மூர்த்தி நாயனார்...!!
முத்தமிழ் வளர்த்த பாண்டிய நாட்டில் உள்ள மதுரை மாநகரில் வணிக குலத்தில் பிறந்தவர் மூர்த்தியார். வாழ்க்கையில் அகம் மற்றும் புறப்பற்று விடுத்து எம்பெருமானின் தாமரை போன்ற திருவடிகளை எண்ணி வாழ்வதே பற்று என எண்ணி வாழ்ந்து கொண்டிருந்தார். சிவபெருமானின் திருவடிகளையே மெய்யடியாக பற்றியவர். அவர் திருவாலவாயில் வீற்றிருக்கும் சொக்கலிங்கப் பெருமான் திருமேனிக்கு நாள்தோறும் சந்தனத்தை அரைத்துக் கொடுக்கும் திருப்பணியை தமது கடமையாக எண்ணி செய்து கொண்டிருந்தார்.
அன்றைய நாட்களில் பகையரசனான கர்நாடக மன்னன் ஒருவன் தன்னுடைய படை வலிமையால் தம்முடைய ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்தும் எண்ணத்தோடு நீதிநெறியின்றி பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்தான். பாண்டிய அரியணையில் அமர்ந்து இருந்த அரசன் வீரத்தில் குறைந்து இருந்ததால் பாண்டியனோடு போர் செய்து பாண்டிய நாட்டின் அரசாட்சியை தன்பால் கவர்ந்து கொண்டான்.
பகையரசன் சமண சமயத்தைச் சார்ந்து வழிபட்டு வந்தமையால் சமண மதமே வழிபடுவதற்கு உகந்த மதமாகும் என்று எண்ணிக்கொண்டு சைவ நெறியில் வழிபாடு செய்து வாழ்ந்துவந்த அடியார்கள் பலருக்கு இன்னல்கள் கொடுக்க துவங்கினான். சமண மதத்தை பாண்டிய நாட்டில் பரப்ப தம்முடைய நாட்டில் இருந்து சமணமத பிரச்சாரர்களையும், சமண குருமார்களையும் வரவழைத்தான்.
சமணமதக் கொள்கையைப் பாண்டிய நாட்டில் பரப்ப பலவிதமான முறைகளை பயன்படுத்தினான். தம்முடைய எண்ணங்களுக்கு தடையாக இருந்த பல சைவ சமயத்தவர்களுக்கு பல கொடுமைகள் மற்றும் இன்னல்களை புரிந்து வந்தான். சைவ சமயத்தை வளரவிடாமல் தடுப்பதற்கான பலவிதமான வழிகளை கையாண்டான். எம்பெருமான் வீற்றிருக்கும் திருத்தலங்களில் திருப்பணிகள் யாவும் நடைபெறாத வண்ணம் தடைகளையும், துன்பத்தையும் கொடுத்தான்.
எம்பெருமானுக்கு திருச்சந்தனம் அரைக்கும் மூர்த்தியாருக்கும் இன்னல்களை கொடுக்க துவங்கினார்கள் சமணர்கள். அதாவது, சந்தனக் கட்டைகள் கிடைக்காத வண்ணம் செய்து அவருடைய திருப்பணியைத் தடுக்க முயற்சித்தனர். இவர்களின் செயல்பாடுகளை பற்றி கவலை கொள்ளாமல் தம்முடைய சிந்தையில் எம்பெருமானை எண்ணி தாம் மேற்கொள்ளும் திருப்பணியை தவறாமல் செய்து கொண்டே வந்தார்.
நாட்கள் கடக்க கடக்க சமணர்கள் செய்யும் இடர்பாடுகளும் அதிகரிக்க துவங்கின. சமணர்கள் செய்து வரும் இன்னல்களை பொருட்படுத்தாமல் சிந்தையில் எம்பெருமானின் எண்ணங்களோடு இருந்து வந்தார் மூர்த்தியார்.
எந்த நிலையிலும் எம்பெருமானுக்கு செய்துவரும் திருத்தொண்டிற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க பலவிதமான முயற்சிகளை செய்துகொண்டு அதில் வெற்றியும் கண்டார். ஆனால் ஒருநாள் சந்தன சேவை செய்வதற்கு தேவையான சந்தனக் கட்டைகளுக்காக மதுரையின் பல இடங்களில் பகல் முழுவதும் சுற்றி அலைந்தும் அவர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் எதிர்பார்த்த பலன்களை தரவில்லை. சந்தன சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவரது நினைவில் இருந்தமையால் அவருக்கு ஏற்பட்ட பசியையும் பொருட்படுத்தாமல் பல இடங்களில் தேடியும், தனக்கு தெரிந்த நபர்களிடமும் பலவிதங்களில் உரையாடியும் சந்தனக் கட்டைகள் வேண்டி பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டார்.
ஆயினும் அவர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளுக்கும் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை. இதனால் மிகவும் மனவேதனை அடைந்த மூர்த்தியார் எம்பெருமான் இருக்கும் திருத்தலத்திற்கு சென்றார். திருத்தலத்தில் ஓர் இடத்தில் அமர்ந்து எம்பெருமானின் எண்ணங்களோடு அவரின் திருநாமத்தை துதிக்கத் தொடங்கினார். அப்பொழுது அவரது மனதில் ஒரு எண்ணமானது உதயமானது.
மூர்த்தி நாயனார் தன் மனதில் சந்தனக் கட்டைகள் கிடைக்காமல் போகலாம்... ஆனால், சந்தன கட்டைகளை அரைக்கும் என் முழங்கைக்கு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லையே. சந்தனக் கட்டைகள் கிடைக்காவிட்டால் என்ன? என் முழங்கை இருக்கிறதே, இதையே அரைத்து சந்தன காப்புகளை பூசலாம் என்று எண்ணி மகிழ்ச்சி கொண்டார். சந்தனக் கட்டையை அரைக்கும் கல்லில் தனது முழங்கையை வைத்து தேய்க்க தொடங்கினார்.
மனதில் எம்பெருமானை எண்ணிக்கொண்டே தனது கைகளை பலமாக தேய்த்துக்கொண்டே இருந்தார். மேலும் கல்லின் கரடுமுரடான பகுதிகளால் அவரது தோல் தேய்ந்து இரத்தம் வெளிப்படத் துவங்கியது. இரத்தம் வெளிப்பட்டதும் அதை தொடர்ந்து அவருடைய எலும்பும், நரம்பும் வெளிப்படத் துவங்கின. ஆனால் மூர்த்தியார் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் தான் மேற்கொண்ட செயலிற்கு எந்தவிதமான தடையும் ஏற்படாத வண்ணம் தொடர்ந்து கைகளை தேய்த்துக் கொண்டே இருந்தார்.
மூர்த்தியாருடைய கள்ளங்கபடம் இல்லாத முழுமையான அன்பை புரிந்து கொண்ட எம்பெருமானும் இனியும் தனது அடியாரை துன்புறுத்தல் ஆகாது என்று எண்ணி அவ்விடத்திற்கு அருள் வடிவமாக தோன்றினார். அருள் வடிவமாக தோன்றிய எம்பெருமானைக் கண்ட மூர்த்தியார் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார். முன்பு போல் செய்து வந்த சந்தனக்காப்பு சேவையானது எவ்வித தடையுமின்றி நடைபெறும் என்றும், கர்நாடக மன்னனை வென்று கீர்த்தி பெறுவாய் என்றும், இறுதியில் எந்தன் திருவடியை வந்து சேர்வாய் என்றும் அருள்வாக்கு கூறினார்.
எம்பெருமானின் அருள்வாக்கை கேட்டதும் தமது கரங்களை தேய்ப்பதை நிறுத்தினார். அவருடைய கரமானது முன்பு போலவே பொலிவுடன் காணப்பட்டது. எம்பெருமான் அருளிய படியே நேர்மையின்றி செயல்பட்ட அரசர் உடல்நலம் பாதிக்கப்பட்டான். மருத்துவர்கள் பலவிதங்களில் முயற்சி செய்தும் அரசரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. அரசரின் ஆயுளும் அன்றோடு நிறைவு பெற்றது. அரசரின் ஆயுள் நிறைவுபெற்றதோடு மட்டும் அல்லாமல் சமணர்களின் ஆதிக்கத்திற்கும் முற்றுப்புள்ளி தோன்றியது.
அரசனுக்கு வாரிசுகள் இல்லாததனாலும், அவருடைய அரச மரபினை சேர்ந்தவர்கள் இல்லாததனாலும் அமைச்சர்களே இணைந்து அரசனுக்கு உண்டான ஈமக் கடன்களைச் செய்து முடித்தனர். ஆதவனை மறைத்த மேகம் விலகியதும் பேரொளி வீசும் கதிரவன் போல சமணர்களின் ஆதிக்கம் குறைய துவங்கியதும் சைவம் தழைக்க துவங்கியது. அரசருக்கு செய்ய வேண்டிய கர்ம காரியங்களை செய்து முடித்ததும் இனி நாட்டை ஆள்பவர்கள் யார்? என்று அமைச்சர்கள் ஆலோசிக்க துவங்கினார்கள்.
அவர்களின் ஆலோசனைகளின் முடிவுகளில் அவர்களுடைய மரபு வழக்கப்படி பட்டத்து யானையை கண்ணைக் கட்டி அதன் துதிக்கையில் பூமாலையைக் கொடுத்து அனுப்புவது என்ற தீர்மானத்திற்கு வந்தனர். யானையானது யாருடைய கழுத்தில் மாலை போடுகின்றதோ அவரே நாட்டை ஆளக்கூடியவராவார். தீர்மானத்தை நிறைவேற்றும் பொருட்டு அதற்கான நல்ல நாளை பார்த்தனர். எம்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.
பின்பு பட்டத்து யானையை பலவாறாக அலங்காரம் செய்து அதன் கண்களை வஸ்திரங்கொண்டு கட்டிவிட்டு அதனுடைய துதிக்கையில் பூமாலையைக் கொடுத்தனர். நீ இந்த நாட்டை அறநெறியில் நிறுத்தி ஆளுதற்கு ஏற்ற ஒருவரை ஏந்தி வருவாயாக என்று சொல்லி அனுப்பினார்கள். கண்கள் கட்டப்பட்ட யானையானது பல இடங்களுக்கு சென்று பல மானுடர்கள் அவ்விடத்தில் இருந்தும் எவரிடத்திலும் மாலையை போடவில்லை.
கடைசியில் திருவாலவாய்க் கோவிலின் அருகில் வந்த பட்டத்து யானை எம்பெருமானை மனம் உருகி வணங்கி எழுந்து நின்ற மூர்த்தியார் கழுத்தில் தனது துதிக்கையில் இருந்த மலர் மாலையைப் போட்டது. மாலையை மூர்த்தியார் கழுத்தில் போட்டது மட்டுமின்றி அவரை தன் மீது ஏற்றிக்கொண்டது. பின்பு யானையின் வஸ்திரத்தால் கட்டப்பட்ட கண்கள் அவிழ்க்கப்பட்டது. மங்கள இசை முழங்க அரச மரியாதையுடன் அரண்மனைக்கு அழைத்து சென்றனர்.
அரண்மனையின் நுழைவாயிலை அடைந்த மூர்த்தியாரை அமைச்சர் பெருமக்கள் வாழ்த்தி... வணங்கி... வரவேற்று... அரசவைக்கு அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்தில் மூர்த்தியாருக்கு முடிசூட்டுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. அமைச்சர்கள் முடிசூட்டுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொண்டு இருக்கும்போது மூர்த்தியார் அவர்களுக்கு ஒரு நிபந்தனை விதித்தார்.
மூர்த்தியார் தாம் அரசராக பொறுப்பேற்க வேண்டும் என்றால் நாட்டில் இருக்கும் சமண சமயத்தை அழித்து சைவ சமயத்தை தழைக்க வைக்க வேண்டும். அப்போதுதான் நான் பதவி ஏற்பேன் என்று கூறினார். சமண மன்னர் இறந்த போதே சமண சமயம் நம்முடைய அரசாட்சியில் இருந்து முற்றிலுமாக அழிந்து போனது. அதைப்பற்றி தாங்கள் எவ்விதமான ஐயமும் கொள்ள வேண்டாம் என்று அமைச்சர்கள் பணிவோடு கூறினார்கள். அவர்கள் கூறியதை கேட்டதும் மனம் மகிழ்ந்தார் மூர்த்தியார்.
பொன் முடியும், மணிமாலையும் எமக்கு எதற்கு? என்றும், எனக்கு அவையெல்லாம் வேண்டாம்... எவ்விதமான ஆடம்பரமும் இன்றி முடிசூட்டும் விழா நடைபெற வேண்டும் என்று மூர்த்தியார் கூறினார். அமைச்சர்கள் மூர்த்தியாருடைய கூற்றுகளை கேட்டு மனம் நெகிழ்ந்தார்கள். பின்பு அவருடைய விருப்பப்படியே முடிசூட்டும் விழா நடைபெற்றது. முடிசூட்டும் விழா நிறைவு பெற்று அரச பொறுப்பை ஏற்றதும் ஆலவாய் அழகனையும், அபிஷேக வல்லியையும் தரிசிக்கத் திருக்கோவிலுக்குப் புறப்பட்டார்.
எம்பெருமானை மனதில் எண்ணிய வண்ணம் அறம் தவறாமல் ஆட்சி செய்து வந்தார். இவருடைய ஆட்சியில் சமணம் அழிந்து சைவம் வளர்ந்தது. மக்களுக்கு எவ்விதமான கவலைகள் மற்றும் இன்னல்கள் நேரிடாமல் நல்லமுறையில் ஆட்சி செய்து வந்தார். இம்மண்ணுலகில் நீண்ட காலம் வாழ்ந்திருந்து எம்பெருமானுக்கு பல திருப்பணிகளை செய்தார். இறுதியில் எம்பெருமானின் ஆசிப்படி அவருடைய திருவடி நிழலை அடைந்தார்.
சிவபுராணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக