Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 24 ஜூன், 2020

அருள்மிகு ஜெகந்நாதர் (பூரி) திருக்கோயில்

மூலவர்: ஜெகந்நாதர்
ஊர்  : பூரி
மாவட்டம் : பூரி
மாநிலம் : ஒரிசா
திருவிழா : 
     
இங்கு நடக்கும் தேரோட்டம் உலகப் பிரசித்தி பெற்றது.  
     
தல சிறப்பு: 
     
இங்குள்ள மூலவர்கள் மற்ற ஆலயங்களில் உள்ளதுபோல் கருங்கல்லால் வடிக்கப் பெற்றவை அல்ல. மூலவர் மரச் சிற்பங்களினால் ஆனவர். ஜகந்நாதருக்கு ஒரு புறம் சகோதரி சுபத்ராதேவியும் இன்னொரு புறம் சகோதரர் பலராமரும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.  
     
 திறக்கும் நேரம் : 
     
  காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும். மூலவர் அருகில் சென்று தரிசனம் செய்ய காலை 9 மணி முதல் 10.00 மணி வரை.  
     
  முகவரி
     
  அருள்மிகு ஜெகந்நாதர் திருக்கோயில் பூரி - 752001, புவனேஸ்வர், ஒடிசா.  
     
  பொது தகவல்
     
  ஒரு அரண்மனை போன்ற தோற்றத்துடன் ஆலயம் அமைந்துள்ளது. கிழக்கில் சிம்ம வாயில், மேற்கில் வைராக்ய வாயில், வடக்கில் யானை வாயில், தெற்கில் குதிரை வாயில் என நான்கு வாயில்கள் உள்ளன.இவ்வாலயத்தில் சிவன், விநாயகர், ஆஞ்சனேயர், லட்சுமி நாராயணர், மகாலட்சுமி, புவனேஸ்வரி, சூரியன் போன்றோருக்கும் சன்னிதிகள் அமைந்துள்ளன. ஜகந்நாதர் ஆலயத்தை சுற்றி 30 கோயில்கள் உள்ளன. ஆஞ்சநேயர், விநாயகர், நவக்கிரங்கள், சூரியநாராயணார், லட்சுமிநாராயணர், கோபிநாதர், ராமச்சந்திரர், பாதாளேசுவரர், நீலமாதர் என்று பல பெயர்களில் சுவாமிக்கு ஆலயங்கள் உண்டு. மீராபாய், ஜயதேவர், சமர்த்த ராமதாஸ், துளசிதாசர், ஹரிதாஸ், ஆகிய பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டுள்ளனர். இங்குள்ள கோபுரம் 713 அடி உயரம் கொண்டது. ஒரிசா மாநிலத்தின் மிகப்பெரிய கோபுரம் இதுதான். இது ராஜகோபுரம் இல்லை. மூலவரின் விமானம் ஆகும்.  
     
  பிரார்த்தனை:
     
  பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற இங்குள்ள ஜகநாதரை வழிபட்டுச் செல்கின்றனர்.  
     
  நேர்த்திக்கடன் : 
     
  இங்கு சுவாமிக்கு 56வகை பிரசாதங்கள் படைக்கப்படுகின்றன.  
     
  தலபெருமை : 
     
பூரி கடற்கரை கோயில் என்பதால் கடலில் நீராடிய பிறகே கோயிலுக்கு செல்லவேண்டும். கடற்கரையில் மார்க்கண்டேஸ்வரர் கோயில் உள்ளது. கடலில் நீராடிவிட்டு முதலில் மார்க்கண்டேஸ்வரரை வணங்க வேண்டும். பின்பு இங்குள்ள பாண்டவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், அனுமன் தீர்த்தம் ஆகியவற்றில் நீராடிய பிறகு ஜெகந்நாதரை தரிசிக்க செல்லலாம். இந்த கோயிலில் இரண்டு பிரகாரங்கள் உண்டு. கோயிலுக்குள் செல்ல சிங்கவாயில், குதிரை வாயில், யானைவாயில், புலிக்கதவு ஆகிய நான்கு வாசல்கள் உள்ளன. இவற்றை சிம்ஹதுவார், ஹஸ்துவார், ஹாஸ்திதுவார், வியாக்ரதுவார் என அழைக்கிறார்கள். ஒவ்வொரு வாசலும் பிரமிடு போன்ற அமைப்பில் உள்ளது. கருவறையில் ஜகந்நாதர், பலராமர், சுபத்ரா ஆகியோர் ரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். பலராமன் ஆறு அடி உயரமும், ஜெகந்நாதர் ஐந்தடி உயரமும், சுபத்ரா நான்கடி உயரமும் இருக்கிறார்கள். இவர்கள் வெள்ளை, கருப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் காட்சி தருவார்கள். இங்கு சுவாமிக்கு 56வகை பிரசாதங்கள் படைக்கப்படுகின்றன. காலை 11 மணியிலிருந்து 1 மணி வரை நடக்கும் நிவேதனம் மிக முக்கியமானது. பல பானைகளில் சாதம், குழம்பு, கூட்டு ஆகியவற்றை நிவேதனம் செய்து வெளியே வந்து கொண்டே இருக்கும். அந்த பானைகளை உடைத்து, அதிலுள்ள பிரசாதங்களை விற்பனை செய்துவிடுவார்கள். இந்த சாதத்தை காயவைத்து கடைத்தெருகளில் விற்பனை செய்வதும் வழக்கம். இதுவே இங்கு முக்கிய பிரசாதமாகும். இதை வாங்க கூட்டம் அலைமோதுகிறது.

இங்கே ஆண்டுதோறும் அக்ஷதா மாதத்தில் (ஆனி) வளர்பிறை இரண்டாம் நாளில் 21 நாட்கள் தேர்த் திருவிழா நடை பெறுகிறது. இவ்விழாவில் பயன்படுத்தப்படும் தேர்கள் மற்ற ஆலயங்களில் உள்ளது போன்ற நிரந்தரமான தேர்கள் அல்ல. இவை ஒவ்வொரு ஆண்டும் புதிதாக உருவாக்கப்படுகின்றன. ஒருமுறை வலம் வந்த தேரை மறு உலாவுக்குப் பயன்படுத்த மாட்டார்கள். மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட மூன்று பெரிய தேர்களை பூரி ஆலயத்தின் சிம்மத்துவார் பகுதியிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள குண்டிச்சா தேவி ஆலயம் வரை இழுத்துச் செல்வார்கள். கிருஷ்ணர் இந்திரத்யும்னனிடம் தான் ஆண்டுக்கு ஒன்பது நாட்கள் தான் பிறந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததாகவும்; அதன் அடிப்படையிலேயே இந்த விழா நடப்பதாகவும் கூறுகின்றனர். கோகுலத்திலிருந்து கிருஷ்ணர் மதுரா நோக்கிச் செல்வதை இது குறிப்பிடுகிறது.
காலையில் கருவறையில் இருக்கும் மூர்த்தங்கள் சிங்க வாயிலின் வழியாக எடுத்துவரப்படுகின்றன. அதிக கனம் வாய்ந்த மர மூர்த்தங்கள் என்பதால் பலர் சேர்ந்து தூக்கி வருகின்றனர். சுமார் எட்டடி உயரம் கொண்ட ஜகந்நாதர், பலராமர், சுபத்ரா ஆகியோரின் மூர்த்தங்கள் அவரவர் தேர்களில் வைக்கப்படுகின்றன. கருப்பு நிறமும் பெரிய கண்களும் கொண்ட ஜெகந்நாதர் சாமவேதத்தைக் குறிக்கும் இறைவனாக விஷ்ணு சொரூபமாக விளங்குகிறார். வெண்ணிறமும் தாமரைக் கண்களுடனும் விளங்கும் பலராமர் ரிக் வேதத்தைக் குறிப்பவராக-சிவ சொரூபமாக விளங்குகிறார். மஞ்சள் நிறமும் தாமரைக் கண்களும் கொண்ட சுபத்ரா யஜுர் வேதத்தைக் குறிப்பவளாக சக்தியின் அம்சமாகத் திகழ்கிறாள். தேர்கள் புறப்படத் தயாரானவுடன், ராஜா கஜபதி என்னும் மன்னர் அங்கே வந்து, தங்கத்துடைப்பத்தால் அந்த எல்லையைத் தூய்மைப்படுத்துகிறார். அதன்பின்னர் சவரா வம்சத்தைச் சேர்ந்த தைத்யர்கள். காவலாக வர, ஆயிரக்கணக்கான பக்தர்களால் தேர்கள் இழுக்கப்படுகின்றன. ஊர்வலமாகச் செல்லும் இந்தத் தேர்களுடன் மற்றும் சில கோயில்களின் சிறிய தேர்களும் வந்து சேர்ந்துகொள்கின்றன. வேத மந்திரம் ஓத பக்திப் பாடல்கள் ஒலிக்க மேளதாளங்கள் முழங்க கோலாகலமாக நடைபெறுகிறது இவ்விழா.

ஒன்பது நாட்கள் அந்தக் கோயிலில் தங்கி இருக்கும் இந்த தெய்வங்களுக்கு சிறப்பான பூஜைகள் நடத்தப்படுகின்றன. பத்தாம் நாள், பகுதா யாத்ரா எனப்படும் திரும்பி வரும் பயணம் நடக்கிறது. நண்பகல் நேரத்தில் சிங்கத்வார் என்னும் இடத்தை அடையும் தேர்கள் அங்கேயே தங்குகின்றன. இறை வடிவங்களுக்கு ராஜ அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. ஜெகந்நாதருக்கு தங்கக் கைகள் பொருத்தப்படுகின்றன. தங்கத்தாலான சங்கும் சக்கரமும் ஏந்திக் காட்சி தருகிறார் இறைவன். கனாவேஷா எனப்படும் இது ஏகாதசி திருக்காட்சியாகும். மறுநாள் துவாதசியன்று மூவரையும் பூரி ஆலயத்துக்குள் கொண்டு சென்று, நான்கடி உயரமும் 13 அடி அகலமும் 16 அடி நீளமும் கொண்ட ரத்தின சிம்மாசனத்தில் அமர்த்துவார்கள். இவர்களை பக்தர்கள் வலம் வந்து வணங்கலாம். இத்துடன் பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் புகழ் வாய்ந்த தேரோட்டம் நிறைவு பெறுகிறது. இவ்விழாவைக் காணும் பக்தர்கள் நூறாண்டுகள் இவ்வாலய இறைவனை வணங்கிய பயனைப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் ஆதிசங்கரர் இராமானுஜர், ஸ்ரீ மாத்வர் போன்றவர்கள் வந்து தங்கியிருக்கிறார்கள். பஜனை சம்பிரதாயத்தை, வட இந்தியாவில் பரப்பும் பூரிஜகந்நாதரின் கோயில் கடைசி காலத்தில், ஸ்ரீசைதன்ய மஹாபிரபு காலத்தில் முக்கியத்துவம் பெற்றது. ஸ்ரீஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட சிருங்கேரி மடம் இங்கு சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. 
ஜெகந்நாதர் தேர்: நந்திகோஷ் அல்லது கருடத்வஜா என்று அழைக்கப்படும் ஜெகந்நாதரின் தேர் 45 அடி உயரம் கொண்டது. 16 கலைகளைக் குறிக்கும் வண்ணம் 16 சக்கரங்களைக் கொண்டது. நான்கு வேதங்களைக் குறிக்கும் வண்ணம் நான்கு குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். தேரோட்டி தாருகா எனப்படுகிறார். (மரவடிவம்). தேரை இழுக்க உதவும் வடத்திற்கு சங்கசூடா என்று பெயர். சிவப்பு மற்றும் நீல நிறத் துணிகளால் தேர் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

பலராமர் தேர்: இது தலத்வஜ் எனப்படுகிறது. 44 அடி உயரம் கொண்டது. 14 மன்வந்திரங்களைக் குறிக்கும் வண்ணம் 14 சக்கரங்களைக் கொண்டது. நான்கு குதிரைகளாக நான்கு வேதங்கள். வாசுதேவரால் காக்கப்படும் இந்தத் தேரின் சாரதியாக இருப்பவர் மாதவி. தேர் வடத்திற்கு வாசுகி என்று பெயர். சிவப்பு மற்றும் நீலநிறத் துணிகளால் தேர் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
சுபத்ரா தேர்: தரவதவானா எனப்படும் இந்தத் தேரின் உயரம் 43 அடி. 12 மாதங்களைக் குறிக்கும். 12 சக்கரங்களைக் கொண்டது. ஜெயதுர்க்காவால் காக்கப்படும் இதற்குத் தேரோட்டியாக அர்ஜுனன் விளங்குகிறான். வடத்தின் பெயர் ஸ்வர்ணசூடா. சிவப்பு மற்றும் கறுப்புத் துணிகளால் ரதம் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

இந்தியாவின் நான்கு புனித புண்ணிய தலங்களுள் பூரியும் ஒன்றாகும். மற்றவை துவாரகை, பத்ரிநாத் மற்றும் இராமேஸ்வரம் ஆகியவை.நீண்ட வெண்மணல் பரப்பு கொண்ட கடற்கரையில் பூரி நகரம் அமைந்துள்ளது. கடற்கரையிலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ளது. ஜகந்நா தர் கோயில். இக்கோயில் கி.பி. 12 நூற்றாண்டில் சோடகங்க வம்சத்து அரசர்களால் கட்டப்பட்டது. இராசேந்திரச் சோழனின் மகன் வயிற்றுப் பேரன்தான் சோடகங்கன் கோயில் சுற்றுச்சுவர் 200 மீட்டர் நீளமுடையது; உயரம் 65 மீட்டர், பூரி ஜகந்நாதரின் ரத உற்சவம் பல நூற்றாண்டுகளாக நடைபெறுகிறது. இதுகுறித்து பாஹியன் என்ற சீனத்து அறிஞர் தமது குறிப்பில் எழுதியிருக்கிறார். ஆண்டு தோறும் ஜூலை மாதத்தில் இவ்விழா நடைபெறுகிறது. இந்த உற்சவத்திற்கு ஆண்டுதோறும் மூன்று புதிய பெரிய தேர்களை உருவாக்குகிறார்கள். இரண்டு குறிப்பிட்ட காடுகளில் இருந்து மரங்கள் வெட்டிக்கொண்டு வரப்படுகின்றன. ஜகந்நாதருடைய தேரை தயாரிக்க 836 துண்டு மரங்கள் தயாரிக்கப் படுகின்றன.
நந்திகோஷா என்ற 45 அடி உயரத்தேரில் ஜகந்நாதர் பவனி வருகிறார். தர்பாதவனா என்ற 36 அடி உயரத் தேரில் சுபத்ரா பவனி வருகிறார். தேரில் தெய்வங்களின் உருவங்களும் மரத்தால் உருவாக் கப்பட்டுள்ளது. இவைகள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாக உருவாக்கப்படுகின்றன. ஜகந்நாதர் என்ற பெயருக்கு உலகை ஆளுபவர் என்று பொருள். உற்சவத்திற்கு முந்திய பவுர்ணமி தொடங்கி அமாவாசை வரை. அதன்பிறகும் அந்த இடத்தில் பல கோயில்கள் கட்டப்பட்டன. அவற்றையும் கடல் மூழ்கடித்து விட்டது. இக்கோயில் ஏறக்குறைய கி.பி. 1200 ல் அப்போதைய அரசர் அனந்தவர்மன் வாளியால் துவக்கப்பட்டு, 1135ம் ஆண்டில் இவரது பேரன் அனங்காபி மாதேவ் என்ற அரசனால் இப்போது இருக்கும் கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலை கட்ட கங்கையிலிருந்து கோதாவரி வரையுள்ள சாம்ராஜ்யத்தின் மக்களின் 12 வருட வரிப்பணம் செலவழித்தார் எனக்கூறப்படுகிறது. இது பஞ்சரத முறைப்படி அமைக்கப்பட்ட ஆலயமாகும். துவாரகைபோல கடற்கரையில் அமைந்துள்ளது. கடல்நீர் ஆழமின்றி இருப்பதால், அதில் நீராடி இறைவனை வழிபடுகிறார்கள் பக்தர்கள். இத்தலம் பார்கவி, சர்வதீர்த்த மஹி என்னும் நதிகளால் சூழப்பட்டு, தட்சிணாவர்த்தி என்னும் வலம்புரிச்சங்கைப்போல் தோற்றம் தருகிறது. இவ்வாலயத்தின் மேற்கில் எட்டு உலோகக் கலவையால் செய்யப்பட்ட நீலச்சக்கரம் உள்ளது. ஆலயக் கொடிமரம் ஏழைகளுக்கு அருள்பவன் என்னும் பொருளில் பதீதபவன் பாவனா என்று அழைக்கப்படுகிறது. இவை இரண்டையும் வணங்கினாலே ஜெகந்நாதரின் அருளைப் பூரணமாகப் பெறலாம் என்கிறார்கள். இராமாயணத்தில் இராமபிரானும், மகாபாரத்தில் பாண்டவர்களும் இங்கே வந்து வேண்டிக்கொண்டதாக புராணங்கள் கூறுகிறது.
இவ்வாலயக் குளத்தில் மிகப்பெரிய ஆமைகள் உள்ளன. கோயில் கட்ட பணிபுரிந்த சிற்பிகளே இங்கே ஆமைகளாக வசித்து வருகின்றனராம். இங்கே பொதுவாக பூஜைகளைச் செய்பவர்கள் அந்தணர்கள் என்றாலும், தேர்த் திருவிழாவின் போது மூலவர்களைத் தேரில் அமர்த்துவது முதல் மீண்டும் நிலை வந்து சேர்ந்து கருவறையில் அமர்த்துவது வரையிலான எல்லா வேலைகளையும் சவரா என்னும் ஆதிவாசி இனத்தைச் சேர்ந்தவர்களே செய்கிறார்கள். இவர் கதை தைத்யர்கள் என்று அழைப்பார்கள். ஜெகந்நாதரின் உறவினர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்கின்றனர். இப்படிப் பல புதுமைகளுடன் விண்ணவரும் வந்து கண்டு களிக்கும் பூரி தேரோட்டம் சிறப்பு பெற்றது.
    
 சிறப்பம்சம்: 
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள மூலவர்கள் மற்ற ஆலயங்களில் உள்ளதுபோல் கருங்கல்லால் வடிக்கப் பெற்றவை அல்ல. மூலவர் மரச் சிற்பங்களினால் ஆனவர். ஜகந்நாதருக்கு ஒரு புறம் சகோதரி சுபத்ராதேவியும் இன்னொரு புறம் சகோதரர் பலராமரும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக