Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 24 ஜூன், 2020

இராமர் கும்பகர்ணன் மீது கருணை காட்டுதல்!...

இராமரின் அம்பினால், கும்பகர்ணன் ஒரு மலை விழுவது போல் மயங்கி கீழே விழுந்தான். கும்பகர்ணனின் இரத்தம் சுக்ரீவனின் மேல் பட்டு அவன் மயக்கம் தெளிந்தான். அப்போது சுக்ரீவன் மயக்கம் தெளிந்ததை கண்டு இராமர் மகிழ்ந்தார். 

அங்கு கும்பகர்ணன் அம்பு பட்டு மயங்கி விழுந்திருப்பதைக் கண்ட சுக்ரீவன், இராமர் தான் இவ்வாறு செய்திருப்பார் என நினைத்தான். உடனே சுக்ரீவன் இராமர் எங்கே இருக்கிறார் என சுற்றியும் பார்த்தான். பிறகு இராமரைக் கண்டு மகிழ்ந்தான். 

அந்த மகிழ்ச்சியில் அவன் கும்பகர்ணனின் மீது பாய்ந்து (சுக்ரீவன் இராவணனிடம் கிரீடத்தில் இருந்து மணிகளை பறித்து வந்தது போல்) காதையும், மூக்கையும் கடித்து அதைக் எடுத்துக் கொண்டு சென்றான். கும்பகர்ணனின் காதையும், மூக்கையும் நம் அரசர் சுக்ரீவன் கடித்து விட்டதை வானரங்கள் ஒருவருக்கொருவர் சொல்லி மகிழ்ந்தனர்.

சிறிது நேரம் கழித்து கும்பகர்ணன் மயக்கம் தெளிந்தான். அப்போது தான் பிடித்து வைத்திருந்த சுக்ரீவன் தப்பி ஓடியதையும், தன் மூக்கையும், காதையும் கடித்து கொண்டு சென்றதை அறிந்து மிகவும் வருந்தினான். 

இதனால் கடுங்கோபம் கொண்ட கும்பகர்ணன் தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அவர்களை கொல்வேன் எனக் கூறிக் கொண்டு அங்கிருந்து எழுந்தான். 

தன் கையில் இருந்த வாள் மற்றும் கேடகம் கொண்டு வீசி வீசி போர் புரிந்தான். இதனால் பல வானரங்கள் மாண்டு விழுந்தனர். அப்போது ஜாம்பவான் இராமரிடம் சென்று, பெருமானே! இந்த கும்பகர்ணனை சீக்கிரம் கொல்லுங்கள். 

இல்லையெனில் நம் வானர படைகளை இவன் அழித்து விடுவான் என வேண்டினான். பிறகு இராமர் கும்பகர்ணனுடன் வந்த சேனைகள் அனைத்தையும் விரைந்து அழித்தார்.

இராமர் கும்பகர்ணன் கையில் இருந்த கேடகத்தை தன் அம்பை ஏவி அதை உடைத்தெறிந்தார். அப்போது கும்பகர்ணன் தன் கையில் இருந்த வாளைக் கொண்டு போர் புரிந்தான். பிறகு இராமர், கும்பகர்ணனை நோக்கி ஒவ்வொரு அம்பாக கணப்பொழுதில் செலுத்தினார். 

ஆனால் கும்பகர்ணன் இதையெல்லாம் தன் கையால் தடுத்து நிறுத்தினான். பிறகு மற்றொரு அம்பை ஏவி கும்பகர்ணனின் கையில் இருந்த வாளை உடைத்தெறிந்தார். தன் வாளை இராமன் உடைத்ததைக் கண்டு மற்றொரு வாளை கும்பகர்ணன் கையில் எடுத்துக் கொண்டு இராமரை தாக்க தொடங்கினான். 

அப்பொழுது இராமர் ஒவ்வொரு அம்பாக ஏவி கும்பகர்ணனிடம் இருந்த வாள், கேடகம், கவசம், சூலாயுதம் என அனைத்தையும் அறுத்தெறிந்தார்.

அப்பொழுது இராவணன் கும்பகர்ணனுக்கு உதவியாக ஒரு சூலப்படையை அனுப்பினான். பிறகு கும்பகர்ணன் அந்த சூலப்படையைக் கொண்டு போர் புரிய தொடங்கினான். 

ஆனால் இராமர் அந்த படைகள் அனைத்தையும் தன் வில்லுக்கு இரையாக்கினார். கடைசியில் கும்பகர்ணன் மட்டும் தனியாக வெறுங்கையுடன் நின்றான். 

அப்பொழுது இராமர் கும்பகர்ணனை பார்த்து, பெரும் சேனைகளுடன் போர் புரிய வந்த நீ இப்பொழுது எல்லாம் இழந்து நிற்கின்றாய். நீ பண்பில் சிறந்த, நீதிநெறியில் உயர்ந்த விபீஷணனின் சகோதரன் என்பதால் உன்மேல் கருணை காட்டுகிறேன். 

நீ இலங்கை நகருக்குச் சென்று நாளை திரும்பி வந்து போர் செய்கிறாயா? அல்லது இப்பொழுது என்னுடன் போரிட்டு மடிகிறாயா? உனது விருப்பம் எதுவோ அதன்படி செய் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக