வெள்ளி, 10 ஜூலை, 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 060

சுந்தரமூர்த்தி நாயனார்...!!

திருக்கைலாசமலையில் உமாதேவியாரோடு எழுந்தருளி இருக்கின்ற சிவபெருமானை வழிபடும் அடியார்களின் கூட்டத்தில் ஒருவராகிய ஆலாலசுந்தரர் இருந்தார். ஆலாலசுந்தரர் எம்பெருமானை தரிசிக்கும் பொருட்டு மலர்களை பறிப்பதற்காக திருநந்தவனத்திற்கு சென்றார். அந்த வேளையில் பார்வதிதேவியாரை தரிசிக்கும் பொருட்டு அந்த திருநந்தவனத்திலேயே மலர்களை பறித்து கொண்டு நின்ற அவருடைய சேடியர்களாகிய அனிந்திதை, கமலினி என்னும் பெயர்களையுடைய பெண்கள் இருவரையும் கண்டதும் அவர்கள் மேல் ஒருவிதமான ஆசை கொண்டார்.

ஆலாலசுந்தரரைக் கண்டதும் அவரின்மேல் இவர்களுக்கும் ஆசை ஏற்பட்டது. பின்பு ஒருவாறாக ஆலாலசுந்தரர் தமது மனதை கட்டுப்படுத்தி கொண்டு வந்த வேலையை பார்க்க துவங்கினார். அதன்பின் அம்மூவரும் மலர்களை பறித்துக் கொண்டு ஆலாலசுந்தரர் சிவசந்நிதானத்திற்கும், பாவைகள் தேவிசந்நிதானத்திற்கும் திரும்பி விட்டார்கள். அனைத்தும் அறிந்த எம்பெருமான் தன்னை வழிபட வந்த ஆலாலசுந்தரரை நோக்கி நீ பெண்கள் மேல் கொண்ட ஆசைகளால் தக்ஷிண பூமியிலேயே மனித உருவம் எடுத்து பிறந்து அந்த பெண்களோடு புணர்ந்து இன்பம் அனுபவிப்பாயாக என்று திருவாய் மலர்ந்தருளினார்.

எம்பெருமான் கூறியதை கேட்டதும் மனம் கலங்கிய ஆலாலசுந்தரர் எம்பெருமான் முன்னிலையில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்தார். பின் தங்கள் திருவடிகளை விட்டு விலகி செல்லும் அளவிலான பெரும்பாவத்தை செய்தவனாகிவிட்டேன். இச்சிறியேன் போக சுகங்களுடன் மயக்க நிலையில் வாழும் மனித பிறப்பை எடுத்து வாழும் பொழுது வாழ்க்கையில் செய்ய வேண்டியது எது? நீக்க வேண்டியது எதுவென்று அறியாமல் இந்த பிரபஞ்ச வாழ்க்கையிலேயே மதி மயங்கி இருக்கும் தருவாயில், தாங்கள் வெளிப்பட்டு அடியேனைத் தடுத்து ஆட்கொண்டருள வேண்டும் என்று வேண்டினார்.

வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை இல்லை என்று உரைக்காமல் அள்ளித்தரும் எம்பெருமானும் அவரின் வேண்டுதலுக்கு அருள்புரிந்தார். சைவ வளமும், செல்வ வளமும் செழித்தோங்கி கொழிக்கும் திருநாவலூர் என்ற நகரில் ஆதிசைவர் மரபில் சடையனார் என்னும் சிவத்தொண்டர் பிறந்தார். இவர் சிவபெருமானின் மீது பற்று கொண்டு இடைவிடாது பரமனை வணங்கி வந்தார். குழந்தை பருவம் முடிந்து இளமை பருவம் அடைந்ததும் திருமண காலமும் வந்தது.

திருவாரூர் என்னும் வளம் நிறைந்த ஊரில் வாழ்ந்து வந்த கௌதம கோத்திரத்தில் அவதரித்தவர் ஞானசிவாச்சாரியார் என்பவர். அவருக்கு திருமகளாக அவதரித்தவர் இசைஞானியார். சிறுவயது முதலே சிவபெருமானின் மீது மிகுந்த அன்பும், பக்தியும் கொண்டு சிறந்த சிவபக்தையாக வாழ்ந்தும், வளர்ந்தும் வந்தார். அவர் திருவாரூர் இறைவனது திருவடிகளை என்றும் மறவாது நினைவில் கொண்டு வாழ்ந்து வந்தார்.

குழந்தைப் பருவம் முடிந்து திருமணப் பருவத்தை அடைந்ததும் ஞானசிவாச்சாரியார் தனது மகளை சடைய நாயனாருக்கு திருமணம் செய்து வைத்தார். சடைய நாயனாரோடு இல்வாழ்க்கையில் ஈடுபட்ட போதும் சிவபெருமானின் மீது கொண்ட பக்தியிலும், அவரை வழிபடுவதிலும் எவ்விதமான குறைகளுமின்றி வாழ்ந்து வந்தனர். இசைஞானியார் பக்தியில் மகிழ்ந்த சிவபெருமான், இந்த வையகமே போற்றி வணங்கும் வகையிலான புத்திரனை பெறும் பாக்கியத்தை இசைஞானி பிராட்டியாருக்கு அருளினார்.

தனக்கு பிறக்கும் குழந்தை தர்ம வழியில் வாழ வேண்டும் என்பதற்காக குழந்தையை கருவில் சுமக்கும்போதே சிவமந்திரங்கள் மற்றும் சிவபோற்றிகளை கற்பித்த மிக சிறந்த சிவபக்தை. சுந்தரமூர்த்தியார், சடையனார்-இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். சுந்தரமூர்த்தியார் ஆதி சைவர் எனும் குலத்தினை சேர்ந்தவர் ஆவார். இவருடைய பெற்றோர்கள் இவருக்கு வைத்த பெயர் நம்பியாரூரன் என்பதாகும். நம்பியாரூரன் என்னும் பெயரை ஆரூரன் என்று சுருக்கி அழைப்பர்.

திருமுனைப்பாடி நாட்டினை பல தலைமுறைகளாக ஆட்சி புரிந்து வந்த முனையரையர் என்னும் குறுநில மன்னர் மரபிலே வந்தவர் நரசிங்க முனையரைய நாயனார். சடையநாயனாரின் தோழரும் ஆவார். நரசிங்க முனையரைய நாயனார் திருநாவலூர் பெருமானை தரிசித்து விட்டு தேரில் வீதிவலம் வரும் பொழுது வீதியில் தேர் உருட்டி விளையாடும் நம்பியாரூரரைக் கண்டார்.

நம்பியாரூரரின் அழகில் பெரிதும் கவரப்பட்ட அரசர் தேரில் இருந்து இறங்கி வந்து ஆரூரரை வாரி அனைத்து எடுத்து உச்சி முகர்ந்தார். அந்த நிலையில் அவர் அடைந்த மகிழ்ச்சி என்பது எல்லையில்லாதது. இக்குழந்தையை எப்படியாவது தம்மோடு அழைத்து செல்ல வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார். அரசர் அக்குழந்தையை தூக்கிக் கொண்டு தம்முடைய தோழரான சடையனார் இல்லத்திற்குள் சென்றார். தன்னுடைய இல்லத்திற்கு அரசர் வந்திருப்பதை கண்டதும் தம்பதியர்கள் அதிசயித்து நின்றனர். பின்பு சிறிது நேரத்திற்குள் வந்து அரசரை வரவேற்றனர்.

சடையனாரும், நரசிங்கமுனையாரும் இளம் வயதில் இருந்தே நண்பர்கள். ஆரூரன் தன்னுடைய நண்பனின் புதல்வன் என்பதை அறிந்ததும் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார். அரசன் சடையனாரிடம் உன்னுடைய குழந்தையின் அழகில் யாம் மிகுந்த மகிழ்ச்சி கொண்டோம். தனது மனதில் இருக்கும் விருப்பத்தை சடையனாரிடம் சென்று எடுத்துரைத்து அவரிடம் தாம் கொண்ட நட்புரிமையினால் நம்பியை தாம் வளர்ப்பதற்கு அனுமதி தருமாறு வேண்டினார். சடையனாரும் அவர் தனது நண்பரான வேந்தரின் வேண்டுதலுக்கு இணங்கி நம்பியை அளித்தார்.

தங்களது புதல்வன் அரண்மனையில் வளர வேண்டும் என்பது எம்பெருமானின் எண்ணம் என்று எண்ணினர். மனமகிழ்ச்சியோடு தங்களது புதல்வனை அரசருடன் அனுப்பி வைத்தனர். அரசன் மகிழ்ச்சியுடன் நம்பியாரூரனைச் அழைத்து கொண்டு தனது தேரில் புறப்பட்டார். ஆரூரர் அரண்மனையில் அரசகுமாரர்களை போல் வாழத் தொடங்கினார். சிறு வயது முதலே அரசர்களுக்குரிய அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்றார். மதநூல்களையும், வேத ஆகம நூல்களையும் குருமார்களின் ஆதரவோடு பயின்று அதிலும் தேர்ச்சி பெற்றார். இவ்விதமாக பெற்றோர்களின் அன்பாலும், அரசரின் அரவணைப்பாலும் ஆரூரர் வளர்ந்து வந்தார். 

ஆரூரர் திருமண வயதை அடைந்ததும் பெற்றோர்கள் ஆரூரருக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணினார்கள். தங்களின் ஆசைகளை மன்னரிடம் எடுத்துரைக்க மன்னரும் அவர்களின் விருப்பத்திற்கு இணங்கி ஆரூரருக்கு ஏற்ற மணப்பெண்ணைத் தேர்ந்தெடுத்து மணம் முடிக்கலாம் என்று மனமகிழ்ச்சியுடன் கூறினார். மன்னர் கூறிய அக்கணமே தந்தையாராகிய சடையனார் ஆதிசைவ குலத்திலேயே மணப்பெண்ணைத் தேடினார். அவர்களின் குடும்பத்திற்கு ஏற்ப மணப்பெண்ணையும் தேர்ந்தெடுத்தனர். திருநாவலூருக்கு அடுத்தாற்போல் உள்ள புத்தூர் என்ற ஊரில் வாழும் சடங்கவி சிவாச்சாரியார் என்பவரின் புதல்வியை ஆரூரருக்குப் மணம் முடிக்க எண்ணி திருமணம் பேசிவரும் பொருட்டு தம் குடும்பத்தில் இருக்கும் வயதில் முத்த பெரியோர்களை அனுப்பினார் சடையனார்.

பெரியோர்கள் சடங்கவி சிவாச்சாரியாரின் இல்லத்திற்கு சென்று தங்களின் விருப்பங்களை வெளிப்படுத்தினார்கள். சடங்கவி சிவாச்சாரியாரும் அவர்களின் விருப்பத்திற்கு உடன்பட்டு சம்மதம் தெரிவித்தார். இந்த செய்தியை அறிந்ததும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த பெரியோர்கள் இச்சுபச்செய்தியை சடையனாரிடத்திற்கு திரும்பிப்போய் தெரிவித்தார்கள்.

சடையனார் மகிழ்ச்சி கொண்டு திருமணத்திற்கு தேவையான காரியங்களை மேற்கொள்ள துவங்கினார். நல்ல நாள் பார்த்து பெரியோர்களின் முன்னிலையில் திருமணமும் நிச்சயமானது. அந்த தினத்திலேயே திருமணத்திற்கான நல்ல நாளும் பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பெண் வீட்டாரது ஊரான புத்தூரிலேயே திருமணம் வைத்து கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான எல்லா ஏற்பாடுகளும் சிறந்த முறையிலும், கோலாகலத்தோடும் நடந்த வண்ணமாகவே இருந்தன.

இருவீட்டார்களும் உள்ளுர் மற்றும் வெளியூரில் இருக்கும் தங்களது நண்பர்களுக்கும், உற்றார் மற்றும் உறவினர்களுக்கும் திருமண அழைப்பு ஓலையை அனுப்பினார்கள். திருமணத்திற்கான நாளும் நெருங்கியது. நம்பியாரூரர் விவாக தினத்திற்கு உண்டான நித்திய கருமங்களை முடித்துக் கொண்டு திருமணத்திற்கு முதல் நாள் திருமண கோலங்கொண்டு ஆரூரர் திருநாவலூரில் இருந்து குதிரைமேல் ஏறி மங்கள இசை முழங்க மேள தாளத்துடன் புத்தூருக்கு உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ புறப்பட்டார்.

ஆரூரர் மன்னர் குலத்தில் வளர்க்கப்பட்டு இருந்தமையால் விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் அணிந்திருந்தாலும் அவரின் பிறந்த குலத்திற்கு ஏற்பவும் அலங்காரத்தை செய்து கொண்டிருந்தார்.

மங்கள முரசங்கள் முழங்கிட...

பண் இசைக்கும் பாவையர் பரதமாட...

மங்கள இளம் கோதையர் திருமண பெண்ணிற்குரிய சீர் வரிசைகளை பொன் தட்டுகளில் தாங்கிவர...

ஆரூரரின் மணவிழா பவனி புத்தூரை நெருங்கி கொண்டிருந்தது.

சடங்கவியார் தம்முடைய மகளின் திருமணத்தை மிகச்சிறந்த முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தார். ஊரின் எல்லையில் இருந்தே மண விழா நடைபெறும் இடம் வரையிலும் பெரும் பந்தலானது அமைக்கப்பட்டது. பந்தலில் ஆங்காங்கே, அழகிய நறுமணம் உள்ள பூச்சரங்கள் கட்டப்பட்டு இருந்தன. மாவிலை தோரணங்கள் மற்றவர்கள் மனதை கவரும் விதத்தில் அணி அணியாக கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டன.

சடங்கவியார் தம்முடைய மகளின் திருமணத்திற்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தார்.

பந்தலின் இடையே வாழைமரங்கள் நடப்பட்டு இருந்தன.

மனைகள் தோறும் நிறை குடங்கள் வைக்கப்பட்டிருந்தன.

மணமக்கள் பவனி வரும் வீதிகள் யாவும் தூய்மை செய்யப்பட்டு பன்னீர் தெளிக்கப்பட்டு இருந்தன.

வீதிகளில் மாக்கோலமும், இடையிடையே சந்தனக்கோலமும் போடப்பட்டிருந்தன.

எல்லா திசைகளிலும் பலவகை மங்கள இசைக்கருவிகள் முழங்கிய வண்ணம் இருந்தன.

அவ்விடங்கள் யாவற்றிலும் மகிழ்ச்சி நிறைந்த இடங்களாக காட்சி அளித்தன.

மகிழ்ச்சியுடனும், கலகலப்பான உரைகளுடனும் உறவினர்கள் மற்றும் தோழர் பெருமக்கள் சூழ ஆரூரர் வைகறைப் பொழுதில் புத்தூர் எல்லையை வந்தடைந்தார். எல்லையிலேயே அவர்கள் அனைவரையும் பன்னீர் தெளித்தும், நறுமணம் கமழும் பொடிகள் மற்றும் நறுமலரையும் வீசி அவர்களை பெண் வீட்டார்கள் வரவேற்றனர். மதியின் ஒளியை காட்டிலும் மிகுந்த ஒளிமயத்தோடு காண்போரை கவரும் விதத்தில்... அழகிற்கு அழகு சேர்ந்தாற்போல்... குதிரையின் மேல் அமர்ந்த வண்ணம் திருமணம் நடைபெறும் இடத்திற்கு சுப ஓரையில் எழுந்தருளினார் ஆரூரர். 

தமது மகளின் திருமணத்திற்கான ஏற்பாடுகளை சிறந்த முறையில் சீரோடும், சிறப்போடும் செய்திருந்த சடங்கவி சிவாச்சாரியாரை ஆரூரர் உறவினர்கள் அனைவரும் புகழ்ந்தார்கள். திருமணம் நடைபெறும் இடத்தில் அமைக்கப்பெற்ற மணப்பந்தலில் அழகிற்கு மென்மேலும் அழகு சேர்க்கும் வகையில் மிகுந்த எழில்மிகு தோற்றத்துடன் காணப்பட்டார் ஆரூரர். திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் மணமகனின் தோற்றத்தை கண்டு அடுத்து என்ன நடைபெற இருக்கிறது? என்று அறியாமல் திகைத்தும், பலவாறாக புகழ்ந்தும் பேசி மகிழ்ந்து இருந்தனர்.

திருமணம் நடைபெறும் நேரமும் நெருங்கியது. அப்பொழுது யாரும் எதிர்பாராத செயலும் நடைபெற துவங்கியது. அதாவது, திருமணம் நடைபெறும் இடத்தில் வயதான ஒருவர் வருகை தந்திருந்தார். திருமணம் தொடர்பான சடங்குகள் நடைபெற்று கொண்டிருந்த இடத்தில் தனது குறையை கேட்க எவரும் இல்லையோ? என்று மங்கள இசையை தாண்டிய வண்ணம் அனைவருக்கும் கேட்கும் விதத்தில் சத்தமாக உரைத்த வண்ணம் ஒரு முதியவர் ஒருவர் எழுந்தருளினார்.

திருமணத்திற்கு வந்த முதியவர், தள்ளாடிய நடை, நரைத்த வெள்ளை முடி, செவிகளிலே கண்டிகையும் குழையும், மார்பிலே முப்புரி நூலும், நெற்றியிலும், திருமேனியிலும் புனிதமான திருவெண்ணீறும் அணிந்த வண்ணம் இருந்தார். மேலும், கதிரவனின் சூட்டை தவிர்க்கும் வண்ணம் ஒரு கரங்களில் தாழங்குடை ஏந்திய வண்ணம், மற்றொரு திருக்கையில் தருப்பை முடிந்த மூங்கில் தடியுடன், அழகு நிறைந்த தம்முடைய உருவத்தை வயதிற்கு ஏற்றாற்போல் தமது உருவத்தை மாற்றியிருந்தார் எம்பெருமான்.

அந்நிலையில் அவரைக் கண்டதும் அனைவருக்கும் திகைப்பாக இருந்தது. ஏனெனில் அவ்வூரில் இருப்பவர்கள் யாவருக்கும் அவர் யார்? என்றே தெரியாத வண்ணமாகவும், புரியாத புதிராகவும் இருந்தது. யார் என்று தெரியாத முதியவர் திருமண விழாவில் வந்து ஏதோ குழப்பம் செய்து கொண்டு இருக்கின்றார் என்று அங்கிருந்த அனைவரும் அவரை ஒருவிதமாக பார்த்துக்கொண்டு இருந்தனர்.

அப்பொழுது மணமேடையில் அமர்ந்திருந்த நம்பியாரூரர் முதியவரின் முகப்பொலிவை கண்டதும் அவ்விடத்திலிருந்து எழுந்து இருகரம் வணங்கிய வண்ணம்... ஐயனே... தாங்கள் இவ்விடத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி, தங்களின் வருகைக்காக நாங்கள் என்ன தவம் செய்திருக்கின்றோமோ? இன்று என்னுடைய திருமண நாளில் தாங்கள் இவ்விடத்தில் எழுந்தருளி இருப்பது மிக்க மகிழ்ச்சி என்று நம்பியாரூரர் கூறினார்.

ஆனால் வந்திருந்த முதியவரும் நம்பியாரூரரின் கூற்றுகளை எதையும் காதில் கேட்டுக் கொள்ளாமல், அப்பனே...! உனக்கும், எனக்கும் நீண்ட காலமாகவே ஒரு வழக்கு இருந்து கொண்டு இருக்கின்றது. அந்த வழக்கை முற்றிலுமாக நிறைவு செய்த பின்பு நீ உனது திருமணத்தை செய்து கொள்ளலாம் என்று பதிலுரை கூறினார். முதியவர் கூறிய கூற்றைக் கேட்டதும் அவ்விடத்தில் இருந்த அனைத்து உறவினர்களும் திகைத்து நின்று கொண்டிருந்தனர்.

தங்களின் வழக்கை தீர்த்துக்கொள்ள இதுவா காலம்? என்று எண்ணி உரைத்துக் கொண்டிருந்த பொழுது மணக்கோலத்தில் இருந்த நம்பியார், ஐயனே...! எனக்கும், உமக்கும் நீண்ட காலமாகவே இந்த வழக்கு இருக்குமேயானால் தாங்கள் உரைத்தது போல வழக்கை முழுவதுமாக முடித்துவிட்டு பின்னர் என்னுடைய திருமணத்தை நான் செய்து கொள்கின்றேன் என்று கூறினார்.

நம்பியாரூரர், முதியவரை நோக்கி உம்முடைய வழக்குதான் என்னவோ என்று வினவினார்?. மேலும், வந்திருந்த முதியவரும் நம்பியாரூரரை நோக்கிய வண்ணம் இல்லாமல் அவ்விடத்தில் இருந்த மற்ற அந்தணர் குலத்தவரை நோக்கி இந்த நம்பியாரூரர் எனது அடிமை என்று கூறினார். நம்பியாரூரர் முதியவரின் பேச்சைக் கேட்டதும் அவருக்கு என்ன உரைப்பது என்று தெரியாமல் அவ்விடத்தில் அமைதியுடன் நின்று கொண்டிருந்தார்.

ஆனால் இவர் காத்த அமைதியை மற்றவர்கள் எவரும் காக்கவில்லை, மாறாக முதியவர் கூற்றை கேட்டதும் அவ்விடத்தில் இருந்த அனைவரும் நகைக்க துவங்கினர். இதைக் கண்டதும் வந்திருந்த முதியவருக்கு சினமானது அதிகரிக்கத் துவங்கியது. நான் உரைத்ததை எண்ணி யாவரும் நகைக்க வேண்டியதில்லை. இவன் என்னுடைய அடிமை ஆவான் என்பதற்கு என்னிடம் தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றன.

இவனுடைய பாட்டனார் நீண்ட நாட்களுக்கு முன்னே எமக்கு ஒரு அடிமை ஓலை ஒன்றை எழுதி கொடுத்துள்ளார் என்று சினம் கொண்ட முகத்துடன் அவ்விடத்தில் கூறினார். இவருடைய கூற்றுகளை கேட்டதும் அவ்விடத்தில் இருந்த நம்பியாரூரருக்கு வியப்பும், புன்னகையும் தோன்றத் துவங்கியது. வந்திருக்கும் முதியவரை யார்? என்று அறிந்து கொள்ள முடியாத நிலையில் அம்முதியவரின் அருகில் சென்று உமக்கு நன்றாக பித்து பிடித்திருக்கிறது.

குற்றமற்ற என்னை உனக்கு அடிமை என்று உரைப்பது பாவத்திற்குரிய செயலாகும். மேலும் நீர் யாரென்று அறியாத நிலையில் நான் எப்படி உனக்கு அடிமையாவேன். உனக்கு ஏதோ பித்துப் பிடித்து இருக்கின்றது அல்லது உண்மையில் நீ பித்தன் தானோ என்று கூறினார். நம்பியாரூரர் பித்தன் என்று உரைத்ததும் முதியவருக்கு சினமானது மென்மேலும் அதிகரிக்கத் தொடங்கியது.

முதியவர் நம்பியாரூரரை கடுமையாக பார்த்த வண்ணம் யான் ஒன்றும் பித்தன் அல்ல. மற்றவர்கள் பயந்து ஓடும் அளவிற்கான பேயும் அல்ல. நீ என்னை பற்றி எவ்வளவு இழிவாக பேசினாலும் கூட நான் எதற்கும் கவலைப்படமாட்டேன். நான் யார்? என்று உனக்கு தெரியாமல் இருக்கலாம். அல்லது நீர் அறிந்து கொள்ள முயற்சிகள் ஏதும் செய்யாமலும் இருக்கலாம். ஆனால் எனக்கு இந்த வழக்கில் தீர்வு கிடைக்காமல் யான் இந்த இடத்தை விட்டு செல்வதாக இல்லை. தேவையில்லாமல் என்னிடம் பேசி உனது எஜமானின் கோபத்தை அதிகரிக்காதே முதலில் என்னிடம் உரையாடுவதை விடுத்து உன் கடமையை எண்ணி எனக்கு பணி செய்வதை எப்பொழுதும் நினைவில் கொள் என்று உரக்கக் கூறினார்.

அமைதியுடன் முதியவர் கூறிய கூற்றுக்கு எதிர்வாதம் கொடுத்து கொண்டிருந்த ஆரூரரோ சிந்திக்கத் துவங்கினார். அதாவது, இவரின் தோற்றம் அருளின் வடிவமாகவே இருக்கின்றது. எனது இதயமானது இவர்பால் ஏனோ ஈர்த்து செல்கின்றது. அதேவேளையில் இவருடைய பிதற்றல் வார்த்தைகளும், இவரது வயோதிக தோற்றமும் இவர் மொழிந்த 'அடிமை" என்ற வார்த்தையும் மென்மேலும் எமது மனதை அமைதியற்ற நிலையில் உள்ளடக்கிய வண்ணமாக இருக்கின்றது என பலவாறாக மனதில் எண்ணிய வண்ணம் குழம்பிய நிலையில் இருந்தார் ஆரூரர்.

இந்த குழப்பத்தில் இருந்து விடுபட வேண்டுமெனில் வந்திருக்கும் முதியவரிடம் இருக்கும் அடிமை ஓலையை வாங்கி பார்ப்பதுதான் சிறந்த தீர்வாக இருக்கும் என்று எண்ணினார். அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள தொடங்கினார். அதாவது முதியவரே... நீங்கள் கூறுவதுதான் உண்மை என இருக்குமாயின் அந்த உண்மையை நிரூபிக்கும் பொருட்டாக இருக்கக்கூடிய அடிமை ஓலையை காட்டுவீராக என்று ஆரூரர் வினவினார்.

ஆரூரரின் கூற்றுகளை கேட்டதும் சினம் கொண்ட முதியவரும் அடிமை ஓலையை பார்த்து படித்து உணரும் பேராற்றல் உமக்கு இருக்கின்றதோ? அப்படியே இருக்கின்றது என்றாலும் உம்மிடம் அடிமை ஓலையை தனிப்பட்ட முறையில் யாம் உமக்கு கொடுக்க மாட்டோம். உனக்கு துணிவிருந்தால் அவைக்களம் வந்து நீ பார்த்துக் கொள்வாயாக என்று தம் வாதத்தை ஆரூரருக்கு மென்மேலும் சினத்தை அதிகரிக்கும் வண்ணமாக கூறினார்.

அதுவரை பொறுமை காத்துக்கொண்டிருந்த ஆரூரரோ பொறுமை கொள்ளாமல் வெகுண்டு எழுந்து முதியவரின் கையில் இருக்கக்கூடிய அந்த அடிமை ஓலையை பறிக்க முற்பட்டார். அவருடைய முயற்சியை அறிந்த வண்ணமாக முதியவராக இருந்த எம்பெருமான் அவர் கைகளில் அகப்படாத வகையில் திருமணம் நடைபெறும் பந்தலை சுற்றி ஓடினார். ஆரூரரும் அவரை விடாப்படியாக இல்லாமல் அவரை தொடர்ந்து துரத்தி ஓடிக் கொண்டிருந்தார். ஒருவழியாக முதியவரை பிடித்து அவர் கரங்களில் இருந்த அடிமை ஓலையை பிடிங்கினார். 

ஆரூரரோ முதியவரிடம் இருந்து அடிமை ஓலையை பறித்த பின்னர் அந்தணர் அடிமையாகி ஒருவருக்கு பணிபுரிவதா? எந்த வேதத்தில் உரைத்து இருக்கின்றது என்பதை இப்பொழுது பார்த்துவிடுவோம் என்று உரைத்த வண்ணம் முதியவரிடம் இருந்து பறித்த ஓலையை சிறிதும் படித்து பார்க்காமல் அதை சுக்கு சுக்காக கிழித்தெறிந்தார்.

ஆரூரர் தன்னிடமிருந்த ஓலையை பிடிங்கி அதை யாவரும் படிக்க இயலாத வகையில் கிழித்து எறிந்தார். இதைக்கண்ட முதியவர் செய்வதறியாது இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த அநியாயத்தை எதிர்த்து எவரும் கேட்க வரமாட்டீர்களோ?... என்று அனைவரும் கேட்கும் விதத்தில் பலமாக குறையொலி எழுப்பி நின்று கொண்டிருந்தார். முதியவர் இவ்விதம் உரைத்ததை கேட்டதும் ஆருரரும் செய்வதறியாமல் திகைத்து நின்றார். அவ்விடத்தில் இருந்த அனைவரையும் பார்த்து கொண்டு என்ன செய்வது? என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். ஆனால் தாம் செய்த செயல் முறையானது அல்ல என்பதை மட்டும் அவர் நன்கு உணர்ந்திருந்தார்.

வயதான முதியவரின் பேச்சைக் கேட்டதும் திருமணத்திற்காக வந்திருந்த சில வேதியர்கள் அவரின் அருகில் சென்று நிகழ்ந்தவை நிகழ்வாகவே இருக்கட்டும். ஆனால், உங்களுடைய வழக்கு என்பது இவ்வுலகில் எங்கும் காணாத புதிய விசித்திரமான ஒன்றாக உள்ளது. திருமணம் நடைபெறும் ஒரு நன்னாளில் அத்திருமணத்தை நிறுத்தும் விதமாகவே நீர் மேற்கொள்ளும் செயல்கள் யாவும் அமைந்திருக்கின்றன. முதலில் தாங்கள் யார்? தாங்கள் எங்கிருந்து வருகின்றீர்? உமது பூர்வீகம்தான் எங்கே? என்று அடுக்கடுக்கான கேள்விகளை அவர்கள் கேட்கத் தொடங்கினார்கள்.

அவர்கள் அனைவரும் கேட்ட கேள்விகள் யாவற்றிற்கும் முதியவர் பதிலளிக்க தொடங்கினார். அதாவது, யான் அருகாமையில் இருக்கின்ற வெண்ணை நல்லூரில் பிறந்து வளர்ந்தவன். அவ்வூரிலேயே இவனுடைய பாட்டனாரும் வாழ்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது இவன் பாட்டன் எனக்கு ஒரு அடிமை ஓலை எழுதி கொடுக்காவிட்டால் இவன் ஏன் என் கரங்களில் இருக்கின்ற ஓலையை பறித்து, அதை எவரும் அறியாவண்ணம் கிழித்தெறிந்து அறநெறி தவறி நடந்து கொள்ள வேண்டும்? இவனுடைய செயல்பாடுகளே இவன் குற்றம் உள்ளவன் என்பதை நிரூபிக்கின்றது. இவன் என் அடிமைதான் என்று நிரூபிக்க இதைவிட வேறு என்ன ஆதாரம் தேவை? என்று தமது விடையை உரத்த குரலில் வெளிப்படுத்தினார்.

முதியவரிடம் இருந்த ஓலையை கிழித்தெறிந்தது தவறு என்பதை நன்கு உணர்ந்திருந்த ஆரூரர், முதியவரின் பேச்சைக் கேட்டதும் நீர் உரைப்பது மெய்யாக இருக்கும் பட்சத்தில் உமது வழக்கை எமது ஊரான வெண்ணை நல்லூரில் தீர்த்துக்கொள்ளலாம். அதற்கு நான் மனப்பூர்வமாக சம்மதிக்கிறேன் என்று கூறினார்.

ஆரூரர் தனது சம்மதத்தை கூறிய பிறகு முதியவரும் அவ்விதமே ஆகட்டும். எமது வழக்கை எமது ஊரில் வைத்து தீர்த்துக் கொள்ளலாம். மேலும் நீர் கிழித்து எறிந்த ஓலை ஒரு நகல் ஓலையாகும். மூல ஓலையைப் பத்திரமாக வைத்திருக்கிறேன். மூல ஓலையை எமது ஊரிலுள்ள அவையோர் முன்னிலையில் அதை காண்பித்து நீர் என் அடிமை என்பதை நான் நிரூபிக்கிறேன். நீர் என் பின்னால் வாரும்... என்று உரைத்தபடி தள்ளாடிக் கொண்டு தனது ஊரை நோக்கி பயணத்தை துவங்கினார்.

ஆரூரரும், முதியவரை பின் தொடர்ந்த வண்ணம் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவருடைய உறவினர்களும், நண்பர்களும் அவரை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். மகிழ்ச்சியான தருணங்கள் நிறைந்த சுபிட்சமாக அமைய வேண்டிய திருமண மன்றமானது வழக்காடும் மன்றமாக மாறியது. மகிழ்ச்சி என்பது குறைந்து சோகம் அவ்விடத்தை மூழ்கடிக்க துவங்கியது. ஒருவழியாக தள்ளாடித் தள்ளாடி நடந்து கொண்டு திருமண மண்டபத்தில் இருந்த ஆரூரரையும், அவரது உறவினர் அனைவரையும் தன்பால் ஈர்த்து கொண்டும், வெண்ணை நல்லூரை அடைந்து அவ்வூரில் அவையை கூட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.

அவையோர்கள் கூடிய பின்பு அவர்களிடம் தம்முடைய வழக்கை முன்வைத்தார். அதாவது, இந்நாவலூரன் எனது அடிமை அதற்கு சான்றாக இவன் பாட்டன் எனக்கு எழுதிக் கொடுத்த ஓலையை இவன் கிழித்து எறிந்துவிட்டான். ஆகையினால் இவனை நான் அவைக்கு அழைத்து வந்துள்ளேன். இவன் கிழித்தெறிந்த ஓலையும் நகல் ஓலையே ஆகும். என்னிடம் இவன் பாட்டனார் எழுதிக்கொடுத்த மூல ஓலை பத்திரமாக இருக்கின்றது. எமது வழக்கை நன்முறையில் சீர்தூக்கி இந்த ஏழை முதிய அந்தணருக்கு சரியான தீர்ப்பை வழங்குங்கள் என்று கூறினார் முதியவர்.

முதியவரின் வழக்கை கேட்டதும் அவையிலிருந்த அனைவரும் நகைக்க துவங்கினார்கள். முதியவரே யாது உரைத்தீர்கள்? அந்தணர் எவருக்காவது அடிமையாக முயலுமா? இவ்வுலகில் வழக்கம் இல்லாத ஒன்றை வழக்காக தொடுத்து அதற்கு தீர்ப்பு வேண்டுமென்று வாதாடுகிறீர்களே? இது என்ன புதுமையான வழக்காக இருக்கின்றதே? என்று அவையோர் இருந்தவர்கள் அனைவரும் கூறத் தொடங்கினார்கள்.

அவையில் இருப்பவர்கள் அனைவரும் நகைத்துக் கொண்டே உரைத்ததை கேட்ட முதியவர் சினம் கொண்டவாறு இவன் கிழித்து எறிந்த ஓலையானது இன்றோ, நேற்றோ எழுதப்பட்டதல்ல... பல வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டு அவை பாதுகாக்கப்பட்டவை. இவனுடைய பாட்டனாருக்கும், எனக்கும் ஏற்பட்ட ஒரு உடன்பாட்டின் அடிப்படையிலேயே இந்த அடிமை ஓலையானது எனக்கு எழுதி கொடுக்கப்பட்டது.

அப்படி இருக்கும் வகையில் நீங்கள் அனைவரும் என்னுடைய வழக்கை அர்த்தமற்ற வழக்கு என்று உரைத்து கேலி பேசுவது முறையானது அல்ல. எனது வழக்கை விசாரித்து தகுந்த நியாயத்தை எமக்கு அளியுங்கள். இவ்வாறு தள்ளாடும் வயதில் கம்பீரமான வார்த்தைகளால் அனைவரின் முன்னிலையிலும் எடுத்துரைத்தார் முதியவர். பின்பு அவையில் இருப்பவர்களும் முதியவரின் வழக்கிலுள்ள கருத்தினை ஏற்றுக் கொண்டு அவரிடம் ஆறுதல் மொழிகளை உரைத்த வண்ணம் இப்பொழுதுதானே வழக்கு தொடுத்து உள்ளீர்கள். சம்பந்தப்பட்ட அனைவரிடமும் கேள்விகளை கேட்டு நாங்கள் முடிவு சொல்லும் வரை பொறுமையுடன் காத்திருங்கள் என்று கூறினார்கள்.

பின்பு அவையிலிருந்த பெரியோர்கள் அனைவரும் நம்பியாரூரரை நோக்கி உனது பாட்டனார் எழுதி கொடுத்ததாக சொல்லப்பட்ட ஒரு ஓலையை அனைவரின் முன்னிலையிலும் சரிபார்த்து உணராத வகையில் கிழித்து எறிந்தது உமது பிழையாகும். மேலும், முதியவர் உன் மீது தம்முடைய வழக்கையும் இங்கு பதிவு செய்து உள்ளார். இவர் உங்களை தன்னுடைய அடிமை என்றும் தன்னுடைய வழக்கை இங்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை பற்றி நீர் என்ன எண்ணுகிறீர்கள்? என்பதை கூறுங்கள் என்று கேட்டனர்.

முதியவரும் இவ்வுலகில் நடக்காத ஒரு செயலை நடந்தது என்று ஏதோ மாயம் செய்தது போல அனைவரின் முன்னிலையிலும் உரைத்துக் கொண்டே இருக்கின்றார். அவையில் இருக்கும் தாங்களோ பல வழக்குகளை சந்தித்து அவைகளுக்கு தீர்ப்பு கூறி இருப்பீர்கள். இவ்வாறு இருக்கும் தங்களுக்கு இந்த வழக்கு விளங்காத ஒரு புதிராக இருக்கின்றது என்று உரைக்கின்றீர்கள். இவ்வாறு அனைவரும் குழப்பமான சூழ்நிலையில் இருக்கும் பட்சத்தில் யான் யாது உரைக்க இயலும்? குற்றம் சாட்டப்பட்ட என்னால் என்ன செய்ய, சொல்ல இயலும்? என்று தன்னுடைய மனதில் எண்ணிய எண்ணத்தை யாவர் மனமும் நோகாத வண்ணம் எடுத்துரைத்தார் ஆரூரர்.

பல வழக்குகளுக்கும் தீர்ப்பளித்து, பல நூல்களையும் கற்று உணர்ந்த பெரியோர்கள் நம்பியாரூரர் ஆதிசைவர் ஒருபோதும் தன்னிலை தவறாமல் நடந்து கொள்ளக்கூடியவர் என்பதை நன்கு அறிந்து இருந்தனர். அவை யாவற்றையும் எண்ணிப்பார்த்து முதியவரே...! நம்பியாரூரர் மீது நீர் தொடுத்துள்ள வழக்கு என்பது மிகவும் கொடுமையானது. மேலும் இவர்தான் அடிமை என்று உங்களிடம் நிரூபித்து காட்டுவதற்கு வேறு ஏதேனும் ஆதாரங்கள் இருக்கின்றனவா? என்று அனைவரும் ஒருமித்துக் கூறினார்கள்.

அவையிலிருந்த அனைவரும் இவ்விதம் கூறியதை கேட்டதும் மகிழ்ச்சி கொண்ட முதிய அந்தணர் அவர்களை நோக்கி நம்பியாரூரர் முன்னரே கிழித்தெறிந்த ஓலை நகல் ஓலை ஆகும். இவன் ஏதாவது இந்த மாதிரி வேலையை செய்தாலும் செய்துவிடுவான் என்று எண்ணிதான் நான் மூல ஓலையை மிகவும் பத்திரமாக எடுத்து வைத்துள்ளேன் என்று கூறினார். அப்படி மூல ஓலை பத்திரமாக இருக்கும் பட்சத்தில் அதை எடுத்து வந்து அனைவரின் முன்னிலையிலும் காட்டுவீர்களாக என்று அவையோர் கூறினார்கள்.

முதிய அந்தணர் சற்று அச்சம் கொண்ட வகையில் இவன் மூல ஓலையையும் கிழித்து எறிந்துவிட்டால், இவன்தான் என்னுடைய அடிமை என்று உறுதி செய்வதற்கு வேறு ஆதாரம் என்னிடம் இல்லையே... இப்போது நான் என்ன செய்வேன்? என்று அவையோர் முன்னிலையில் கூறினார். அவையிலிருந்த பெரியோர்களோ, முன்னர் நடந்தது போன்ற நிகழ்வானது நிகழாமல் நாங்கள் அனைவரும் பார்த்துக் கொள்கின்றோம். நீங்கள் எதற்கும் கவலை கொள்ளாமல் அனைவரின் முன்னிலையிலும் மூல ஓலையை காட்டலாம் என்று கூறினர்.

முதியவர் கோலத்தில் இருந்த எம்பெருமான் ஆரூரரை கண்டு அச்சம் கொள்வது போல் பாவனை செய்து கொண்டே தன்னிடம் இருக்கும் மூல ஓலையை எடுத்து வந்து அவர்களிடம் கொடுத்தார். அவையிலிருந்த பெரியோர்களின் ஆணைப்படி முதியவர் கொடுத்த ஓலையை கணக்கன் வாங்கி அதில் எழுதப்பட்டிருந்த செய்திகளை அனைவரும் கேட்கும் விதத்தில் உரக்கமாகப் படித்தார்.

கணக்கன், முதியவர் கொடுத்த மூல ஓலையில் திருநாவலூரில் வாழும் ஆதி சைவராகிய ஆரூரன் என்னும் பெயரையுடைய நான் திருவெண்ணை நல்லூரில் வாழும் பித்தனுக்கு இந்த ஓலையை எழுதிக் கொடுக்கின்றேன். அதாவது, நானும் என் வழியில் வரும் மரபினரும் வழிவழியாக இவருக்காக அடிமை தொழில் செய்து வருவோம் என்பதை உள்ளமும் ஒருமைப்பட்டு தெளிவுடன் எழுதி கொடுக்கின்றேன். இது என்னுடைய கையெழுத்து ஆகும் என்று எழுதி இருந்ததாக வாசித்தார். 

அவர் படித்து முடித்த உடனே அவையிலிருந்த அனைவரும் அந்த ஓலையை வாங்கி பார்த்தனர். அப்பொழுது அதில் சாட்சி கையெழுத்தாக இருப்பவர்களையும் கூப்பிட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதை பார்த்த அவர்களும் இது என்னுடைய கையெழுத்துதான் என்பதை ஒப்புக்கொண்டனர். மேலும் இது பாட்டனாரின் கையெழுத்து என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அவர் எழுதிய ஏதாவது பழமையான ஓலைகள் உள்ளதா? என்று விசாரணை நடத்தி அவ்விதம் இருக்கும் பட்சத்தில் அந்த ஓலைகளை எடுத்து இரு கையெழுத்துக்களும் சரிபார்க்கப்பட்டன. அவையிலிருந்த அனைவருக்கும் அது ஒரு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. 

ஏனெனில் அவர் பாட்டனார் எழுதிய ஓலைகளில் உள்ள கையெழுத்தும், அடிமை ஓலைகளில் எழுதப்பட்டுள்ள கையெழுத்தும் ஒரே மாதிரியாக இருந்தது. இனியும் வேறு ஏதும் சொல்ல முடியாத அவர்கள் அந்தணருக்கு தீர்ப்பு வழங்க ஆயத்தமாயினர். சாட்சிகளின் அடிப்படையில் வழக்கை விசாரித்த பட்சத்தில் முதியவரின் பக்கமே நியாயம் இருக்கின்றது. ஆகையால் ஆரூரர் முதியவருக்கு அடிமையாக இருந்து பணி செய்வதுதான் உசிதமாகும் என்று தீர்ப்பை வழங்கினார்கள்.

ஆரூரருக்கு இங்கு என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது? என்பது புரியவில்லை. ஆயினும் அவையிலிருந்த பெரியோர்களின் தீர்ப்பிற்கு தலை வணங்கி அந்தணருக்கு அடிமையாகி இருப்பதுதான் தமது கடமை ஆகும் என்பதை உணர்ந்தார். அவையிலிருந்த பெரியவர்கள் முதியவரை நோக்கி ஐயனே...!! நீர் கொடுத்த மூல ஓலையில் நீர் வாழ்ந்து கொண்டிருப்பது வெண்ணை நல்லூர் என்று குறிப்பிட்டு இருக்கின்றீர்களே... ஆனால், நாங்கள் யாவரும் உங்களை இவ்விடத்தில் பார்த்ததே இல்லையே? இவ்வூரில் உங்களின் இருப்பிடம் எங்கே இருக்கின்றது? என்பதை எங்களுக்கு காட்டுவீராக... என்று கேட்டார்கள்.

முதியவர் கோலத்தில் இருந்த எம்பெருமான் அவையோர்களின் வேண்டுகோளுக்கிணங்க அதற்கென்ன இதோ என்னுடன் வாருங்கள்... நான் குடியிருக்கும் வீட்டை காட்டுகின்றேன் என்று கூறி அவர்கள் அனைவரையும் தாம் இருக்கும் இடமான அதாவது, அவ்வூரில் இருக்கின்ற திருவட்டுறை என்கின்ற திருக்கோவிலை நோக்கி புறப்பட்டு கொண்டிருந்தார். ஆரூரர் உட்பட அனைவரும் முதியவரை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர்.

முதியவரும் ஒரு வழியாக கோவிலை அடைந்த பின்பு அக்கோவிலில் புகுந்த முதியவர் யாவரும் காணாத வண்ணத்தில் மாயமாக மறைந்தார். ஆருரரும் அவர் பின் வந்த அவையை சேர்ந்த பெரியவர்களும் நெடுநேரமாக அந்த கோவிலில் காத்துக்கொண்டிருந்தனர். கோவிலிற்குள் சென்றவர் வெளியே வரவில்லை என்று அனைவரும் உள்ளே சென்று அவரை தேடினார்கள். ஆனால் முதிய அந்தணர் அவ்விடத்தில் இல்லாததைக் கண்டு இனியும் காத்திருத்தல் ஆகாது என்று எண்ணி ஒருவர் பின் ஒருவராக அவர்களின் இல்லங்களை நோக்கி புறப்பட்டு கொண்டு இருந்தனர்.

ஆனால் ஆரூரர் மட்டும் திருத்தலத்தின் வாயிலிலே நின்றுகொண்டு பெரியவரின் வருகைக்காக எதிர்பார்த்து காத்திருந்தார். தன்னுடன் வந்த அனைவரும் சென்ற பின்பு இவ்விடத்தில் எவருமில்லை உள்ளே சென்ற முதியவர் இன்னும் திரும்பாதது ஏன்? அவருக்கு ஏதாவது ஆயிற்றா? என்றவாறு சிந்திக்கத் துவங்கினார்கள். ஆரூரர் மட்டும் தனியே முதிய அந்தணரைத்தேடி கோவிலுக்குள் நுழைந்தார். கோவிலில் பல இடங்களில் தேடியும் முதிய அந்தணர் காணாமல் திகைத்து நின்று கொண்டிருந்தார். அவருடைய வழிகளிலிருந்து கண்ணீரானது மல்க துவங்கியது.

நிகழ்ந்த யாவற்றையும் எண்ணிப்பார்த்து நடைபெற்று கொண்டிருப்பதற்கான காரணத்தையும், அதற்கான காரணகர்த்தா யார்? என்பதையும் அவர் புரிந்து கொண்டார். இதுவரை நம்மிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்திருந்தது, நான் தினமும் வணங்கும் எம்பெருமானே என்பதை உணர்ந்து கொண்டார் ஆரூரர். தன்னை ஆட்கொள்ள இங்கு இவ்விதமான செயல்தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது என்பதை புரிந்து கொண்டு ஐயனே...!! தங்களை அறியாமல் ஏதேதோ பிதற்றி விட்டேனே...!! இந்த அடியேனை மன்னிப்பீரோ... என்று உள்ளத்தில் எம்பெருமானை எண்ணி விழிகளில் அவரைக் காணும் வண்ணம் கோவிலில் வலம் வந்து கொண்டிருந்தார். கோவிலுக்குள் பல இடங்களிலும் தேடியும் தேவர்களுக்கு தேவரான... மகாதேவரானா.. எம்பெருமானை காண முடியவில்லையே என்று மனதளவில் சோர்ந்து போனார் ஆரூரர்.

ஆரூரர் எம்பெருமானை காண முடியவில்லையே என்று மனதளவில் சோர்ந்து போன தருவாயில், ஒரு பிரகாசமான பேரொளியானது அவ்விடத்தில் தோன்றியது. அந்த ஒளியில் ஆனந்த கூத்தராக அருள்புரிபவரான எம்பெருமான் உமையவளுடன் விடையின்மீது காட்சியளித்தார்.

அக்கணத்தில் ஆலயத்தில் இருந்த மணிகள் மங்கள ஓசை எழுப்ப...

விண்ணுலகில் இருக்கும் தேவாதி தேவர்களும்... 

மண்ணுலகில் காட்சிதரும் எம்பெருமானுக்கு மலர் மாரி பொழிந்தனர்...

தேவகணங்கள் இசை முழக்கம் செய்தனர்...

இக்காட்சியைக் கண்ட ஆரூரருக்கோ எல்லையில்லாத மகிழ்ச்சி ஏற்பட்டது. தனது பிறவியின் நோக்கம் யாது? என்று அறிந்தோம் என்பதையும் புரிந்து கொண்ட ஆரூரர் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார். எம்பெருமானின் திருவடிகளில் விழுந்து ஆசியு பெற்று கொண்டிருந்த தருணத்தில், எம்பெருமான் திருவாய் மலர்ந்தருளினார். அதாவது, ஆறுகளை நோக்கி முற்பிறவியில் என்னுடைய பக்தர்களின் ஒருவராக சிறந்து விளங்கிய நீர் ஒரு சமயத்தில் மாதர் மீது ஈர்ப்பு கொண்டதன் விளைவாக இப்பிறவியை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியது. மீண்டும் ஒரு பிறவி உன்னை சூடாமல் இருக்கவே யாம் உன்னை ஆட்கொள்ள இவ்விடத்திற்கு வருகை தந்து இருந்தோம் என்று கூறினார். 

எம்பெருமானின் கூற்றுகளை கேட்டதும் மலரில் இருக்கும் தேனினை அளவுக்கதிகமாக உண்ட வண்டினை போல மட்டற்ற மகிழ்ச்சியான நிலையில் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தார் ஆரூரர். மேலும், எம்பெருமான் என்னிடம் நீ வாதம் புரியும்போது வன்மையாக பேசியதால் நான் உமக்கு 'வன்றொண்டான்" என்ற திருநாமத்தை சூட்டுகிறோம். இன்று முதல் அனைவராலும் வன்றொண்டான் என்றும் அழைக்கப்படுவாய் என்று கூறினார். மேலும், எழில்மிகு மொழியான தமிழ் மொழியால் இயற்றப்பட்ட, அழகு நிறைந்த தமிழ்பாக்களால் எம்மை அர்ச்சனை செய்வாயாக... என்ற அன்பு கட்டளையும் விடுத்தார்.

என் உள்ளத்தில் முழுவதுமாக நிறைந்து இருக்கும் எம்பெருமானே...! தங்களின் திருவிளையாடல்களை புரிந்து கொள்ள முடியாமல் எம்முடன் வழக்கில் ஈடுபட்டு எம்மை வென்று ஆட்கொண்ட எம்பெருமானே...! அடியேன் செய்த சிறு பிழையையும் மன்னித்து பொறுத்தருள வேண்டும் என்று கூறினார். மேலும், உங்களின் கருணையை

என்னவென்று நான் பாடுவேன்?

எவ்விதத்தில் தொடங்குவேன்?

யாது செய்வேன்?

யாது புரிவேன்?

என்று உருகி எம்பெருமானிடம் தனது எண்ணத்தை விண்ணப்பித்து நின்று கொண்டிருந்தார்.

புன்னகை பூத்த முகத்துடன் காண்போரை வசீகரிக்கும் சர்வமும் தன்னுள் கொண்டிருக்கும் எம்பெருமான் ஆரூரரை நோக்கி யாம் உம்மை ஆட்கொண்டபோது எம்மை நீர் 'பித்தா" என்று அழைத்தாய். ஆதலால் பித்தா என்று அடி எடுத்து எம்மைப் பாடுவாயாக என்று திருவாய் மலர்ந்து அருளினார். ஆரூரர் எம்பெருமானை மனதில் எண்ணி 'பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா" என்று அடியெடுத்து பிறவிப் பெருங்கடலில் மீண்டும் அகப்படாமல் தன்னை தடுத்து ஆட்கொண்ட எம்பிரானின் மீது திருப்பதிகம் பாடத் தொடங்கினார். வன்றெண்டான் பாடிய இசைத் தமிழில் மனம் மகிழ்ந்த எம்பெருமான் அவருக்கு திருவருள் புரிந்து அவ்விடத்திலிருந்து மறைந்தருளினார்.

எம்பெருமான் அருளிய திருவருளினால் மனம் மகிழ்ந்த ஆரூரர் மீண்டும் திருநாவலூர் சென்று அங்கு எழுந்தருளி இருக்கும் எம்பெருமானின் மீது திருப்பதிகங்களைப் பாடினார். எம்பெருமான் ஆரூரரை தடுத்து பிறவி பெருங்கடலில் மீண்டும் ஆட்படாமல் ஆட்கொண்டதால் அவரையே திருமணம் செய்து கொண்டு மகிழ்வான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்த சடங்கவியாருடைய திருமகளும் ஆரூரரின் நினைவாலேயே சில காலத்திற்கு பின் யாவருக்கும் எளிதில் கிட்டாத சிவலோக பதவியான பிறவா பெரும் வாழ்க்கையை அடைந்தார்.

திருநாவலூர் கோவிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை வழிபட்டு அவர் மீது திருப்பதிகங்களை பாடிய பின்பே பரமன் குடியிருக்கும் ஒவ்வொரு தலங்களுக்கும் சென்று அவர் மீது பாடல்களையும், திருப்பதிகங்களையும் பைந்தமிழால் பாட வேண்டும் என்று எண்ணினார். அவ்வாறு எண்ணிக்கொண்டிருந்த ஒரு நாளில் அவ்விடத்தில் இருந்து புறப்பட்டு திருநாவலூர் அருகிலுள்ள துறையூருக்கு வந்திருந்தார். துறையூரில் இருக்கும் பிறை முடி நாதரை அழகிய பைந்தமிழர்களால் அவர் புகழைப் பாடி வழிபட்டார். அவர் பாடிய பாடல்களில் மனம் மகிழ்ந்த எம்பெருமான் அவருக்கு அருள்புரிந்தார்.

பின்னர் அவ்விடத்தில் இருந்து புறப்பட்டு சிதம்பரத்தில் ஆடல் புரிந்து கொண்டு இருக்கின்ற தில்லை நகரை அடைந்து வழிபட எண்ணி பெண்ணை ஆற்றை கடந்தார். அந்த நேரத்தில் ஆதவனும் மறையும் தருவாயில் இருந்தமையால் பெண்ணை நதிக்கு அருகில் உள்ள திருவதிகை என்னும் தலத்தினை அடைந்தார் சுந்தரர். இத்திருத்தலம் நாவுக்கரசர் உளவார பணிகளால் எம்பெருமானுக்கு பல தொண்டுகள் புரிந்த புண்ணிய தலமாகும் என்பதை உணர்ந்தார்.

திருநாவுக்கரசர் உளவார பணிகளால் எம்பெருமானுக்கு பல தொண்டுகள் புரிந்த புண்ணிய தலமாகும் என்பதை உணர்ந்த சுந்தரர் இவ்விடத்தில் யான் கால் மிதிக்க அஞ்சுகிறேன் என்று மனதில் எண்ணினார். மேலும், திருத்தலத்தின் உள்ளே செல்லாமல் அருகிலிருந்த சித்தவடம் என்னும் இடத்திற்கு சென்று அவ்விடத்தில் தங்கினார். பயணம் மேற்கொண்ட களைப்பினால் திருவதிகை வீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் திருவடிகளை மனதில் எண்ணிய வண்ணம் நித்திரை செய்து கொண்டிருந்தார்.

இவர் நித்திரை செய்து கொண்டிருந்த காலத்தில் திருவதிகை பெருமான் முதிய வேதியர் வடிவம் கொண்டு எவரும் அறியாமல் இருக்கும் வண்ணம் சுந்தரர் துயில் கொண்டிருக்கும் இடத்தினுள் எழுந்தருளினார். சுந்தரர் தலையின் மீது தன்னுடைய திருவடி படுமாறு வைத்துக்கொண்டு, தாமும் படுத்துக்கொண்டு இருப்பது போல் காட்சியளித்தார். சிறிது நேரத்தில் தமது தலையின் மீது யாருடைய பாதங்களோ இருக்கின்றது என்பதை உணர்ந்தார்.

பின் சுந்தரர் துயிலிலிருந்து விழித்தெழுந்து பார்த்தபொழுது தம்முடைய சிரசின் அருகில் இரு பாதங்கள் இருக்க கண்டார். உடனே தம்முடைய தலையை உயர்த்தி பார்க்க அவ்விடத்தில் எவரோ படுத்துக்கொண்டு இருப்பதை அறிந்து அவரை நோக்கி ஐயா...! உங்களுடைய பாதங்கள் என் தலை மீது படும்படியாக வைத்து படுத்துக் கொண்டு இருப்பது ஏனோ? என்று வினவினார்.

இவர் கேள்வி கேட்ட பொழுதுதான் தூக்கத்திலிருந்து எழுந்தது போல விழித்தெழுந்த அப்பெரியவர் முதுமையினால் ஏற்பட்ட சிறு பிழையை பொறுத்தருள வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொண்டார். சுந்தரரும் அவர் கூறியதில் இருக்கக்கூடிய உண்மை பொருளை உணர்ந்து அமைதி கொண்டு வேறு இடத்திற்கு சென்று படுத்து உறங்க முயன்றார். முதியவர் மீண்டும் திருவடிகளை வேண்டுமென்றே சுந்தரரின் சிரசின் மீது இருக்கும்படி படுத்துக் கொண்டிருந்தார்.

சுந்தரர், சிறிது நேரத்திற்கு பின்பு தூக்கத்தில் தன்னுடைய சிரசின் அருகில் இரு பாதங்கள் இருப்பதை உணர்ந்ததும் மீண்டும் கண்விழித்து பார்த்தார். அப்பொழுதும் அதே பெரியவர் மீண்டும் தனது அருகில் படுத்திருப்பதை கண்டார். மேலும், பெரியவர் எதை மனதில் கொண்டு இவ்விதமாக செய்து கொண்டிருக்கின்றார்? என்று மனதில் எண்ணிய வண்ணம் அவரை நோக்கி, தாங்கள் யார்? என்று வினவினார்.

முதியவர் கோலத்தில் இருந்த எம்பெருமானும் நான் யார்? என்று நீ இன்னும் அறியவில்லையா? என்று கூறிய வண்ணம் அவ்விடத்திலிருந்து மாயமாக மறைந்தார். எம்பெருமான் அவ்விடத்திலிருந்து மறைந்ததும் ஐயனே...!!

உமது திருவிளையாடலை நான் புரிந்து கொள்ளாமல் போனேனே...

உமது திருப்பாதங்கள் என் சிரசின் மீது பட நான் என்ன தவம் செய்தேனோ? என்று புரியவில்லையே...

என உரைத்த வண்ணம் தன்னுடைய அறியாமையை எண்ணி 'தம்மானை அறியாத சாதியார்" என்று தொடங்கும் திருப்பதிகத்தை பாடினார்.

எம்பெருமானின் மீது திருப்பதிகம் பாடி முடித்ததும் தனக்கு காட்சி அளித்த எம்பெருமானை காண முடியவில்லையே... என்ற மனவேதனையுடன் துயில் கொண்டிருந்தார். மறுநாள் ஆதவன் உதிக்கையில் அவ்விடத்தில் இருந்து எழுந்து தில்லை நகருக்கு புறப்படுவதற்கான தனது பயணத்தை மேற்கொள்ளத் துவங்கினார். தில்லையின் எல்லையை அடைந்ததும் அவ்விடத்தில் இருந்து கோபுர காட்சியைக் கண்டு நிலமதில் வீழ்ந்து... வணங்கி... கொண்டிருந்த வேளையில் தில்லையில் வாழ்ந்து வந்த அந்தணர்கள் சுந்தரரின் வருகைக்கு முன்னரே எம்பெருமானின் திருவருளால் சுந்தரரின் வருகையை அறிந்திருந்தமையால் அவரை மிகுந்த சிறப்போடும், மகிழ்ச்சியோடும் தில்லைக்கு அழைத்து வந்தனர்.

தில்லையில் ஆடல் காட்சியுடன் காட்சி தரும் பொன்னம்பலத்தை கூப்பிய கரங்களுடன் பலமுறை வலம் வந்து அவரை வணங்கி கொண்டிருந்தார். அவ்விடத்தில் பொன்னம்பலத்தை மட்டுமே மனதில் எண்ணிய வண்ணம் சித்தம் ஒடுங்கி கண்களிலே இதுவரை எவ்விடத்திலும் காணாத ஒரு காட்சியை கண்டார். இக்காட்சியை கண்டதும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். மனமும், உடலும் ஒன்றிணைந்து தில்லை அம்பலத்தரசரின் ஆனந்த தாண்டவத்தில் முழுவதும் ஆழ்ந்து மூழ்கி இருந்தார்.

எம்பெருமானின் மீது கொண்ட பக்தியின் வெள்ளத்தில் பல கரைகளை உடைத்தெறியும் வண்ணம் பல பதிகங்களை அவ்விடத்தில் எம்பெருமானின் மீது பாடி மகிழ்ந்து கொண்டிருந்தார் சுந்தரர். பதிகங்கள் பாடி முடித்து ஆனந்த நிலையில் இருந்த நிலையில் அவருக்கு மகிழ்ச்சி கொள்ளும் வகையில் மற்றுமொரு செயலானது அவ்விடத்தில் நடைபெறத் துவங்கியது. அதாவது, சுந்தரர் பாடிய அமுதத்தமிழில் மனம் மகிழ்ந்த எம்பெருமான் வான்வீதி வழியாக சுந்தரா... எம்மை காண நீ ஆரூருக்கு வருவாயாக...!! என்று அசரீரி வழியாக அவர் தன் கருத்தினை உரைத்தார்.

எம்பெருமானின் இந்த விருப்பத்தை அறிந்த சுந்தரர் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார். எம்பெருமானின் ஆணையை சிரசின் மீது கொண்டு தில்லையை விட்டுச் செல்ல மனமில்லாமல் தில்லையின் எல்லையில் உள்ளம் உருக நின்று கொண்டிருந்தார். எம்பெருமானின் எண்ணங்களை மனதில் நின்ற வண்ணம் கொள்ளிட நதியைக் கடந்து புறப்பட்டார் சுந்தரர். 

சீர்காழியை அடைந்த சுந்தரர் திருஞான சம்பந்தர் அவதரித்த தலத்திற்கு செல்ல அச்சம் கொண்டு அவ்விடத்தின் எல்லையில் இருந்து எம்பெருமானை வணங்கி கொண்டிருந்தார். அப்பொழுது திருதோணியப்பர் உமையவளுடன் இடபத்தின் மேல் எழுந்தருளி ஆனந்த காட்சியளித்தார். அக்காட்சியை கண்ட சுந்தரர் தோணியப்பர் 'சாதலும் பிறத்தலுந் தவிர்த்து" என்ற பதிகம் ஒன்றை எடுத்து 'கழுமல வளநகர் கண்டு கொண்டேனே" என போற்றினார்.

அதைத்தொடர்ந்து திருக்கோலக்காவிற்கும், திருப்புன்கூரிற்கும் சென்று அவ்விடத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானின் மீது திருப்பதிகங்களைப் பாடினார். மேலும், காவிரி நதியை அடைந்து காவிரி மாயூரத்திற்கும், அம்பர் மாகாளத்திற்கும், திருப்புகலூரிற்கும் சென்று எம்பெருமானை தரிசனம் செய்து கொண்டு பின் திருவாரூரை அடைந்தார்.

எம்பெருமான் சுந்தரரின் வருகையை திருவாரூரில் இருக்கும் சிவனடியார்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கும் வண்ணம் அவர்களது கனவில் எழுந்தருளி என்னுடைய விருப்பத்திற்கு இணங்கி எம்மால் ஆட்கொள்ளப்பட்ட தொண்டரான சுந்தரர் இவ்விடத்திற்கு வருகை தந்து கொண்டுள்ளார். ஆகவே அவரை அனைவரும் மகிழ்வுடன் என்னிடம் அழைத்து வாருங்கள் என்று கூறினார்.

எம்பெருமான் ஒரு சிவனடியார் மட்டுமல்லாது அனைவரின் கனவிலும் தோன்றியதை கண்டு அனைவரும் சுந்தரர் எம்பெருமானின் பரிபூரண அருளையும் கொண்டுள்ளார் என்பதை உணர்ந்தனர். மேலும் அவரை வரவேற்பதற்காக மிகுந்த மகிழ்ச்சியுடன் திருவாரூர் நகரத்தை திருவிழா பூண்டது போல அலங்காரம் செய்திருந்தனர்.

வீதிகள் எங்கும் மாவிலைத் தோரணங்களும்,

வாழை மரங்களும் அழகோடு அமைக்கப்பட்ட பந்தல்களுடன்... 

அனைத்து இடங்களிலும் கோமிய நீரினால் சுத்தப்படுத்தி...

வீட்டு திண்ணைகள் மற்றும் பாதைகள் எங்கும் சந்தனக் குழம்பால் மொழுகி...

மாக்கோலமிட்டு...

ஆங்காங்கே பந்தல்கள்

அமைத்து இருந்தனர். பந்தலில் அழகிய முல்லை மலர்களால் தொடுக்கப்பட்ட அழகிய மாலைகள் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தன. இவற்றையெல்லாம் காணும்பொழுது திருவாரூர் நகரம் ஏதோ தேவலோகத்தில் இருப்பது போல காட்சியளிக்க துவங்கியது.

அதாவது, இனிய மங்கள ஓசையுடன்...

பூரண பொற்கும்ப கலசத்தை கரங்களில் ஏந்திய வண்ணம்...

அன்பர்கள்... அடியார்கள் புடைசூழ...

திருக்கோவிலை நோக்கி வந்து கொண்டிருந்த சுந்தரர், திருக்கோவில் அடையும் வழி எங்கும் தன்னுடன் வந்திருப்பவர்களை நோக்கி 'கரையுங் கடலும்" என்றெடுத்து 'எந்தையிருப்பது மாரூரவ ரெம்மையு மாள்வரோ கேளீர்" என்ற பதிகத்தை பாடிக்கொண்டு திருக்கோவிலுக்குள் நுழைந்தார்.

திருக்கோவிலினுள் நுழைந்தவுடனே திருவாயிலை வணங்கி எழுந்து சென்று தேவாசிரிய மண்டபத்தை வணங்கி எம்பெருமானை மனதில் எண்ணி மெய்யும், உயிரும் உருகி விழிகளில் நீர் பெருக நின்றார். மேலும், எம்பெருமானின் மீது ஆறாத காதல் கொண்டு பல பதிகங்களை பக்தி பெருக்கினால் சிரம்மீது கரம் குவித்து பாடினார். அதன்பின் பிரபஞ்சத்தின் பரம்பொருளாக இருக்கக்கூடிய எம்பெருமானின் பாதக்கமலங்களில் விழுந்து வணங்கினார்.

பிரபஞ்சத்தின் பரம்பொருளாக இருக்கக்கூடிய எம்பெருமானின் பாதக்கமலங்களில் விழுந்து வணங்கிய சுந்தரர் எம்பெருமானுடைய திருவடிகளிலேயே தம்மையும், இவ்வுலகையும் மறந்து ஆனந்த பெருங்கடலான திருப்பாற்கடலில் மூழ்கினார். அப்பொழுது திருவாரூர் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் தியாகராஜப் பெருமானின் அருளால் வான்வீதி வழியாக அசரீரியானது உருவாகியது. அந்த அசரீரியானது சுந்தரரே... 

யாம் உமக்கு தோழர் ஆகிவிட்டோம்...

அன்று நீர் மணக்கோலத்தில் திருநாவலூரில் இருந்தபொழுது உன்னை தடுத்தாட் கொண்டோம்...

ஆனால் இனிவரும் காலங்களில் முன்புபோல மணக்கோலம் கொண்டு...

இந்த பூமியில் மகிழ்வுடன் என்றென்றும் வாழ்வாயாக...

என்று அசரீரி வாக்கின் மூலம் உணர்த்தினார்.

அசரீரியின் வாக்குகளைக் கேட்டதும் சுந்தரமூர்த்தியாரோ தியாகராஜப் பெருமானை மனதில் எண்ணி, வணங்கி அடியேனைத் தடுத்து ஆட்கொண்டு அருளிய கருணாநிதியே... உமது பெரும் கருணையை எப்படி பாடி புகழ்வேன்?... என்று பலவாறு இறைவனை துதித்து வணங்கினார். பின்பு தியாகேசர் சன்னிதியை அடைந்து வணங்கி துதித்த வண்ணம் திருக்கோவிலை வலம் வந்தார்.

எம்பெருமான் தோழராக ஏற்றுக்கொள்ளப்பட்ட சுந்தரர் அன்றுமுதல் 'தம்பிரான் தோழர்" என்ற திருநாமத்துடன் அனைவராலும் அழைக்கப்பட்டார். சுந்தரமூர்த்தி நாயனார் சிலகாலம் திருவாரூரில் தங்கியிருந்து தியாகேசப் பெருமானை பைந்தமிழ் மொழியான இனிய செம்மொழியில் பலவாறாக தேனினும் இனிய அமிர்தம் போன்ற தமிழ் பாக்களால் பாமாலை சாற்றி வணங்கினார்.

எம்பெருமானின் அருளால் சுந்தரரின் திருமணமும், முன்ஜென்ம தொடர்ச்சியும் இவ்விடத்தில் இருந்து ஆரம்பிக்க துவங்கியது. கயிலாய மலையில் வீற்றிருக்கும் எம்பெருமானின் துணைவியான பார்வதி அன்னையின் சேடியர் இருவரில் ஒருத்திதான் கமலினி என்பவர். இவர் திருவாரூரில் உருத்திர கணிகையர் மரபில் பரவையார் என்னும் பெயருடன் பிறந்து வளர்ந்து கொண்டிருந்தார். பரவையார் சிறுவயது முதலே சிவனிடத்திலும், அவர் தம் அடியார்களிடத்திலும் எல்லையில்லா பக்தி கொண்டிருந்தாள்.

காலம் வளரவளர பரவையாரும் வளர்ந்து இளமைப்பருவம் அடைந்து தன்னவருக்காக காத்துக் கொண்டிருக்க அவரும் வருகை தந்திருந்தார். பரவையார் தினந்தோறும் காலையில் எழுந்து தூய நீராடி தியாகேசப் பெருமானை தரிசித்து வணங்கி வந்து கொண்டிருந்தார். எப்போதும் போல அன்றும் தனது சேடிகளுடன் திருக்கோவிலுக்கு சென்றிருந்தாள். அச்சமயத்தில் சுந்தரரும் அன்பர்கள் புடைசூழ எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் ஆலயத்தை நோக்கி வந்திருந்தார். 

கோவிலிற்கு வந்ததும் ஓரிடத்தில் சுந்தரரும், பரவையாரும் ஒருவரையொருவர் நேருக்கு நேராக பார்க்கின்ற சந்தர்ப்பமும், சூழலும் உருவாகியது.

சுந்தரர் பரவையாரின் எழில்மிகு தோற்றத்தில்...

தம்மையும் மறந்து...

இவ்வுடலை மறந்து...

இந்த உலகத்தையும் மறந்து... நின்று கொண்டிருந்தார்.

பரவையாரும் சுந்தரரின் சுந்தர ரூப லாவண்யத்தில் மெய்மறந்து ஒரு அழகிய சிலை போல நின்று கொண்டிருந்தாள். இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் சந்திக்க துவங்கின. 

விழிகள் இணைந்த பொழுதே உள்ளங்களும் இணைய துவங்கின. சுந்தரரின் அழகிய தோற்றத்தைக் கண்டதும்

இவர் என்ன முருகப்பெருமானோ? அல்லது மன்மதனோ?

அல்லது தான் என்றும் வணங்கும் அரணாரின் அருள் பெற்ற அடியாரோ?

இன்னதென்று புரியவில்லையே?

எந்த ஆடவரையும் கண்டு அவர்பால் செல்லாதே என் மனம்..

ஏனோ இவரைக் கண்டதும் இவர்பால் பணிந்து ஓடி செல்கின்றது?

என்னால் என் மனதையும் கட்டுப்படுத்த முடியவில்லையே...!

என்று பலவாறாக எண்ணி தவித்து கொண்டு தம்மையும் எண்ணி வியந்தாள். 

இருவருக்கும் இடையில் காதல் என்னும் அழகிய மலரானது பூக்க துவங்கியது. அதிக காலங்கள் அவ்விடத்தில் இருக்க இயலாத நிலையில் தன்னுடைய மனதை மட்டும் அவர்பால் தந்துவிட்டு, தன்னுடைய மெய்யை மட்டும் எடுத்துக்கொண்டு இல்லத்திற்கு புறப்பட்டாள் பரவையார். அவர் ஆலயத்தை விட்டு நீங்கியதும் அவருடைய தோற்றத்தை மனதளவில் எண்ணி உருகிக் கொண்டிருந்தார் சுந்தரர். தம்மை மயக்கிய பெண்மணி யார்? என்பதை தம் அருகில் இருந்தவர்களிடம் கேட்டார்.

சுந்தரரிடம் காலையில் நீங்கள் பார்த்திருந்த பெண்மணியின் பெயர் பரவையார் என்றும், அவருடைய இருப்பிடத்தை பற்றியும், பெற்றோர்களை பற்றியும் கூறத் தொடங்கினார்கள். தன்னை வசியம் செய்தாற்போன்று ஈர்த்து மயக்கிய பெண்ணை பற்றிய முழு விபரத்தையும் அறிந்து கொண்டார் சுந்தரர். 

எம்பெருமானின் எண்ணங்களால் நிரம்பி வழியும் உள்ளத்தில் காதல் என்னும் விதையை ஊன்ற... என் மனமோ பரவையார் நினைவுகளோடும், பரமன் நினைவோடும் வாடி வதங்கி கொண்டிருக்கின்றது என்றெல்லாம் எண்ணினார். இவ்வாறு எண்ணிய வண்ணம் எம்பெருமானை வணங்கி தேவாசிரிய மண்டபத்தை வந்தடைந்தார் சுந்தரர். காலம் கடந்ததும் தன் பணியை செவ்வனே நிறைவேற்றிய பகலவனும் தம் வீட்டை அடைய மேற்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். மேற்கில் அடைந்ததும் வெளிச்சம் குன்றி வானத்தில் இருளானது படரத் தொடங்கியது.

திங்களும் தன் பணியை சிரமேல் ஏற்று செய்திருக்க...

அழகிய தென்றல் காற்றும் வீச...

காமன் தொடுத்த கணையால் மிகுந்த வேதனைக்கு ஆட்பட்டார் சுந்தரர்.

அவருக்கு இந்த அழகிய சூழலாலும்,

பலவிதமான எண்ணங்களாலும் துன்பங்கள் ஏற்படத் தொடங்கின.

ஆனால் ஓர் எண்ணம் மட்டும் மகிழ்ச்சியை கொடுத்தது. அது பரவையாரின் எண்ணமாகும்.

பரவையாரும் சுந்தரரின் நினைவால் சூழ்ந்திருந்தாள். நிலவின் குளிர் மிகுந்த அழகிய பொன்னொளியில் அமைக்கப்பட்டிருந்த நவரத்தினங்களால் அழகு செய்யப்பட்ட அழகிய மலர் மஞ்சத்தில் தோழிகளுடன் அமர்ந்திருந்தார் பரவையார். தனது தோழியை பார்த்து தோழியரே...! இன்று காலையில் நாம் ஆலயத்திற்கு சென்றிருந்த பொழுது நாம் சந்தித்த அந்த சுந்தர அழகன் யார்? என்று ஒருவிதமான ஏக்கத்தோடு வினவினாள்.

அதற்கு அங்கிருந்த தோழிகளில் ஒருத்தி தலைவியே...! அவர்தான் தம்பிரான் தோழர் என்றும், அவர் எம்பெருமானின் திருவருளால் ஆட்கொள்ளப்பட்டவர் என்றும், எம்பெருமானுக்கு உற்ற அன்பு தொண்டர் மற்றும் தோழர் என்றும் கூறலாம் என்று விடையை அளித்தாள். தோழியர் மொழிந்ததைக் கேட்டதும் எம்பிரானின் உற்ற நண்பர் என்பதை அறிந்த பரவையார் சுந்தரரின் மீது ஆறா மையல் கொண்டாள். காதல் மேலிட பெருமூச்சு அவ்விடத்தில் வெளியிட்டார்.

மன்மதன் தொடுத்த மலர்க்கணையால் மனதளவில் வாடி மலர் படுக்கையில் மயங்கிய நிலையில் சுந்தரரின் நினைவுகளோடு விழுந்தாள் பரவையார்.

இரவில் உணவு உண்ணவில்லை,

உறக்கமும் கொள்ளவில்லை,

மலரின் வாசனைகளும் பிடிக்கவில்லை,

பஞ்சனையோ வெறுத்தது...

மனமோ வாடியது...

வருந்தினாள்...

காதல் என்னும் பெருங்கடலில் விழுந்து... அதில் கரையேற முடியாமல் மிகுந்த தவிப்புக்கு ஆளாகினாள்.

ஆலாலசுந்தரரையும், கமலினியும் இம்மண்ணுலகில் பிறக்க ஆணையிட்ட எம்பெருமான் அவர்களை இணைக்கும் பொருட்டு அதற்கான பொறுப்புகளையும், பணிகளையும் அவரே மேற்கொண்டார். அதாவது, அடியார் கனவுகளில் எழுந்தருளிய எம்பெருமான் சுந்தரருக்கும், பரவையாருக்கும் திருமணம் செய்து வைக்குமாறு ஆணையிட்டார்.

இறைவன் சுந்தரர் கனவில் எழுந்தருளி பரவையாரை உமக்கு மணமுடித்து வைக்குமாறு எமது அடியவர்களுக்கு ஆணை பிறப்பித்து உள்ளோம் என்று கூறிய வண்ணம் மறைந்தருளினார். பரவையார் கனவிலும் எம்பெருமான் எழுந்தருளி உம்மை தம்பிரான் தோழன் திருமணம் புரிந்து கொள்வான் என்று திருவாய் மலர்ந்து அருளி மறைந்தார். பொழுதும் முடிந்தது... திங்கள் மறைந்து ஆதவன் தோன்ற... எம்பெருமானை வழிபடும் அடியவர்கள் அனைவரும் திரளாக வந்து சுந்தரரை வணங்கினார்கள். அப்பொழுது அவர்கள் கனவில் எழுந்தருளிய எம்பெருமான் கூறிய ஆணையை அவரிடத்தில் கூறினார்கள்.

அடியவர்கள் கூறியதைக் கேட்டதும் சுந்தரர் அகமும், முகமும் கதிரவனைக் கண்ட சூரியகாந்தி போல மிகவும் பிரகாசமாக பூக்கத் தொடங்கியது. அதைப்போலவே அவர்கள் பரவையாரை சந்தித்து எம்பெருமானின் சித்தத்தை கூறினார்கள். பரவையாரும் மிகுந்த பரவசம் கொண்டாள். அடியவர்கள் அனைவரும் இவர்களின் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள துவங்கினார்கள். இனியதொரு சுபமுகூர்த்த நாளில் சுந்தரர் மற்றும் பரவையார் ஆகிய இருவரின் திருமணமானது அடியார்களின் முன்னிலையிலும்;, பெற்றோர்களின் ஆசிகளுடனும், பரம்பொருள் துணையோடும், வாழ்த்துக்களுடனும் நடந்தேறியது.

இல்லற தர்மப்படி சுந்தரர், பரவையார் இருவரும் இணைந்து இல்வாழ்க்கையில் ஈடுபட துவங்கினர். கணவன், மனைவியாக இருவரும் இணைந்து தங்கள் வீட்டிற்கு வரும் சிவனடியார்களுக்கு வேண்டிய உணவுகளையும், விருந்துகளையும், அவர்களுக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளையும் எவ்வித தவறுமின்றி, குறையுமின்றி நன்முறையில் செய்து வந்தனர்.

அடியவர்களுக்கு வேண்டிய பொருள் உதவியையும், அவர்கள் தேவையை நிறைவேற்றும் பொழுதும், தம்பதியர் இருவருக்கும் கிடைத்த மன மகிழ்ச்சி என்பது எல்லை இல்லாததாக இருந்தது. பரவையாரும், சுந்தரரும் கூடி வாழ்ந்து கொண்டிருந்த நாட்களில் சுந்தரர் மட்டும் ஒருநாள் கோவிலுக்கு தனியாக வந்திருந்தார். அப்பொழுது கோவிலில் உள்ள தேவாசிரிய மண்டபத்தில் அடியார்கள் பலர் கூடிநின்று கொண்டிருந்தனர். 

அடியார்களை வழிபடுவதற்குரிய தகுதியும், பக்தியும் இன்னும் தமக்கு ஏற்படவில்லையே என்று எண்ணியவாறு அவர்களை மனதில் எண்ணி போற்றினார். பின்பு இவர்களுக்கு எப்பொழுது நான் அடியேன் ஆகும் நாள் வருமோ? என்றவாறு எண்ணிய வண்ணம் அடியார்களை மனதில் எண்ணி வணங்கிய வண்ணம் பரம்பொருளான எம்பெருமானை வணங்குவதற்காக அடியார்களிடத்திலிருந்து ஒதுங்கி சென்று கொண்டிருந்தார்.

சுந்தரர் மனதில் எண்ணிய எண்ணம் எம்பெருமானின் அருளால் நிறைவேற தொடங்குவதற்கான காலகட்டங்களும் அவர் எண்ணத் தொடங்கிய காலக்கட்டத்தில் இருந்து நிகழத் தொடங்கியது. தேவாசிரிய மண்டபத்தில் கூடியிருந்த அடியார்கள் கூட்டத்தில் விரல் மிண்ட நாயனார் ஒருவர் இருந்தார். அவர் இவருடைய செயல்களை தவறாக எண்ணிக்கொண்டு சுந்தரருடைய நல்ல எண்ணத்தை உணர்ந்து கொள்ள இயலாமல் சுந்தரரின் மீது சினம் கொண்டார்.

அதாவது, அவர் செவிகளில் விழும் வண்ணம் முதலில் வணங்குவதற்கு உரிய அடியார்களை வணங்காமல் கோவிலுக்கு சென்று பரம்பொருளை வணங்கி என்ன பயன்? என்றும், இதையும் அறியாத வன்றொண்டன் அடியார்களுக்கு புறம்பானவன் என்றும், அவனைவிட அவனை வழியே சென்று ஆட்கொண்ட எம்பெருமான் அடியார்களுக்கு புறம்பானவன் என்றும் கடுமையாக அனைவரும் கேட்கும் வண்ணம் உரைத்து சொன்னார்.

விரல் மிண்ட நாயனார் கூறியதைக் கேட்டதும் அவர் மீது எவ்வித கோபமும் கொள்ளாமல் அவர் அடியாரிடத்தில் எவ்வளவு அன்பும், பக்தியும் கொண்டுள்ளார் என்பதையும், அவருடைய எண்ணத்தையும், செயல்பாடுகளையும் எண்ணி மனதில் பெருமை கொண்டார் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் கொண்ட அந்த எண்ணத்துடனேயே எம்பெருமான் வீற்றிருக்கும் மூலவர் தளத்தை சென்றடைந்தார். அங்கே சென்றதும் எம்பெருமானை வணங்கி,

பரம்பொருளே...

அடியார்களுக்கெல்லாம் அடியாராகும் பேரின்ப நிலையை...

எமக்குத் தந்தருள வேண்டுமென்று...

மனமுருகி எம்பெருமானிடம் வேண்டினார் சுந்தரர்.

யாரும் அறியா வண்ணம் அவருடைய எண்ணமானது செயல்படத் தொடங்கியது. அதாவது, காரணமின்றி காரியமில்லை என்பது போலவே அவரும் எம்பெருமானிடம் கேட்க... எம்பெருமானும் அவ்விடத்தில் எழுந்தருளினார். எம்பெருமானை கண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த சுந்தரர் அவரை வணங்கி தமது எண்ணத்தை வெளிப்படுத்திய வண்ணம் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது எம்பெருமான் சுந்தரரை நோக்கி, 

சுந்தரா...!

எம்மை வழிபடும் அடியார்களின் பெருமைகளையும்,

அவர்களுடைய திறமைகளையும் மொழிந்து அவர்களை பற்றிய அருமைமிக்க, எழில் மிகுந்த தமிழ் பாக்களால் பாடுவாயாக...

என்று திருவாய் மலர்ந்தருளினார்.

பரம்பொருளின் விருப்பத்தை அறிந்ததும் மகிழ்ச்சி கொண்டார் சுந்தரர். ஆயினும் மனதளவில் சிறிது அச்சமும் கொண்டிருந்தார். ஏனெனில் எம்பெருமானை வழிபடும் அடியார்களை பற்றி தனக்கு ஒன்றும் தெரியாதல்லவா? யான் எப்படி தங்களை வழிபடும் அடியார்களைப் பற்றி பாட இயலும்? மேலும் தங்களை வழிபட்டு கொண்டிருக்கும் திருத்தொண்டர்களை பற்றி பாடுவதற்கு இந்த எளியோனுக்கு எவ்வித தகுதியும் கிடையாது அல்லவா? என்று எண்ணினார். 

மேலும், அடியார்களுடைய வரலாறுகளையும், அவர்களுடைய பெருமையினையும், அவர்கள் கொண்ட பக்தியின் சிறப்பையும் சற்றும் அறியாதவனாகிய நான்... எவ்விதம் அவர்களைப்பற்றி விரிவாக திருப்பதிகத்தைப் பாட இயலும் ஐயனே?... ஆதலால், எமக்கு அவர்களின் பெருமைகளையும், புகழையும் இனிய செந்தமிழ் பாக்களால் பாடக்கூடிய திறனை அடியேனுக்கு தந்தருள வேண்டும் என்று எண்ணினார். இவ்வாறு எண்ணிய வண்ணம் பக்திப் பெருக்கோடு பரம்பொருளான எம்பெருமானிடம் இறைஞ்சி நின்று கொண்டிருந்தார் சுந்தரர்.

சுந்தரர் வேண்டிய அருளை பரம்பொருளான எம்பெருமான் அவருக்கு தந்தருளினார். பரம்பொருளான எம்பெருமான் அவ்விடத்திலிருந்து மறைந்து சென்றதும் சுந்தரர் தொண்டர்கள் நிறைந்து இருக்கக்கூடிய தேவாசிரிய மண்டபத்திற்கு சென்றார். தேவாசிரிய மண்டபத்தில் இருந்த தொண்டர்களை வணங்கினார். பின்பு எம்பெருமானின் திருவருளினால் தொண்டர்களின் சுயசரிதத்தை அனைவரும் அறிந்து கொள்ளும் விதத்தில் தொகுத்து, விரிவாகக் கூறும் வகையில் திருப்பதிகத்தை இனிய பைந்தமிழில்... எம்பெருமானுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இயற்றினார்.

அத்திருப்பதிகமே திருத்தொண்டத் தொகையாகும். இவ்விதமாக எம்பெருமானின் திருவருளினால் திருத்தொண்டத் தொகையை இயற்றி முடித்த சுந்தரர் பிறைசூடிய எம்பெருமானின் அருளால் பரவையாரோடு இணைந்து இனிய இல்லறத்துடன் வாழ்ந்து வந்தார்.

நாவலூரை அடுத்துள்ள குண்டையூர் என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானிடத்திலும், அடியார்களிடத்திலும் பேரன்பு கொண்டிருந்த குண்டையூர்க் கிழார் என்பவர் வாழ்ந்து வந்தார். 

இப்பெரியார் சுந்தரமூர்த்தி அடியார்களை பற்றி கேள்விப்பட்டதும் எம்பெருமானின் அருளை பரிபூரணமாக கிடைக்க பெற்றவர் சுந்தரமூர்த்தி நாயனார், என்பதை அறிந்ததும் அவர்களிடத்திலும் எல்லையில்லா அன்பும், பக்தியும் கொண்டு இருந்தார். குண்டையூர்க் கிழார் சுந்தரர் செய்துவரும் அரும் பணிகளுக்கும், அவர் அடியார்களுக்கு அளித்துவரும் ஆதரவிற்கும் மற்றும் அடியார்களுக்கு தேவையான உணவுக்கு தேவைப்படக்கூடிய பொருட்களான நெல், பருப்பு முதலிய பொருட்களையும் எந்நிலையிலும் தவறாமல் அளித்து வந்து கொண்டிருந்தார்.

அவர் மேற்கொண்டிருந்த பணிகளில் இடையூறு ஏற்படும் வண்ணமாக நாட்டில் மழை இல்லாமல் பயிர் விளைச்சலும், உற்பத்தியும் குறையத் தொடங்கின. இந்த தட்டுப்பாட்டினால் அவரால் எப்போதும் போல சுந்தரமூர்த்தி நாயனாருக்கு கொடுத்துக் கொண்டிருந்த உணவுப் பொருட்களை தகுந்த காலக்கட்டத்திற்குள் கொடுக்க முடியாமல் காலதாமதம் ஏற்பட தொடங்கியது. நாளடைவில் அதுவும் குறையத் தொடங்கியது.

குண்டையூர்க் கிழார் நிகழ்ந்தவற்றை எல்லாம் மனதில் எண்ணிய வண்ணம் எம்பெருமான் இடத்தில் தமது கருத்துக்களையும், எண்ணங்களையும் உரைத்த வண்ணம் மனம் சோர்வாக இருந்து வந்தார். அடியார்களிடத்தில் அன்பு கொண்டிருந்த எம்பெருமான் அவரது மனக்குறையை போக்கும் விதமாக கனவில் எழுந்தருளி... சுந்தரருக்கு நீர் கொடுக்க வேண்டியுள்ள நெல்மணிகளை மலை போல் பரவையார் திருமாளிகைக்கு அனுப்பி உள்ளோம் என்று கூறி மறைந்தார்.

குண்டையூர்க் கிழார் கனவில் எழுந்தருளி உரைத்த வண்ணம் நெல்மணிகளை மலைபோல் குண்டையூர் முழுவதும் நிரப்ப குபேரனுக்கு ஆணையைப் பிறப்பித்தார். குபேரனும் எம்பெருமானின் ஆணையை சிரமேற்கொண்டு குண்டையூர் முழுவதும் நெல்மணிகள் நிறைந்த மலைகளை நிரப்பி வைத்தார். இங்கு நிகழ்ந்த நிகழ்வுகளை கண்டு வியந்து போன குண்டையூர்க் கிழார் எம்பெருமானின் திருவருளையும், சுந்தரரின் அருள் வல்லமையையும் எண்ணி மனம் மகிழ்ந்தார். பின்பு இங்கிருக்கும் நெல்மணிகளை எவ்விதம் சுந்தரின் இல்லத்திற்கு அனுப்புவது? என்று திகைத்து நின்று கொண்டிருந்தார்.

பின்பு இங்கு நிகழ்ந்தவற்றை எல்லாம் சுந்தரரிடம் எடுத்துரைக்கும் பொருட்டு திருவாரூருக்கு புறப்பட்டார் குண்டையூர்க் கிழார். குண்டையூர்க் கிழாரின் மனதில் தோன்றிய அடுத்த பிரச்சனையான நெல்மணிகளை எவ்விதம் சுந்தரமூர்த்தியாரின் இல்லத்தில் சேர்ப்பதற்கும், எம்பெருமானே அருளும், வழியும் அமைத்துக் கொடுத்தார். அதாவது, சுந்தரமூர்த்தியார் கனவில் எழுந்தருளிய எம்பெருமான் சுந்தரரே...!! உமக்குக் குண்டையூர் கிழரால் தரவேண்டிய நெல்மணிகளை குண்டையூரில் மலை போல் குவித்து வைத்துள்ளோம் என்று கூறி மறைந்தார்.

கனவில் இருந்து விழித்தெழுந்த சுந்தரர், குண்டையூரில் எம்பெருமானாரால் வியக்கத்தகு செயல் ஒன்று நடைபெற்றுள்ளது என்பதை மட்டும் தெளிவாக அறிந்து கொண்டார். அதை காணும் பொருட்டு பொழுது விடிந்ததும் குண்டையூரை நோக்கி தனது பயணத்தை துவங்கினார். குண்டையூர் வரும் வழியில் சுந்தரமூர்த்தியாரும், குண்டையூர்க் கிழாரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டனர். ஒருவருக்கொருவர் ஆரத் தழுவிக் கொண்டு தங்களுக்குள் உரையாடி மகிழ்ந்தனர்.

குண்டையூர்க் கிழார் தேவரே... எவ்வித இடர்பாடுகளின்றி நீண்ட காலமாக அடியேன் செய்துவரும் திருத்தொண்டிற்கு இடையூறு ஏற்படும் வண்ணம் சில சூழல் ஏற்பட்டுள்ளது. அதன் பொருட்டு எம்பெருமானிடம் வேண்டியபோது கருணைக் கடலான எம்பெருமானும் நெல்மணிகளை மலைபோல் குவித்து வைத்துள்ளார் என்றும், அம்மலைகள் மனிதர்களால் அகற்றப்பட முடியாத அளவிற்கு ஓங்கி உயர்ந்து காணப்படுகிறது. அதனை எவ்விதம் தங்கள் மாளிகைக்கு அனுப்புவது? என்று விண்ணப்பம் செய்தாக வேண்டும் என கூறினார்.

சுந்தரர் குண்டையூர்க் கிழாரின் அன்பிற்கும், அவர் எம்பெருமானின் மீது கொண்ட பக்திக்கும் தலை வணங்கினார். பின்பு அவருடன் இனிதாக உரையாடிய வண்ணம் குண்டையூருக்கு வந்தடைந்தார் சுந்தரர். குண்டையூரில் மலைபோல் குவிந்து இருக்கும் நெல்மணிகளை கண்ட வண்ணம் வியந்து நின்றார். சுந்தரர், குண்டையூர்க் கிழாருடன் திருக்கோளிலி என்னும் பகுதிக்கு சென்றார். அவ்விடத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனை பணிந்த வண்ணம் நெல்மணிமலையை திருவாரூருக்கு சேர்க்கும் பொருட்டு, 

'நீள நினைந் தடியே னுமைநித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மடவா ளவள் வாடி வருந்தாமே
கோளிலியெம்பெருமான் குண்டையூர்ச்சில நெல்லுப்பெற்றே
னாளிலை யெம்பெருமா னவை யட்டித் தரப்பணியே"
என்ற பதிகம் ஒன்றைப் பாடினார்.
சுந்தரர் பாடிய பதிகத்தால் மனம் மகிழ்ந்த எம்பெருமான் அப்பொழுது வானில் அசரீரி ஒன்று உருவானது. இன்று பகற்பொழுது முற்றிலும் நீங்கிய வண்ணம் நம்முடைய பூதங்கள் பரவையார் வீடு மாத்திரமின்றி திருவாரூர் முழுவதும் நிறையும்படி இங்கு நிறைந்திருக்கும் நெல்மணிமலையை அவ்விடத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும் என்று வானத்தில் இருந்து அசரீரி வாக்குத் தோன்றியது.

சுந்தரர், குண்டையூர்க் கிழாரிடம் விடைபெற்றுக் கொண்டு திருவாரூருக்கு புறப்பட்ட அன்றைய இரவே சிவபெருமானின் ஆணைப்படி பூதகணங்கள் குண்டையூரிலுள்ள நெல்மணிமலையை எடுத்துச் சென்று பரவையார் மாளிகையிலும், திருவாரூரில் உள்ள அனைத்து பெருவீதிகளிலும் நிரப்பினர். முழு நிலவு மறைய... ஆதவன் உதிக்க... பொழுது புதியதாக துவங்கியபோது ஊர் முழுவதும் நிரம்பியிருக்கும் நெற்குவியலை கண்ட மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

பின்பு சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பெருமைகளையும், எம்பெருமானின் மீது அவர் கொண்ட பக்தியையும் புகழ்ந்து உரைத்துக் கொண்டே இருந்தனர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் உங்கள் வீட்டின் முன் உள்ள நெற்குவியலை அவரவர்களே, தங்கள் இல்லங்களில் சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்று ஊர் முழுவதும் அறிவித்தார்.

இவ்விதமாக சுந்தரர் பார் வியக்க எம்பெருமானின் அருளால் பல அதிசயங்களை நிகழ்த்திய வண்ணம் கீர்த்தியுடன் வாழ்ந்து வந்தார். இவ்விதமாக நிகழ்ந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் குண்டையூர்க் கிழாரைப் போலவே, சுந்தரிடம் உளவலன்பு பூண்டுள்ள அன்பன் ஒருவர் திருவாரூரை அடுத்துள்ள திருநாட்டியாத்தான்குடி என்னும் திருத்தலத்தில் வாழ்ந்து வந்தார்.

அவர் பெயர் கோட்புலியார். ஒருமுறை கோட்புலியார் விரும்பி அழைத்ததன் பொருட்டு, சுந்தரர் பல சிவத்தலங்களை வணங்கிய வண்ணம் திருநாட்டியாத்தான்குடிக்கு புறப்பட்டார். சுந்தரர் தம்மை காண வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தியை அறிந்ததும் அவரை வரவேற்க சென்று கொண்டிருந்தார். அப்பொழுது சுந்தரரும், கோட்புலியாரும் ஒருவருக்கொருவர் சந்தித்து மனம் மகிழ்ந்து, ஆரத்தழுவிக் கொண்டு தமது திருமாளிகைக்கு அழைத்து வந்தார்.

கோட்புலியார், சுந்தரரை வரவேற்று அவருக்கு அதற்காகவே பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டிருந்த பீடத்தில் அமரச்செய்து அவர் பாத கமலங்களை தூய்மை செய்து அந்நீரை தம் மீதும், தமது குடும்பத்தினர் மீதும் பின்பு தனது வீடு முழுவதும் தெளித்தார். பின்பு அவருக்கென சிறந்ததொரு முறையில் தயார் செய்யப்பட்ட உணவுகளை பரிமாறி அவருக்கு உரிய மரியாதைகளை முறைப்படி செய்து அவரை வழிபட்டு தொழுதார்.

சுந்தரர் தமது வீட்டில் உணவு உண்பதை பெரும் பாக்கியமாக கருதி தனது பிறவியின் பலனை அடைந்தது போல மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார். பின்பு தாம் பெற்ற புதல்விகளாகிய சிங்கடியார், வனப்பகையார் ஆகிய இருவரையும் அழைத்து வந்து சுந்தரரின் திருவடிகளை வழிபடச் செய்தார். பின்பு சுந்தரரிடம் இவர்கள் இருவரும் என் புதல்விகள் இவள் பெயர் சிங்கடியார் என்றும், மற்றொருவரின் பெயர் வனப்பகையார் என்றும் தனது இரு மகள்களையும் சுந்தரரிடம் அறிமுகம் செய்து, இவர்கள் இருவரையும் தாங்கள் அடிமைகளாக ஏற்றுக் கொண்டு அருள் புரிதல் வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொண்டார்.

சுந்தரர் அவ்விரு பெண்மணிகளை வாழ்த்தி இவர்கள் என் குழந்தைகள் என்று சொல்லி அவர்கள் இருவரையும் அன்போடு தன்னுடைய மடிமீது அமர்த்தி... உச்சி மோந்து... அவர்கள் வேண்டுவன அளித்து மகிழ்ந்தார். தம்முடைய இரு புதல்விகளையும் சுந்தரனார் ஏற்றுக் கொண்டதை எண்ணி மனமகிழ்ச்சி அடைந்தார் கோட்புலியார்.

சிறிது நேரத்திற்குப் பின்பு அங்கிருந்து அனைவரும் அருகில் உள்ள திருநாட்டியாத்தான்குடிக் கோவிலை அடைந்து 'பூணணாவ தோரரவம்" என்று தொடங்கித் திருப்பதிகம் பாடி வணங்கினார். ஓரிரு தினங்களில், அவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட சுந்தரர், வலிவலம் என்ற தலத்தையடைந்து பெருமானைத் தரிசித்த பிறகு, திருவலிவலம் வழியாக திருவாரூரை வந்தடைந்தார். திருவாரூரில் தங்கியிருந்து தினந்தோறும் தியாகேச பெருமானை தமிழ் பதிகங்களால் வழிபட்டு வந்தார். மாதங்கள் பல கடந்தன. திருவாரூரில் பங்குனி உத்திரத் திருவிழா நெருங்கியது.

ஒவ்வொரு வருடமும் எம்பெருமானுக்கு செய்யும் பங்குனி உத்திரத் திருவிழாவில் விண்ணில் வாழும் தேவர்களும், மண்ணுலகில் வாழும் மனிதர்களும் வியக்கும் வண்ணம் மிகுந்த கோலாகலத்துடன் நடைபெறும். இத்திருவிழா காலத்தில் பரவையார் எம்பெருமானை வழிபடும் அடியார்களுக்கும், பக்தர்களுக்கும் தான தருமங்கள் செய்வார். எம்பெருமான் சன்னிதானத்தில் எழில்மிகு நடனம் ஆடிக் களிப்பார். 

இவ்வாண்டும் அதுபோலவே அடியார்களுக்கு தேவையான பொன்னும், பொருளும் திரட்ட சுந்தரர் அன்பர்களோடு பரவையாரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு புகலூருக்கு புறப்பட்டார். புகலூர் தலத்தை அடைந்த சுந்தரர், அவ்விடத்தில் குடிக்கொண்டிருக்கும் சடைமுடிப் பெருமானிடம் தாம் வந்துள்ள கருத்தினை கூறி பதிகம் ஒன்றைப் பாடினார். அன்றிரவு சுந்தரர் அன்பர்களுடன் ஆலயத்திற்கு அருகிலுள்ள எந்த மடத்திலும் சென்று துயில் கொள்ளாமல் முற்றத்தில் துயில் கொள்ள விருப்பம் கொண்டார். 

திருக்கோவிலின் வெளியே திருப்பணிக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுட்ட செங்கற்கள் பலவற்றை எடுத்து வந்து உயரமாக பீடம் அமைத்து அதன் மீது தாம் கொண்டு வந்திருந்த வெண்பட்டாடையை விரித்து படுத்துக் கொண்டார். சுந்தரர் துயில் முடித்து எழுந்து பார்த்தபோது எம்பெருமானுடைய அருளினால் செங்கற்கட்டிகள் அனைத்தும் செம்பொன் கட்டிகளாக மாறி இருப்பதைக் கண்டு வியந்து நின்றார். எம்பெருமானின் அருளால் அகம்மகிழ்ந்த சுந்தரர், அன்பர்களுடன் ஆனந்தக் கூத்தாடினார்.

பைந்தமிழ் பாக்களால் எம்பெருமானின் பாத கமலங்களை பணிந்தார். அவ்விடத்தில் இருந்து கிடைத்த பொற்குவியலுடன் சுந்தரர் பல சிவத்தலங்களுக்கு சென்று அவரை வணங்கிய வண்ணம் திருவாரூரை வந்தடைந்தார். பரவையாரிடம் புகலூர் பெருமானின் திருவருளை வியந்து கூறி ஆனந்தம் கொண்டார். ஒருசில நாட்களில் மீண்டும் பரவையாரிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டார்.

பரவையாரிடம் இருந்து விடைபெற்று கொண்டு புறப்பட்ட சுந்தரர் நன்னிலத்துப் பெருங்கோவிலை வந்தடைந்தார். அங்கு எழுந்தருளியிருக்கும் பெருமானின் திருவடியைத் தொழுது பதிகப் பாமாலையினை புனைந்து பணிந்தேத்தினார். அன்று இரவு எம்பெருமான் சுந்தரரின் சொப்பனத்தில் எழுந்தருளி திருமழப்பாடிக்கு வர மறந்தாயோ? என்று திருவாய் மலர்ந்து அருளி மறைந்தார். சொப்பனத்தில் எம்பெருமான் எழுந்து மறைந்ததும் சுந்தரர் கனவில் இருந்து விழித்தெழுந்தார். எம்பெருமானின் ஆணையை கேட்டதும் சுந்தரர் மனம் மகிழ்ந்தார்.

எம்பெருமானின் விருப்பம் இதுவென அறிந்ததும் அப்பொழுதே அன்பர்களுடன் புறப்பட்டு காவிரியைக் கடந்து வடகரையை அடைந்து திருமழப்பாடி என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை வழிபட்டு தொழுது 'பொன்னார் மேனியனே" என்று தொடங்கித் திருப்பதிகம் பாடி எம்பெருமானை போற்றினார். சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்து எம்பெருமானை வணங்கி பின்பு அங்கிருந்து புறப்பட்டார். காவிரியாற்றின் இருபக்கங்களிலும் உள்ள திருக்கோவில்களை வழிபட்ட பின்னர் மேற்கு நோக்கி சென்ற வண்ணமாக தனது பயணத்தை மேற்கொண்டவர் திருவானைக்காவை அடைந்தார்.

சுந்தரர் இவ்விடத்திற்கு வந்து கொண்டிருக்கிறார் என்பதை அறிந்ததும் அத்தலத்திலுள்ள தொண்டர்கள் ஆரூரரை வரவேற்று மகிழ்ந்தனர். அன்பர்கள் சூழ சுந்தரர் 'மறைகளாயின நான்கும்" என்னும் திருப்பதிகப் பாடல்களை பாடிய வண்ணம் கோவிலை அடைந்து பெருமானை வணங்கி வழிபட்டு பதிகங்கள் பல பாடினார். பிறகு அவ்வூரை விட்டு நீங்கி திருப்பாச்சிலாச்சிராமம் என்னும் தலத்தை அடைந்தார். அங்கு எழுந்தருளி அருள்புரியும் எம்பெருமானிடம் பொன் வேண்டி பாடினார்.

வேண்டுவனவற்றை வேண்டினாலும் கொடுப்பதில் பல சோதனைகளை செய்து கொடுக்க வல்லவராயிற்றே எம்பெருமான். அவ்விதம் போலவே பரமன் சுந்தரரை சோதிக்க எண்ணி பொன்னை கொடுத்தருளாது நின்றார். இறைவனையே தன்னுடைய உற்ற நண்பராக கொண்ட சுந்தரர் பொன் தராத பரமனிடம் தமக்குள்ள அன்பின் உரிமையால் அவரைக் கடிந்து கொள்ளக் கருதி 'வைத்தனன் தனக்கே தலையுமென் நாவும்" எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். ஒவ்வொரு பாடலின் கடைசி அடிதோறும், இவர் இல்லாமற் போய்விட்டாரோ? என்று பொருள்படுமாறும் 'இரவலா தில்லையோ பிராமனார்" என்று இகழ்ந்தும் பாடினார்.

சுந்தரர் தம்மீது கொண்ட சக்தியால் மனம் இறங்கிய எம்பெருமான் சுந்தரர் வேண்டிய பொற்குவியலை கொடுத்தருளினார். சுந்தரர் எம்பெருமான் அருளிய பொற்குவியலுடன், புறப்பட்டு திருப்பைஞ்ஞலியை அடைந்தார். அரணார் மலரடியை போற்றினார். எம்பெருமான் சுந்தரருக்கு கங்காள வேடத்துடன் திருக்காட்சி கொடுத்து அருளினார். சுந்தரர், உள்ளம் உருக பதிகம் ஒன்றைப் பாடினார். 

அங்கிருந்து புறப்பட்டு திருஈங்கோய்மலையைத் தரிசித்துக் கொண்டே கொங்கு நாட்டில் காவிரியின் தென்கரையில் விளங்கும் திருப்பாண்டிக் கொடுமுடி என்னும் திருத்தலத்தை வந்தடைந்தார். அங்கு எழுந்தருளியிருக்கும் கொடுமுடி நாதரைப் போற்றி 'மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்பாதமே மனம் பாவித்தேன்" எனத் தொடங்கும் நமசிவாய பதிகம் ஒன்று பாடி உலகமெல்லாம் உய்ய அருள் செய்தார். 

பின்னர், காஞ்சி நதிக்கரையில் அமைந்துள்ள திருப்போரூர் கோவிலை வந்தடைந்தார். அங்கு எம்பெருமானைக் காணவில்லை. அதனால் மனம் புண்பட்டார். அங்கிருந்த நந்திதேவரின் குறிப்பால், எம்பெருமான் இருக்குமிடத்தை அறிந்து கொண்ட சுந்தரர் வயற்பக்கம் வந்தார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை மெய்மறக்க செய்தது!

வயற்புறத்தில் திரிபுரம் எரித்தவன்...

உழவுத்தொழில் செய்யும் பணியாளனாகவும்...

அவன் உடம்பில் பாதியைப் பெற்ற பார்வதி தேவியோ...

பணிப் பெண்ணாகவும்...

திருக்கோலம் கொண்டிருந்தார்கள்.

லட்சுமி, சரஸ்வதி, இந்திராணி முதலிய தேவியர்கள், சிவகணத் தலைவர்களும் வயலில் உழுவதும், நீர் பாய்ச்சுவதும், நாற்று நடுவதுமாக இருந்தனர். 

மதுரையில் திருவிளையாடல்கள் பலபுரிந்த திருசடையான், இன்று தம் பொருட்டு உழவன் திருக்கோலம் பூண்டு நடத்தும் திருக்கூத்து கண்டு ஐயன் மீது ஆராக்காதலுடன் 'மறையவனரசன் செட்டி தன் தாதை" எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். இங்ஙனம் வயலில் வருந்தி உழுவது யார் பொருட்டு ஐயனே!!... என்று நிலத்தில் வீழ்ந்து, பணிந்து வினவியதும், எம்பெருமான் தில்லையம்பலத்திலே நின்றாடுகின்ற தமது நர்த்தனக் கோலத்தினைச் சுந்தரருக்கு கோவிலினுள் காட்டியருளினார். அங்கு சில நாட்கள் தங்கியிருந்து இறை வழிபாடுகளை செய்து வந்தார்.

சுந்தரர் அவ்விடத்திலிருந்து திருவெஞ்சமாக்கூடல், திருக்கற்குடி மலை, திருப்புறம்பயம் வழியாக சிவதரிசனம் செய்து கொண்டே கூடலையாற்றூர் என்னும் பதியை அணுகினார். அவ்வூர் அருகே சென்றவர் அங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை வணங்காமல், திருமுதுகுன்றூரினை நோக்கிப் புறப்பட்டார். அப்பொழுது எம்பெருமான் அந்தணர் வடிவம் கொண்டு சுந்தரர் முன்னால் தோன்றினார்.

சுந்தரர் அவரிடம், ஐயனே! திருமுதுகுன்றூருக்கு செல்லும் வழியினை எமக்கு சொல்லும்... என்று வினவ அவ்வேதியர், இவ்வழி கூடலையாற்றூருக்குப் போகும் வழியாகும் என்று விடை கூறிய வண்ணம் சுந்தரருக்கு அவ்வூர் எல்லை வரை வழித்துணையாக வழிகாட்டிச் சென்று மறைந்தருளினார். தனக்கு வழிகாட்டி கொண்டு வந்திருந்த வேதியர் அவ்விடத்தை விட்டு மறைந்ததும் வியந்து நின்றுக் கொண்டு இருந்தார் சுந்தரர். 

இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கின்ற செயலானது எம்பெருமானின் திருவருளால்தான் என்று மனதில் நினைத்த வண்ணம் சுந்தரர் கூடலையாற்றூரை அடைந்து, சுவாமி தரிசனம் செய்து கொண்டு 'வடிவுடை மழுவேந்தி" என்றெடுத்து 'அடிகளிவ் வழிபோந்த வதிசய மறியேனே" என்னும் திருப்பதிகத்தை பாடி வழித்துணையாய் வந்த பெருமானை வணங்கிப் போற்றினார். பின்பு திருமுதுகுன்றூரினை அடைந்தார்.

திருமுதுகுன்றூர் திருக்கோவிலின் கோபுரத்தை எல்லையில் நின்ற வண்ணம் எம்பெருமானை போற்றிய சுந்தரர் திருக்கோவிலுக்குள் புகுந்து, வலம் வந்து திருமுதுகுன்றூர் இறைவனை வணங்கி, 'நஞ்சியிடை" என்று தொடங்கும் திருப்பதிகம் ஒன்றையும் பாடினார். அந்த பதிகத்தை பாடி முடித்ததும் பரமனின் மீது கொண்ட பொருள் பெறும் மனக்குறிப்புடன் 'மெய்யில் வெண்பொடி" எனத் தொடங்கும் திருப்பதிகம் ஒன்றை பாடினார்.

சுந்தரர் பாடிய பைந்தமிழ் பாக்களால் மனம் மகிழ்ந்த பனிமதிச்சடையார், சுந்தரருக்கு பனிரெண்டாயிரம் பொற்காசுகளை கொடுத்தருளினார். பரமனிடம் இருந்து பொற்காசுகளைப் பெற்று பெருமகிழ்ச்சி கொண்ட சுந்தரர், இவற்றை எங்ஙனம் திருவாரூரிற்கு எடுத்து செல்வது? என்று மனம் கலங்கியபோது, எம்பெருமான் அதற்கும் வான் வழியே ஒரு தீர்வை அளிக்கும் விதத்தில் ஓர் அசரீரியாக... யாம் உமக்கு அளித்த இப்பொற்காசுகளை மணிமுத்தாற்றில் மூழ்கச் செய்து திருவாரூர் திருக்குளத்திலே எடுத்துக்கொள்வாயாக... என்று அசரீரி வாக்கின் மூலம் அருளி மறைந்தார்.

பொன் அனைத்தையும் மணிமுத்தாற்றில் புகவிட்டு, 'அன்று என்னை வலிய ஆட்கொண்ட திருவருளை இதிலறிவேன்" என்று மனதில் எண்ணிய வண்ணம் பொன்னின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு மீதி இருந்த பொன்னை மணிமுத்தாற்றில் போட்டுவிட்டார். சிலகாலம் அவ்விடத்தில் தங்கியிருந்து எம்பெருமானுக்கு தொண்டுகள் பல செய்து கொண்டிருந்தார். 

சில நாட்கள் கடந்த பின்னர் முதுகுன்றூரை விட்டு புறப்பட்டு சுந்தரர் தில்லையிலே நடனம் புரியும் பரமனின் அற்புத நடனத்தை கண்டு களித்து மகிழ பெரும் விருப்பம் கொண்டார். தன்னுடைய மனம் மற்றும் சித்தத்தை தில்லையில் நிறுத்திய வண்ணம் சுந்தரர், கடம்பூர் முதலிய சிவதலங்களை வணங்கி வழிபட்ட பின்பு தில்லையம்பதியை அடைந்தார்.

தில்லைத் திருவீதியை வலம் வந்து கோபுரத்தை வணங்கி கோவிலினுள் சென்று பொன்னம்பலவனைத் தொழுதார். எல்லையில்லாத மகிழ்ச்சியில் திளைத்தவராக சுந்தரர் கண்ணீர் பெருக அம்பலத்தரசரின் திருவருட்தாளினை வீழ்ந்து வணங்கி, 'மடித்தாடுமடிமைக் களன்றியே" என்னும் திருப்பதிகம் பாடினார். தாம் சபாநாயகரைத் திருப்போரூரிலே கண்ட நிலையைச் சிறப்பித்து, அத்திருப்பதிகத்திலே 'மீகொங்கிலணி காஞ்சிவாய்ப் பேரூரர் பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தே பெற்றாமன்றே" என்று அருளிச் செய்தார்.

சுந்தரர், தில்லைவாழ் அந்தணர்களோடு சிலகாலம் தில்லையில் தங்கியிருந்து பரமனின் தரிசனத்தை மனதார கண்டு மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுத் திருக்கருப்பறியலூர், மண்ணிப்படிக்கரை, வாழ்கொளிபுத்தூர், கானாட்டுமுள்ள%2Bர், எதிர்கொள்பாடி, வேள்விக்குடி முதலிய தலங்களை வழிபட்டு திருப்பதிகங்கள் பாடித் திருவாரூரை அடைந்தார். பின் பூங்கோவிற் பெருமானைத் தொழுது பரவையார் திருமாளிகையை அடைந்த சுந்தரரை, பரவையார் மனமும், முகமும் மலர வரவேற்றார். அவருடைய பாதக்கமலங்களில் நறுமலர்களைத் தூவி வணங்கினார்.

சுந்தரர் பரவையாரிடம் எம்பெருமான் செய்த திருவிளையாடல்கள் மற்றும் பயணம் மேற்கொள்ளும்போது நிகழ்ந்த நிகழ்வுகள் யாவற்றையும் எடுத்துரைத்துக் கொண்டு இருந்தார். அப்போது முதுகுன்றூர் பெருமான் தமக்கு அளித்த பொற்குவியலை பற்றியும், அந்த பொற்குவியல் எம்பெருமானின் விருப்பப்படி மணிமுத்தாற்றில் இட்டோம் என்றும், இப்பொழுது எம்பெருமானின் திருவருளால் அந்த பொற்குவியலை இத்திருத்தலத்திலுள்ள கமலாலயப் பொய்கையிலே எடுத்துக்காட்டுகின்றேன் என்று உரைத்த வண்ணம் குளத்திற்கு செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். 

பின்பு பரவையாரிடம் நீ எம்முடன் வருவாயாக... என்று உரைத்த வண்ணம் சுந்தரருடன் பொற்றாமரைக் குளத்திற்கு செல்வோம் என்று கூறிய வண்ணம் முதுகுன்றூரில் நடந்தவற்றை எல்லாம் விளக்கினார். அம்மையாரின் முகம் ஆதவன் வரும் போது உதிக்கும் சூரியகாந்தியை போல் மலர்ந்தது. 

சுந்தரர் உரைத்தவற்றை எல்லாம் கேட்டதும் அம்மையார் பெரும் வியப்பில் மூழ்கினாள். அம்மையாரோ தாங்கள் கூறுவதை எல்லாம் கேட்கும்போது எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் கூறியது போல் அது எங்ஙனம் சாத்தியமாகும்? என்று இதழ்களில் புன்னகை தழும்ப... ஆனால் மனதில் ஒருவிதமான ஐயத்துடன் கேட்டாள்.

சுந்தரமூர்த்தியாரோ பரவையாரிடம் நமது கடவுளான எம்பெருமானின் திருவருளால் பொன் முழுவதும் குளத்திலேயே எடுத்து உனக்கு தருகின்றேன், இது சத்தியம் என்று உரைத்த வண்ணம் என்னோடு நீயும் கோவிலுக்கு வருவாயாக... என்று அவரையும் அழைத்துக் கொண்டு திருக்கோவிலுக்கு வந்தார். திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் வன்மீகநாதரை வணங்கிக் கொண்டு கோவிலை வலம் வந்து மேற்கு திசையில் இருக்கின்ற கமலாலய திருக்குளத்தை அடைந்தார். 

அதன் வடகிழக்கு கரையிலேயே போய் பரவையாரை நிறுத்தி எம்பெருமானை மனதில் எண்ணிய வண்ணம் குளத்தில் இறங்கி அவ்விடத்தில் பொன்னை வேண்டி தேடினார். அதற்குள் சுந்தரர் கோவிலின் திருக்குளத்தில் இருந்து பொன் எடுக்கப் போகின்றார் என்ற செய்தியானது மக்களிடையே பரவியதும் ஊரில் உள்ள மக்கள் அனைவரும் கமலாலயக் குளத்தில் வந்து சுந்தரர் எடுக்கப்போகும் அந்த அதிசய காட்சியை காண அனைவரும் நின்று கொண்டிருந்தனர்.

சுந்தரரின் மனைவியான பரவையார் ஒருபுறமும், மக்கள் கூட்டம் ஒருபுறமும் என அனைவரும் வியப்பான காட்சியை காண காத்துக் கொண்டிருந்தனர். சுந்தரரோ... அங்கு இருப்பவர்கள் யாவரையும் மனதில் கொள்ளாமல் எம்பெருமானை மனதில் எண்ணிய வண்ணம் குலத்தில் பொற்குவியலை தேடினார். சுந்தரர் குளத்தில் உள்ள நீரில் மூழ்கி துருவித்துருவி தேடினார். 

மிகுந்த இன்னல்களுக்கும் நடுவே தேடியும் இறைவன் தமக்களித்த பொன் மட்டும் கைக்கு கிடைக்கவே இல்லை. நிகழ்வது யாது? என்று புரியாமல் வாடிய முகத்தோடு சுந்தரர் நிற்பதைக் கண்டு பரவையாரோ ஆற்றில் விட்டுவிட்டு குளத்தில் தேடுகிறீர்கள் என்று புன்னகை கலந்த நகை உணர்வோடு கூறினார். ஆனால் அங்கு நிகழ்ந்தவையோ வேறு. எம்பெருமான் சுந்தரர் பாடும் பைந்தமிழில் விருப்பம் கொண்டு அவருக்கு கிடைக்க வேண்டிய பொற்குவியலை தெரிவிக்காமல் காலம் தாழ்த்திக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்திற்குள் இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கின்ற செயல்கள் எதற்காக என்று உணர்ந்த வண்ணம் இவையாவும் நாம் என்றும் வணங்கும் எம்பெருமானின் திருவிளையாடல்களே என்பதை நன்கு உணர்ந்தார் சுந்தரர். பின் பழமலை நாதரை மனதில் நினைத்த வண்ணம் 'பொன்செய்த மேனியினீர்" என்று தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். திருப்பதிகம் பாடியும் பொற்குவியல் அவரது கைக்கு கிடைக்கவில்லை. சுந்தரருக்கு கவலையானது அதிகமானது.

முதுகுன்றத்தில் தாங்கள் தந்தருளிய பொற்குவியல் கிடைக்காமல் இருப்பது இன்னும் வருத்தமாக இருந்தாலும் எம்முடைய வருத்தத்தை பரவையார் முன்னிலையில் தீர்த்தருள வேண்டும் என்ற கருத்தினை உடைய எட்டாவது திருப்பதிகப் பாடலை பாடினார். தம்முடைய மனக்குறைகளை என்னவென்று புரிந்து கொண்டு எம்பெருமான் இன்னும் அருள்புரியாமல் இருப்பதை கண்டு மிகவும் மனம் வருந்தி கொண்டிருந்தார் சுந்தரர். 

செம்பொன்னைத் தந்தருளுக எனப் 'பொன்செய்த மேனியினீர்" என்று தொடங்கி திருப்பதிகம் பாடி போற்றினார். திருப்பதிகத்தின் எட்டாவது திருப்பாடல் பாடியும் பொன் கிடைக்காது மீண்டும் திருப்பதிகம் பாட ஒன்பதாம் திருப்பாடலைப் பாடிய அளவில் பொன்குவியலானது சுந்தரர் கைக்கு அகப்பட வைத்தார். அதுவரை மனதில் இருந்த கவலைகள் யாவும் நொடிப்பொழுதில் காணாமல் போயின. தமது கரங்களில் அகப்பட்ட பொற்குவியலை எடுத்துக்கொண்டு கரையேறினார் சுந்தரர்.

அப்போது பொற்றாமரைக் குளத்தில் கூடியிருந்த அனைத்து மக்களும், ஏன் அவரது துணைவியான பரவையாரும் அதிசயத்துடன் வியப்பில் ஆழ்ந்து நின்று கொண்டிருந்தனர். கரைக்கு வந்ததும் சுந்தரர் பொன்னின் மாற்றத்தை உரைத்து பார்த்தார்.

சுந்தரர் தன்னோடு அடையாளமாக எடுத்துவந்த பொன்னோடு, குளத்திலிருந்து எடுக்கப்பட்ட பொன்னை ஒப்பிட்டு பார்க்கையில் சிறு மாற்றம் ஏற்பட்டு இருப்பதைக் கண்டதும் இதுவும் எம்பெருமானின் திருவிளையாடல்கள் என்று எண்ணிய வண்ணம் திருப்பாடல் ஒன்றை பாடினார். சுந்தரர் திருப்பாடல் பாடி முடிப்பதற்குள்ளாகவே பொன்னில் ஏற்பட்டிருந்த மாற்றங்கள் யாவும் நீங்கி எம்பெருமான் கொடுத்த பொன்னாகவே மாறின. பொன்னில் ஏற்பட்டிருந்த குறைகள் நீங்கியதை கண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார் சுந்தரர்.

அவரது துணைவியாரோ எம்பெருமான் தன்னுடைய நாயகன் மீது கொண்டுள்ள அன்பையும், திருவருளையும் எண்ணி வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்தார். குளத்தில் கூடியிருந்த அனைத்து மக்களும் எம்பெருமானின் திருவிளையாடல்களையும், சுந்தரர் மீது எம்பெருமான் கொண்டுள்ள அன்பையும் எண்ணி மகிழ்ச்சி கொண்டனர். கூட்டத்திலிருந்த சில அடியார்கள் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருவடிகளைப் போற்றி வாழ்த்தி மகிழ்ந்தனர்.

பின்பு பொற்குவியலைப் பரவையார் மாளிகைக்கு அனுப்பிவிட்டு பூங்கோவில் சென்று இறைவனை வணங்கி பரவையாருடன் திருமாளிகை சென்று இறையருளை எண்ணி மகிழ்ந்தார். எம்பெருமான் கொடுத்தருளிய பொற்குவியலை கொண்டு இவ்வாண்டு பங்குனி உத்திரப் பெருவிழாவினை சுந்தரரும், பரவையாரும் இதுவரை இல்லாத அளவில் அனைவரும் வியக்கும் வண்ணமாக வெகுவிமர்சையாக கொண்டாடினார்கள். சில நாட்கள் பரவையாருடன் இருந்து சிவத்தொண்டுகள் பல செய்து வந்த சுந்தரர் இறைவன் எழுந்தருளிய ஏனைய தலங்களையும் வழிபட விரும்பினார்.

இறைவன்பால் கொண்ட அன்பு, பக்தியின் பொருட்டு பரவையாரிடம் இருந்து விடைபெற்று நள்ளாறு, கடவூர் வீரட்டம், திருமயானம், வலம்புரம், சாய்க்காடு, வெண்காடு, நனிபள்ளி, செம்பொன்பள்ளி, நின்றியூர், நீடூர், திருப்புன்கூர் ஆகிய தலங்களை இறைஞ்சிக்கொண்டே திருக்கோலக்காவை அடைந்தார். அப்பொழுது இறைவன் அவருக்கு எதிரே தோன்றி அருட்காட்சி வழங்கியருளினார். அவ்வருட்காட்சியைக் கண்டு வணங்கி திருப்பதிகம் பல பாடி மனம் மகிழ்ந்த வண்ணம் சீர்காழியை வந்தடைந்தார் சுந்தரர்.

சீர்காழி பதியை புறத்தே வலம் வந்து வணங்கி திருஞானசம்பந்தர் திருவடிகளை போற்றி பரவி குருகாவூர் என்னும் திருப்பதியை நோக்கி செல்ல தயாரானார். குருகாவூர் செல்லுகையில் சுந்தரரும், அவருடைய தொண்டர்களும் பயணம் மேற்கொண்ட களைப்பினாலும், தாகத்தினாலும், பசியினாலும் உடல் சோர்வு அடைந்தனர். சுந்தரரும், அவரது அடியார்களும் துன்புறுவதை உணர்ந்த சிவபெருமான் இவர்கள் வரும் வழியே குளிர்ப்பந்தல் ஒன்றை அமைத்தார்.

எம்பெருமான் வேதியர் வடிவம் கொண்டு சுந்தரரின் முன்னே எழுந்தருளினார். சுந்தரரும், அடியார்களும் ஆதவன் கொடுத்து கொண்டு இருக்கும் தணலில் வாடிய வண்ணம் வந்துக் கொண்டிருக்க, தொலைவில் குளிர்ப்பந்தல் ஒன்று இருப்பது கண்டு அப்பந்தலை விரைந்து வந்தடைந்தனர். இவர்களுக்காக காத்துக்கொண்டிருந்த எம்பெருமான் வடிவத்தில் இருந்த வேதியர் அவர்கள் பந்தலில் நுழைந்ததும் அவர்களை வணங்கி உள்ளே அமர்வதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளில் அவர்கள் அனைவரையும் அமர வைத்தார்.

பின்பு சுந்தரருக்கும், அவருடன் வந்திருந்த மற்ற அடியார்களுக்கும் தேவையான உணவு மற்றும் தண்ணீரை அளித்தார். தங்களுக்கு உணவும், அருந்த நீரும் தந்த வேதியருக்கு சுந்தரரும், அவருடன் வந்த மற்ற அடியார்களும் நன்றி தெரிவித்தனர். நீண்டதூரம் பயணம் மேற்கொண்டது நாள்முதல் உடல் சோர்வு மேலிட சுந்தரரும், அவருடன் வந்தவர்களும் சிறிது நேரம் துயில் கொண்டிருந்தனர்.

அவர்கள் கண்விழித்து பார்த்த பொழுது அவ்விடத்தில் இருந்த பந்தலும், மேலும் தங்களுக்கு உணவும், நீரும் அளித்த அந்த வேதியரும் அங்கு இல்லாததை கண்டு திகைத்து நின்று கொண்டிருந்தனர். சுந்தரரும் இவையாவும் எம்பெருமானின் செயல்தான் என்பதை நன்கு உணர்ந்தார். சுந்தரர் 'இத்தனையாம் ஆற்றை அறிந்திலேன்" எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிக்கொண்டே திருக்கோவில் சென்று உணவளித்த எம்பெருமானைப் போற்றி வணங்கினார். பின்பு அங்கிருந்து தமது யாத்திரையை தொடர்ந்தார்.

சுந்தரர் குருகாவூர், வெள்ளடை, திருக்கழிப்பாலை போன்ற தலங்களை தரிசித்தவாறு தில்லையை அடைந்தார். சுந்தரர் தில்லையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் என்பதை அறிந்ததும் தில்லைவாழ் அந்தணர்கள் அவரின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தனர். பின்பு சுந்தரர் அந்தணர்களோடு இணைந்து தில்லையில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானையும், நடராஜர் தரிசனத்தையும் கண்டுகளித்தார். 

மனம் குளிர... சிந்தை மகிழ... எம்பெருமானை வழிபட்ட பின்பு அவ்விடத்தில் இருந்து புறப்பட்டு திருத்தினை நகரைத் தரிசித்து, தாம் பிறந்த தலமாகிய திருநாவலூரை அடைந்து இறைவனை வணங்கி அடியார்களுடன் அவ்விடத்தில் சிலகாலம் தங்கியிருந்தார். தொண்டை நாட்டில் உள்ள தலங்களை வழிபட விரும்பிய சுந்தரர் திருநாவலூரில் இருந்து புறப்பட்டு திருக்கழுக்குன்றத்தை அடைந்தார். அங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை வணங்கி திருக்கச்சூர் கோவிலுக்கு சென்றார். அங்கு அருள்புரிந்து கொண்டிருக்கும் சடைமுடி நாதரை போற்றி கோவில் புறத்தே பசியினாலும் பயணம் மேற்கொண்டார்.

அதனால் ஏற்பட்ட களைப்பின் மூலம் உடல் வாட்டத்தோடு வந்து கொண்டிருந்தார். பசியால் வருந்திக் கொண்டிருக்கும் சுந்தரரின் பசியினைத் தீர்க்க திருவுள்ளம் கொண்டார் எம்பெருமான். அதாவது, திருக்கச்சூர் பெருமான் முன்பு போல வயது முதிர்ந்த வேதியர் வடிவம் கொண்டு கரங்களிலே திருவோடு ஒன்றை ஏந்திக்கொண்டு கோவிலின் மதிர்ப்புறத்தே அதாவது, சுந்தரர் இருக்கும் இடத்திற்கு வந்தார்.

வேதியர் உருவம் தரித்திருந்த வேதநாயகன் சுந்தரரை பார்த்து, நீர் உம் அன்பர்களுடன் பசியால் மிகவும் வருந்தி இளைப்புற்றிருக்கின்றீர். உங்கள் பசியை போக்கும் பொருட்டு இப்பொழுதே சென்று நான் உமக்கு, சோறு இரந்து வந்து கொடுக்கிறேன். அதுவரையிலும் நீர் எங்கும் போய்விடாமல் எமக்காக இங்கேயே சற்று நேரம் காத்திருப்பாயாக என்று கூறினார். சுந்தரரும் வேதியரின் கூற்றுக்கு மறுமொழி உரைக்காமல் அவ்விடத்தில் அமர்ந்திருந்து அவரின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தார்.

சுந்தரரும் வேதியரின் கூற்றுக்கு மறுமொழி உரைக்காமல் அவ்விடத்தில் அமர்ந்திருந்து அவரின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தார். அகிலத்திற்கு உணவு அளிக்கும் வல்லமை கொண்ட கங்கை முடிநாதர் கடும் பகலில், திருக்கச்சூர் வாழும் அந்தணர்களின் வீடுதோறும் சென்று சோற்றினை இரவலாக பெற்றார். தடுத்தாட்கொண்டருளிய தம்பிரான் தோழரின் பசியைப் போக்க, இத்தகைய அன்புச் செயல் புரிந்த ஈசன், பிச்சை எடுத்து பெற்ற அமுதுடன் ஆரூரர் முன் வந்தார். 

தாம் இரவலாக பெற்ற அமுதினையும், காய்கறிகளையும், சில பழங்களையும் கொடுத்தார். இவ்வமுதினையும், காய்கறிகளையும் உண்டு நீயும், உம்மோடு வந்த அடியார்களும் பசியைத் தீர்த்துக் கொள்வீர்களாக என்று முகம் மலர திருவாய் மலர்ந்தார் வேதியர் வடிவில் இருந்த சிவபெருமான். சுந்தரரும், அவருடன் வந்த அடியார்களும் அமுதினை பெற்று உண்டு மகிழ்ந்தனர். அவர்கள் அமுதத்தினை உண்பதற்குள் ஜோதி வடிவமான சிவபெருமான் அவ்விடத்தில் இருந்து மறைந்தார். தமக்கு உணவு அளித்த வேதியருக்கு நன்றி உரைக்கும் வகையில் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அங்கு வேதியர் காணாததை கண்டு சுந்தரர் மனம் வாடினார்.

இதுவும் எம்பெருமானின் செயல்களே என்பதை உணர்ந்து கொண்டார் சுந்தரர். எம்பெருமான் தமக்காக செய்கின்ற அருஞ்செயலை எண்ணிக் கலங்கினார். விழிகளில் நீர் வழிய 'முதுவாயோரி" எனத் தொடங்கும் திருப்பதிகம் ஒன்றைப் பாடிப் பணிந்தார். அங்கு அடியார் கூட்டத்தாருடன் சில நாட்கள் தங்கியிருந்தார். 

அதன்பின் சுந்தரர் திருக்கச்சூரிலிருந்து புறப்பட்டுக் காஞ்சிபுரத்தை நோக்கி தன்னுடைய பயணத்தை மேற்கொண்டார். சுந்தரர் காஞ்சிபுரத்தை நோக்கி வந்துக் கொண்டு இருக்கிறார் என்ற தகவலை அறிந்த காஞ்சி நகரத்து மெய்யன்பர்கள் சுந்தரரை காஞ்சிபுரத்தின் எல்லைக்கு சென்று மங்கள வாத்தியங்களுடன் அவர்களை அழைத்து வந்தனர். சுந்தரரின் கரங்களில் பூரண பொற்கும்ப கலசங்களுடன் மலர் தூவி காஞ்சி நகரத்துக்குள் அழைத்து வந்தனர். சுந்தரர் அன்பர்களும், அடியார்களும் சூழ, மங்கள வாத்தியங்கள் ஒலிக்க, திருக்கோவிலை வந்தடைந்தார்.

சுந்தரர் தலையின் மீது கரங்கூப்பி, அகத்தில் எழுந்து அருள்புரிந்து கொண்டிருக்கும் எம்பெருமானை வணங்கிய வண்ணம் திருத்தலத்தை வலம் வந்து வழிபட்டவாறே, திரு ஏகம்பர் திருச்சன்னதிக்குள் சென்றார். அங்கு எழுந்தருளி இருக்கும் ஏகம்பவாணரின் திருவடியில் வீழ்ந்து வணங்கினார். எம்பெருமானின் மீது கொண்ட அன்பாலும், பக்திப்பெருக்காலும் பரவசமாகி பைந்தமிழில் பாக்களால் பாடி மகிழ்ச்சி அடைந்தார். பின்பு சுந்தரர் காமாட்சி அம்மனையும் தரிசித்து சிந்தை குளிர்ந்தார்.

காஞ்சிபுரத்திலேயே அடியார்களுடன் சில நாட்கள் தங்கியிருந்து காஞ்சிபுரத்தின் அருகில் உள்ள எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் பல தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்த சுந்தரர் மீண்டும் தமது சிவயாத்திரையை தொடர்ந்தார். திருவன்பார்த்தான், பனங்காட்டூர், திருமாற்பேறு, வல்லம் முதலிய தலங்களுக்கு சென்று எம்பெருமானை துதித்து வணங்கிய வண்ணம் காளத்தி மலையை அடைந்தார். கண்ணப்பருக்கு அருள்புரிந்து தம் அடியார் கூட்டத்துடன் இணைத்துக் கொண்ட குடுமித்தேவரின் திருவடியைப் எண்ணிப் போற்றி, 'செண்டாடும் விடையாய்" எனத் தொடங்கும் பதிகம் ஒன்றை பாடி மனமகிழ்ச்சி கொண்டார். 

காளத்தியில் சிலநாள் தங்கியிருந்தார். காளத்தி மலையிலிருந்த வண்ணமே வடநாட்டிலுள்ள திருப்பருப்பதம், திருக்கேதாரம் முதலிய தலங்களை மனதில் நினைத்த வண்ணம் இறைவனை எண்ணி திருப்பதிகம் பாடிப் போற்றினார். காளத்தி மலையிலிருந்து புறப்பட்டு திருவொற்றியூரை வந்தடைந்தார் சுந்தரர். அக்கோபுரத்தை வணங்கிய வண்ணம் திருமாளிகையினை வலம் வந்து, 'பரவி" எனத் தொடங்கும் திருப்பதிகம் ஒன்றைப் பாடினார். திருவொற்றியூரில் இருந்து புறப்பட மனம் இல்லாத சுந்தரர் அடியார்களுடன் திருவொற்றியூரிலேயே தங்கினார்.

திருவொற்றியூர் என்னும் தலத்தின் அருகே ஞாயிறு என்னும் ஊரில் வளம் செழிக்கும் வேளாண் மரபில் ஞாயிறு கிழார் என்னும் பெயருடைய பெருஞ்செல்வர் ஒருவர் வாழ்ந்து வந்தார். திருக்கயிலாய மலையில் உமையம்மைக்கு பணிபுரியும் சேடியர்களாய் முன்னர் ஆலாலசுந்தரரைக் காதலித்த மகளிர் இருவருள் ஒருவரான கமலினியார், பரவையாராய் தோன்றி சுந்தரரை மணந்தார் அல்லவா! மற்றொருவராகிய அநிந்திதையார் அன்புத் திருமகளாய் வந்து பிறந்திருந்தாள்.

ஞாயிறு கிழார் தம்முடைய அழகு மகளுக்கு சங்கிலியார் என்னும் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார். சங்கிலியார், எம்பெருமானின் அருளோடு எழில்மிகு தோற்றத்தோடும், எம்பெருமானின் மீது மிகுந்த பக்தியோடும், சிறந்த ஆற்றலோடும் தெய்வத்தன்மை மிக்க பொற்புடைச் செல்வியாய் விளங்கினாள். மேலும், குழந்தைப் பருவம் முடிந்து மங்கைப் பருவத்தையும் அடைந்தாள். 

திருமணப் பருவம் அடைந்த சங்கிலியாருக்கு தங்களுடைய குலநலத்திற்கும், பண்பிற்கும் ஏற்ற மணமகனை தேர்ந்தெடுத்து மணமுடிப்பது என்ற தீர்மானத்திற்கு வந்தனர் பெற்றோர். பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டதும், சங்கிலியார் மனதளவில் வேதனையடைந்தாள். ஒருநாள் தனது மனதில் உள்ள எண்ணத்தை வெளிப்படுத்தும் சக்தியற்ற நிலையில் மனதளவில் அஞ்சி நடுங்கிய வண்ணமாக மயக்கமுற்றாள். 

யாரும் எதிர்பார்க்காத இந்த செயல்களில் மகள் மயக்கம் அடைந்து விழுந்ததைக் கண்ட ஞாயிறு கிழாரும், அவரது மனைவியாரும் மனதளவில் தடுமாற்றம் அடைந்தனர். பின்னர், விரைவாக சென்று குளிர்ந்த நீரைக் கொண்டு வந்து, அம்மையாரின் முகத்தில் தெளித்தனர். சங்கிலியாரும் சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்தாள். பெற்றோர்கள் வேதனையால் பெருமூச்செறிந்தனர். மயக்கம் தெளிந்து எழுந்த மகளிடம் உனக்கு ஏதாவது எங்களிடம் சொல்ல வேண்டியது இருக்கின்றதா? என்றும், எதையும் எங்களுடன் மறைக்காமல் உரைப்பாயாக என்றும் வினவினார்கள்.

பெற்றோர்கள் கூறியதும் சங்கிலியார் தனது மனதை தைரியப்படுத்திக் கொண்டு தனது மனதிலிருக்கும் கருத்துக்களையும், எண்ணங்களையும் தயங்கிய வண்ணத்துடன் எடுத்துரைக்க துவங்கினாள். தந்தையே...!! நீங்கள் எனது திருமணத்தை பற்றி பேசிக்கொண்டு இருப்பதை நான் அறிவேன். எனக்கு கணவனாக வரக்கூடியவர் எம்பெருமானின் திருவருளை முழுவதுமாக பெற்றவராக இருக்க வேண்டுமே தவிர, வேற ஒருவருக்கும் நான் மனைவியாக இருக்க மாட்டேன் என்று தனது மனதில் உள்ள கருத்துக்களை வெளிப்படையாகவும், சிறிது அச்சத்துடனும் வெளிப்படுத்தினாள்.

என்னை இவ்வெண்ணத்தில் இருந்து தடுக்காதீர்கள். நான் திருவொற்றியூரை அடைந்து சிவபெருமானின் திருவருள் வழியிலேயே நிற்கவே ஆசைப்படுகிறேன். அதற்கு எனக்கு அனுமதி தாருங்கள் என்று வேண்டி நின்று கொண்டிருந்தாள். சங்கிலியாரின் எண்ண ஓட்டங்களை அறிந்ததும் பெற்றோர்களுக்கு இடி இடித்தாற்போல் இருந்தது. இருப்பினும் சங்கிலியார் கூறியவற்றை யாவருக்கும் வெளியே தெரியாத வண்ணமாக பெற்றோர்கள் மறைத்துவிட்டனர். இந்நிலையில் அவர்களோடு குலத்தால் ஒற்றுமை உடையவராகவும், பொருள் அளவில் செல்வந்தராகவும் இருந்த ஒருவர் சங்கிலியாரை மணம் பேசி வர சிலரை சங்கிலியாரின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். 

அவர்களின் வருகையையும், எண்ணத்தையும் சற்றும் எதிர்பாராத சங்கிலியாரின் பெற்றோர்கள் மிகவும் தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு ஆளாகினார்கள். மேலும் அவர்களிடத்தில் தங்களது மகளின் மன கருத்துக்களை இவ்விடத்தில் பகிர்வதை உசிதமானது அல்ல என்று தீர்மானித்தார்கள். பின்பு வீட்டிற்கு வந்தவர்களிடம் சாதுர்யமாகப் பேசி அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

சில நாட்களுக்குப் பின்பு சங்கிலியாரை மனம் பேச அனுப்பி வைத்த செல்வந்தர் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தார். இச்செய்தியானது ஞாயிறு கிழார் செவிகளுக்கு எட்டியது. இச்செய்தியை கேட்டதும் ஞாயிறு கிழார் மனதளவில் வருத்தம் கொண்டார். இந்த தகவலானது உற்றார், உறவினருக்கும் தெரியவர சங்கிலியாரைப் பற்றிய பல தவறான எண்ணங்களும், பேச்சுக்களும் மக்கள் மத்தியில் உருவாக துவங்கியது. இதனால் உறவினர்கள் யாரும் சங்கிலியாரை மணமுடித்துக் கொள்ள பேசுவதற்கு முன்வரவில்லை.

சங்கிலியாரின் பெற்றோர்கள் இறை நம்பிக்கையும், பரமனின் அருளையும் பரிபூரணமாக பெற்று எம்பெருமானின் மீது அளவு கடந்த பக்தியும் வைத்துள்ள சங்கிலியாரை இனியும் அவளது விருப்பத்திற்கு மாறாக நாம் வீட்டில் வைத்திருப்பது முறையானதும் இல்லை. ஆதலால் அவளது உள்ளக்கருத்திற்கு ஏற்ப, திருவொற்றியூர் கோவிலில் சேர்த்து விடுவது நல்லது என்று எண்ணினார்கள். சங்கிலியாரின் விருப்பத்திற்கு ஏற்ப திருவொற்றியூரில் கன்னிமாடம் ஒன்றை அமைத்து சங்கிலியாரை அங்கேயே தங்க வைத்து சிவபிரானது திருப்பணிகளைச் செய்து வருமாறு கூறிவிட்டனர் பெற்றோர்கள்.

அம்மையாருக்கு பணிவிடை செய்ய சேடிகளும், ஏவல் புரிய பெண்களும் இருந்தனர். எம்பெருமான் நினைவுடனும், அவருடைய சிந்தனைகளுடனும் வாழ்ந்து வந்தார் சங்கிலியார். சூரியன் உதிக்கும் முன்பே எழுந்து தூய நீராடி, அழகிய நெற்றியில் திருவெண்ணீற்றை பூசிக்கொண்டு தன்னுடன் தங்கியிருக்கும் சேடிகளுடன் இணைந்து அருகில் மலர்கள் நிறைந்து இருக்கும் மலர் வனத்திற்கு செல்வார்.

மலர்வனத்தில் இருக்கும் அழகிய மற்றும் வாசம் நிறைந்த விதவிதமான மலர்கள் நிறைய பறித்து வந்து, வௌ;வேறாக பிரித்து எடுத்து கொள்வார். அவற்றை சற்றும் கசங்காமல் எடுத்துக் கொண்டு வந்து தனி இடத்தில் அமர்ந்து பல்வேறு திருமாலைகளாக உரிய காலத்திற்கு ஏற்றபடி கட்டுவார். இவ்விதமாக தொடுத்த மாலைகளை இறைவனை வழிபடும் காலங்களில் எம்பெருமானின் பாத கமலங்களில் இட்டு வணங்கி வழிபடுவார்.

கன்னிமாடத்தில் தங்கியிருந்த சங்கிலியார் திருவைந்தெழுத்து பஞ்சாட்சரத்தை இடைவிடாமல் மனதில் எண்ணிக்கொண்டே இருப்பார். சங்கரனை தேடி வருவோர் மற்றும் அவரது அடியார்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து கொண்டிருந்தார். இவ்விதமாக வாழ்ந்து வந்த சங்கிலியாரின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதற்கான சூழல் உருவாகத் துவங்கியது.

சங்கிலியார் கன்னிமாடத்தில் தங்கியிருந்து இறைவனுக்கு தேவையான பணிவிடைகளைச் செய்து கொண்டிருந்த காலத்தில் சுந்தரர் திருவொற்றியூருக்கு தமது அடியார்களுடன் வந்து சேர்ந்தார். அங்கிருந்த அடியார்கள் சுந்தரரின் வருகையையொட்டி அவருக்கு ஒரு மடத்தை தயார் செய்து அதில் அவர்கள் அனைவரையும் தங்கவைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து கொடுத்தனர்.

மடத்தில் தங்கியிருந்த சுந்தரர் எம்பெருமானை எண்ணி வணங்கிக் கொண்டிருந்தார். ஒருநாள் சுந்தரர் அடியார்களுடன் சூழ கோவிலை வலம் வந்த வண்ணமாக மண்டபத்தினுள் நுழைந்தார். அச்சமயத்தில் சங்கிலியார் எம்பெருமானுக்கு சாற்றுவதற்காக நறுமண மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை கரங்களில் ஏந்திய வண்ணம் திரைமறைவில் இருந்து வெளியே வந்தார். பின் கோவில் மூல ஸ்தானத்தில் உள்ள அர்ச்சகரிடம் கொடுத்துவிட்டு நொடிப்பொழுதில் அவ்விடத்தை விட்டு மறைந்து பின்பு மடத்திற்குச் சென்றார்.

சங்கிலியாரின் வருகையை யாரும் அறியா வண்ணம் கர்ம பலனின் பலனாக ஒருவர் மட்டுமே அதாவது, சுந்தரர் மட்டும் அறிந்து கொண்டார். சங்கிலியாரின் ரூப லாவண்யத்தில் தம்மை மெய்மறந்து நின்று கொண்டிருந்தார் சுந்தரர். விதி வலியது அல்லவா? சங்கிலியாரை கண்டதுமே சுந்தரரின் மனமோ அவள்பால் செல்லத் துவங்கியது. நொடிப் பொழுதில் மறைந்து சென்ற மின்னலைப் போல திரைமறைவில் இருந்து அழகிய எழில் ரூபம் கொண்ட வானவில் போன்று ஒப்பற்ற மேனியுடைய மங்கையின் பால் மனம் சென்றது. 

அதுமட்டுமல்லாமல் தன்னையும் மறந்து அவ்விடத்தில் குழப்பத்தில் நின்று கொண்டிருந்தார். ஆதவன் வருகையால் இன்று பூத்த பூக்களைப் போல வண்டும் தீண்டாத அழகிய இதழ்களை உடைய மலரை போன்ற மங்கையரை கண்டதும் மனம் தடுமாற்றம் அடைந்தார். அவருடைய உணர்வுகளில் மாற்றங்கள் ஏற்பட துவங்கின. மையல் தாக்கத்தின் காரணமாக அவர் மெய்யும், மனமும் தாளாத துன்பக் கடலில் மூழ்கியது. அவர் மனதில் எண்ணற்ற கேள்விகள் அவ்விடத்தில் ஏற்படத் துவங்கின.

சுந்தரரோ... நாம் இதுவரை பல அழகிய மங்கையரை கண்டதும் அவர்பால் செல்லாத என் மனம் இந்த மங்கையை கண்டது முதல் இவள்பால் செல்ல என்ன காரணம்? என எண்ணினார். மேலும், யார் இந்த மங்கை? என்ற பல கேள்விகளுடனும், பலவிதமான குழப்பங்களுடனும் அவர் மனமும், முகமும் சோர்ந்து காணப்பட்டது. தமது குழப்பத்தில் இருந்து விடுபட தமக்கு அருகில் இருந்தவர்களிடம் திரைமறைவில் இருந்து தோன்றி மறைந்த அந்த பெண் யார்? என்றும், அவள் எங்கு இருக்கின்றாள்? என்றும் வினவினார்.

அவர் வினாவிய வினாக்களுக்கு பதிலும் கிடைக்கத் தொடங்கின. அதாவது, அருகில் இருந்தோர் அவள் பெயர் சங்கிலியார் என்று கூறினர். மேலும், இறைவனின் மீது அளவற்ற பக்தியும், தெய்வத்தன்மையும் பொருந்தியவள் என்றும், எம்பெருமானின் பாத கமலங்களை என்றும் போற்றி வணங்கி வரும் கன்னியராவாள் என்றும் விடையளித்தனர். பின்பு அவர் கோவிலின் அருகே உள்ள கன்னிமாடத்தில் தங்கிக் கொண்டு இருக்கின்றார் என்ற விவரத்தையும் கூறினார்கள்.

சங்கிலியாரை பற்றிய முழு விவரங்களையும் தெளிவாக அறிந்துக் கொண்ட சுந்தரர் பரவையாரை எவ்விதம் பரமனின் அருளோடு மணம் புரிந்தேனோ... அதேபோல சங்கிலியாரையும் எம்பெருமானின் திருவருளோடு அவளை அடைந்து தீருவேன் என்று தமக்குள் தீர்மானத்தோடு முடிவு செய்தார். மனதில் எம்பெருமானை எண்ணிய வண்ணமாக எம்பெருமானே... அன்று பரவையாரை எமக்கு திருமணம் செய்து வைத்தது போல உம்முடைய பாதக்கமலங்களுக்கு பூமாலையை கொடுக்க வந்திருக்கும் சங்கிலியாரையும் மணம் முடித்து வைப்பாயாக...! என்று எண்ணினார்.

அதுமட்டுமல்லாமல் உன்னை மட்டும் எண்ணி வழிபட்டு கொண்டிருந்த என் மனதை அவள்பால் இழுத்து சென்று விட்டாள். இனி என்ன செய்வது? என்று புரியாமல் மனக்குழப்பத்தில் நிற்கும் எம்மை காத்து அருள்வாயாக... என்று இறைவனிடம் வேண்டினார் சுந்தரர்.

அடியாரின் எண்ணத்தை அறிந்த எம்பெருமான் அவருடைய கனவில் தோன்றி உமது விருப்பப்படியே சங்கிலியாரை உமக்கு மணமுடித்து வைக்கின்றோம் என்று கூறி மறைந்தார். இதேபோன்று சங்கிலியாரின் கனவிலும் எழுந்தருளினார் எம்பெருமான். சொப்பனத்தில் எம்பெருமானை கண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி கொண்ட சங்கிலியார், எம்பெருமானே...! நான் என்ன தவம் செய்தேனோ? உங்களை காணும் பாக்கியத்தை கிடைக்கப்பெற்றேன் என்று உரைத்த வண்ணம் அவருடைய பொற்பாதங்களில் வீழ்ந்து வணங்கி பரவசமடைந்தாள்.

பின்பு தாங்கள் இவ்விதம் வந்ததற்கு நாம் என்ன செய்வோம்? என்று உரைத்த வண்ணம் நின்று கொண்டிருந்தாள். எம்பெருமான் சங்கிலியாரை நோக்கிய வண்ணம் என் மீது அன்பும், மேருமலையை விட உயர்வான தவ வலிமையும் கொண்டிருக்கக்கூடிய சங்கிலியாரே...!! எம்மால் தடுத்தாட் கொள்ளப்பட்ட சுந்தரர் என்னும் அடியார் உன்னை அடையக் கருதி எம்மிடம் வந்து நின்றார். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு யாம் இங்கு எழுந்தருளி இருக்கின்றோம்.

நீ அவனை மணம்முடித்து மகிழ்வாக இவ்வுலகில் வாழ்வாயாக.. என்று திருவாய் மலர்ந்தார் எம்பெருமான். ஐயனே...! உங்களது கட்டளையை சிரமேற்கொண்டு யாம் அதை செய்கின்றோம். ஆனால், அவர் ஏற்கனவே பரவையாரை திருவாரூரில் மணமுடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்பது இவ்வையகம் அறிந்த உண்மையாயிற்று. அவ்வாறு இருக்க அவருக்கு என்னை மீண்டும் இன்னொரு திருமணம் செய்து வைப்பது சாத்தியமாகுமா? தேவருக்கு எல்லாம் தேவராக இருக்கக்கூடிய மகாதேவரே... நான் அவரிடம் எப்போதும் போல் மனைவியாக இருக்க ஏதேனும் வழிமார்க்கம் உள்ளதா? என்றும் பணிவன்புடன் கேட்டுக் கொண்டாள் சங்கிலியார்.

சங்கிலியார் உரைத்ததை கேட்ட எம்பெருமான் சுந்தரன் உன்னை விட்டு பிரியாமல் இருக்க உனக்கு சத்தியம் செய்து தருவார் என்று கூறி மறைந்தார். மீண்டும் எம்பெருமான் சுந்தரர் கனவில் எழுந்தருளினார். எம்பெருமானை வணங்கி நின்றார். எம்பெருமான் சுந்தரரை நோக்கி சுந்தரா...! உமது விருப்பத்தை சங்கிலியாரிடம் உரைத்தோம். ஆனால் அவளை நீ மணம் செய்து கொள்வதில் ஒரு நிபந்தனை உள்ளது என்றார்.

சுந்தரர்... ஐயனே...! இந்த அடியேன் ஏற்க வேண்டிய நிபந்தனை யாது? என்று உரைப்பீர்களாக என்று கூறினார். சுந்தரா...!! சங்கிலியாரிடம் நீ அவளை விட்டு என்றும் பிரியாமல் அவளுடனேயே இருப்பேன் என்று உறுதி கொடுத்தால் மட்டுமே அவளை உன்னால் மணக்க முடியும் என்று கூறினார். தம்மை என்றும் நினைவில் வைத்து வழிபட்டுக் கொண்டு இருக்கக்கூடிய அத்தொண்டர்களுக்காக இவ்விதமான அற்புதத் திருவிளையாடல் நடத்தி ஆனந்தித்தார் திருவொற்றியூர் பெருமான். எம்பெருமான் மறைந்ததும் சங்கிலியார் நித்திரையில் இருந்து விழித்தெழுந்தாள்.

கண் விழித்து பார்த்தபோது எம்பெருமான் அவ்விடத்தில் இல்லாததை கண்டு மிகவும் மனம் வருந்தினாள். எம்பெருமான் தம் கனவில் தோன்றி உரைத்ததை எண்ணி தம்மீது எம்பெருமான் கொண்டுள்ள அன்பை எண்ணி மகிழ்ச்சி கொண்டிருந்தாள். சிறிது நேரம் என்ன செய்வது? என்று புரியாமல் மனக்குழப்பத்துடனும், நித்திரை இல்லாமலும் தவித்துக் கொண்டிருந்தாள். சற்றுநேரம் என்ன செய்வது? என்று சிந்தித்தாள். பின்பே தம் மனதில் எதையோ எண்ணிய விதத்தில் தம் அருகில் படுத்து இருக்கக்கூடிய தோழியர்களை எழுப்பினாள்.

திடீரென்று சங்கிலியார் எழுப்பியதும் என்னவாயிற்று தேவியே... ஏதாவது பிரச்சனையா? என்று உரைத்த வண்ணம் நித்திரையில் ஆழ்ந்திருந்த அவளுடைய தோழிகள் அனைவரும் திடுக்கிட்டு எழுந்தனர். பின்பு அவர்களிடம் தமது உரிய சொப்பனத்தில் எம்பெருமான் எழுந்தருளி கூறியதை தன் தோழிகளிடம் கூறினாள். மறுநாள் காலையில் சங்கிலியார், தோழியருடன் திருமாலைகள் சாற்றுவதற்காக வேண்டியளவு நறுமலர்களை பறித்து கொண்டாள். பின் திருக்கோவிலை வந்தடைந்தாள்.

சுந்தரரும் சங்கிலியாரின் வருகையை எதிர்பார்த்து கோவிலுக்கு வந்திருந்தார். திருத்தலத்தில் சங்கிலியாரை கண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி கொண்ட சுந்தரர் அவளருகே சென்று எம்பெருமான் சொப்பனத்தில் எழுந்தருளி திருவருள் புரிந்ததனை கூறினார். அதைக் கேட்டதும் சங்கிலியார் நாணத்தால் கன்னம் சிவக்க, புன்னகையை சிந்திவிட்டு அன்னம்போல நடந்து கோவிலுள் புகுந்தாள். சுந்தரர் சங்கிலியாரின் பின்சென்று எம்பெருமான் கனவில் தோன்றி அருளியதற்கு ஏற்ப, உம்மை மணம் முடித்துக் கொண்டு என்றும் உன்னை விட்டு பிரியாமல் இவ்வூரிலேயே வாழ்கிறேன் என்னும் வாக்குறுதியை அளிக்கும் பொருட்டு எம்பெருமான் திருமுன்பு வருவீர்களாக! என்று கேட்டுக் கொண்டார்.

சுந்தரர் இவ்விதம் உரைத்ததும் சங்கிலியாரின் அருகிலிருந்த தோழியர்கள் பெருமானே...!! இவ்வாக்குறுதி அளிக்கும் பொருட்டு எம்பெருமான் திருமுன் அளிப்பது என்பது அவ்வளவு முறையானதாக புலப்படவில்லை. அதற்கு பதிலாக வேறு இடத்தில் தாங்கள் வாக்குறுதி அளிப்பது நன்றாக இருக்குமே... என்று கூறினார்கள். தோழியர்களின் பேச்சுக்களை கேட்டதும் சுந்தரர், தோழிகளே...!! எம்பெருமானின் முன் சபதம் அளிப்பதை விட வேறு சிறந்த இடம் எங்கு உள்ளது? என்று வினவினார்.

பெருமானே...!! இத்திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் முன்பு சபதம் அளிப்பதைக் காட்டிலும் மகிழ மரத்தின் அடியில் எம் தலைவியிடம் நீங்கள் உறுதி அளித்தால் அதுவே எங்களுக்கு போதுமானதாக இருக்கும் என்று கூறினார்கள் தோழியர்கள். தோழியர்கள் கூறியதைக் கேட்டதும் சுந்தரர் சற்று திடுக்கிட்டார். ஏனெனில் எம்பெருமானை மகிழ மரத்தடியில் அல்லவா? எழுந்தருளியிருக்க உரைத்துள்ளோம் என்று எண்ணி நிலை தடுமாறினார்.

இருந்தாலும் சுந்தரர் தமது மனதில் இருந்துவந்த தயக்கத்தையோ, ஐயத்தையோ எவ்விதத்திலும் வெளிப்படுத்தாமல் தோழியர்களின் விருப்பத்திற்கு மாறாக நடக்க விரும்பவில்லை. தோழியர்கள் வினவியதற்கு ஏற்ப மகிழ மரத்தடியில் சபதம் செய்து கொடுப்பது என்ற தீர்மானத்திற்கு வந்தார். பின்பு தோழியர்கள் மற்றும் அவர்களுடைய தலைவியான சங்கிலியாரையும் அழைத்துக்கொண்டு மகிழ மரத்தின் அருகே சென்றார். சுந்தரர் மகிழ மரத்தை வலம் வந்து எம்பெருமானை மனதில் எண்ணியவாறு சங்கிலியாரை நோக்கி அழுத்தம் திருத்தமாக திருவொற்றியூரை விட்டு அகன்று உன்னை எப்பொழுதும் பிரியமாட்டேன் என்று சபதம் செய்து கொடுத்தார்.

சுந்தரர் கூறிய வார்த்தைகள் சங்கிலியாரின் செவிகளில் விழுந்தது. சங்கிலியார் தாம் எடுத்த பிறவியில் முழுப்பயனை அடைந்ததாக பேரின்பக் கடலில் மூழ்கினார். பின்பு சுந்தரரின் திருவடியில் வீழ்ந்து வணங்கினாள். சுந்தரரின் பாதக்கமலங்களில் விழுந்த சங்கிலியாரை தொட்டு தூக்கினார். பின்பு அவர்களிடம் இனிய உரையை ஆற்றிவிட்டு அவ்விடம் விட்டு புறப்பட்டு சென்றார். சங்கிலியாரும் பிரியமுடன் சுந்தரரை விட்டு சேடியர்களுடன் சென்று கொண்டிருந்தாள். அவளின் உருவம் மட்டுமே சேடியர்களுடன் இருந்ததே தவிர, உள்ளம் என்பது சுந்தரரை எண்ணிக் கொண்டே இருந்தது.

சுந்தரர் எம்பெருமானின் திருச்சன்னதியை அடைந்து இறைவனின் பாதக்கமலங்களை பணிந்து பதிகம் பாடி துதித்துக் கொண்டிருந்தார். அவர் பாடிய பதிகத்தால் மனம் மகிழ்ந்த எம்பெருமானும் அன்று இரவே அவர்களின் திருமணத்திற்கான வேலைகளையும் மேற்கொள்ளத் தொடங்கினார். அதாவது சுந்தரருக்கும், சங்கிலியாருக்கும் திருமண வைபவத்தை நடத்தி வைக்கும் பொருட்டு திருவொற்றியூரில் உள்ள சிவத்தொண்டர்கள் அனைவரின் கனவிலும் எழுந்தருளி எம்மால் தடுத்தாட் கொள்ளப்பட்டவரான சுந்தரருக்கும், சங்கிலியாருக்கும் திருமணத்தை நடத்தி வைப்பீர்களாக...! என்று ஆணையை பிறப்பித்தார்.

சிவத்தொண்டர்கள் பலரும் ஒன்றிணைந்து சுந்தரருக்கும், சங்கிலியாருக்கும் எம்பெருமான் இட்டுச்சென்ற ஆணையை எடுத்துரைத்து அவர்களின் திருமணத்தை நடத்தி வைப்பதற்கான சுபகாரியங்களை மேற்கொள்ள தொடங்கினார்கள். சங்கிலியாரின் திருமண செய்தியானது அவர்களின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. பெற்றோர்களும் தனது மகளின் திருமணத்தை எண்ணி மிகவும் மகிழ்ச்சி கொண்டனர். மங்களகரமான ஒரு நன்னாளில் இவ்வையகமே வியக்கும் வண்ணம் சுந்தரருக்கும், சங்கிலியாருக்கும் மிக சிறப்புடன் திருமணம் நடைபெற்றது.

எம்பெருமானின் அருள்பெற்ற சங்கிலியாரும், சுந்தரரும் கணவன்-மனைவியாக இணைந்து இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்தினார்கள். சங்கிலியார் அழகிய மலர்களாலான மாலையை எம்பெருமானுக்கு தொடுத்தும், சுந்தரர் பைந்தமிழ் பாமாலையால் எம்பெருமானை போற்றியும் வழிபட்டனர். இருவரும் இல்லற வாழ்க்கையில் இணைந்து வணங்கி சிவத்தொண்டுகள் பல புரிந்து இல்லறமெனும் இன்பக்கடலில் மூழ்கி மிதந்து எல்லையில்லா இன்பம் பூண்டு வாழ்ந்து வந்தனர். காலங்கள் உருண்டோட துவங்கியது. வசந்த காலம் பிறந்தது. 

திருவாரூரில் எழுந்தருளி உள்ள பெருமானுக்கு வசந்த காலத்தில்தான் பெருவிழா நடைபெறுவது வழக்கம். வனத்தில் இருந்து மரங்களுக்கு இடையே தென்றல் காற்று சுந்தரர் மேனியில் பட்டு ஒரு விதமான மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தியது. இத்தகைய வசந்த காலத்தில் தென்றலில் சுந்தரமூர்த்தி சங்கிலியாருடன் சுந்தரகீதம் பாடிய வண்ணம் சொக்கி மகிழ்ந்து கொண்டிருந்தார். அவரது உள்ளுணர்வு வசந்த காலத்தில் திருவாரூரில் நடைபெறும் திருவிழாக் காட்சியையும், அத்திருவிழாக் கோலத்தில் தியாகேசப் பெருமான் எழுந்தருளியிருக்கும் காட்சியையும் பரவையார் பக்திப் பெருக்கோடு பரமன் முன்னால் பரதம் ஆடி அகம் மகிழ்வதை போன்ற காட்சியையும் தோன்றச் செய்தது.

எம்பெருமானின் சிந்தனைகள் மனதில் ஏற்பட 'எத்தனை நாளும் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே" என்ற குறிப்பை உணர்த்தும் தமிழ் பாமாலையை பாடினார். எம்பெருமானின் சிந்தனைகள் மனதில் அதிகரிக்க சுந்தரரால் திருவொற்றியூரில் இருக்கவே இயலவில்லை. எம்பெருமானின் நினைவால் மனம் மகிழ்ச்சி அடைந்த சுந்தரர் சங்கிலியாருக்கு தான் செய்து கொடுத்த சபதத்தை மறந்தார்.

எப்படியாவது திருவாரூருக்கு புறப்பட்டு செல்ல வேண்டும் என்ற திடமான முடிவிற்கு வந்தார். ஒருநாள் சுந்தரர் சங்கிலியாருக்கு தெரியாமல் திருவொற்றியூர் எல்லையை கடந்து அடியெடுத்து வைத்தார். சங்கிலியாருக்கு கொடுத்த சபதத்தை மீறிய அக்கணம் முதல் சுந்தரரது கண்கள் இரண்டும் ஒளியை இழந்தன. சுந்தரர், பார்வையில் ஒளி இல்லாமையை எண்ணி என்ன செய்வது? என்று சிந்தித்தார்.

அப்பொழுது சங்கிலியாருக்கு தாம் அளித்த உறுதிமொழியை காப்பாற்றாமல் மீறியதால் இறைவன் நமக்களித்த தண்டனையே இது என்பதை நன்கு உணர்ந்தார். பின்பு 'அழுக்கு மெய்கொடு" என தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடி எம்பெருமானை இறைஞ்சி நின்றார். ஆனால் இம்முறையும் எம்பெருமான் சுந்தரருக்கு அருள்புரியாமல் காலம் தாழ்த்தி கொண்டிருந்தார்.

மேற்கொண்டு இருப்பவைகளை நன்கு பரிட்சித்து கொண்ட சுந்தரரும் இனியும் பொறுத்தலாகாது என்று எண்ணி எப்படியாவது திருவாரூரை அடைய வேண்டும் எனவும், தியாகேசப் பெருமானை வழிபட வேண்டும் என்ற மன உறுதியுடனும் இருந்தார். மேலும், பார்வையில்லாத விழிகளுடன் தட்டுத்தடுமாறி உடன் வருவோர் வழிக்காட்ட வடதிருமுல்லைவாயிலில் எழுந்தருளியுள்ள கருநட்ட கண்டரை தரிசித்து திருப்பதிகம் பாடி திருவெண்பாக்கம் என்ற ஊரினை அடைந்தார்.

பார்வை இழந்த சுந்தரருக்கு தொண்டர்கள் வழிகாட்டினர். திருவெண்பாக்கத்தில் எழுந்தருளியுள்ள இறைவனை வழிபட தனக்கு விழிகள் இல்லையே?... என்று மனம் கலங்கிய சுந்தரர்,

பிறைசூடிய பெருமானே...!!

நீவிர் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளீரா?

தாங்கள் இருந்தும் எம்மால் காண முடியவில்லையே?

இது என்ன? கால கொடுமையா?

என்று இறைவனிடம் இறைஞ்சி நின்றிருந்தார். சுந்தரரின் மன வருத்தத்தையும், அவர் எண்ணத்தையும் அறிந்து கொண்ட எம்பெருமான் அவர் கரங்களில் ஊன்றுகோல் ஒன்றை அளித்து சுந்தரா...!! 'யாம் கோவிலில் உள்ளோம் நீர் போவீர்" என்று எப்பொழுதும் உரைப்பது அன்றி புதிதான முறையில் விடையளித்தார் விடையின்மீது எழுந்தருளிய எம்பெருமான்.

எப்போதும் இல்லாமல் இப்பொழுது எம்பெருமான் தன்னிடம் கடுமையாக உரைப்பதைக் கண்டு மனவேதனை அடைந்த சுந்தரர் 'பிழையுறன பொறுத்திடுவர்" எனத் துவங்கும் பாடலை மெய்யுருக எம்பெருமானிற்காக பாடினார். இருப்பினும் எம்பெருமான் தன் மீது கொண்டுள்ள அன்பின் பொருட்டு தமக்கு இத்தலத்தில் வழிகாட்ட ஒரு ஊன்றுகோலை கொடுத்துள்ளார் என்பதை எண்ணி சிறிய அளவில் மனமகிழ்ச்சி கொண்டார்.

பின் ஊன்றுகோலை ஊன்றிக் கொண்டு அத்தலத்தில் இருந்து புறப்பட்டு திருவாலங்காடு, திருவூறல் போன்ற வௌ;வேறு எம்பெருமான் எழுந்தருளியுள்ள மற்ற தலங்களை வழிபட்ட வண்ணம் காஞ்சி மாநகரத்திற்கு வந்தடைந்தார். பல வண்ண மலர்களால் சூழப்பட்டுள்ள சோலைகள் நிரம்பிய காஞ்சி மாநகரத்தில், எழுந்தருளி காட்சி அளிக்கக்கூடிய காமாட்சி அம்மையாரின் சன்னதியை அடைந்து அம்மையை வணங்கி விட்டு ஏகாம்பரநாதரை காண அவர் எழுந்தருளியிருக்கும் சன்னதிக்கு சென்றார்.

தேவர்களுக்கு அமிர்தம் கிடைப்பதற்காகவும், ஜீவராசிகள் அனைவரின் நலனிற்காகவும் நஞ்சுண்ட பிறைமுடி நாதனே...!!

உன்னுடைய ஆனந்த சொரூபத்தை காண்பதற்கு அடியேன் செய்த பிழையை பொறுத்தருளி பார்வை அளித்திட வேண்டும் ஐயனே...!

பூவுலக வாழ்க்கையில் மனம் லயிக்காமல் என்னை தடுத்து ஆட்கொண்ட என் மன்னனே...!!

உன்னுடைய அருள் கோலத்தை கண்டு மகிழ உன் தோழனுக்கு பார்வை அளிக்கக்கூடாதா?...

என் தோழா...!! எம் உணர்வுகள் அனைத்தையும் அறிந்தும், அறியாதது போல இருப்பது முறையா?

என்றெல்லாம் பலவாறாக உரைத்த வண்ணம் எம்பெருமானிடம் இறைஞ்சி காமாட்சி அம்மையாரினால் வழிபடப்பட்ட ஏகாம்பரநாதரின் பாதக்கமலங்களை பணிந்து பாமாலை பாடினார் சுந்தரர்.

சுந்தரருடைய பாமாலைகளால் மனம் மகிழ்ந்த எம்பெருமான், காமாட்சி அம்மையாரால் உருவாக்கப்பட்ட ஏகாம்பரநாதரின் அழகிய தோற்றத்தை காணும் பொருட்டு சுந்தரரின் இடது கண் பார்வை மட்டும் அளித்து தமது திருக்கோலத்தை காட்டினார். எம்பெருமானின் அருட்பார்வையால் பார்வை கிடைக்க பெற்ற சுந்தரர் மனம் மகிழ்வுற்று ஆனந்த கூத்தாடினார். நிலத்தில் பன்முறை வீழ்ந்து எம்பெருமானை வணங்கி எழுந்தார். 'ஆலந் தானுகந் தமுதுசெய் தானை" என்று தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். ஏகாம்பரநாதரின் பாதக்கமலங்களை பலவாறாக துதித்து போற்றினார்.

பின்பு சுந்தரர் தனது தொண்டர்களுடன் சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்து சிவ வழிபாடு செய்து வந்தார். யாவரும் எதிர்பார்க்காத ஒரு நாளில் அவ்விடத்தில் இருந்து புறப்பட்டு தமது சிவயாத்திரை பயணத்தை துவங்கினார். இரவென்றும், பகலென்றும் பாராமல் தமது யாத்திரையை மேற்கொண்டார். ஓய்வில்லாத பயணத்தினால் அவருக்கு உடல் சோர்வும், தளர்வும் ஏற்படத் துவங்கியது. உடலில் எந்த நிலையாயினும் எம்பெருமானை வழிபடுவது மட்டும் எந்நிலையிலும் கை விடுதல் ஆகாது என்ற எண்ணமே அவரை பல சிவத்தலங்களுக்கு அழைத்துச் சென்று தரிசித்து பதிகங்கள் பலவற்றை பாட வைத்தது. 

பல பதிகங்கள் பாடிய வண்ணமே மாத்தூர் திருநெல்வாயில் வழியாக காவேரி ஆற்றை கடந்து திருவாவடுதுறையை அடைந்தார். திருவாவடுதுறையில் இருக்கின்ற திருத்துருத்தியை அடைந்து அவ்விடத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானை வலம் வந்து வணங்கி தம் உடலில் ஏற்பட்டுள்ள இப்பிணியை ஒழித்து எம்மை காக்க வேண்டும் என்று பணிந்து நின்றார். 

சுந்தரருடைய அன்பிற்கு கட்டுப்பட்டு இருந்த திருத்துருத்தியார், தம்பிரானே...!! அச்சம் கொள்ள வேண்டாம். இக்கோவிலின் வடபுறத்தில் அமைக்கப்பட்டுள்ள குளத்தில் நீராடினால் உமது உடலில் ஏற்பட்டுள்ள நோய்கள் யாவும் விலகும் என்று அருளினார். அரணாரின் அன்பு மொழியைக் கேட்டு மனம் மகிழ்ந்த சுந்தரர் கோவிலின் வடபுறத்தில் உள்ள குளத்தில் ஐந்தெழுத்து மந்திரமான பஞ்சாட்சரத்தை மனதில் எண்ணிய வண்ணம் மூழ்கி எழுந்தார்.

சுந்தரர் குளத்திலிருந்து மூழ்கி எழுந்ததும் அவரது உடலில் துன்புறுத்தி வந்திருந்த பல நோய்கள் அகன்று கதிரவன் ஒளியில் இருள் நீங்கி புத்துணர்ச்சி பெற்றார். அதாவது, சுந்தரரின் உடலும் புத்துணர்ச்சியும் பெற்று புதுமேனியையும், தெம்பையும் பெற்றார். இறைவனின் அருளை போற்றி 'மின்னுமா மேகம்" எனத் தொடங்கும் பதிகத்தை பாடி மகிழ்ச்சி கொண்டார். பின்பு எம்பெருமானின் அருளை நினைத்த வண்ணமாக தனது அடியார்களுடன் திருவாரூரை நோக்கி புறப்பட்டு எல்லையை அடைந்தார் சுந்தரர். 

திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் தியாகேசப் பெருமானின் கோபுரத்தை கண்டு மனம் மகிழ்ந்தார். ஆதவன் மறையும் வேலையிலேயே திருக்கோவிலுக்குள் நுழைந்தார். திரு பரவையுண் மண்டலி என்னும் ஆலயத்தை வலம் வந்து வழிபாடு செய்த வண்ணம் 'தூவாயத் தொண்டு" என்று தொடங்கும் செந்தமிழ் பாமாலையினை பாடி மனம் குளிர்ந்தார் சுந்தரர். பின்பு 'குருகு பாய" எனத் தொடங்கும் சிவப்பதிகத்தை பாடிய வண்ணமே சிவ அடியார்களுடன் தேவாசிரிய மண்டபத்தை அடைந்தவுடன் விமானத்தை தரிசித்த வண்ணமாக புற்றிடங்கொண்ட எம்பெருமானின் பாதக்கமலங்களை போற்றி பணிந்தார்.

எம்பெருமானே...!! தங்களுடைய தோழனுக்கு ஏற்பட்டுள்ள இந்த துயரத்திலிருந்து நீங்கும் பொருட்டு மற்றொரு கண்ணுக்கும் ஒளி அளிப்பிரோ...!!

என்று இறைஞ்சிய வண்ணமாக 'மீளா வடிவை" எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார்.

சுந்தரர் திருப்பதிகம் பாடியும், எந்தவிதமான மாற்றமும் ஏற்படாமல் இருப்பதை கண்டு

ஐயனே...! உமது திருமலர்த்தாளினை என்றும் விடாது பற்றிக் கொண்டிருக்கும் உமது அடியேனுக்கு தீராத துன்பம் ஏற்பட்டு இருப்பதை அறிந்தும்...

அவரை துன்பத்தில் இருந்து காத்தருளும் எம்பெருமானே...!!

அப்படி இருப்பவர் எம்மை மட்டும் காக்காமல் இருப்பது ஏனோ? என்ற குறிப்புடன் வெளிப்படக்கூடிய 'அடிமையும், தோழமையும் கலந்த" என்னும் பொருள்படக்கூடிய தமிழ் பாக்களால் பதிகம் ஒன்றை பாடினார் சுந்தரர். சுந்தரமூர்த்தியார் இயற்றிய தமிழ் பாக்களின் மனம் குளிர்ந்த செஞ்சுடர் செம்மல் மனமிரங்கி அவருக்கு வலது கண்ணில் ஏற்பட்டுள்ள குறையை நிவர்த்தி செய்து பார்வையை அளித்தார்.

ஆதவன் உதிக்கையிலேயே ஆதவனை கண்டதும் மலர்ந்து எழும் தாமரை மலர் போல எம்பெருமானின் அருளால் பார்வை பெற்ற சுந்தரரின் முகமோ ஒளி பெற்றதோடு பேரானந்தம் அடைந்தார். அக்கணத்தில் இவ்வுலகையே மறந்து பரமனை எண்ணி பணிந்து போற்றி கொண்டிருந்தார். கண்பார்வை கிடைத்த சுந்தரர், உணர்ச்சிக்கு அடிமைபட்டு கண்மூடித்தனமாக செயல்பட்டமையால் பரவையாருக்கு செய்த துரோகத்தை எண்ணி மனவேதனை அடைந்தார்.

பின்னர் சுந்தரர் என்ன செய்வது? என்று புரியாமல் பரவையார் மாளிகைக்கு செல்ல தைரியம் இல்லாமல் அஞ்சினார். பின்பு தேவாசிரிய மண்டபத்திலேயே இரவு முழுவதும் தங்கி இருந்தார். சுந்தரர் எம்பெருமானை வழிபடுவதற்காக தம்மை விட்டு பிரிந்து சென்ற பிறகு பரவையார் அவருடைய பிரிவினை ஏற்றுக் கொள்ள இயலாமல், சொல்ல வார்த்தைகள் இல்லாத அளவிற்கு துன்பத்தை அடைந்தாள். பகல் பொழுதுகள் யாவும் இரவாகவும், இரவு பொழுதுகள் யாவும் பகல் பொழுதாகவும் அவளுக்கு கழிந்தன.

மனதில் சுந்தரரின் பிரிவினையை ஏற்றுக் கொள்ள முடியாமல் சிறிதளவு அதாவது, கடுகளவு நிம்மதி என்பது கூட இல்லாமல் மிகவும் துன்பப்பட்டாள். நீரில்லா செடியினை போல நன்கு துன்பப்பட்டு கொண்டிருந்த வேளையில் திருவொற்றியூரில் சுந்தரர் சங்கிலியாரை திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தியை கேட்டாள். பின் அதனால் பரவையார் மேலும் மனவேதனையும், அவர்மீது கோபமும் கொண்டாள். இரவென்றும், பகலென்றும் பாராது மாலையிட்ட மணாளளின் நினைவாக இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் பரவையார், இந்த செய்தியைக் கேட்டதும் மனமுடைந்து பட்டுகள் நிறைந்த ரத்தின மாலைகள் சூட்டப்பட்ட படுக்கையில் நித்திரை இல்லாமல் துன்பத்தில் ஆழ்ந்திருந்தாள்.

இவ்விதமாக பரவையார் வாழ்ந்து வரும் காலத்தில் தேவாசிரிய மண்டபத்தில் தங்கியிருந்த சுந்தரர் தாம் இங்கு வந்திருப்பதாகவும், மாளிகைக்கு வர அஞ்சுவதாகவும் தமது ஏவலர்கள் சிலரை பரவையார் தங்கியிருக்கும் மாளிகைக்கு அனுப்பி வைத்து இத்தகவலை தெரிவிக்குமாறு ஏற்பாடுகள் செய்தார். சுந்தரரின் ஆணைப்படியே ஏவலர்கள் அனைவரும் பரவையார் இல்லத்திற்கு சென்றனர். ஆயினும் அவர்களால் பரவையாரை காண முடியவில்லை.

சுந்தரர் ஏவலர்களை அனுப்பிய செய்திகளை எப்படியோ தெரிந்து கொண்ட பரவையார், தோழியர்களிடம் அவருடைய மாளிகையின் கதவுகளை அடைத்து வைக்குமாறு ஆணையிட்டார். அதைப்போலவே பரவையாரின் மாளிகையின் கதவுகளும் அடைக்கப்பட்டன. ஏமாற்றத்தோடு திரும்பி வந்த ஏவலர்கள் சுந்தரரிடம் ஐயனே...!! தாங்கள் திருவொற்றியூரில் சங்கிலியாரை திருமணம் செய்து வாழ்ந்த செய்தியை அறிந்து கொண்டிருந்த அம்மையார் எங்களை பார்க்க மறுத்ததோடு மட்டுமல்லாமல் தோழிகளிடம் உரைத்து கதவையும் தாழிட செய்துவிட்டார்கள் என்று கூறினார்கள்.

ஏவலர்கள் உரைத்ததை கேட்டு சித்தம் கலங்கிய சுந்தரர், இனி பரவையார் மாளிகைக்குள் எவ்விதம் செல்வது? என்று எண்ணி மனம் கலங்கினார். நன்கு சிந்தித்த சுந்தரர் பின்பு ஒரு முடிவுக்கு வந்தார். அதாவது, உலக வாழ்க்கையில் நல்ல அனுபவமுள்ள, திறமை மிக்க, நற்குணங்கள் நிரம்பிய மாதர்களை பரவையாரிடம் தூது அனுப்பி வைக்கலாம் என்று எண்ணினார்.

அதற்கு தகுந்த மாதிரியே சில மாதர்களை அவர் சந்தித்து தனது மனதில் இருக்கும் குறைகளை வெளிப்படுத்தினார். மேலும், அதை பரவையாரிடம் எடுத்துரைத்து பரவையார் தம் மீது கொண்டுள்ள கோபத்தை மறந்து எம்மை மீண்டும் ஏற்றுக்கொள்ள செய்யுமாறு கேட்டுக் கொண்டார். மாதர்களும் அவரது எண்ணங்களுக்கு மதிப்பளித்து பரவையாரை சந்தித்து நல்லதொரு முடிவோடு திரும்பி வருகின்றோம் என்று உரைத்துவிட்டு பரவையார் மாளிகையை அடைந்தார்கள்.

மாளிகையில் பரவையாரை சந்தித்ததும் அவரிடத்தில் வணக்கத்தை தெரிவித்த வண்ணம் சுந்தரரின் எண்ணங்களை வெளிப்படுத்த தொடங்கினார்கள் அம்மாதர்கள். நற்குணங்கள் நிரம்பிய எங்கள் தலைவியே...!! தங்களுடன் மீண்டும் வாழ உங்கள் தலைவன் இவ்விடத்திற்கு வந்துள்ளார். அவருடைய பெருமையும், உங்களது பெருமையும் எண்ணிலடங்கா அளவில் இருக்கக்கூடியது. அவ்வாறு இருக்கையில் நீங்கள் அவரின் மீது கோபம் கொண்டு அவருடன் இணைந்து வாழாமல் தனித்து இருப்பது நமது பண்பிற்கு முறையானது அல்ல என்றும் கூறினார்கள்.

பரவையாரிடம், மாதர்கள் இறைவனின் திருவருளால் ஒளியிழந்த கண்களில் மீண்டும் ஒளிப்பெற்ற தலைவர் உங்களை காண வருகையில் நீங்கள் அவரை ஏற்றுக் கொள்ளாமல் தவிக்கவிட்டு அவரை துன்பத்தில் ஆழ்த்துவது முறையானதா? என்றும், ஒளிப்பெற்ற கண்களை வைத்து மீண்டும் துன்பத்தில் ஆள்வதற்காகவா அவர் மீண்டும் கண்களை பெற்றார்? என்றும் கூறினர். மேலும், அவர் இறைவனிடம் பெற்ற கண்களின் மூலம் உங்களின் நடனத்தையும், உங்கள் அன்பையும் காண்பதற்காகவே மட்டும்தான் தலைவியே...!! என்றவாறு பலவிதங்களில் தலைவியிடம் தலைவன் கொண்டுள்ள அன்பையும், தலைவி இல்லாததால் அவர் அடைந்து வரும் துன்பத்தையும் எடுத்துரைத்தனர்.

மாதர்கள் பலவிதங்களில் எடுத்துரைத்தும் அவர்களின் அறிவுரைகளில் சற்றும் செவி சாய்க்காமல் இருந்தார் பரவையார். நான் கொண்டுள்ள அன்பையும், என்னையும் சிறிதளவுகூட நினைவில் வைத்துக் கொள்ளாமல் எம்மை மறந்து வேறொரு மங்கையுடன் திருமணம் செய்து கொண்டார். அது எனக்கு மிகப்பெரிய ஆறாத துயரத்தையும், கவலையையும் அளித்தது. உங்களின் தலைவரின் குற்றத்தை மறைக்க நீங்கள் எவ்வளவுதான் என்னிடம் பேசினாலும் அதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றார்.

மென்மேலும் இதைப்பற்றி பேசி என்னை புண்படுத்தினீர்கள் எனில் நான் இவ்வுலக வாழ்க்கையை தவிர்த்து உயிரை மாய்ப்பது உறுதியாகும். தயவு செய்து இதைப்பற்றி பேசுவதை விடுத்து இங்கிருந்து போய்விடுங்கள் என்று மனதில் வலியும், கண்களில் சினமும் கொண்டு தன்னிடம் பேசவந்த மாதர்களிடம் உரக்கக் கூறினார் பரவையார். பரவையார் கூறிய கூற்றிற்கு மறுமொழி உரைக்க இயலாமல் அவ்விடத்தை விட்டு வெளியே வந்தனர் அம்மாதர்கள்.

பின்னர், மாதர்கள் சுந்தரர் இருக்கும் இடத்தை கவலை தோய்ந்த முகத்துடன் அடைந்தனர். அவர்களுடைய வருகைக்காக எதிர்பார்த்து கொண்டிருந்த சுந்தரர் அவர்களுடைய முகத்தை கண்டதும் நிகழ்ந்தது என்னவென்று சிறிதளவு புரிந்து கொண்டார். பின்பு மாதர்கள் அவரிடம் நிகழ்ந்தவை அனைத்தையும் எடுத்துரைத்தனர். அதைக்கேட்ட சுந்தரரும் மனதளவில் மிகவும் சோர்வுற்றார்.

பகல் பொழுது முடிந்து இரவு பொழுது வர துவங்கியது. இரவு பொழுதும் மெதுவாக நகரத் துவங்கி நடுஜாமத்தை அடைந்தது. சுந்தரரும் தூக்கமின்றி என்ன செய்வது? என்று யோசித்த வண்ணமாகவே இருந்தார். ஆனால் அவருடன் வந்திருந்த மற்ற அடியார்களோ அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். பரவையாரை பற்றிய சிந்தனைகள் சுந்தரரிடம் அதிகரிக்க அதிகரிக்க அவர் மனதில் கவலைகளும், வலிகளும் அதிகரிக்க தொடங்கின. இனி என்ன செய்வது? என்று புரியாமல் கவலை தோய்ந்த முகத்தோடு இறைவனை தியானித்த வண்ணமாக கண்விழித்து இரவு பொழுதில் தனித்த மரமாக நின்று கொண்டிருந்தார் சுந்தரர்.

தமது குறைகள் ஒவ்வொன்றையும் சடைமுடிநாதரிடம் கூறிய வண்ணமாக...

எம்பெருமானே...!!

உங்களின் அருளாசியுடன்தானே பரவையாரை மணந்து கொண்டேன்?...

இப்பொழுது அவள் என்னை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதை தாங்கள் அறிய மாட்டீரோ?

இது என்ன உங்களின் திருவிளையாடலா?

உங்களை நாடி வந்துள்ள இந்த அடியாரின் துன்பத்தை போக்கும் பொருட்டு...

இப்பொழுது இங்கு எழுந்தருளி எம்மை காத்து அருள்வீர்களாக...!!

என்று தமது எண்ணங்கள் யாவற்றையும் உரைத்து சிவபெருமானிடம் இறைஞ்சி நின்று கொண்டிருந்தார்.

எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளான எம்பெருமான் சுந்தரரின் வேண்டுகோளை ஏற்று அவரின் துயரத்தை போக்குவதற்காக அருள்புரிய துவங்கினார். அந்த இரவு பொழுதிலும் எம்பெருமான் சுந்தரர் கொண்டுள்ள கவலையை போக்கும் பொருட்டு எழுந்தருளினார். எம்பெருமான் அவ்விடத்தில் எழுந்தருளியதை கண்டதும் பக்தி பெருக்கால் அவரின் திருவடிகளை எண்ணி வணங்கினார்.

எம்பெருமான் சுந்தரரை நோக்கி...

சுந்தரரே...!!

உமக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டுள்ளதா?

என்று எதுவும் அறியாதது போல் கேட்டார். இறைவன் இவ்விதமாக கேட்டதும், ஐயனே...!! தங்கள் ஆணைப்படி மகிழமரத்தின் கீழே சபதம் செய்து சங்கிலியாரை திருமணம் செய்து கொண்டு நான் திருவொற்றியூரில் வாழ்ந்து வந்த செய்தியானது எப்படியோ பரவையாருக்கு தெரிந்துவிட்டது என்று கூறினார்.

சங்கிலியாரை திருமணம் செய்து கொண்டது பரவையாருக்கு தெரிந்ததால் பரவையார் என் மீது கோபம் கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல், என்னால் தனது உயிரையே இழப்பதாகவும் கூறுகிறாளாம். எனக்கு ஐயனும், தாயுமாக இருக்கக்கூடியவரான தாங்களே... பரவையார் மாளிகைக்கு எழுந்தருளி... எம்முடைய நிலையை அவளிடம் எடுத்துரைத்து... எங்கள் இருவரிடமும் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும். மேலும், தாங்கள்தான் எங்கள் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொண்டார். சுந்தரர் இவ்விதம் உரைத்ததும், எம்பெருமான் சுந்தரரே...!! கவலையை மறப்பாயாக... இப்போதே பரவையாரிடம் உன் பொருட்டு தூது செல்கிறேன் என்று கூறினார்.

பரம்பொருளான இறைவன் இவ்விதம் உரைத்ததால் சுந்தரர் எல்லையில்லா மகிழ்ச்சியும், ஆனந்தமும் கொண்டார். அவர்கள் இருக்கும் இடத்தில் எழுந்தருளி துன்பத்தை போக்கும் பொருட்டு எம்பெருமான் பரவையார் மாளிகையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது தேவாசிரிய மண்டபத்தில் இருந்த குபேரனும், அருந்தவ தவசிகளும் அவரை துதித்த வண்ணமாக அவர் பின்னே சென்று கொண்டிருந்தனர். திருவாரூர் நகரம் முழுவதும் தேவலோகத்தில் இருப்பதைப்போல காட்சியளித்தது. சிவனார் மணி வீதி வழியாக தூது செல்ல புறப்பட்டார்.

எம்பெருமான் பரவையார் மாளிகையை அடைந்த பின்பு தன்னுடன் வந்திருந்த தேவர்கள் என அனைவரையும் மாளிகையின் வெளியே நிற்க வைத்துவிட்டு எம்பெருமான் மட்டும் அந்தணர் வடிவம் கொண்டு பரவையார் மாளிகையை அடைந்தார். மாளிகையின் கதவினை தட்டிய வண்ணமாக பரவையாரே...!! கதவினை திறப்பாயாக... என்று அழைத்தார் பிறைமுடி நாதர். நித்திரையில்லாமல் தவித்து வந்த பூக்கள் நிரம்பிய மஞ்சத்தில் படுத்திருந்த பரவையார் அந்தணரின் குரல் கேட்டு அந்த நடு இரவில் எழுந்தார்.

இந்த நேரத்தில் நம்மை தேடி வரக்கூடிய சூழல் என்னவென்று புரியாமல் சிந்தித்த வண்ணமாக விரைந்து வந்து மாளிகையின் கதவைத் திறந்தார். அந்தணர் வடிவில் வந்திருந்த எம்பெருமானை வணங்கி வரவேற்றிய பரவையார், ஊர் மக்கள் உறங்கி கொண்டு இருக்கும் இவ்வேளையில் தம்முடைய இடத்திற்கு வந்திருப்பதற்கான காரணம் என்ன? என்று பணிவுடன் கேட்டாள்.

எம்பெருமான் (அந்தணர்) : பரவையாரே...!! நான் வந்த காரணத்தை கூறுகிறேன் கேட்பாயாக... நான் கூறுவதைக் கேட்டு அதை மறுக்காமல் எமது கோரிக்கையாக ஏற்றுக்கொள்வாயாக... என்று கூறினார்.

பரவையார் : என்னவென்று கூறுங்கள்?... அதை நான் அப்படியே செய்கிறேன் என்றார்.

எம்பெருமான் (அந்தணர்) : பரவையாரே... சுந்தரர் கர்மவினைப்பயன் காரணமாக செய்த தவறுக்காக அவரை முற்றிலுமாக வெறுத்து ஒதுக்கி அவருடன் இணைந்து வாழாமல் இருப்பது முறையானது அல்ல என்று கூறினார். உன்னுடைய பிரிவால் சுந்தரர் துன்பம் அடைந்து உம்முடைய நினைவாகவே தேவாசிரிய மண்டபத்தில் வந்து தங்கி இருக்கின்றார். அவர் மீண்டும் உம்மோடு இணைந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு இங்கே வந்துள்ளார். அதை புரிந்து கொண்டு அவருடன் இணைந்து வாழ்வதுதான் நன்மை ஆகும் என்று கூறினார்.

பரவையார் : அந்தணரே...!! நீங்கள் உரைப்பது நன்று தான். இருந்தாலும் அவர் சிவத்தலங்களை தரிசிக்க செல்கின்றேன் என்று என்னிடம் உரைத்துவிட்டு பங்குனித் திருநாள் அன்று என்னை பார்க்க வருவார் என்று நான் எதிர்பார்த்த தருணங்கள் உங்களிடம் சொல்வதற்கு இல்லை. அவ்வாறு எதிர்பார்த்திருந்த தருணங்கள் யாவும் இனிமேல் இல்லை என்று தெரிந்தவுடன் நான் அடைந்த துன்பம் என்பது எல்லை இல்லாதது ஆகும். சிவத்தலங்களை தரிசிக்க போகிறேன் என்று என்னிடமிருந்து விடைபெற்று சென்ற என் நாயகன் திருவொற்றியூரில் வாழ்ந்து வந்த சங்கிலியார் என்னும் பெண்ணை மணந்து இல்வாழ்க்கையில் வாழ்ந்துள்ளார் என்ற செய்தியை கேட்டதுமே எனக்கும், அவருக்குமான தொடர்பு எள்ளளவும் இனியும் கிடையாது என்றார்.

இந்த இரவு வேளையில் இதை பற்றி பேசவா இவ்விடம் வந்துள்ளீர்கள்? என்று எம்பெருமானிடம் கேட்டார்.

எம்பெருமான் (அந்தணர்) : பரவையாரே...!! மனதில் இருக்கும் சினத்தை குறைத்துக் கொண்டு உன் நாயகன் செய்துள்ள குற்றத்தை பொறுத்துக் கொண்டு என் பொருட்டாவது சுந்தரரை ஏற்றுக் கொள்வாயாக...!! அதுதான் உமக்கும் தகுதியான செயலும் கூட என்று உரைத்தார்.

பரவையார் : அந்தணரே...!! இச்செய்தியை திரும்பத் திரும்ப உரைத்து என்னை மீண்டும் மீண்டும் காயப்படுத்தாதீர்கள். இது தங்களுடைய பெருமைக்கு ஒருபோதும் நன்மை அளிக்கப் போவதில்லை. நீங்கள் சொல்வதற்கேற்ப அந்த முடிவுக்கு நான் எப்பொழுதும் இணங்க போவதும் இல்லை. தயவுசெய்து இங்கிருந்து போய்விடுங்கள் என்று கடுமையாகவும், அதேசமயத்தில் தம்முடைய முடிவான பதிலையும் கூறினாள் பரவையார்.

பரவையார் கூறியதை கேட்டதும் அந்தணர் வடிவத்தில் இருந்த எம்பெருமான் பரவையாரிடம் உரையாட விரும்பாமல் அவ்விடத்திலிருந்து விடைபெற்று சென்றார். எம்பெருமானின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்த சுந்தரரோ சற்றும் யோசிக்காமல், பிரபஞ்ச நாயகனை என்பொருட்டு ஏற்பட்டுள்ள பிரச்சனையை தீர்க்க பரவையார் மாளிகைக்கு தூது அனுப்பி உள்ளேன். இப்போதைக்கு எனக்கு மன்னிப்பே கிடையாது என்று வாய்விட்டு அலறிய வண்ணம் வருந்திக் கொண்டிருந்தார். 

எவ்விதமாக எண்ணிக்கொண்டு இருந்தாலும் மறுபக்கம் இறைவன் என்பொருட்டு பரவையார் மாளிகைக்கு எழுந்தருளி அவள் கொண்டுள்ள ஊடலை தீர்த்துவிட்டு அவளுடன் என்னை இணைத்து வைப்பார் என்று மகிழ்ச்சிக் கொண்டார் சுந்தரர். நேரம் அதிகரிக்க அதிகரிக்க சுந்தரரால் ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து இருக்க முடியவில்லை. அங்கும், இங்குமாகவே அல்லல் பட்டுக் கொண்டிருந்தார். எம்பெருமான் வரும் வழியை எதிர்நோக்கி தம்முடைய விழியையும், மனதையும் செலுத்திக் கொண்டு இருந்தார்.

எம்பெருமான் அந்தணர் உருவத்தைத் தவிர்த்து பிறைசூடிய அண்ணலாக சுந்தரர் முன்னால் தோன்றினார்.

எம்பெருமானைக் கண்டதும் என்னை ஆட்கொண்ட அண்ணலே...!!

இரவு பொழுதும் என்று பாராமல் எமக்காக எமது துணைவியிடம் ஏற்பட்டுள்ள பிணக்கைப் போக்கி...!!

வெற்றிப் பெருமிதத்தோடு இவ்விடத்தில் எழுந்தருளி உள்ளீர்களே...!!

இனி உங்கள் கருணையை என்னவென்று உரைப்பேன்?

என்று உள்ளமும், முகமும் மலர கூறினார் சுந்தரர்.

சுந்தரர் கூறியதை கேட்ட பிறை அணிந்த எம்பெருமான் சுந்தரா...!! உமது பெருமைகளையும், ஆற்றலையும், அறத்தையும் அவளிடம் எடுத்துரைத்தும் அவள் எந்தவொரு முடிவையும் எடுக்க இயலாமல் எடுத்த முடிவிலேயே நிலையாக நிற்கின்றாள். உன்னோடு இணைந்து வாழ விருப்பமில்லை என்பதில் திண்ணமாக இருந்ததோடு மட்டுமல்லாமல் வெறுப்போடு என்னையும் திருப்பி அனுப்பிவிட்டாள் என்று கூறினார்.

எம்பெருமான் கூறியதைக் கேட்டதும் மனம் கலங்கிய சுந்தரர் கண்கலங்கி இரு கைகளை இணைத்து வணங்கிய வண்ணமாக...

அய்யன் அருளோடு கூறினால் இவ்வுலகத்தில் நிகழாது ஒன்றுமே இல்லையே?...

முப்புரம் எரித்த மறையவனே...!!

தேவர்கள், அசுரர்கள் என அனைவரும் வாழ ஆலகால விஷம் உண்ட ஆலகாலனே...!!

தம்மை அன்புடன் வழிபட்ட மார்க்கண்டேயனுக்கு துன்பம் என்று அறிந்து அவருக்கு ஏற்பட்ட துன்பத்தில் இருந்து விடுவித்து அவரை காத்து தமது தொண்டராக ஏற்றுக் கொண்ட அம்பலத்தரசே...!!

என்மீது மட்டும் தங்கள் அருட்பார்வை வரவில்லையா? சுவாமி...

நான் வேண்டாதவன் தானே என்று எண்ணி அவ்விடத்திலிருந்து திரும்ப வந்துவிட்டீர்களா?

இறைவா... எனக்காக மீண்டும் ஒருமுறை பரவையாரிடம் சென்று அவள் கொண்டுள்ள பிணக்கையும், சினத்தையும் போக்குவீர்களாக?

நான் கொண்டுள்ள நோயையும், துயரத்தையும் நேரில் கண்டது தாங்கள் மட்டுமே...

அதை எல்லாம் கண்டும் தங்களது உள்ளம் இறங்கவில்லையா?

இன்று இரவு பொழுதில் அய்யன் அருளோடு என்னை பரவையாரிடம் சேர்க்காவிட்டால் நான் என் உயிரை நீத்துவிடுவேன். இது உறுதி என்று புலம்பி கண்ணீரால் எம்பெருமானின் திருப்பாதங்களை குளிரச் செய்தார்.

தம்முடைய திருவடியில் சரணம் என்று விழுந்து கிடக்கும் சுந்தரரை அருளோடு பார்த்த எம்பெருமான், சுந்தரா...! எழுந்திரு... மனம் வருந்தாதே... உம்முடைய துயரத்தை நான் உணர்ந்தது போல எப்படியும் பரவையார் உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றேன். மீண்டும் அவள் உன்னுடன் இணைந்து வாழ்வதற்கு சூழலை உருவாக்குகிறோம்.

கவலையை மறந்து மகிழ்ச்சியாக இருப்பாயாக... என்று எம்பெருமான் சுந்தரரிடம் உரைத்து விட்டு மீண்டும் பரவையார் மாளிகைக்கு செல்லப் புறப்பட்டார். தன் மாளிகையில் இருந்து அந்தணர் சென்ற பின்பு பரவையார் மனதில் ஏதோ இனம் புரியாத ஒரு குழப்பமும், கலக்கமும் ஏற்படத் துவங்கியது.

இரவு பொழுதில் அந்தணர் வடிவத்தில் வந்தது யாராக இருக்கும்? என்ற எண்ணம் பரவையாருக்கு தோன்றியது. ஒருவேளை திருவாரூர் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் தியாகேசப் பெருமானோ? என்று எண்ணத் துவங்கியதும், வந்திருப்பவர் யார்? என்ற உண்மையை நிரூபிக்கும் பொருட்டு பரவையார் மாளிகைக்குள் பல வியக்கத்தக்க நிகழ்வுகள் யாவும் நடைபெற துவங்கின. அவைகள் யாவற்றையும் கண்டதும் பரவையாரின் மனம் திடுக்கிட்டது.

நான் என்றும் வணங்கும் எம்பெருமான் இவ்விடத்தில் எழுந்தருளியும் அவரை உணராமல் எவ்வளவு பெரிய பிழையை இழைத்து விட்டோம். என்னுடைய நாயகனின் மீது கொண்டுள்ள சினத்தால் எம்முடைய அகக்கண்களும், புறக்கண்களும் வந்திருப்பவர் யார்? என்று அறியாமல் இருக்கும் பொருட்டு நான் எம்பெருமானுக்கு பெரும் துன்பத்தை இழைத்துவிட்டேன் என்று எண்ணிய வண்ணம் நித்திரை கொள்ளாமல் வாயிலை நோக்கிய வண்ணமாக அமர்ந்திருந்தாள் பரவையார்.

வாயிற்படியை நோக்கி அமர்ந்திருந்த பரவையாருக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் சூழ்நிலைகள் யாவும் அமையப் பெற்றன. பல காலம் தவமிருந்து கிடைக்க வேண்டிய அரும் காட்சியானது அவளுக்கு கிடைக்க தொடங்கியது. எம்பெருமானின் அருளால் இருளில் இருந்த பரவையாரின் இல்லமானது ஆதவனின் ஒளியை விட மிகுந்த பிரகாசமான ஜோதியில் இருப்பது போல் காட்சியளிக்க துவங்கியது.

அவ்விடத்தில் எம்பெருமான் எழுந்தருளியபோது பரவையார் எம்பெருமானை நோக்கி யாம் என்ன தவம் செய்தேனோ?...

அல்லது புண்ணியம் இழைத்தேனோ?

என்று புரியவில்லையே எம்பெருமானே...

என்று கரம் குவித்து, சிரம் தாழ்ந்து விழிகளில் நீர் வழிய மனம் அஞ்சி நின்று கொண்டிருந்தாள்.

பரவையாரே...!! என் தோழன் கொண்டுள்ள வேதனையை நீக்கும் பொருட்டு யாம் இங்கு மீண்டும் எழுந்தருளி இருக்கின்றோம். என் தோழன் என் மீது கொண்ட அன்பினாலும், யாம் அவனை ஆட்கொண்ட உரிமையாலும், அவன் கொண்டுள்ள துன்பத்தையும், பிணியையும் போக்குவது எனது கடமை ஆகும் அல்லவா?. இம்முறையும் முன்னர் போன்றே மறுக்காமல் யாம் உரைப்பதை கேட்பாயாக என்று கேட்டார் எம்பெருமான்.

எம்பெருமான் பரவையாரிடம், எனது தோழரான சுந்தரர் உமது பிரிவினால் சொல்ல முடியாத அளவிற்கு மிகுந்த துன்பத்தில் ஆழ்ந்து கொண்டிருக்கின்றான். அவனை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எம்பெருமான் திருவாய் மலர்ந்தருளினார். அதற்கு பரவையார்...

எம்பெருமானே...!!

அந்தணர் உருவத்தில் இந்த ஏழையின் வீட்டில் எழுந்தருளிய பிறைசூடிய நாதனே...!!

என்னுடைய வீட்டிற்கு வந்த உங்களை நான் அறியாமல் செய்த தவறை மன்னித்து... பொறுத்தருள வேண்டும்...

இனியும் தேவரீருடைய மனம் புண்படாமல் நடந்து கொள்வேன்...

தங்களின் விருப்பம் போலவே தங்களுடைய தோழருடன் யாம் இணைந்து வாழ்கின்றோம்...

என்று உரைத்து நிலத்தில் விழுந்து வணங்கினாள் பரவையார்.

எம்பெருமான் பரவையார் உரைத்ததை கேட்டதும் மகிழ்ச்சியில், நங்கையே...!! உமது பண்பிற்கு நீ உரைத்தது மென்மேலும் மதிப்பை அதிகரிக்கட்டும் என்று உரைத்த வண்ணமாக அவ்விடத்திலிருந்து மறைந்தருளினார். எம்பெருமான் மறைந்த திசையை நோக்கி வணங்கிய வண்ணமாக நின்று கொண்டிருந்தாள் பரவையார். அவ்வேளையில் அவளது மனதில் இருந்த கோபங்கள், பிணிகள் யாவும் நீங்கி தனது நாயகனின் எண்ணங்கள் மனதில் ஆக்கிரமிக்க தொடங்கின. தனது நாயகனின் எண்ணங்களோடு அவ்விடத்திலேயே சிலையாக நிற்க தொடங்கினாள் பரவையார்.

எம்பெருமான் சுந்தரரின் முன்பு எழுந்தருளினார். சுந்தரர், எம்பெருமான் முன்பு வீழ்ந்து பணிந்து வணங்கி...

எம்பெருமானே...!!

இம்முறை நிகழ்ந்தது யாது?

சுபச்செய்திகள் கிடைக்குமா...?

என்ற எண்ணத்துடனும் வினவினார் சுந்தரர்.

எம்பெருமான் சுந்தரரை நோக்கி... சுந்தரா...!

பரவையார் உன்மீது கொண்டிருந்த கோபங்கள் யாவும் நீங்க செய்தோம்.

இனிமேல் பரவையாருடன் எவ்வித தடையுமின்றி முன்புபோல அவளுடன் இணைந்து வாழலாம்...

என்று உரைத்த வண்ணமாக அவ்விடத்திலிருந்து மறைந்தார்.

எம்பெருமானின் கருணையும், அருளையும் எண்ணி விழிகளில் நீர் வழிய... சுந்தரர்,

எம்பெருமானே...!!

என்னை ஆட்கொண்டவரே...

மாதொருபாகனே...

என்று பலவாறு துதித்த வண்ணமாக மகிழ்ந்த மனநிலையுடன் அவ்விடத்தில் என்ன செய்வது?

என்று புரியாமல் எதையும் அறிந்து கொள்ள இயலாத நிலையில் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பது போல் ஆனந்தம் கொண்டார்.

இருள் நீங்கி ஒளி பிறப்பது போல... மதியானவன் மறைந்து ஆதவன் உதிக்கையிலேயே அடியார்களுடன் பரவையார் மாளிகையை நோக்கி புறப்பட்டார் சுந்தரர். தமது நாயகன் தம் இல்லத்தில் எழுந்தருள போகின்றான் என்பதை உணர்ந்த நாயகியோ அவர் வருவதற்கு முன்பே மாளிகையை நல்லவிதத்தில் அலங்காரம் செய்ய வேண்டும் என்று எண்ணி அதற்கு தகுந்தாற்போல ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தாள். சுந்தரரும் மங்கள இசை முழங்க மங்களப் பொருட்களுடன் எம்பெருமானின் துதித்த வண்ணமாக மாளிகைக்குள் செல்ல விரைந்தார்.

மாளிகையின் முன்பு சுந்தரரை வரவேற்க நின்று கொண்டிருந்த தோழியர்களின் முன் நின்று பரவையார் அவரை வரவேற்றாள். சுந்தரரோ பரவையாரின் இருகரங்களை பற்றிக்கொண்டு மாளிகைக்குள் சென்றார். முன்பு போலவே இருவரும் ஒன்றாக வாழத் துவங்கினர். சுந்தரர் வாழ்க்கை என்னும் கடலில் இன்புற்று வாழ்ந்திருந்தாலும் எம்பெருமானின் பக்தி என்னும் ஓர் இடத்தில் அமர்ந்து அவரின் திருவடிகளை அடைவதற்கான வழிகளையும் மேற்கொள்ளத் துவங்கினார். பரவையாரும் எம்பெருமானை பணிவோடு வழிபட்டு வந்தாலும், தனது நாயகனையும் மனம் நோகாத வண்ணமாக பார்த்து வந்தாள்.

நாட்கள் செல்ல செல்ல எம்பெருமானின் நினைவாகவே தம்முடைய காலத்தை கடத்தி கொண்டிருந்தவர்களில் ஒருவர் கலிக்காமர். அக்காலங்களில் எம்பெருமானின் அடியார்கள் செய்த செயல்களையும், எம்பெருமானின் மீதுள்ள பக்தியையும் கேள்வியுற்று அதில் மெய்மறந்து மகிழ்ச்சி கொண்டிருந்தார். அவ்விதம் கேட்டு கொண்டிருந்த அடியார்களின் செயல்களில், சுந்தரர் தாம் விருப்பம் கொண்ட பரவையாரிடம் தூது போக எம்பெருமானே சென்றதை கேள்வியுற்றார்.

சுந்தரருக்காக எம்பெருமானே தூது சென்றதை கலிக்காமர் கேள்விப்பட்டது முதல் மிகவும் மனம் வருந்தினார். தேவர்களுக்கும், பிரம்மனுக்கும் மற்றும் திருமாலுக்கும் காணக்கிடைக்காத திருவடிகளை உடைய எம்பெருமானை தனது விருப்பத்திற்கு இணங்கி தூது செல்ல அவர் இசைந்தாலும், அடியாராகிய இவர் அவரை தூது அனுப்புதல் என்பது முறையாகுமா? இத்தகைய முறையற்ற செயலை செய்த பின்னரும் இவர் அடியார் என்று கூறிக்கொள்வதில் எவ்வித கூச்சமும், அச்சமும் இல்லாமல் இருக்கின்றாரே?... இவர் இதற்கு வெட்கப்பட வேண்டியது இல்லையா?... இது எவ்வளவு பெரிய பாவச்செயலாகும்?

இத்தகைய பாவச்செயல்களைப் புரிந்த அடியார்களைப் பற்றி கேள்வியுற்றதும் ஏன் என் உடலில் என் உயிர் இன்னும் நீங்காமல் இருக்கின்றது? என்று தன் மீது மிகுந்த சினம் கொண்டார் கலிக்காமர். அதைக் கேள்வியுற்றது முதல் மிகுந்த கவலையில் மூழ்கினார். செவிவழி செய்தி போல கலிக்காமர், தன் மீது கொண்ட கோபத்தை பற்றி கேள்வியுற்ற சுந்தரர் மிகவும் மனம் கலங்கினார். மருத்துவரின் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்த கலிக்காமரின் மனைவியானவர் வீட்டிற்கு வரும் பொழுது ரத்த வெள்ளத்தில் மரணம் அடைந்த தன் கணவரைக் கண்டு என்ன செய்வது? என்று புரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தார்.

பின்பு தனது கணவர் அடைந்த இடத்தை தானும் அடைய வேண்டும் என்று எண்ணி தன்னைத்தானே மாய்த்துக் கொள்ள தயாராகிக் கொண்டிருந்தார். அந்த வேளையில் சுந்தரமூர்த்தி நாயனார் தனது வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தியை ஏவலர்கள் மூலம் அறிந்து கொண்டார் கலிக்காமரின் துணைவியார். பின் நிகழ்ந்த நிகழ்வுகளை மறைத்து சுந்தரமூர்த்தி நாயனார் சென்ற பின்பு தனது எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று எண்ணி, அங்கு நிகழ்ந்தவற்றை எதுவும் உரைக்காமல் சுந்தரமூர்த்தி நாயனாரை வரவேற்க தயாராகி கொண்டு இருந்தார்.

மனைவியார் தனது இல்லத்தில் இருக்கும் யாவரையும் அழ வேண்டாம் என்று உரைத்து, பின்பு தம்முடைய பதியின் உடலை மறைத்து, சுந்தரமூர்த்தி நாயனாரை எதிர்கொண்டு வரவேற்கும் பொருட்டுத் தங்கள் சுற்றத்தார்களை அனுப்பி வைத்தார். அவர்கள் சென்று சுந்தரமூர்த்தி நாயனாரை எதிர்கொண்டு வணங்கினார்கள். தனது எண்ணத்தின் படியே தான் இழந்த தனது கணவனின் உடலை யாரும் காணாத வகையில் மறைத்து வைத்தார் கலிக்காமரின் மனைவி. பின்பு இல்லத்தை பூக்களாலும், வாசனைப் பொடிகளாலும் அலங்காரம் செய்வதில் ஈடுபடத் தொடங்கினார்.

சுந்தரமூர்த்தி நாயனாரின் வருகையை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த கலிக்காமரின் துணைவியார் முன்னிலையில் சுந்தரமூர்த்தியும் தனது அடியார்களுடன் வந்தருளினார். சுந்தரமூர்த்தி நாயனாரை மலர்கள் தூவி வரவேற்றார் கலிக்காமரின் துணைவி. பின் கலிக்காமரின் வீட்டிற்குள் நுழைந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் அமரச் செய்து விதிமுறைப்படி அவரது திருப்பாதங்களைத் தூய நீரால் சுத்தம் செய்து மலர் தூவி வழிபட்டு மகிழ்ந்தார் கலிக்காமரின் மனைவியார்.

சுந்தரரும் அம்மையாரின் அன்பிற்கு கட்டுப்பட்டவராய் அம்மையாருக்கு அருள் செய்தார். சுந்தரர் கலிக்காமரின் துணைவியாரை நோக்கி, அம்மையே...!! என் தோழர் கலிக்காமர் எங்கு இருக்கின்றார்? அவருக்கு இப்பொழுது துன்பம் ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் சூலை நோயினைக் குணப்படுத்த பரம்பொருளான எம்பெருமான் எனக்கு ஆணை பிறப்பித்தார். கலிக்காம நாயனாருக்கு ஏற்பட்டுள்ள சூலை நோயை நீக்கவே தாம் இங்கு வந்துள்ளோம் என்றும், மேலும் அவருடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை நீக்கி அவருடன் நட்புறவு கொள்ளவே என் மனமானது ஆவல் கொண்டு இருக்கிறது.

மேலும், காலம் தாழ்த்தாமல் அவர் இருக்கும் இடத்தை கூற வேண்டுமென்று உரைத்துக் கொண்டிருந்தார் சுந்தரர். அவ்வேளையில் கலிக்காம நாயனாருடைய மனைவியார் சுந்தரரை வணங்கி எவ்விதமான நோயும் அவருக்கு ஏற்படவில்லை என்றும், அவர் தற்போது உறங்கிக் கொண்டு இருப்பதாகவும் கூறினார். அம்மையாரின் ஏவுதலின்படி அங்கிருந்த அனைவரும் கலிக்காமருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று கூறினார்கள். ஆயினும் சுந்தரனாருக்கு அவர்களின் கூற்றுகளிலிருந்து மனத்தெளிவு என்பது ஏற்படவே இல்லை.

ஏனெனில் பரமனே வந்து தம்மிடம் உரைத்து சென்றுள்ளார் எனில் இங்கு ஏதோ நடந்து உள்ளது? என்று தனது மனதில் எண்ணினார். பின்பு கலிக்காம நாயனாருக்கு உடல்நலம் பாதிப்பு எதுவும் ஏற்படாமல் இருப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும். ஆனாலும் யாம் அவரை நேரில் கண்டால் எனக்கு மனத்தெளிவும், நிம்மதியும் உண்டாகும் என்று உரைத்து அவர் எங்கே உள்ளார்? என்று வினாவினார். அங்கிருந்த அனைவரும் பலவாறு உரைத்தும் சுந்தரனார் கேட்காமல் அவரை நான் நேரில் கண்டே ஆக வேண்டும் என்று திடமாக நின்றார்.

சுந்தரருடைய எண்ணத்திற்கு முன்பு எதுவும் செய்ய இயலாத அன்பர்கள் வேறு வழியின்றி கலிக்காமர் இருக்கும் இடத்திற்கு அவரை அழைத்துச் சென்று குருதி வெள்ளத்தில் மடிந்து கிடந்த கலிக்காமரை காண்பித்தனர். குருதியின் மடியில் வீழ்ந்து இருந்த கலிக்காமரை கண்டதும் சுந்தரமூர்த்தி நாயனார் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்தார். குடலானது வெளிப்பட்டு உயிர் இன்றி கிடந்தவரை கண்டதும் உள்ளம் பதறிப்போன சுந்தரர், வேதனை தாங்காமல் கண்களில் நீர் பெருக எம்பெருமானைத் தியானித்தார்.

இது என்ன விபரீத செயல்...?

இவருடைய செயலைக் கண்ட பின்பு நான் மட்டும் ஏன் இன்னும் உயிருடன் வாழ்கின்றேன்?.

இனியும் இந்த உடலில் இந்த உயிர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை...

என்று உரைத்து கலிக்காமருக்கு அருகிலிருந்த வாளினை எடுத்து தனது உயிரைப் போக்கிக்கொள்ள ஆயத்தமானார் சுந்தரர். சுந்தரமூர்த்தி நாயனார் தன் உயிரை போக்கிக்கொள்ள ஆயத்தமான வேளையில் யாரும் எதிர்பாராத ஒரு அற்புதச் செயலானது நடைபெறத் துவங்கியது.

அதாவது, எம்பெருமானின் கருணை என்பது கடலை போன்றதாகும். அதில் அளவிட முடியாத முத்துக்களும், பவளங்களும் இருப்பது போல அவருடைய அருளால் உயிரிழந்த கலிக்காமர் உயிர்பெற்று எழுந்தார். உயிர்பெற்று எழுந்த அந்த நொடியில் நிகழ்ந்த யாவற்றையும் எம்பெருமானின் கருணையால் அறிந்து கொண்டார். பின்பு தனது உயிரை மாய்த்துக் கொள்ளப்போகும் சுந்தரரை கண்டதும் என்ன ஒரு அபத்தமான செயல்? என்று உரைத்து, அவரது கரங்களில் உள்ள வாளைப் பிடித்த வண்ணம் எழுந்து நின்றார்.

அடியாரே... இது என்ன ஒரு அபத்தமான முடிவுகள்? நான்தான் தங்களுடைய நட்பினை பற்றி அறிந்து கொள்ளாமல் உங்களின் மீது பகை கொண்டு என்னை நானே அழித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கும், உங்களுடைய வாழ்க்கைக்கும் பெரிய இன்னலை உருவாக்கிவிட்டேன். எம்பெருமானின் அன்பிற்கு பாத்திரமான தங்களின் மீது பயனற்ற வகையினால் நெறி தவறி நடந்த என்னை மன்னித்தருள வேண்டும் என்று வேண்டினார். சுந்தரர் எம்பெருமானின் திருவருளை எண்ணி மனமும், முகமும் மலர்ந்திட... கலிக்காம நாயனாரை தழுவி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். கலிக்காமரும் சுந்தரரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். கலிக்காமர் உயிர்பெற்று எழுந்ததை கண்டதும் தேவியாரும் எண்ணில் அடங்கா மகிழ்ச்சி கொண்டார்.

சுந்தரர், கலிக்காமரின் துணைவியார் கொண்டுள்ள பக்தியைப் பெரிதும் போற்றினார். மானக்கஞ்சாரர் மகள் அல்லவா? என்றும் பாராட்டி குறிப்பிட்டார். எம்பெருமானின் திருவருளால் கலிக்காமரும், சுந்தரரும் நண்பர்களாகித் திருப்புன்கூருக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து கொண்டு சிலநாட்கள் அங்கேயே தங்கியிருந்தார்கள்.

எம்பெருமானும் சுந்தரர் பாடிய திருப்பதிகத்தில் மனம் மகிழ்ந்து அவருக்கு வேண்டிய பொன்னும், நவமணிகளும், பலவிதமான மணம் வீசும் பொருட்களும், விலை உயர்ந்த பட்டாடைகளும் காற்றை விட விரைந்து செல்லும் குதிரைகளையும் பரிசாக வழங்கி அருளினார். அப்பொருட்களை பெற்று மகிழ்ந்த சுந்தரர் நாகையிலிருந்து புறப்பட்டு திருவாரூரை அடைந்தார்.

சுந்தரர் திருவாரூரை அடைந்த காலத்தில் சேரமண்டலத்தை ஆண்ட சேரமான் பெருமாள் அவர்கள் நம்பியாரூரரின் பெருமையினை கேட்டு அதிசயமும், ஆச்சரியமும் அடைந்தார். பரம்பொருளான எம்பெருமானின் அருளை பெற்று இருக்கின்ற சுந்தரரை எப்படியாவது காண வேண்டும் என்ற ஆவலுடன் தில்லை சிற்றம்பலவரை தரிசித்து திருவாரூரை அடைந்தார்.

சேரமண்டலத்தை ஆண்ட சேரமான் பெருமாள் நாயனார் அவர்கள் தம்மை காண வந்து கொண்டு இருக்கின்றார் என்ற செய்தியை கேட்டதும் மகிழ்ச்சி அடைந்தார் சுந்தரர். பின் அடியார்கள் புடைசூழ சென்று அவரை எதிர்கொண்டு அழைத்தார். சுந்தரரை நேரில் கண்டதும் அவர் அடிகளில் வீழ்ந்து இறைஞ்சினார். சுந்தரரும் அவரடிகளில் வீழ்ந்து இறைஞ்சித் தம் இருகைகளாலும் அவரைத் தழுவினார். பின்பு அவர்கள் இருவரும் ஒன்றிணைந்த வண்ணமாக அடியார்களுடன் இணைந்து எம்பெருமான் வீற்றிருக்கும் திருத்தலத்திற்கு சென்றனர்.

சேரமான் பெருமாள் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் ஆரூர் இறைவனைப் பணிந்து 'மும்மணிக்கோவை" என்னும் நூலைப் பாடினார். சிறிது நேரத்திற்கு பின்பு சுந்தரர் சேரமான் பெருமாளை தம்முடைய மாளிகைக்கு வருமாறு பணித்தார். சுந்தரரின் அழைப்பை தவிர்க்க முடியாமல் அவருடன் பரவையார் மாளிகையை அடைந்தார். சுந்தரர் தம்முடைய துணைவியிடம் சேரமான் பெருமாளை பற்றி கூறினார். சுந்தரரின் துணைவியோ வந்திருக்கும் சேரமான் பெருமாளை சிறந்த முறையில் வரவேற்று உபசரித்தார். இருவரும் ஆரூர் பெருமானை வழிபட்டு மகிழ்ந்தனர்.

நம்பியாரூரர் பாண்டிய நாட்டிலுள்ள திருவாலவாய் முதலிய தலங்களை வழிபட எண்ணி சேரமான் பெருமாளுடன் புறப்பட்டார். திருமறைக்காடு, அகத்தியான்பள்ளி, கோடிக்குழகர் முதலிய தலங்களைப் பணிந்து பாண்டிய நாட்டை அடைந்து திருப்புத்தூரை வழிபட்டு மதுரையை அடைந்தார்கள். திருவாரூர் பெருமானை வணங்கி மகிழ்ந்திருந்த சுந்தரர், சில நாட்கள் சென்ற பின்பு சேரமான் பெருமாளை நினைத்து மலைநாடு செல்லத் திருவுள்ளம் கொண்டார்.

சோழ நாட்டைக் கடந்து, கொங்கு நாட்டை அடைந்து திருப்புக்கொளியூர் அவிநாசியை அணுகி, திருவீதி வழியாக சென்று கொண்டிருந்தார். அங்கே ஒரு வீட்டில் மங்கள ஒலியும், அதன் எதிர் வீட்டில் அழுகை ஒலியும் எழுதலைக் கேட்டு இவ்வாறு நிகழ காரணம் யாது? என வினவினார். அவ்விடத்தில் இருந்தவர்கள் நிகழ்ந்தவற்றை எடுத்து உரைக்க துவங்கினார்கள்.

ஒரே பருவமாய் ஐந்து வயது நிரம்ப பெற்ற சிறுவர் இருவர் மடுவில் குளித்து கொண்டு இருந்தபோது மடுவில் எங்கோ இருந்து வந்த முதலை ஒருவனை விழுங்கியது. மற்றொருவன் அந்த முதலையிடம் இருந்து தப்பித்து பிழைத்தான். பிழைத்த சிறுவனுக்கு இவ்வீட்டில் உபநயனம் நிகழ்கிறது. அதன் பொருட்டு இவர்கள் வீட்டில் எழும் மங்கள ஒலி முதலை வாயில் அகப்பட்டிருந்த சிறுவனுடைய பெற்றோருக்கு, புதல்வனின் நினைவை ஏற்படுத்தியமையால் அவர்கள் புதல்வனின் எண்ணங்களால் வருந்துகின்றனர் என்று வேதியர் கூறக்கேட்டார்.

சுந்தரர் வேதியர் கூறியதை கேட்டதும் மிகவும் மனவேதனை கொண்டார். பின்பு குழந்தையை இழந்த பெற்றோர்கள் இல்லத்திற்கு சென்றார். அந்நிலையில் இறந்த சிறுவனின் பெற்றோர், சுந்தரரின் வருகையை அறிந்து மனதில் இருக்கும் கவலைகள் யாவற்றையும் மறைத்த வண்ணமாக முகமலர்ச்சியோடு வரவேற்றனர். தாங்கள் இங்கு எழுந்தருளியது எங்கள் தவப்பேறே ஆகும் என மகிழ்ந்து கூறினார்கள்.

சுந்தரர் அவர்கள் மனதில் இருக்கும் துன்பத்தையும் மறந்து தன்னை வரவேற்பதில் மகிழ்ச்சி கொண்டார். பின் மடுவில் முதலை வாயிலிருந்து உங்கள் புதல்வனை அழைத்து தந்த பின்னரே அவிநாசி பெருமானை வழிபட வேண்டுமென்று உறுதி கொண்டார். சுந்தரர் பெற்றோர்களை நோக்கி உங்கள் மகன் விழுங்கிய முதலை இருக்கும் மடு இருக்கும் இடத்தை கேட்டறிந்து அங்குச் சென்றார். முதலை விழுங்கிய புதல்வனை உயிருடன் கரையில் கொண்டு வந்து தரும்படி அருள் செய்க என இறைவனை வேண்டி 'எற்றான் மறக்கேன்" என்று தொடங்கித் திருப்பதிகம் பாடினார்.

'உரைப்பா ருரையுகந் துகள்கவல்லார் தங்களுச்சியா
யரைக்கா டரவாவாதியு மந்தமு மாயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூ ரவிநாசியே
கரைக்கான் முதலையைப் பிள்ளைதரச்சொல்லு காலனையே"
என்னும் நான்காம் திருப்பாடலை பாடும்பொழுது முதலை கரையிலே தானாக முன்வந்து விழுங்கிய புதல்வனை உமிழ்ந்தது. புதல்வனைக் கண்ட தாய் மகனை தழுவியெடுத்தாள். தாயும், தந்தையும் சுந்தரரை வீழ்ந்து வணங்கினார்கள். இந்நிகழ்ச்சியை கண்டோர் அனைவரும் சுந்தரரின் திருவருளை கண்டு வியந்தனர். சுந்தரர் முதலையின் வாயிலில் இருந்து வெளிவந்த சிறுவனை அழைத்து கொண்டு அவிநாசி திருக்கோவிலுக்கு சென்றார்.

அவிநாசியில் எழுந்தருளிய எம்பெருமானை வழிப்பட்ட சுந்தரர் தம் அன்புடைத் தோழர் சேரமான் பெருமாளைக் காணவேண்டி மலைநாட்டை நோக்கிச் செல்வாராயினார். சேரர்கோன் சுந்தரர் வருகையை அறிந்து அவரை வரவேற்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள ஆணையிட்டார். அணி, தேர், புரவி, ஆட்பெரும் படையுடனும், மற்ற பரிவாரங்களுடனும், சிவ அன்பர்களுடனும் சுந்தரரை காணும் ஆர்வத்தில் சேரப் பெருந்தகையார் யானையின் மீது அமர்ந்து நகரத்தின் எல்லைக்கு சென்று சுந்தரரின் வருகைக்காக காத்திருந்தார்.

சுந்தரர் தமது அன்பர்களுடன் சிவயாத்திரையை முடித்த வண்ணமாக சேரர்கோன் எல்லையை வந்தடைந்ததும் சேரப் பெருந்தகையார் யானையிலிருந்து இறங்கி விரைந்தோடிச் சென்று சுந்தரரை ஆரத்தழுவினார். சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரை ஆரத்தழுவி மனம் மகிழ்ந்தார். இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சியைக் கொண்டிருந்த சிவ அன்பர்களும், மக்களும் இருவரையும் புகழ்ந்த வண்ணமாக புகழ் ஒலிகளை எழுப்பி மகிழ்ச்சி அடைந்தனர்.

அதன்பின் அரியணையில் இருத்தி அர்ச்சித்துப் போற்றினார். சுந்தரர், சேரமான் பெருமாளுடன் மலைநாட்டுத் தலங்களை வழிபட்டு மகிழ்ந்திருந்தார்.

முரசு ஒலிக்க...

சங்கு முழக்க...

பறை அலற...

மேள தாளங்கள் சிவநாமத்தோடு பொங்கி எழ...

சேரமான் பெருமாள் சுந்தரரைத் தாம் அமர்ந்து வந்த யானையின் மீது அமரச் செய்தார். தாமும் பின்னால் அமர்ந்து, வெண்கொற்றக் குடையினைப் பிடித்தார். பின் அனைவரும் அரண்மனையை அடைந்தனர். சேரர்கோனும், சுந்தரரும் மாகோதை மாநகரில் எம்பெருமான் எழுந்தருளிய பல்வேறு சிவத்தலங்களை வழிபாடு செய்து பதிகம் பாடி பரமனை கண்டு களித்து வந்தனர்.

ஒருநாள் சேரர்கோன் திருமஞ்சனமாடிக் கொண்டிருந்த பொழுது சுந்தரர் திருவஞ்சைக்களத்து இறைவனை வழிபடச் சென்றார். திருக்கோவிலுக்குள் சென்ற சுந்தரர் நெஞ்சம் நெகிழ்ந்து உருகி நிலமிசை வீழ்ந்து 'அடியேன் இவ்வுலக வாழ்வை வெறுத்தேன்; அடியேனை நின் திருவடியில் சேர்த்தல் வேண்டும்" என்னும் குறிப்புடன் 'தலைக்குத் தலைமாலை" என்னும் திருப்பதிகத்தால் விண்ணப்பித்து வேண்டினார்.

எம்பெருமான் சுந்தரரை திருக்கயிலைக்கு மீண்டும் அழைத்து கொள்ள திருவுள்ளம் கொண்டார். நம்பியாரூரரை திருக்கயிலைக்கு அழைத்து வர தேவர்கள் பலரையும் திருவஞ்சைக்களத்திற்கு அனுப்பி அருளினார். சிவபெருமானின் அருள் ஆணையை மேற்கொண்டு வெள்ளை யானையுடன் திருவஞ்சைக்களத்து திருக்கோவிலின் வாயிலை அடைந்தனர் தேவர்கள்.

இறைவனை வழிபட்டு கோவிலின் வாயிலை அடைந்த சுந்தரரை வணங்கி நின்று தேவர்கள் திருக்கயிலை மலைக்கு வருமாறு இறைவனருளிய கட்டளையை தெரிவித்தனர். தம்மை மறந்த வன்றொண்டர் இறைவன் அருள் ஆணையை ஏற்று கொண்டார் சுந்தரர். தேவர்கள் சுந்தரரை வலம் வந்து அவரை வெள்ளை யானையின் மீது ஏற்றினர்.

சுந்தரர் தம் உயிர் தோழராகிய சேரமான் பெருமாளை சிந்தித்து கொண்டே கயிலைக்கு புறப்பட்டு சென்றார். சுந்தரர் திருக்கயிலை செல்வதை திருவருள் ஆற்றலால் உணர்ந்த சேரமான் பெருமாள் குதிரை மீது ஏறி திருவஞ்சைக்களத்து திருக்கோவிலுக்கு சென்றார்.

வெள்ளை யானையின் மீது அமர்ந்து விசும்பிற் செல்லும் சுந்தரரைக் கண்டார். தமது குதிரையின் செவியில் திருவைந்தெழுத்தை ஓதினார். அவ்வளவில் அக்குதிரை வான்வழி செல்லும் ஆற்றல் பெற்று வெள்ளை யானையை வலம் வந்து அதற்கு முன்னே செல்வதாயிற்று. சேரமான் பெருமாளுடன் வந்த வீரர்கள் தம் அரசரை விசும்பிற் கண்ணுக்கு புலப்படுமளவு கண்டு, பின் வருந்தினர்.

சுந்தரர், 'தானெனை முன் படைத்தான்" என்ற திருப்பதிகத்தை அருளி செய்தவாறு திருக்கயிலையை அடைந்து தென்திசை வாயிலை அணுகினார். சேரர்கோனும், சுந்தரரும் தத்தம் ஊர்திகளிலிருந்து கீழிறங்கி பல வாயில்களையும் கடந்து திருவணுக்கன் திருவாயிலை அடைந்தனர். அவ்வாயிலில் சேரர்கோன் உள்ளே செல்ல அனுமதியின்றி தடைப்பட்டு நின்றார்.

சுந்தரர், உள்ளே சென்று எம்பெருமானின் திருவடிகளில் வீழ்ந்து இறைஞ்சி நின்று, சேரமான் பெருமாள் வருகையை விண்ணப்பித்தார். சிவபிரான் மகிழ்ந்து சேரமானை வரவிடுக என நந்திதேவருக்கு ஆணையிட்டார். நந்திதேவரும் எம்பெருமானின் ஆணைக்கு பணிந்து சேரமான் பெருமாளை உள்ளே அழைத்து வந்தார். உள்ளே வந்த சேரர்கோன் சிவபிரானை வீழ்ந்து இறைஞ்சி நின்றார். எம்பெருமான் சேரர்கோனை 'நீ இங்கு நாம் அழையாமை வந்ததேன்" என வினவினார். அதைகேட்ட சேரவேந்தர், அடியேன் ஆரூரர் கழல் போற்றி அவரை சேவித்து வந்தேன். 

திருவருள் வெள்ளம் இங்கு என்னை ஈர்த்து நிறுத்தியது. அடியேன் பாடிய 'திருவுலாப்புறம்" என்ற நூலைச் செவிமடுத்தருள வேண்டும் என்று விண்ணப்பித்தார். எம்பெருமானும் சம்மதிக்க சேரர்கோன் திருவுலாப்புறத்தை எடுத்துரைத்து அரங்கேற்றினார். பெருமான் அவரை நோக்கிச் சேரனே...! நீ நம்பியாரூரராகிய ஆலால சுந்தரருடன் கூடி நீவிர் இருவரும் நம் சிவகணத் தலைவராய் இங்கு நம்பால் நிலைபெற்றிருப்பீராக என திருவருள் பாலித்தார். 

இறைவன் அருளிய வண்ணம் நம்பியாரூரர் அணுக்கத் தொண்டு புரியும் ஆலால சுந்தரராகவும், சேரமான் பெருமாள் சிவகணத் தலைவராகவும் திருக்கயிலையில் நிலைபெற்று பேரின்ப வாழ்வில் திளைத்து மகிழ்ந்தார்கள். நம்பியாரூரரை மணந்த பரவையாரும், சங்கிலியாரும் சிவபெருமான் திருவருளால் கமலினியாராகவும், அநிந்திதையாராகவும் உமையம்மைக்கு தாங்கள் செய்து வந்த அணுக்கத் தொண்டை மேற்கொண்டு மகிழ்ந்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்