந்த அன்பர் கூட்டம் அப்பர் பெருமானைக் கொண்டாடி போற்றியது.
தனது புதல்வனை உயிருடன் கண்டதும் அப்பூதி அடிகளாரும், அவரின் துணைவியாரும் அடைந்த மகிழ்ச்சி என்பது எல்லை இல்லாத வகையில் இருந்தது. பின்பு அவர்கள் தங்கள் புதல்வனை ஆரத்தழுவி தங்களது மனவேதனையை குறைத்துக் கொண்டனர். இதற்கு காரணமாக இருந்த அப்பர் அடியாருக்கும் தங்கள் நன்றியை கூறினர். ஆனால் அப்பூதி அடியாரும், அவரது மனைவியாரும் தங்கள் புத்திரன் பிழைத்தமையைக் கண்டும் மகிழ்ச்சி அடையாமல், நாயனார் திருவமுது செய்யாதிருந்தமையைக் குறித்துச் சிந்தனை செய்தார்கள். அப்பர் மூர்த்தி அதனை அறிந்து, அவர்களோடு வீட்டிற்கு சென்று, அப்பூதி நாயனாரோடும், அவர் புத்திரர்களோடும் ஒன்றாக திருவமுது செய்தருளினார்.
திருநாவுக்கரசர் திங்கள%2Bரில் சிலநாள் தங்கியிருந்து, பின் திருப்பழனத்திற்கு சென்றார். திருப்பழனத்திற்கு சென்று அவ்வூரில் வீற்றிருக்கும் எம்பெருமானை தரிசனம் செய்து, 'சொன்மாலை பயில்கின்ற" என்னுந் திருப்பதிகம் பாடினார். அத்திருப்பதிகத்திலே அப்பூதி நாயனாரை 'அழலோம்பு மப்பூதி குஞ்சிப் பூவாய் நின்ற சேவடியாய்" என பாடி சிறப்பித்தருளினார். பல நாட்கள் அவ்வூரில் தங்கியிருந்த அப்பமூர்த்தி திருநல்லூருக்குச் சென்று சிலநாள் அங்கே வசித்திருந்து எம்பெருமானை கண்டு வணங்கினார்.
பின் திருவாரூர் செல்ல எண்ணம் கொண்டு அவ்விடத்தில் இருந்து நீங்கி, பழையாறை, திருவலஞ்சுழி, கும்பகோணம், நாலூர், திருச்சேறை, திருக்குடவாயில், திருநாரையூர், திருவாஞ்சியம், பெருவேள%2Bர், திருவிளமர் முதலிய தலங்களை வணங்கி கொண்டு எம்பெருமானை வளமான தமிழ்ச் சொற்களால் கோர்த்து இயற்றப்பட்ட பாமாலைகளால் எம்பெருமானை போற்றி பாடினார்.
பின்பு அவ்வூரை விட்டு அகன்று திருவாரூரை அடைந்து சுவாமி தரிசனம் செய்து கொள்ள மனம் விருப்பம் கொண்டு தனது பயணத்தை மேற்கொண்டார். அவ்விதம் தமது பயணத்தை மேற்கொள்ளும்போது நமிநந்தியடிகள் பற்றி கேள்வியுற்றார். எல்லா திசைகளிலும் எம்பெருமானின் புகழை பாடிக்கொண்டு, சிவதரிசனம் செய்துகொண்டே திருவாரூரை வந்தடைந்தார். திருநாவுக்கரசர் எம்பெருமானை காண திருவாரூர் வந்து கொண்டிருக்கும் செய்தியை அறிந்ததும் திருவாரூர் சிவத்தொண்டர்களும், சிவ அன்பர்களும் அப்பரை மங்கல இசை முழக்கத்தோடும், கோலாகலத்தோடும் வணங்கி வரவேற்றார்கள்.
அடியார்கள் சூழ அப்பரடிகள் தேவாசிரிய மண்டபத்தின் முன்சென்று வணங்கிய வண்ணம் கோவில் உள்ளே சென்றார். புற்றிடங் கொண்ட தியாகேசப்பெருமானை அன்போடு துதி செய்து திருத்தாண்டகம் பாடி மகிழ்ந்தார். அவ்விதம் பாடும்போது ஒரு திருப்பதிகத்திலே நமிநந்தியடிகள் நீரினால் விளக்கேற்றியதை சிறப்பித்துப் பாடினார்.
அப்பரடிகள் திருவாரூரில் இருந்த நாட்கள் யாவும் தியாகேசப்பெருமானை வழிபட்டு இனிய பக்தி பாமாலைகளைச் சாற்றி மனம் மகிழ்ச்சி அடைந்தார். அவ்விடத்தில் தங்கியிருந்த காலத்தில் திருவலிவலம், கீழ்வேள%2Bர், கன்றாப்பூர் என்னும் தலங்களுக்கு சென்று எம்பெருமானை வழிபட்டு திருப்பதிகம் பாடி மனம் மகிழ்ந்து மீண்டும் அவ்விடத்திற்கு திரும்பி வந்தார். திருவாதிரை நட்சத்திரத்திலே வீதிவிடங்கப் பெருமானுடைய திருவிழாவை சிவ அடியார்கள் பலர் கூடியிருந்த சபைகளிலே இணைந்து எம்பெருமானை வணங்கி மனம் மகிழ்ந்தார்.
பின்பு அங்கிருந்து திருப்புகலூருக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டு திருவாரூரினின்றும் நீங்கி பல தலங்களையும் பணிந்து வணங்கி திருப்புகலூரை நோக்கி வந்து கொண்டிருந்தார். அச்சமயத்தில் சீர்காழியில் இருந்து எழுந்தருளிய திருஞானசம்பந்தமூர்த்தி பல சிவ தலங்களைத் தரிசித்த திருப்புகலூருக்கு வந்து ஆடல் மன்னரான சிவபெருமானை வழிபட்டு கொண்டு முருகநாயனாருடைய திருமடத்தில் எழுந்தருளியிருந்தார். முருகநாயனார் மடத்தில் தங்கியிருந்த நாட்கள் அனைத்தும் திருத்தலத்திற்கு சென்று கடவுளை வணங்கி வழிபட்டு வந்தார் திருஞானசம்பந்தர்.
திருப்புகலூரை நோக்கி திருநாவுக்கரசர் வந்துக்கொண்டு இருக்கின்றார் என்னும் செய்தியை அறிந்து கொண்ட ஆளுடைப் பிள்ளையார் திருப்புகலூர் அடியார்களுடன் சென்று அப்பரடிகளை எதிர்கொண்டு வரவேற்று ஆரத்தழுவி மகிழ்ந்தார். அடியார்கள் புடைசூழ இரு ஞான செல்வர்களும் முருகநாயனார் மடத்திற்கு வந்து கொண்டிருந்தனர். தன்னுடைய மடத்திற்கு இரு ஞான ஒளிகள் இணைந்து வந்து கொண்டு இருக்கின்றனர் என்னும் செய்தியை அறிந்ததும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த முருகநாயனார் அவர்களை பேரானந்தத்துடனும், இன்முகத்துடனும் வரவேற்று தமது மடத்துள் எழுந்தருளச் செய்தார். இதை தம் வாழ்நாளில் கிடைத்த அரும்பாக்கியமாக எண்ணினார். சிறிது நேரத்தில் அவ்விரு சிறு ஒளிகள் இணைந்து பிரம்மாண்ட ஒளியான எம்பெருமானின் மீது சிவஞானப்பதிகம் பாடி மகிழ்ந்தார்கள்.
பின்பு திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரை வணங்கி அப்பரே நீர் வரும் நாளிலே திருவாரூரிலே திருவாதிரைத் திருநாளில் நிகழ்ந்த அற்புதங்களையும், புற்றிடங் கொண்ட பெருமானின் பெருமையையும் ஏற்றம் மிகுந்த வளமை தமிழால் எடுத்துரைப்பீர்களாக... என்று வேண்டினார்.
ஞானசம்பந்தரின் விருப்பம் அறிந்து மனம் மகிழ்ந்த அப்பரடிகள் தம்முடைய கண்களால் கண்ட தியாகேசப்பெருமானின் திருக்கோலத் திருவிழா வைபவத்தை 'முத்துவிதான மணிப்பொற்கவரி" எனத் தொடங்கும் தமிழ்ப் பதிகத்தால் அங்கிருந்த அனைவரையும் தாம் கண்ட காட்சி நிகழ்ந்த இடத்திற்கு அழைத்து சென்றார்.
தம்மை அவ்விடத்திற்கு அழைத்து சென்ற இந்த அற்புத திருப்பதிகத்தை தமது செவிகுளிர கேட்டு அளவில்லா மகிழ்ச்சி அடைந்த ஆளுடைப் பிள்ளையார் தியாகேசப்பெருமானைத் தரிசிக்க வேண்டும் என்று ஆசையும் கொண்டார்.
திருஞானசம்பந்தமூர்த்தி அப்பதிகத்தை கேட்டதும் யான் திருவாரூருக்கு சென்று தியாகேசப்பெருமானை தரிசனம் செய்து கொண்டு இவ்விடத்திற்கு வருவேன் என்று உரைத்தார். பின்பு சிறிது காலம் அப்பருடன் முருகநாயனாரின் மடத்தில் தங்கியிருந்த சம்பந்தர் அப்பரடிகளிடம் விடைபெற்றுக் கொண்டு சிவஅன்பர்களுடன் தியாகேசப்பெருமானை தரிசிக்க திருவாரூருக்குப் புறப்பட்டார்.
அப்பமூர்த்தி திருப்புகலூருக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து புகலூர் பெருமானுக்கு உழவாரப் பணி செய்து திருப்பதிகம் பாடிக்கொண்டிருந்தார். திருப்புகலூரில் தங்கியிருந்த காலங்களில் திருத்தொண்டுகள் பல செய்து கொண்டிருந்த அப்பரடிகள், திருப்புகலூருக்கு அடுத்துள்ள திருச்செங்காட்டாங்குடி, திருநள்ளாறு, சாத்தமங்கை, திருமருகல் என்னும் தலங்களுக்கு சென்று சிவபெருமானை தரிசனம் செய்து கொண்டு திருப்புகலூருக்குத் திரும்பினார்.
சிலநாட்கள் கடந்த பின் திருவாரூர் சென்றிருந்த திருஞானசம்பந்தமூர்த்தி புற்றிடங் கொண்ட பெருமானை வழிபட்டு அன்பர்களுடன் திருப்புகலூருக்குத் திரும்பி வந்து கொண்டிருக்கின்றார் என்னும் தகவலை அறிந்ததும் அப்பரடிகள் திருப்புகலூரில் இருந்த திருத்தொண்டர்களுடன் சென்று ஊரின் எல்லையிலேயே திருஞானசம்பந்தமூர்த்தியாரைச் சந்தித்து இன்முகத்தோடு வரவேற்றார்.
இரு ஞானஒளிகளும் திருப்புகலூர் பெருமானை வழிபட்டவாறு முருகநாயனார் மடத்தில் தங்கியிருந்தனர். அவ்வாறு தங்கியிருந்த நாட்களில் சிறுத்தொண்ட நாயனாரும், திருநீலநக்க நாயனாரும் அவர்களோடு இணைந்து முருகநாயனாரின் மடத்திற்கு எழுந்தருளினர். இரு திருஞான ஒளிகளையும் வணங்கி மகிழ்ந்தனர்.
சில நாட்களுக்கு பின் சிவனருள் பெற்ற அடியார்களோடு முருகநாயனார் திருமடத்தில் தங்கியிருந்த ஞானசம்பந்தருக்கும், அப்பரடிகளுக்கும் எம்பெருமானை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு விடைபெற்றுக் கொண்டு திருப்புகலூர் புண்ணியாரின் அருளோடு திருக்கடவூர் என்னும் திருத்தலத்திற்குப் புறப்பட்டனர்.
எம்பெருமானின் திருவருள் பெற்றவர்களான திருஞானசம்பந்தரும், அப்பரடியாரும் திருக்கடவூரை அடைந்து, கூற்றுவனை உதைத்தருளிய விமலநாதரை அமுதத்தமிழால் பாடிப்பணிந்து குங்குலியக் கலயனார் மடத்தில் எழுந்தருளினார்கள். இவ்விரு ஞானமூர்த்திகளின் வருகையால் குங்குலியக் கலயனார் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்து இரு ஞானபோராளிகளையும் இன்முகத்தோடு வரவேற்றார்.
குங்குலியக் கலயனார் மடத்தில் தங்கியிருந்து அமுதுண்டு தங்கள் கருத்துக்களை பரிமாறி கொண்டு மகிழ்ந்து கொண்டிருந்தனர். பின்பு குங்குலியக் கலயனாரின் வேண்டுகோளுக்கிணங்கி இத்திருநகரில் குங்குலிய கலியநாயனாருடன் சில நாட்கள் தங்கியிருந்து திருத்தொண்டுகள் பல புரிந்து வந்தனர். சிறிது நாட்களுக்கு பின்பு இரு ஞானமூர்த்திகளும் குங்குலியக்கலய நாயனாரிடம் விடைபெற்று கொண்டு திருஆக்கூர் வழியாக தங்கள் சிவயாத்திரையைத் தொடங்கினர்.
சிவயாத்திரை மேற்கொண்டு செல்லும் வழிகளில் இருந்த பல புண்ணிய சிவத்தலங்களைத் தரிசித்துக் கொண்டே தங்களது பயணத்தை மேற்கொண்டனர். அரவணிந்து காட்சி அளித்த எம்பெருமானை அழகு தமிழில் வழிபட்டனர். திருவீழிமிழலை என்னும் திருத்தலத்திற்கு வந்து சேர்ந்தனர். ஒரு சமயத்தில் மும்மூர்த்திகளில் ஒருவரான திருமால் எம்பெருமானிடமிருந்து சக்ராயுதம் பெறுவதற்காக 1008 கமல மலர்களை கொண்டு வழிபட துவங்கினார். சோதனை செய்வதில் வல்லவரான எம்பெருமான் அவர் வைத்திருந்த 1008 மலர்களில் ஒரு மலர் குறையுமாறு செய்தருளினார்.
இதை சற்றும் உணராத திருமால் ஒவ்வொரு மலர்களாக எடுத்து அதில் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி அர்ச்சனை செய்து வந்தார். இறுதியில் ஒரு மலர் குறைகிறது என்பதை உணர்ந்து மனம் உருகினார். வேறு மலர்களை கொண்டு வருவதற்குள் தாமதம் ஏற்பட்டு மனதில் நினைத்த வழிபாடு தடைபட்டுவிடும் என்பதை உணர்ந்தார். ஆயினும் தமது மனதில் எண்ணிய வழிபாட்டை நிறைவோடு முடிக்க எண்ணம் கொண்டு தமது மலர் விழிகளில் ஒன்றை எடுத்து அர்ச்சனை செய்யலாம் என்று முடிவெடுத்தார்.
திருமால் தமது விழிகளில் ஒரு விழியைத் தோண்டி எடுக்கத் துணிந்தபொழுது எம்பெருமான் அவ்விடத்தில் எழுந்தருளி அவரைத் தடுத்தார். திருமாலின் அன்பிற்கு கட்டுப்பட்ட திருசடைப்பிரான் சக்ராயுதத்தை கொடுத்தருளினார். திருமால் விழிகளில் ஒன்றை எடுத்து இறைவனுக்கு அர்ச்சிக்கத் துணிந்ததால் இத்திருத்தலம் திருவீழிமிழலை என்ற திருநாமத்தைப் பெற்றது. இத்திருநகரில் அடியார்களின் கூட்டம் கடல் வெள்ளம் போல் அதிகரித்த வண்ணமாக இருந்தது. இவ்விரு அடியார்களும் எம்பெருமானை தரிசிக்க திருவீழிமிழலை நோக்கி வந்து கொண்டு இருக்கின்றார்கள் என்னும் செய்தியை அறிந்த அடியார்கள் அவர்களை வரவேற்க நகர்புறத்தில் காத்துக் கொண்டிருந்தனர். நகர்புறத்தை அடைந்த இரு ஞானமூர்த்திகளையும் எதிர்கொண்டு வணங்கி மலர் தூவி அவர்களை அடியார்கள் வரவேற்றனர்.
அவ்விரு அடியார்களும் மனதில் மட்டற்ற மகிழ்ச்சி பொங்க தொண்டர் கூட்டத்தோடு கலந்து கொண்டு மாடவீதி வழியாக விண்விழி விமானத்தையுடைய கோவிலினுள் எழுந்தருளினார்கள். திருத்தலத்தை வலம் வந்து எம்பெருமானின் முன் பக்திப் பழமாக நின்ற இரு ஞானமூர்த்திகளும் தமிழ் பதிகத்தால் வீழி அழகரை துதித்தனர். அப்பரடிகள், திருவீழிமிழலையானைச் 'சேராதார் தீயநெறிக்கே சேர்கின்றாரே" என்ற ஈற்றடியினைக் கொண்ட திருத்தாண்டகப் பதிகம் பாடினார்.
திருவீழிமிழலை அன்பர்கள் இரு சிவனடியார்களும் தங்குவதற்கு தனித்தனி அழகிய திருமடங்களை ஏற்பாடு செய்தனர். இரண்டு மடங்களிலும் ஆண்டவன் ஆராதனையும், அடியார் துதியாராதனையும் சிறப்பாக நடந்தன. இருவரும் அத்தலத்திலேயே சிலகாலம் தங்கியிருந்து திருத்தொண்டுகள் பல புரிந்துவந்தனர். இந்த சமயத்தில் கருமேகம் பொய்த்தது. மழையின்றி எங்கும் வறட்சி ஏற்பட்டது. நாடெங்கும் விளைச்சல் இல்லாமல் போனது, மக்கள் தாங்க முடியாத பஞ்சத்தால் பெரிதும் துன்பம் அடைந்தனர்.
மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள பஞ்சத்தை நீக்கும் பொருட்டு அப்பரும், ஆளுடைப் பிள்ளையாரும் என்ன செய்வது? என்று அறியாது சிந்தித்தனர். இறுதியாக திருவீழிமிழலை திருசடை அண்ணலை மனதில் தியானித்த வண்ணமாகவே இருந்தனர். ஒருநாள் எம்பெருமான் இரு ஞானமூர்த்திகளுடைய கனவிலும் எழுந்தருளி உங்களை நம்பி தொழுது வழிபடும் தொண்டர்களுக்காக உங்களுக்குத் தினந்தோறும் படிக்காசு தருகின்றோம். அந்த படிக்காசுகளைக் கொண்டு அடியார்களின் அவலநிலையை அகற்றுங்கள்... என்று திருவாய் மலர்ந்து மறைந்தார்.
மறுநாள் எம்பெருமான் கனவில் எழுந்தருளி கூறியதற்கு ஏற்ப கிழக்கு பீடத்தில் ஆளுடை பிள்ளையாருக்கும், மேற்கு பீடத்தில் அப்பரடிகளுக்கும் பொற்காசுகளை வைத்திருந்தார். திருஞானசம்பந்தர் அம்பிகையின் ஞானப்பாலுண்ட திருமகன் என்பதால் அவருக்கு வாசியுடன் கூடிய காசும், அப்பரடிகள் எம்பெருமானிடத்து மெய் வருந்த அருந்தொண்டு ஆற்றுகிறவர் ஆதலால் அவருக்கு வாசி இல்லாத காசும் கிடைக்கப்பெற்றது. இருவரும் படிக்காசுகளைக் கொண்டு பண்டங்கள் வாங்கி வந்து அடியாருக்கு அமுதளிக்க வகை செய்தனர்.
எல்லோரும் அமுதுண்டு செல்லுங்கள் என்று பறை சாற்றினர். மக்களுக்கு அன்னதானம் புரிந்து பஞ்சத்தைப் போக்கினர். இவ்விரு சிவனடியார்களின் இருமடங்களிலும் தினந்தோறும் தொண்டர்கள் அமுதுண்டு மகிழ்ந்த வண்ணமாகவே இருந்தனர். இறைவனின் திருவருளாலே, மாதம் மும்மாரி பொழிந்தது. நெல்வளம் கொழித்தது. எங்கும் முன்புபோல் எல்லா மங்கலங்களும் பொங்கின. இரு சிவமூர்த்திகளும், தங்களின் சிவதரிசன யாத்திரையைத் தொடங்கினர்.
திருஞானசம்பந்தமூர்த்தியும், திருநாவுக்கரசரும் திருவீழிமிழலையில் இருந்து விடைபெற்று கொண்டு வேதாரண்யம் என்று அழைக்கப்படும் திருமறைக்காடிற்கான பயணங்களை மேற்கொண்டனர். அவ்விதம் பயணம் மேற்கொள்ளும் வழியில் திருவாஞ்சியம் முதலிய தலங்களை வழிபாடு செய்து கொண்டு இறுதியாக திருமறைக்காட்டினை அடைந்தார்கள்.
திருமறைக்காட்டில் உள்ள எம்பெருமானை வழிபடுவதற்காக திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் திருத்தலத்திற்கு வருகை தந்தனர். ஆனால் கோவிலில் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. திருத்தலத்தின் வாயில்கள் அடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டதும் அவர்களுக்கு வியப்பாக இருந்தது. பின்பு திருத்தலத்தின் வாயில்கள் மூடப்பட்டு இருப்பதற்கான காரணம் யாதென்று அங்குள்ள அடியார்களிடம் வினவினார்கள்.
அவ்விடத்தில் இருந்த அடியார்கள் இவர்கள் யார்? என்பதை அறிந்துகொண்ட பின்னர் அவர்களை வணங்கி கதவு மூடப்பட்டு இருப்பதற்கான காரணத்தை எடுத்துரைக்க தொடங்கினார்கள். அதாவது, ஆதிகாலம் முதலே திருமறைக்காட்டில் எழுந்தருளியுள்ள பெருமானை மறைகள் வழிபட்டு பின்பு திருத்தலத்தின் வாயிலை மறைகாப்பினால் பூட்டி சென்றுவிட்டனர். அவர்கள் சென்ற அன்று முதல் இன்று வரை கதவு திறக்க படாமலேயே இருக்கின்றது.
hயிலைத் திறக்க எவரும் இக்காலம் வரையிலும் வராமல் இருப்பதினால் நாங்கள் அரணாரை தரிசித்து வழிபட மற்றொரு வாயில் வழியாக சென்று கொண்டிருக்கின்றோம் என்று கூறினார்கள். அவர்கள் உரைத்ததை கேட்டதும் இருஞானஒளி மூர்த்திகள் எப்படியாவது இந்த கதவினை நாம் திறத்தல் வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தனர்.
திருஞானசம்பந்தமூர்த்தி அப்பரடிகளைப் பார்த்து மறைகள் வழிபட்ட எம்பெருமானை நாம் எப்படியும் இந்த நேர்வாயிலின் வழியே சென்று தரிசித்து வழிபடுதல் வேண்டும். எனவே எம்பெருமானை நேர்வாயிலின் வழியாக சென்று வழிபட முடியாமல் தடையாக இருக்கும் இந்த பூட்டிய கதவு திறக்கும்படி திருப்பதிகம் பாடுவீர்களாக... என்று கேட்டுக் கொண்டார்.
திருஞானசம்பந்தமூர்த்தியாரின் விருப்பத்தை கேட்டதும் மனம் மகிழ்ந்த திருநாவுக்கரசர் இறைவனை மனதில் நினைத்த வண்ணம், 'பண்ணின் நேர்மொழியாள்" எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடினார். அவர் பாடியும் கதவு திறக்க தாமதமாவதைக் கண்டு 'இறக்க மொன்றிவிர்" என்று திருக்கடைக் காப்பிலே என பாடினார். இவ்விதம் திருநாவுக்கரசர் மனம் உருகி பாடி முடிக்க திருமறைக்காட்டில் எழுந்தருளியுள்ள எம்பெருமானின் அருளால் தாள் நீங்கி திருக்கதவும் திறக்கப்பட்டது.
கதவு திறந்ததைக் கண்டதும் அப்பரடிகளும், திருஞானசம்பந்தமூர்த்தியாரின் மனமும், அகமும் மலர்ந்தது. பின்பு அவ்விடத்தில் இருந்த அன்பர்களும், அடியார்களும் சிவநாமத்தை விண்ணெட்ட துதித்தனர். அடியார்கள் எல்லோரும் ஆனந்தகோஷம் செய்தார்கள். இருஞான மூர்த்திகளும் சில அடியார்களோடு வேதவனப் பெருமானின் திருத்தலத்திற்குள் சென்றனர். வேதவனப் பெருமானின் தோற்றத்தையும், பொலிவையும் கண்டு தம்மை மறந்து நின்றனர். இவ்வுலகிற்கு வந்த இவ்விரு அடியார்கள் அழகு தமிழால் வழிபட்ட பின் திருத்தலத்தின் வெளியே வந்தார்கள்.
திருத்தலத்தின் வெளியே வந்ததும் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தமூர்த்தியை நோக்கி இம்மணிக்கதவும் எம்பெருமானுடைய திருவருளினாலே திறக்கப்பட வேண்டும் மற்றும் அடைக்கப்பட வேண்டும் என்னும் பொருட்டு தாங்கள் திருப்பதிகம் பாடி அருள்க... என்று வேண்டிக் கொண்டார். உமையவளின் ஞானப்பாலுண்ட திருஞானசம்பந்தமூர்த்தி திருப்பதிகம் பாட துவங்கினார். அவர் பாடிய முதல் பதிகத்தில் திண்ணிய கதவும் தானே மூடிக்கொண்டது. அன்று முதல் ஆலயத்தின் மணிக்கதவுகள் எம்பெருமானை தரிசிக்கும் பொருட்டு தானாகவே திறக்கவும், மூடவும் அதற்கு தகுந்தாற்போல் அமைந்தது. இத்திருத்தலத்தில் கண்ட இந்த அதிசய நிகழ்வை கண்ட மக்களும், அடியார் பெருமக்களும் மகிழ்ந்தனர். பின்பு அங்கிருந்த அனைவரும் இருஞான மூர்த்திகளையும் மலர் தூவிக் கொண்டாடினார்கள்.
திருநாவுக்கரசரின் மனமானது காலையில் நடந்த நிகழ்வுகளையே எண்ணி கொண்டிருந்தது. திருத்தலத்தில் வாயில் கதவு திறப்பதற்காக யான் இருமுறை பதிக பாடல் பாடிய பின்பே ஆலயத்தின் கதவும் திறந்தது. ஆனால் திருத்தலத்தின் வாயிற்கதவு மூடுவதற்காக திருஞானசம்பந்தமூர்த்தி ஒரு பாடல் பாடியதுமே கதவானது மூடியது. அது ஏன்? யான் பதிக பாடல் பாட துவங்கிய உடனே, ஏன் ஆலயத்தின் கதவு திறக்கவில்லை? யான் இன்னும் எம்பெருமானின் திருவுள்ளத்தினை அறியாமல் இருக்கின்றேனோ? என்ற எண்ணம் அவரை நித்திரை கொள்ளவிடாமல் குழப்பத்தில் ஆழ்த்தியது.
மதியோ கரைய... வேதாரண்யேஸ்வரர் திருவடிகளை எண்ணிய வண்ணமே இருந்தமையால் சிறிது நேரத்தில் நித்திரை கொண்டார். நித்திரை கொண்ட அவ்வேளையில் எம்பெருமான் கனவில் தோன்றினார். எம்பெருமான் திருநாவுக்கரசரிடம் யாம் திருவாய்மூரில் இருக்கின்றோம். அவ்விடத்திற்கு எம்மை தொடர்ந்து வருவாயாக... என்று அருளிச் சென்றார். எம்பெருமான் கனவில் தோன்றி அருளி மறைந்ததைக் கண்டதும் திருநாவுக்கரசர் நித்திரையிலிருந்து விழித்தெழுந்தார்.
நித்திரையில் இருந்து எழுந்ததும் திருநாவுக்கரசர் எம்பெருமானை பணிந்து 'எங்கே என்னை இருந்திடத் தேடிக்கொண்டு" எனத் தொடங்கும் பதிகம் ஒன்றை அவ்விடத்திலேயே பாடினார். பின்பு அந்த இரவு நேரத்திலேயே திருவாய்மூர் புறப்பட எண்ணம் கொண்டார். அந்த இரவு நேரத்தில் தான் மேற்கொள்ளும் பயணத்தைப் பற்றி திருஞானசம்பந்தரிடம் எடுத்துரைக்க சென்றிருந்தார். ஆனால் அவர் துயில் கொண்டிருந்ததை கண்டதும் அவர் துயிலை கெடுக்க மனமில்லாமல் அவர் அருகிலிருந்த சில அடியார்களிடம் மட்டும் கூறிவிட்டு தனது பயணத்தை துவங்கினார்.
வேதாரணியத்திலிருந்து புறப்பட்டு திருவாய்மூர் சென்றடைய அந்த இரவில் தமது பயணத்தை துவங்கினார். அவர் மேற்கொள்ளும் பயணத்திற்கு வழிகாட்டுவதற்கு ஏற்றார் போலவே எம்பெருமானும் அந்தணர் உருவம் கொண்டு அவருக்கு முன்னே சென்று கொண்டிருந்தார். திருநாவுக்கரசரும் முன்னே செல்வது எம்பெருமானே என்று எண்ணி அவர் பின்னே சென்று கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் எம்பெருமானைக் காண ஆவல் கொண்டு தம்மால் முடிந்த அளவு அவரும் வேகமாக நடக்கத் தொடங்கினார். இருப்பினும் இவருடைய வேகத்தைக் காட்டிலும் எம்பெருமானின் வேகம் அதிகமாக இருந்தமையால் அந்தணர் வடிவத்தில் இருந்த எம்பெருமானின் திருவுருவத்தை திருநாவுக்கரசரால் காண இயலவில்லை.
எம்பெருமானின் திருவருளால் இமை மூடி திறப்பதற்குள் திருநாவுக்கரசர் செல்லும் வழியில் ஒரு பக்கத்தில் ஒரு பொன்மயமான திருக்கோவில் ஒன்று எழுந்தது. அக்கோவிலில் எம்பெருமான் சென்று மறைந்தார். எம்பெருமான் சென்று மறைந்த அத்திருத்தலத்தில் எம்பெருமானை காண விரைந்து சென்றார் அப்பரடிகள். ஆயினும் அத்திருத்தலத்தில் எம்பெருமானை காணாது கண்களில் நீர் மல்க அவ்விடத்திலேயே துயில் கொண்டார். மறுநாள் திருஞானசம்பந்தர் அப்பரடிகள் இல்லாததைக் கண்டு அவர் ஏதேனும் உரைத்து சென்று உள்ளாரா? என்று அங்கிருந்த அடியார்களிடம் வினவினார்.
அங்கிருந்த அடிகளார் திருநாவுக்கரசர் உரைத்த செய்தியைக் திருஞானசம்பந்தரிடம் கூறினார்கள். அச்செய்தியைக் கேட்டதும் திருஞானசம்பந்தரும் திருவாய்மூர் செல்ல விரைந்து சென்றார். திருவாய்மூரில் எம்பெருமானால் உருவாக்கப்பட்ட பொன்வண்ணமான கோவிலை தமது தொண்டர்களுடன் வந்தடைந்தார் திருஞானசம்பந்தர். திருத்தலத்தில் துயில் கொண்டிருந்த அப்பரடிகளைக் கண்டதும் அப்பரே... என்று கூறிக்கொண்டு அவரின் அருகில் சென்றார். திருஞானசம்பந்தரின் குரல் கேட்டதும் அப்பர் அடிகளார் துயில் மற்றும் மனக்கலக்கத்தில் இருந்து விழித்து எழுந்து திருஞானசம்பந்தரை வரவேற்றார்.
பின்பு திருநாவுக்கரசர் எம்பெருமானிடம் தமது மனதில் இருந்த குறைகளை வெளிப்படுத்த துவங்கினார். ஐயனே... என்னை இவ்விடத்திற்கு அழைத்து வந்து தங்களின் அருள் தோற்றத்தை காண்பிக்காமல் மறைந்து விட்டீர்களே...!! வேதாரணியத்தில் என்னை சோதித்தீர்களே. இந்த எளியவனின் மீது ஐயனின் அன்பு இவ்வளவுதானா? உமது அன்பு தொண்டரான திருஞானசம்பந்தர் பதிகம் பாடி வேதாரணியத்தில் உள்ள திருத்தலத்தின் வாயில் கதவுகளை திறக்க வேண்டும் என்ற உங்களது திருவுள்ளத்தினை உணராமல் யான் பதிகம் பாடி காப்பு நீக்கச் செய்தது அடியேன் செய்த பிழைதான். அதற்காக அடியேனை அழைத்து வந்து இவ்விடத்தில் மாயமாய் ஒளிந்து கொண்டிருப்பது முறையாகுமா? என்று உரைத்துக் கொண்டிருந்தார் திருநாவுக்கரசர்.
எம்பெருமானே...! தங்களுக்கு செய்த திருப்பணிகளால் கிடைத்த புண்ணியத்தினால் முதற்பாட்டிலேயே தங்கள் விருப்பம் போல் கதவை அடைக்கச் செய்த திருஞானசம்பந்தரும் இவ்விடத்திற்கு வருகை தந்துள்ளார். தாங்கள் அவருக்கும் காட்சியளிக்காமல் இவ்வாறு மறைந்து கொண்டு இருப்பது முறையாகுமா? என்று வினாவி வேண்டினார் திருநாவுக்கரசர். இவ்விதம் திருநாவுக்கரசர் உள்ளம் உருக இறைவனை வேண்டி நின்றதும் மதி சூடிய வேணியப்பிரான் உள்ளம் இறங்கி அவ்விடத்தில் இருந்த திருஞானசம்பந்தருக்கு காட்சியளித்தார்.
எம்பெருமானை வழிபட்ட பின் இரு அடியார்களும் அவர்களுடைய மடத்திற்குச் சென்றனர். சில நாட்களுக்கு முன்பு இவ்விரு ஞானஒளிகளும் எம்பெருமானை தரிசிக்க திருமறைக்காட்டில் தங்கியிருந்த சமயத்தில் திருஞானசம்பந்தரை காண மதுரையிலிருந்து (பாண்டிய நாட்டு தூதுவர்கள்) சிலர் வந்தனர். அவர்கள் திருஞானசம்பந்தரை வணங்கி பாண்டிய மாதேவியும், அமைச்சர் குலச்சிறையாரும் அளித்த அரச ஒற்றை(செய்தி) அவரிடம் அளித்தனர்.
அதாவது அந்த ஒற்றில் பாண்டிய நாட்டில் சமணத்தின் வளர்ச்சியைத் தடுத்து சைவத்தை உயிர்ப்பித்து எடுக்கும் பொருட்டு தாங்கள் மதுரைக்கு எழுந்தருள வேண்டும் என்று விண்ணப்பித்திருந்தனர். அச்செய்தியை படித்ததும் அவர்களின் நல்ல எண்ணத்தை புரிந்து கொண்ட திருஞானசம்பந்த பெருமானும் அவரைக் காண வந்த ஒற்றர்களிடம் யாம் விரைவில் பாண்டிய நாட்டிற்கு வருவதாக கூறினார். அதற்கு தகுந்தாற்போல் திருஞானசம்பந்தரும் பாண்டிய நாடு செல்வதற்கான காலக்கட்டம் தோன்றியது.
மடத்தில் இருந்த அடியார்கள் மூலம் திருஞானசம்பந்தர் பாண்டிய நாடு செல்வதற்காக தயாராகி கொண்டு இருப்பதாக அறிந்த திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் தங்கி இருக்கும் மடத்திற்கு விரைந்து சென்று அவருடைய பயணத்தை தவிர்க்க வேண்டும் என எண்ணம் கொண்டு அவ்விடத்திற்கு சென்றார். திருஞானசம்பந்தர் தம்மை காண வந்திருக்கும் திருநாவுக்கரசரை வரவேற்று என்னவாயிற்று? தாங்கள் ஏன் இவ்வளவு பதற்றமாக இருக்கின்றீர்கள்? என்று வினவினார். பதற்றத்தை தவிர்த்து மனஅமைதி கொண்ட திருநாவுக்கரசர் தன்னுடைய மனதில் தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்த துவங்கினார்.
அதாவது தாங்கள் பாண்டிய நாடு செல்ல முடிவு செய்து உள்ளீர்களா? என்று வினவினார். திருஞானசம்பந்தரும் ஆம் என்றும், பாண்டிய நாட்டில் சமணர்களால் நிகழ்வனவற்றை எடுத்து உரைத்து அவர்களை தடுப்பதற்காக யாம் அங்கு செல்கிறோம் என்றும் கூறினார். அவர் இவ்விதம் கூறியதும் சிறிதும் யோசிக்காமல் தாங்கள் பாண்டிய நாடு செல்வதை தவிர்க்க வேண்டும் நிலையில் கொள்கைகளையும் வஞ்சக எண்ணம் கொண்ட மாசு படிந்த உடலுடன் வாழும் மாயையில் வல்லவர்களாக திகழும் அந்த சமணர்களை ஒழிக்க தூய்மையும், வாய்மையும் மிக்கத் தாங்கள் செல்வது என்பது நன்றாக இருக்காது. ஏனெனில் அக்கயவர்கள் எமக்கு இழைத்த இன்னல்கள் என்பது மிகவும் கொடுமையாகும். ஆகவே தாங்கள் பாண்டிய நாட்டிற்கு செல்ல அடியேன் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன் என்று உரைத்தார்.
திருநாவுக்கரசர் தம்மீது கொண்டுள்ள அன்பைக் கண்டு மனம் மகிழ்ந்த திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசரிடம் பிறைசூடிய எம்பெருமானை வழிபடும் அடியார்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொண்டிருக்கும் பாண்டிய மாதேவியும், அமைச்சர்களின் அழைப்பால் செல்வதால் எனக்கு எவ்விதமான இடர்பாடும் ஏற்படாது என்று கூறினார். சமண மதத்தை நம்பி அறம் தவிர்த்து அதர்ம வழியில் சென்று கொண்டிருக்கும் பாண்டிய மன்னனை கொண்டே சமணர்களின் ஆணவத்தை அடக்கி அவ்விடத்தில் சைவ சமயத்தினை பாண்டிய நாட்டில் நிலைநாட்டுவேன் என்று கூறினார்.
அதுவரை தாங்கள் இவ்விடத்திலேயே இருங்கள்... எப்படியும் பாண்டிய நாட்டினை சூழ்ந்துள்ள மற்ற சமய இருளை நீக்கி சைவ சமயத்தின் திரு விளக்கினை ஏற்றி அந்த தீப ஒளியில் அவர்கள் கொண்ட மடமையை நீக்கி வெற்றி வாகை சூடி வருகிறோம் என்று கூறினார். திருஞானசம்பந்தர் பேசிய உரையிலிருந்து அவரது மன உறுதியை கண்ட அப்பர் அடிகளார் மறு உரை உரைக்க இயலாது அவரது மனதிற்கு தகுந்தாற்போலவே அவரை பாண்டிய நாட்டிற்குச் சென்று வெற்றி வாகை சூடி வர வாழ்த்து கூறி அவரை வழியனுப்பி வைத்தார்.
திருஞானசம்பந்தரும் வேதவனப் பெருமானை வணங்கி வழிபட்டுவிட்டு மதுரைக்குப் புறப்பட்டார். ஆளுடைப் பிள்ளையார் சென்ற பின்பு அப்பரடிகள் மட்டும் திருமறைக்காட்டில் தங்கியிருந்து வேதவனப் பெருமானுக்கு நாள்தோறும் திருப்பணிகள் செய்து வந்தார். திருநாவுக்கரசர் வேதாரணியத்திலேயே சிலநாள் இருந்து பின்பு திருநாகைக்காரோண தலத்திற்கு சென்று இறைவனை வணங்கி கொண்டு உளவார பணிகள் செய்து வந்தார்.
பின்பு அவ்விடத்தில் இருந்து திருவீழிமிழலையை அடைந்து சிலநாள் தங்கியிருந்து இறைவனை வழிபட்டார். பின் திருவாவடுதுறைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு திருஞானசம்பந்தமூர்த்தி ஒரு திருப்பதிகத்தின் பொருட்டு ஆயிரஞ் செம்பொன் கொடுத்தருளிய திறத்தை எண்ணி 'மாயிருஞாலமெல்லாம்" என்னும் திருப்பதிகத்தினாலே புகழ்ந்துபாடி பழையாறைக்கு சென்றார்.
பழையாறை அடுத்துள்ள வடதளி என்னும் பெயர் பெற்ற ஆலயத்தில் சிவலிங்க பெருமானைச் சமணர்கள் தங்கள் சூழ்ச்சியால் மறைத்து அந்த ஆலயத்தை சமண கோவிலாக மாற்றியுள்ளனர் என்னும் செய்தியை அவ்வூரிலுள்ள சிவ அடியார்கள் வாயிலாக கேள்விபட்ட அப்பரடிகள் மனதில் அளவில்லாத வேதனை கொண்டார்.
பின்பு அப்பரடிகள் திருத்தலத்தின் ஓர் இடத்தில் அமர்ந்து திருவமுது செய்யாமல் எம்பெருமானுடைய திருவடிகளை மனதில் எண்ணியவாறு பிறைசூடியப் பெருமானே...! தங்கள் திருவுருவத்தை மறைத்து வைத்திருக்கும் சமணர்களின் சூழ்ச்சியை அழித்து தங்களுடைய திருவுருவத்தை வடதளி விமானத்தில் காண்பித்து அருள்புரிய வேண்டும். இல்லையேல் அடியேன் இவ்விடத்தை விட்டு ஒரு அடிக்கூட எடுத்து வைக்கமாட்டேன்... என்று தமது கருத்தை திண்மமாக பரமனுக்கு உணர்த்தியவாறு தியானத்தில் அமர்ந்தார்.
அன்றிரவு கொன்றை மலர் சூடிய மாதொரு பாகர் சோழ மன்னருடைய கனவில் எழுந்தருளினார். மதி இழந்த சமணர்கள், சிவ அன்பர்களுக்கு எண்ணிலடங்கா இன்னல்களை அளிப்பதோடு மட்டுமின்றி வடதளி விமான கோவிலை மறைத்து எமது மேனியை மண்ணுக்குள் மறைத்து வைத்துள்ளனர். இப்பொழுது எமது அன்பு பக்தன் திருநாவுக்கரசன் எம்மை தரிசித்து வழிபடக் காத்துக் கொண்டு இருக்கின்றான். எனவே திருநாவுக்கரசனின் எண்ணத்தை நிறைவேற்றுவாயாக.... பின்பு எம்பெருமான் சோழ வேந்தனுக்கு சமணர்கள் தம் திருமேனியை மறைத்து வைத்திருக்கும் இடத்தின் அடையாளங்களையும் விளக்கி அருளி மறைந்தார்.
சொப்பனத்தில் எம்பெருமான் மறைந்ததும் சோழ மன்னர் விழித்து எழுந்தார். ஆதவன் உதிக்கும்போதே அமைச்சர்களுடனும், வீரர்களுடனும் வடதளி ஆலயத்தை வந்தடைந்தார். எம்பெருமான் சொப்பனத்தில் அருளிய அடையாளத்தைக் கொண்டு சிவலிங்கப் பெருமானைக் கண்டெடுத்தார். பின்னர் வேந்தர் திருத்தலத்தின் வெளியே எம்பெருமானை எண்ணி தியானத்தில் அமர்ந்திருக்கும் திருநாவுக்கரசரின் திருவடிகளை வணங்கி சொப்பனத்தில் சிவபெருமான் தோன்றி கூறியவற்றை எடுத்து உரைத்து சிவலிங்கப் பெருமானை சமணர்கள் மறைந்து வைத்திருந்த இடத்திலிருந்து வெளிப்படுத்திக் கொண்டு வந்துள்ளோம் என்னும் நற்செய்தியை கூறினார்.
சோழ மன்னன் கூறிய செய்தியைக் கேட்டதும் திருநாவுக்கரசர் பேரின்பம் பூண்டார். சோழப் பேரரசனை வாழ்த்தினார். திருநாவுக்கரசர் சிவ அன்பர்களுடன் ஆலயத்திற்குள் சென்று வடதளி அண்ணலை பணிந்து மனம் மகிழ்ந்தார். மன்னன் சிவபெருமானுக்கு வடதளியில் விமானம் அமைக்க இருப்பதையும் கூறினார். அதைக் கேட்டதும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த திருநாவுக்கரசர் சில காலம் அவ்விடத்தில் தங்கியிருந்தார்.
சோழ வேந்தன் சிவபெருமானுக்கு வடதளியில் விமானம் அமைத்து நல்ல ஓரையில் பெருவிழா நடத்தி சிவலிங்க பெருமானை பிரதிஷ்டை செய்தார். வடதளிநாதர் கோவிலில் மீண்டும் முன்பு போல் நித்திய நைவேத்தியங்கள் சிறப்பாக நடந்தேற எல்லா ஏற்பாடுகளையும செய்தார். ஆலய வழிபாட்டிற்காக ஏராளமான நிலபுலன்களை அளித்தார் மன்னர். இவ்வாறு நாடு போற்ற நற்பணி செய்த மன்னர் முதல் காரியமாக, சூழ்ச்சி செய்து எம்பெருமானை மறைத்து வைத்திருந்த சமணர்களை யானைகளால் கொல்லச் செய்தார்.
சோழ நாட்டில் சிவமதத்தை ஓங்கச் செய்தார். அப்பரடிகள், வடதளியில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்க பெருமானை பணிந்து 'தலையெல்லாம் பறிக்கு" என்னும் திருப்பதிகம் பாடி சிலநாள் அவ்விடத்தில் தங்கியிருந்தார். பின் அவ்விடத்தினின்றும் நீங்கி காவேரி தலங்களில் உள்ள சிவதலங்களை தரிசித்து தமிழ்மாலை சாற்றிய வண்ணம் திருவானைக்காவல், எறும்பியூர், திருச்சிராப்பள்ளி, கற்குடி, திருப்பராய்த்துறை வழியாக திருப்பைஞ்ஞீலியை நோக்கி தமது பயணத்தை மேற்கொண்டார். தொடர்ந்து பயணம் மேற்கொண்டதால் அப்பரடிகளுக்கு களைப்பு ஏற்பட்டது.
பயணம் மேற்கொண்ட வழியிலேயே பசியினாலும், தாகத்தினாலும் மிக வருந்தி இளைத்தார். உடல் சோர்வானது அவரை மிகவும் வருத்தியது. அந்த நிலையிலும் மனம் தளராது உடல் சோர்வையும் எண்ணிப்பாராது திருப்பைஞ்ஞீலி பெருமானை எண்ணியப்படியே சென்று கொண்டிருந்தார். அப்போது எம்பெருமான் தமது தொண்டரின் இன்னலை போக்கத் திருவுள்ளம் கொண்டார். திருப்பைஞ்ஞீலி செல்லும் வழியில் குளிர்நீர்ப் பொய்கையையும், எழில்மிகு சோலையையும் உருவாக்கி அவ்விடத்தில் அந்தணர் வடிவத்தில் கரங்களில் பொதி சோறுடன் அப்பரடிகள் வரும் வழியில் அவருடைய வருகையை எதிர்பார்த்து காத்திருந்தார். சற்று நேரத்தில் அப்பரும் அவ்வழியே வந்து சேர்ந்தார்.
திருநாவுக்கரசர், அந்தணர் வடிவத்தில் இருந்த எம்பெருமானின் அருகில் வந்த உடனே திருநாவுக்கரசரை நோக்கி நீர்...!! நீண்ட தூரமாக நடந்து கொண்டு வந்தமையால் மிகவும் சோர்வாகவும், களைப்பாகவும் இருப்பதை என்னால் உணர முடிகிறது என்று கூறினார். பின்பு தம்மிடத்தில் உள்ள பொதி சோற்றினை அவரிடம் கொடுத்தார். நீர் இந்த சோற்றினை புசித்து இந்த குளத்திலே சலபானம் செய்து களைப்பை நீக்கிக்கொண்டு போவாயாக... என்று கூறினார்.
அப்பரடிகள் சோற்றினை கொடுத்த அந்தணருக்கு தமது நன்றியை தெரிவித்தார். அப்பரடிகள் பொதி சோற்றை உண்டு அருகிலுள்ள குளத்தில் குளிர்ந்த நீரைப்பருகி தளர்வு நீங்கப் பெற்றார். எம்பெருமான் திருநாவுக்கரசரே... நீர் எங்கே செல்கின்றீர்கள்? என்று கேட்டார். அடியேன் திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளியிருக்கும் திருசடைப் பெருமானை தரிசிக்க சென்று கொண்டிருக்கிறேன் என்றார். அந்தணர் வடிவத்தில் இருந்த எம்பெருமானும் மிக்க மகிழ்ச்சி... தானும் அத்திருகோவிலுக்குத்தான் செல்கிறேன் என்று கூறினார்.
பின்பு இருவரும் திருப்பைஞ்ஞீலிக்கு எம்பெருமானை காண புறப்பட்டனர். இருவரும் திருப்பைஞ்ஞீலியில் இருக்கும் திருத்தலத்தை வந்தடைந்தனர். திருத்தலத்தை வந்தடைந்ததும் அங்கே ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அதாவது, அந்தணர் கோலத்தில் தோன்றிய நீலகண்டப் பெருமான் அவ்விடத்தில் இருந்து மாயமாக மறைந்தார். தம்முடன் வந்திருந்த அந்தணர் மாயமாக மறைந்ததை கண்டதும் தமக்கு உணவளித்து தம்மோடு இங்கே வந்திருந்தது எம்பெருமான் என்பதை உணர்ந்த அப்பர் அடிகளார் எல்லையில்லா மகிழ்ச்சி கொண்டு எம்பெருமானின் திருவருளை எண்ணி வியந்து கண்ணீர் மல்க, வணங்கி பரமனைப் போற்றிப் பணிந்தார்.
சில நாட்களுக்குப் பின் அவ்விடத்திலிருந்து புறப்பட்டு வடதிசையிலுள்ள பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திகழும் திருவண்ணாமலை போன்ற பல சிவதலங்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து கொண்டு தொண்டை நாட்டை அடைந்து நன்னாட்டுப் பதிகளைத் தரிசிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் திருவோத்தூரை அடைந்தார் அப்பரடிகளார். அவ்விடத்தில் எழுந்தருளியிருக்கும் வேதம் ஓதும் பெருமானைக் கண்டு மகிழ்ந்து பாடி ஆனந்தம் அடைந்தார். சிறிது காலம் அத்திருத்தலத்தில் தங்கியிருந்து உளவாரப் பணிகளை மேற்கொண்டு வந்தார்.
அப்பரடிகள் ஒருநாள் ஆடல் விடைப்பாகனை வணங்கி விடைபெற்று கொண்டு காஞ்சிபுரத்தை நோக்கி தமது சிவயாத்திரையை தொடங்கினார். காஞ்சி நகரத்திற்கு அப்பர் அடிகள் வந்து கொண்டு இருக்கின்றார் என்பதை அறிந்த காஞ்சி மாநகரத்து அன்பர்களும், சிவதொண்டர்களும் திருநாவுக்கரசரை காஞ்சி நகரத்தின் எல்லையிலேயே எதிர்கொண்டு அவரை வணங்கி வரவேற்றனர். பின்பு அவரை ஏகாம்பரநாதர் எழுந்தருளியிருக்கும் திருத்தலத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்பரடிகள் ஏகாம்பரேசுவருக்கு தமிழ் பதிகம் சாற்றி அவரை மனமகிழ்ச்சியுடன் வழிபட்டார். சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்து காஞ்சி நகரத்திற்கு அடுத்துள்ள பல சிவதலங்களைத் தரிசித்து வந்தார் அப்பரடிகள்.
ஏகாம்பரநாதரை பிரிய மனமில்லாமல் பக்தி மயக்கத்தில் மூழ்கினார். ஒருநாள் பெருமானிடம் விடைபெற்று கொண்டு புறப்பட்டார். காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டு திருவேகம்பம், திருக்கச்சிமயானம், திருமேற்றளி, திருமாற்பேறு என்னும் தலங்களை வணங்கிக் கொண்டு சிலநாள் அவ்விடத்தில் தங்கியிருந்து எம்பெருமானுக்கு சேவை செய்தார். பின் அங்கிருந்து புறப்பட்டு திருக்கழுக்குன்று, திருவான்மியூர், திருமயிலாப்பூர், திருவொற்றியூர், திருப்பாசூர், திருவாலங்காடு, திருக்காரிக்கரை என்னும் தலங்களை வணங்கிக் கொண்டு திருக்காரிகை வழியாகத் திருக்காளத்தி மலையை அடைந்தார்.
அங்கே பொன்முகலியிலே ஸ்நானம் செய்து கொண்டு மலையின் மேல் ஏறி திருக்காளத்தியப்பரையும், திருக்காளத்தியப்பரின் வலப்பக்கத்தில் வில்லேந்தி நிற்கும் கண்ணப்ப நாயனாரது திருவடிகளையும் வணங்கி வண்ணத் தமிழ் பாமாலையால் பலவாறாக போற்றி பாடினார். சிலநாள் அந்த தலத்திலேயே வசித்தார். சில நாட்கள் கழித்து அத்திருமலையில் தங்கியிருந்து புறப்பட்ட அப்பரடிகள் திருப்பருப்பதம் என்னும் ஸ்ரீசைலத்தை வந்தடைந்தார். இத்திருத்தலத்தில் நந்தியெம்பெருமானை மனதில் எண்ணிய வண்ணம் தவம் செய்து வந்தார். நந்தியெம்பெருமான் வரம் பெற்று இம்மலை வடிவமாக எழுந்தருளி எம்பெருமானைத் தாங்குகிறார் என்பது புராண வரலாறு.
தேவர்களும், சித்தர்களும், கின்னரர்களும், நாகர்களும், இயக்கர்களும், விஞ்சையர்களும், சிவமுனிவர்களும் தினந்தோறும் போற்றி மகிழ்ந்து வணங்கி வழிபடும் மல்லிகார்ச்சுனரை உள்ளம் குளிர கண்டு பக்தி பாமாலை சாற்றி வழிபட்டார் அப்பரடிகள். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தெலுங்கு நாடு, மாளவதேசம், மத்தியப் பிரதேசம் முதலியவற்றைக் கடந்து காசியை வந்தடைந்தார் திருநாவுக்கரசர். அத்திரு நகரிலுள்ள தொண்டர்கள், அப்பரடிகளை வணங்கி மகிழ்ந்தனர். அவரோடு தலயாத்திரைக்கு புறப்பட எண்ணினர். அப்பரடிகள் தடங்கண்ணித் தாயாரையும், விசுவ லிங்கத்தையும் போற்றி தமிழ்ப் பதிகம் பாடியருளினார். அப்பரடிகள் தம்முடன் வந்த அன்பர்களை விட்டு விட்டு திருக்கையிலாய மலைக்குப் புறப்பட்டார்.
மரங்கள் அதிகம் நிறைந்த அடர்ந்த காடுகளையும், உயர்ந்த மலைகளையும், பெரும் காட்டாறுகளையும் கடந்து கங்கை வேணியரின் மீது தாம் கொண்டுள்ள அரும்பெரும் காதலுடன் எவருடைய உதவியும் இன்றி தன்னந்தனியாக அந்த வனத்தில் எம்பெருமானின் சிந்தனைகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்பரடிகள். அந்த பயணம் நெடுகிலும் அவர் சிந்தை யாவும் சிவநாமத்தைப் பற்றியதாகவே இருந்தது. காய், கனி, கிழங்கு முதலியவற்றை உண்பதையும் அறவே நிறுத்திவிட்டார்.
பொழுது எதுவென்று அறியாது, அதாவது இரவென்றும், பகலென்றும் அறியாமல் எம்பெருமானின் மீது கொண்ட ஆறாக் காதலால் அவரை எண்ணிய வண்ணமே பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தார். இடையுறாத பயணத்தால் அத்திருவருட் செல்வரது பட்டுப்பாதங்கள் தேயத் தொடங்கின. வனத்தில் இருந்துவந்த விலங்குகள் அவருடைய பயணத்தில் எந்தவிதமான இடையூறுகளையும் ஏற்படுத்தாமல் அவருக்கு வழிவிட்டன. நஞ்சை உமிழும் நாகங்கள் அதனது பணாமகுடத்திலுள்ள நாகமணிகளால் இரவு வேளையில் பயணம் மேற்கொள்வதற்கு தேவையான வெளிச்சத்தை அளித்தன. இவ்விதமாக பாறைகள் மற்றும் மணல் சூழ்ந்த பகுதிகள் நிறைந்த இடத்தை கடந்து எம்பெருமானை காணவேண்டும் என்ற எண்ணம் அவரை இடைவிடாது பயணத்தை மேற்கொள்ள வைத்தது.
ஆதவன் அளிக்கும் வெப்பக் கதிர்களால் பாறைகளும் வெப்பமானதால் அப்பரின் திருவடிகளும் தேய்ந்தன. திருவடிகள் தேய்ந்தது மட்டுமல்லாமல் அவரது திருவடிகளில் இருந்து ரத்தம் சொட்ட தொடங்கின. தமது பாதங்களில் இருந்து ரத்தம் வருவதை பற்றி கவலை கொள்ளாமல் தமது கரங்களை நிலத்தில் ஊன்றி தத்தித் தத்தித் சென்றார்.
அதனால் அவரது கரங்களும் மணிக்கட்டுவரை தேய்ந்தன. அவ்வேளையில் அவர் மேற்கொண்ட முயற்சியை விடாது, அப்பரடிகள் தன் மார்பினால் தவழ்ந்து சென்றார். சிறிது தூரம் சென்றதும் மார்புப்பகுதியில் இருந்து ரத்தம் வெளியேற... சதைப்பற்றுகள் யாவும் அகன்று உடலில் உள்ள எலும்புகள் யாவும் வெளிப்பட்டு முறிந்தன. ஆனால் அப்பரடிகள் எதை பற்றியும் கவலை கொள்ளாமல் சிந்தையில் கையிலை அரசரின் எண்ணங்களுடன் உடல் தசைகள் யாவும் கெட உடம்பை உருட்டிக் கொண்டே சென்றார்.
அப்பரடியாரின் உடலில் இருந்த புற உறுப்புகள் யாவும் பயனற்று போனதும் அப்பரடிகள் யாது செய்வது? என்று அறியாமல் நிலத்தில் வீழ்ந்தார். தம்மை காண்பதற்காக அடியேன் படும் இன்னல்களை உணர்ந்ததும் அப்பரடிகள் வீழ்ந்து கிடந்த இடத்திற்கு அருகில், ஒரு எழில்மிகு தாமரைகள் நிறைந்த குளத்தை உருவாக்கிய எம்பெருமான், ஒரு தவசி வடிவம் கொண்டு திருநாவுக்கரசரின் எதிரில் தோன்றினார்.
சிறிது நேரத்தில் விழிகளை மூடியவாறு மயக்கத்தில் இருந்த அப்பரடிகள் கண்ணை திறந்து பார்த்தபோது தம்மை சுற்றி அழகிய குளமும், அந்த குளத்தின் அருகில் தவசி நிற்பதையும் கண்டு வியந்தார். தவசி, அப்பரடியாரை கண்டு உடலில் இருந்து அங்கங்கள் சிதைந்து அழிந்து போகும் அளவிற்கு இந்த கொடிய வனத்தில் இப்படி துன்புறுவது யாது என கருதி வினவினார். அப்பரடியார் தவசியின் திருவுருவத்தை கண்டு அவரது பாதங்களை பணிந்தார்.
விழிகளில் கண்ணீர் மல்க சுவாமியே!... மலைமகளுடன் கையிலையில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை தரிசித்து வழிபட எண்ணம் கொண்டு அவரைக் காண இங்கு வந்துள்ளேன் என்று கூறினார். கையிலையில் வீற்றிருக்கும் எம்பெருமானை கண்டுகளிக்கும் வரை எனது வாழ்க்கை முற்று பெறாது என்றும், இறந்து மடியும் இந்த பிறவி நிலையில் இருந்து விடுபட கங்கையை தனது சிரத்தில் கொண்டிருக்கும் எம்பெருமானை தரிசித்து போற்றி வழிபடுவேன் என்றும் மிகுந்த இன்னல்களுக்கு இடையே பதில் உரைத்தார்.
அப்பரடியாரின் பதில் உரையை கேட்டதும் தவசி வடிவத்தில் இருந்த எம்பெருமான் புன்னகை பூத்த முகத்துடன், அரவம் சூடிய மலைமகளுடன் வீற்றிருக்கும் எம்பெருமானை கையிலை மலையை அடைந்து மானுடர் காண்பது என்பது இயலாத காரியம் ஆகும். அவ்வாறு இருக்கையில்,
இறைவன் உமக்கு மட்டும் தரிசனம் அளிப்பார் என்று எவ்விதம் நம்பிக்கை கொள்கிறாய்?
யாருக்கும் பயன்படாத இந்த வீண் முயற்சி உமக்கு எதற்கு?
தேவர்களும் செய்ய இயலாத ஒரு அரிய முயற்சியாகும். கையிலையையாவது நீர் அடைவதாவது?
பதில் தர்க்கம் ஏதும் செய்யாமல் வந்த வழியை நோக்கி திரும்ப செல்வது உத்தமம் ஆகும்.
இல்லையேல்... நீர் கையிலையை அடைவதற்குள் உமது உடல் அழியும் என்று கூறினார்.
அப்பரடிகள், சுவாமியே! மண்ணில் வீழ்ந்து அழியப்போகும் இந்த உடலுக்காக யாம் அச்சம் கொள்ளவில்லை. கையிலை மலையில் எழுந்தருளியிருக்கும் என் அப்பனான சிவபெருமானுடைய ஆனந்த தாண்டவத்தை கண்டு களித்த பின்னரே யாம் இதிலிருந்து மீண்டெழுவேன். இந்த மாய உலகில் அழிந்து போகும் உடலை ஒருபோதும் திரும்பச் சுமந்து செல்லமாட்டேன் என்று கூறினார். திருநாவுக்கரசரின் உரையை கேட்டுக் கொண்டிருந்த தவசி கோலத்தில் இருந்த எம்பெருமான் அவருடைய மனதில் உள்ள துணிவை கண்டதும் அவ்விடத்தை விட்டு மறைந்தார்.
தவசி வடிவத்தில் இருந்தவர் மறைந்ததும் திருநாவுக்கரசர் வியப்பில் ஆழ்ந்தார். கணப்பொழுதில் பறந்து விரிந்த வானில் இருந்து அசரீரி ஒன்று தோன்றி, திருநாவுக்கரசனே! எழுந்திரு... எழுந்திரு... என்ற எம்பெருமானின் அருள்வாக்கு மொழியாக ஒலித்தது. அந்த ஒலியை கேட்டதும் அப்பரடிகள் எல்லை இல்லாத மகிழ்ச்சி கொண்டு பூரித்தார். அப்பர் அடிகளார் எழுந்தருளிக்க முயலுகையில் அவரது தேய்ந்து அழிந்து போன உறுப்புகள் எல்லாம் முன்பு போல் வளர்ச்சி அடைந்து உடல் வலிமையுடன் எழுந்தார். எழுந்ததும் சிவ நாமத்தை மனதில் எண்ணிய விதம் நிலமதில்மீது வீழ்ந்து வணங்கினார்.
அம்பலக்கூத்தரே!
அடியார் இடத்தில் என்றும் அன்பு கொண்டிருக்கும் அன்புடையானே!
ஆதியும் அந்தமும் இல்லாத அந்தமில்லாரியரே!
மண்ணுலகில் தோன்றும் உயிர்களுக்கு வேண்டும் அருளை அளிக்கும் அருள்வள்ளலே!
வேதங்களின் நாயகனே!
தேவர்களுக்கு எல்லாம் தேவரான மகாதேவரே!
திருக்கைலாசகிரியில் எழுந்தருளியிருக்கின்ற தங்களின் திருக்கோலத்தை அடியேன் தரிசித்து வணங்கும் பொருட்டு அருள் புரிய வேண்டும் என்று மனதில் வேண்டி நின்றார்.
அனைவரின் எண்ண ஓட்டத்தையும் தன்பால் ஈர்க்கும் ஆடலரசனான எம்பெருமான் அப்பரின் வேண்டுகோளுக்கு இணங்கி அசரீரியாக, நீர்! இந்த குளத்தில் முழுகி திருவையாற்றில் எழுந்தருளி இருப்பாயாக! அங்கிருந்து திருக்கையிலையில் நாம் மலைமகளுடன் வீற்றிருக்கும் காட்சியை காட்டியருளுவேன் என்று அருளினார்.
இளம்பிறையனின் ஆணையைச் சிரமேற்கொண்டு மனம் மகிழ்ந்த அப்பரடிகள் செந்தமிழ் பதிகத்தால் செஞ்சடை அண்ணலை போற்றி பணிந்தவாறு தூய ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதி தடாகத்தில் மூழ்கினார்.
உலகநாதனின் கீர்த்தியை எவரும் அறியவல்லார்? அந்த தடாகத்தில் மூழ்கிய அப்பர் பெருமான் திருவையாறு பொற்றாமரை குளத்தில் தோன்றி கரையேறினார். அப்பரடிகள் எம்பெருமானின் திருவருளை எண்ணி எண்ணி விழிகளில் கண்ணீர் மல்க கரைந்து உருகினார். தேவலோகத்தில் இருந்த அமரர்கள் மலர்மாரி பொழிந்தனர். அவரின் திருமேனிகள் எம்பெருமானின் அருளால் தெய்வீகப் பேரொளியாக பிரகாசித்தது. சிரம் மீது கரம் உயர்த்தியவாறு தடாகத்தில் இருந்து கரையேறிய அப்பரடிகள் எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருத்தலத்தை அடைந்தார்.
எம்பெருமான் வீற்றிருக்கும் திருவையாறு திருத்தலமானது கையிலை பனிமலைக்கு நடுவில் இருப்பது போல் உணர்ந்தார் அப்பர் அடிகளார். திருத்தலத்தின் மூலவர் இருக்கும் இடத்தை அடைந்தவுடன் அசரீரி உரைத்தது போல் எம்பெருமான் அப்பர் அடிகளுக்கு சக்தி சமேதராய் நவமணி பீடத்தில் காட்சி கொடுத்தார். அதாவது, திருவையாறு திருத்தலமானது திருக்கைலாசகிரியாக உருப்பெற்று மூலவர் இருக்கும் இடத்தின் முன் நுழைவு வாயிலில் வேதங்களும், சிவாகமங்களும் இருபக்கத்திலும் வாழ்த்தின.
தும்புரு, நாரதர் என்னும் இருவரும் யாழை இசைக்க... படைப்பவரும், காப்பவருமான பிரம்மதேவரும், விஷ்ணுவும் அவ்விடத்தில் காட்சியளிக்க... பூதகணங்கள் கடைதோறும் காத்து நிற்க... தேவர், சித்தர், அசுரர், சாரணர், காந்தருவர், கின்னரர், இயக்கர், விஞ்சையர் முதலாகிய கணத்தவர்கள் துதித்துப்பாட... திருநந்திதேவர் கையில் பிரம்பை தரித்துக்கொண்டு பணி மேற்கொள்ள... அன்பு கடலாகிய, ஆனந்த சொரூபமாக சிவபெருமான் ஒரு திவ்வியாசனத்தின் மேலே ஆயிரங்கோடி சூரிய பிரகாசத்தோடும் பார்வதி சமேதராய் வீற்றிருந்து அருளினார்.
எம்பெருமானின் திருவுருவ காட்சியைக் கண்டதும் அப்பரடிகள் அடைந்த மகிழ்ச்சி என்பது வார்த்தைகளால் சொல்ல இயலாத... எல்லை என்பது இல்லாத... பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார். எம்பெருமானின் திருவுருவக் காட்சியை விழி என்னும் கரங்களினால் சிவ பெருங்கடலில் தெவிட்டுதல் இல்லாத அளவிற்கு சிவ ஆனந்த அமிர்தத்தை பருகி... மெய்கள் யாவும் தடுமாற... உடல் சிலிர்க்க... நிலத்தின் மீது வீழ்ந்து... பணிந்து ஆனந்தக்கூத்தாடித் திருத்தாண்டகங்கள் பாடி ஆனந்தம் கொண்டார்.
அப்பரடிகளின் விருப்பத்தை நிறைவேற்றி வைத்த எம்பெருமான் அத்திருக்காட்சியில் இருந்து மறைந்தருளினார். எதிர்பாராமல் சிவபெருமானின் கையிலைக் காட்சியில் இருந்து மறைந்ததைக் கண்டதும் என்ன செய்வது? என்று புரியாமல் திகைப்பில் ஆழ்ந்தவாறு 'மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும்" எனத் தொடங்கும் தமிழ் பதிகம் பாடினார். பின்பு திருவையாற்றில் எழுந்தருளியிருக்கும் பஞ்சநதீசுவரரின் திருவடிகளை பணிந்து அத்திருத்தலத்தை விட்டுச் செல்ல மனமில்லாத அப்பர் அடியார் திருவையாற்றில் சில காலம் தங்கியிருந்து உளவாரப் பணிகளை செய்து கொண்டிருந்தார்.
அப்பரடிகள் திருவையாற்றில் எழுந்தருளியிருக்கும் பஞ்ச நதீசுவரரின் திருவடிகளை பணிந்து அத்திருத்தலத்தை விட்டுச் செல்ல மனமில்லாது திருவையாற்றில் சில காலம் தங்கியிருந்து உளவாரப் பணிகளை செய்து வந்தார். சிலநாட்கள் சென்றபின் திருவையாற்றில் இருந்து விடைப்பெற்று நெய்த்தானம், மழபாடி முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு, தமிழ் பாமாலைகளை பாடிக்கொண்டு திருப்பூந்துருத்தி என்னும் தலத்தை அடைந்தார்.
அங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு திருத்தொண்டுகள் பல புரிந்து கொண்டிருந்த வேளையில் அங்கே ஒரு திருமடம் கட்டுவித்து, பல்வகைத் தாண்டகம் அதாவது, தனித்திருத்தாண்டகம், அடைவுதிருத்தாண்டகம், திருவங்கமாலை முதலிய திருப்பதிகங்களைப் பாடிக் கொண்டிருந்தார். இவ்வாறு எம்பெருமானின் சிந்தையில் பாமாலைகள் பலவற்றை இயற்றி கொண்டிருக்கும் பொழுது பாண்டிய நாட்டிற்கு சென்று சமணர்களை வாதத்தில் வென்று... வாகை சூடி... சைவத்தினை நிலை நிறுத்தி சமணர்களின் மெய்யற்ற கருத்துக்களால் கூன் விழுந்த பாண்டியராஜனுடைய முதுகெலும்பினை நிமிர்த்து அருளிய திருஞானசம்பந்தமூர்த்தி பாண்டிய நாட்டை நீங்கி, சோழ மண்டலத்தை அடைந்தார்.
அடியார்கள் சிலர் அப்பர் அடிகளார் திருப்பூந்துருத்தி என்னும் தலத்தில் இருப்பதாக கூறினார்கள். இச்செய்தியை அறிந்ததும் அப்பர் அடிகளாரை காண வேண்டும் என்ற எண்ணத்தோடு முத்துச் சிவிகையில் ஏறி அடியார்கள் புடைசூழ புறப்பட்டார்கள். பாண்டிய நாட்டில் இருந்து, தம்மை காண திருஞானசம்பந்தர் வந்து கொண்டு இருக்கின்றார் என்னும் செய்தியை அறிந்ததும் அப்பர் அடிகளார் மகிழ்ச்சியுடன் அவரை அழைத்து வர புறப்பட்டார். அவர் எண்ணியதை போலவே திருஞானசம்பந்தர் முத்துச் சிவிகையில் அடியார்கள் புடைசூழ வந்து கொண்டிருந்தார்.
அவ்வேளையில் அந்த நிகழ்வினை கண்டதும் அப்பர் அடிகளாருக்கு ஓர் எண்ணம் தோன்றியது. அதாவது, திருஞானசம்பந்தர் வீற்றிருக்கும் முத்துச் சிவிகையைத் தமது தோள் கொடுத்துச் சுமந்து வர வேண்டும் என்பதாகும். பின்பு எவரும் தம்மை அடையாளம் காணாத வகையில் தம்மை மறைத்து கொண்டு முத்துச் சிவிகையை சுமந்து வரும் அடியார் கூட்டத்தோடு இணைந்து திருஞானசம்பந்தர் வீற்றிருக்கும் முத்துச் சிவிகையைத் தமது தோள் கொடுத்து சுமந்து நடந்து கொண்டு வந்தார்.
திருப்பூந்துருத்திக்கு வந்திருந்த திருஞானசம்பந்தர் அப்பர் அடிகளாரை எவ்விடத்திலும் காணாது அப்பரே... எங்கிருக்கிறீர்? என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதைக் கேட்டதும் திருநாவுக்கரசர் தேவருடைய அடியேன் தேவரைத் தாங்கிவரும் பெருவாழ்வை பெற்று இங்கு உள்ளேன் என்று மகிழ்ச்சி பொங்க கூறினார். அப்பருடைய குரலைக் கேட்டதும் திருஞானசம்பந்தர் முத்துச் சிவிகையிலிருந்து விரைந்து கீழே இறங்கினார். அக்கணப்பொழுதில் திருஞானசம்பந்தரின் உள்ளமும், உடலும் பதைபதைக்க அப்பரடிகளை வணங்க வந்தார்.
அதற்குள் அப்பரடிகள் விரைந்து ஆளுடைப்பிள்ளை தம்மை வணங்குவதற்கு முன் அவரை வணங்கி மகிழ்ந்து உள்ளம் உருக... விழிகளில் ஆனந்த கண்ணீர் மல்க நின்றார். இவ்விடத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் காட்சியைக் கண்ட சிவனடியார்கள் அனைவரும் மெய்மறந்து நின்று கொண்டிருந்தனர். அடியார்கள் புடைசூழ அப்பரும், ஆளுடைப்பிள்ளையும் மங்கல வாத்தியங்கள் முழங்க எம்பெருமான் உறைந்திருக்கும் திருத்தலத்திற்கு சென்று திருப்பூந்துருத்திப் பெருமானை தமிழ் பாமாலையால் போற்றிப் பணிந்தனர். எம்பெருமானின் அருள் பெற்ற இவ்விரு மூர்த்திகளையும் காண வந்த பக்தர்கள் பஞ்ச நதீசுவரனையும், பரமன் அருள்பெற்ற தவசியர்களையும் வணங்கி மகிழ்ந்தனர்.
ஒருநாள் திருஞானசம்பந்தமூர்த்தி திருநாவுக்கரசரிடம் பாண்டிய நாட்டில் தாம் எவ்விதம் வாதத்தில் சமணர்களை வென்று வாகை சூடினோம் என்ற விவரத்தையும், பாண்டிய நாடெங்கும் சைவத்தை வளர்த்ததையும், பாண்டிமா தேவியாராகிய மங்கையர்கரசியாரின் மந்திரியாராகிய குலச்சிறையார் ஆகிய இருவரின் கீர்த்திகளையும் சொல்லியருளினார். இவ்விதம் உரைத்ததும் திருநாவுக்கரசருக்கு பாண்டிய நாடு செல்ல விருப்பம் தோன்றியது.
திருநாவுக்கரசரும் தாம் தொண்டை நாட்டுக்குச் சென்று அங்குள்ள சிவதலங்களை வணங்கி அவ்விடத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை பற்றிய செய்திகளை திருஞானசம்பந்தமூர்த்திக்கு கூறிக்கொண்டு இருந்த வேளையில் திருஞானசம்பந்தமூர்த்திக்கு தொண்டை நாட்டில் உள்ள சிவதலங்களை வழிபட ஆவல் தோன்றியது. தொண்டை நாட்டு பயணத்தை பற்றிக் கூறி முடித்தவுடன் அப்பரடிகள் ஆளுடைப்பிள்ளையாரிடம் யான் பாண்டிய நாடு சென்று வருகிறேன் என்று கூற... ஆளுடைப்பிள்ளையாரும் யான் தொண்டை நாட்டு சிவதலங்களை வணங்கி வருகின்றோம்... என்று கூறினார். அவ்விருவரும் அவ்வாறே சித்தம் செய்ய ஒருவருக்கொருவர் விடைபெற்று கொண்டு தங்கள் பயணத்தை மேற்கொள்ள துவங்கினார்கள்.
அப்பரடிகள் பாத யாத்திரையாக திருப்புத்தூரை தலத்திற்கு சென்று எம்பெருமானை வணங்கிக் கொண்டு மதுரையம்பதியை நோக்கி தமது பயணத்தை துவங்கினார். மதுரையை நோக்கி அப்பரடிகள் வந்து கொண்டு இருக்கின்றார் என்ற செய்தியை அறிந்ததும் பாண்டிய மன்னரும், மங்கையர் கரசியாரும், அமைச்சர் குலச்சிறையாரும், அன்பர்களோடும் அடியார்களோடும் அப்பரடிகளைத் தொழுது வணங்கி அவரை உபசரித்து வரவேற்றனர். பின்பு மன்னன் அப்பரடிகளை ராஜ மரியாதைகளுடன் அழைத்து வந்து கௌரவப்படுத்தினான். அத்திருத்தலத்தில் அப்பரடிகள் சிலகாலம் தங்கியிருந்து எம்பெருமானுக்கு தமிழ் தொண்டாற்றினார். மனம் மகிழ்ந்த மன்னரும், அரசியாரும், அமைச்சரும் அடியாரைப் போற்றி பெருமிதம் கொண்டனர்.
மதுரையில் இருந்து புறப்பட்ட அப்பரடிகள் திருப்புவனம், திருவிராமேச்சுரம், திருநெல்வேலி, திருக்கானப்பேர் போன்ற பல பாண்டிய நாட்டுக் கோவில்களில் எழுந்தருளியிருக்கும் பரமனைப் பாடிப் பரவிய வண்ணம், சோழ நாட்டை நோக்கிப் புறப்பட்டார். பல்வேறு புனிதத் தலங்களையெல்லாம் சென்று விழிகள் மகிழ்ச்சி கொள்ளும் அளவிற்கு எம்பெருமானின் பலவகையான தோற்றத்தை கண்டு... அவரை பற்றி பற்பல பைந்தமிழ் பதிகங்களைப் பாடி... வழிபாடு செய்த வண்ணம் திருப்புகலூரை அடைந்தார். திருப்புகலூரில் நாள்தோறும் எம்பெருமானை தரிசனம் செய்து திருமுன்றிலிலே உளவார பணிகளை செய்து கொண்டிருந்தார்.
திருப்புகலூரில் எம்பெருமானுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் நாட்களில் நின்ற திருத்தாண்டகம், தனித்திருத்தாண்டகம், க்ஷேத்திரக்கோவை, குறைந்த திருநேரிசை, தனித்திரு நேரிசை, நிறைந்த திருநேரிசை, ஆருயிர் திருவிருத்தம், தசபுராணத்தடைவு, பாவநாசப் பதிகம், சரக்கறைத் திருவிருத்தம், முதலிய திருப்பதிகங்களைப் பாடினார். அப்பரடிகளார் பாடப்பெற்ற பதிக்கத்தால் மனம் மகிழ்ந்த எம்பெருமான் அப்பரடிகளாரின் கீர்த்தியை உலகிற்கு உணர்த்தும் வண்ணம் வேண்டி புகலூர் பெருமான் தமது திருவிளையாடலை துவங்கினார்.
அதாவது உளவார பணிகளை அப்பரடிகள் செய்து கொண்டிருக்கும் இடத்தில் பொன்னும், நவரத்தினங்களும் தோன்றி தமது மினுமினுக்கும் தன்மையால் மின்னும்படி செய்தருளினார். ஒளி வீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பொன்னும், நவரத்தின கற்களும் ஏனோ அப்பரடிகளாரின் மனதை மட்டும் ஈர்க்க இயலாமல் தவித்தன. உளவாரப் பணிகளை மேற்கொள்ளும் மன்றலிலே கிடக்கின்ற பருக்கை கற்களாகவும், சாதாரண உருளும் கற்களுக்கு இணையாகவே இந்த நவமணி கற்களை கருதினார்.
பொன்னும், நவரத்தின கற்களும் அனைவருக்கும் இடையூறாக இருக்கும் என்று எண்ணி உளவாரப் பணிகளை மேற்கொள்ளும் அடியார்களை கொண்டு இந்த கற்களை எடுத்து அருகிலுள்ள தாமரைத் தடாகத்தில் வீசி எறிந்தார். நிலையில்லாத உலகில் கிடைக்கும் பொன், பொருட்களின் மீது எவ்விதமான பற்றும், ஆசையும் கொள்ளாத அப்பரடிகள், பெண்ணாசையும் வெறுத்து பற்றற்ற துறவு நிலையில் இருக்கும் பெரும் ஞானி என்பதையும் உலகிற்கு உணர்த்தும் வண்ணம் தமது திருவிளையாடலை துவங்கினார். அதாவது அழகிலும், பாவனங்களில் சிறந்து விளங்கும் அரம்பையர்களை அவ்விடத்தில் தோற்றுவித்தார்.
அரம்பையர்கள் என்ற தேவ கன்னிகள் வார்த்தைகளின் மூலம் வர்ணிக்க இயலாத அளவில் அழகிலும்... இவர்களுக்கு நிகரானவர்கள் இல்லை என்று கூறும் அளவில் எழில்மிகு தோற்றமும் கொண்டு இருந்தனர். அழவணம் கொண்டு அழகிய வண்ணங்களில் பாதங்களில் வைத்து காட்சியளித்தனர். அனைவரின் கவனத்தையும் கவரும் மணியோசை கொண்ட காலணிகள், மெல்லிடையில் மெல்லிய ஓசை எழுப்பும் அணிகலன்கள் யாவும் அணியப்பெற்ற முழுமதியே நாணம் கொள்ளும் அளவில் முகப்பொழிவும், சாமுத்திரிகா லட்சணம் யாவும் பொருந்திய அம்சமாக இருந்தனர். அங்கங்கள் தேவ சிற்பிகளால் செதுக்கப்பட்டது போல் அனைத்து வசீகர தன்மை கொண்ட தேவ கன்னிகள் அவ்விடத்தில் தோன்றி தேனை போன்ற இனிய சுவை கொண்ட கொவ்வை இதழ்களால் மனதை கவரும் வகையில் இருந்தனர்.
அது மட்டுமல்லாமல் பல்வேறு பண்களை தமது அங்க அவயங்களை பண்ணிற்கு தகுந்த மாதிரி மெய்யை பலவாறாக சுழன்று சுழன்று நடனம் புரிய துவங்கினர். மலர்களால் அவ்விடத்தில் மழை பொழிய செய்தலும், நடனம் ஆடும்போது இடை இடையே அவரை தழுவுவது போல் சென்று அப்பர் அடிகளாரை அணைத்தல் போன்ற செயல்களை செய்தனர். கருமேகம் போன்ற கார்மாரி கொண்ட அளகம் அவிழ்வதும், துள்ளி மான் போல் அங்கும், இங்கும் ஓடி ஆடி நடனம் புரிதலும், காமன் தொடுத்த கணையால் பற்பல செயல்களை நடத்தினர் அரம்பையர். ஆனால் சித்தமே சிவமானதால் அரம்பையர்கள் செய்த செயல்கள் யாவும் அப்பர் அடிகளாரை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை.
அவர்களது செயல்கள் யாவும் எம்பெருமானின் சிந்தனைகளோடு இருந்த சித்தத்தை ஒன்றும் செய்ய இயலவில்லை. அப்பர் அடிகளார் அரம்பையர்களை நோக்கி எதிரில் இருப்பவரை மயக்கும் அழகையும், வாசனையும் கொண்ட மங்கைகளே...! எதற்காக உங்களது நடன திறமைகளையும் எழில்மிகு தோற்றத்தையும் எம்மிடம் வெளிப்படுத்தி கொண்டு இருக்கின்றீர்கள்? உங்களின் நடனத்தையும், கலைத் திறனையும், அழகையும் ரசிப்பதற்கு என்று ஒரு உலகம் இருக்கின்றதல்லவா? அவ்விடத்திற்கு சென்று உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்களாக... யாம் தியாகராஜ பெருமானின் திருவடிகளில் தமிழ் பதிகம் பாடி அவருடைய பணிகளை மேற்கொள்ளும் ஒரு சொற்ப அடியேன் ஆவேன் என்று கூறினார்.
அப்பரடிகள் தேவ கன்னிகளிடம், என் சிந்தையில் பரமன் இருக்க என்னை உங்களது வலையில் விழ வைப்பதற்காக நீங்கள் செய்யும் முயற்சிகள் யாவும் பயனற்றவை ஆகும் என்ற கருத்துக்களை மையமாகக் கொண்டு 'பொய்ம்மாயப் பெருங்கடல்" எனத்துவங்கும் திருத்தாண்டக பதிகத்தை பாட துவங்கினார். அவர் திருப்பதிகம் பாட துவங்கியதும் தமது செயல்கள் யாவற்றையும் மறந்த அரம்பையர்கள் பாடலில் உள்ள கருத்துக்களை உணர்ந்ததும் இனியும் தங்களது சிந்தைக்கும், எம்பெருமானின் மீது கொண்ட பக்திக்கும் இடையூறாக நாங்கள் இவ்விடத்தில் இருக்க மாட்டோம் என்று அவரிடம் உரைத்து அப்பர் அடிகளாரின் திருவடிகளை வணங்கி அவ்விடத்தை விட்டு மறைந்து சென்றனர்.
அரம்பையர்கள் மறைந்து சென்றதும் அப்பர் அடிகளாருடைய மன உறுதியையும், எம்பெருமானின் மீது கொண்ட பக்தியையும், எம்பெருமானை போற்றிப் புகழும் அவருடைய பாமாலை ஆற்றலும் சர்வ லோகங்களும் போற்றிப் புகழ்ந்தன. புகலூர் பெருமானுக்கு உளவார பணிகள் புரிந்துவந்த அப்பரடிகள் எம்பெருமானின் திருவடிகளில் சென்று ஒடுங்கும் காலம் மிக அருகில் இருப்பதை தமது திருக்குறிப்பினால் உணர்ந்து கொண்டார். காலதேவன் தம்மை நோக்கி வந்து கொண்டு இருப்பதாய் உணர்ந்ததும் அத்திருத்தலத்தை விட்டு சற்றும் இடம் பெயராமல் பரமனை போற்றி பாமாலைப் பாடி வழிபட்டு கொண்டிருந்தார்.
அண்டத்திற்கு பேரொளியாய்த் திகழும் எம்பெருமானின் பொன்மலர் திருவடிகளை அடைய போகின்ற மிக மிக சிறு தொலைவில் இருக்கிறது என்ற பேரின்ப நிலையை உணர்ந்தார். 'எண்ணுகேன் என் சொல்லி" எனத் தொடங்கும் திருத்தாண்டகத்தை மெய் மனம் உருக பாடி எம்பெருமானின் சேவடியைப் பாமாலையால் பூஜித்து, செந்தமிழால் அவருடைய திருச்செவியைச் குளிரச் செய்தார். திருநாவுக்கரசர் சித்திரைத் திங்கள்-சதய திருநட்சத்திரத்தில் சிவபெருமானுடைய மலர் சேவடிக் கீழ் அமரும் பேரின்ப பெருவாழ்வு பெற்றார். அப்பரடிகளாக அவதரித்த வாகீசமுனிவர் தமது பிறவி கடனை எம்பெருமானின் அருள் ஆசிகளுடன் துணை கொண்டு அம்பலவாணரின் திருப்பாத நிழலில் இருக்கும் நிலையான சிவலோக பதவியைப் பெற்றார். முன்போல் திருக்கையிலாய மலையில் தவஞானியாக எழுந்தருளினார். விண்ணவரும் மலர்மாரி பொழிந்தனர். தேவ துந்துபிகள் ஐந்தும் விண்ணில் முழங்கின.
சிவபுராணம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக