நாகதோஷம் உள்ளவர்கள் இங்கே வந்து புற்று வழிபாடு செய்து, முப்பாத்தம்மனை வேண்டிக் கொண்டால், தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
சென்னை தி.நகர் பனகல்பார்க் அருகில் முப்பாத்தம்மன் கோவில் உள்ளது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதி விவசாய பூமியாகத் திகழ்ந்த போது, முப்பாத்தம்மன் தோன்றினாள். முன்பு இங்கு அரசு மற்றும் வேம்புக்கு நடுவே புற்று வளர்ந்திருந்தது.
இதைத்தான் ஆரம்பத்தில் வழிபட்டனராம். பின்னர், முப்போகமும் விளையும் நிலத்தில் இருந்து அம்மன் விக்கிரகத்தைக் கண்டெடுத்தனராம். இதை, புற்றுக்கு அருகில் வைத்து வழிபடவும் தொடங்கினார்கள். முப்போகமும் விளையும் நிலத்தில் இருந்து வந்தால், முப்பாத்தம்மன் என்றனர்.
இந்த கோவிலின் விசேஷங்களில் பிராகார வலம் வருதலும் ஒன்று! செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 108 முறை பிராகாரம் வலம் வரும் பக்தர்கள் நிறைய பேர் உள்ளனர். இப்படி 108 முறை வலம் வந்தால் பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை.
கருவறையில் சாந்தமும், கருணையும் பொங்க, அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறாள் முப்பாத்தம்மன். `இரண்டு நிமிடம் முழு ஈடுபாட்டுடன் நமது பிரார்த்தனையை அம்மனிடம் வைத்து வேண்டிக் கொண்டால் போதும். நினைத்தது நிறைவேறும்' என்கின்றனர் பக்தர்கள்.
நாக தோஷம் உள்ளவர்கள் இங்கே வந்து புற்று வழிபாடு செய்து, முப்பாத்தம்மனை வேண்டிக் கொண்டால், தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. எலுமிச்சைப் பழத்தோலில் நெய் விளக்கு ஏற்றி வைத்து, செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை என ஒன்பது வாரங்கள் தொடர்ந்து முப்பாத்தம்மனை வழிபட்டு வந்தால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும்.
குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர் என்பது நம்பிக்கை. ஆடி மாத விசேஷ நாட்களில் எலுமிச்சை மாலை அணிவித்து அம்மனை வேண்டிக் கொண்டால் தீராத நோயையும் தீர்த்து வைப்பாள் முப்பாத்தம்மன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக