Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 18 ஜூலை, 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 062

விறண்மிண்டர் நாயனார்...!!


நீர் மற்றும் நில வளம் என எண்ணற்ற செல்வங்கள் நிரம்ப பெற்றிருக்கக்கூடிய மலைநாடுதான் திருச்செங்குன்றூர். இந்த மலைநாட்டில் உழவு தொழில் செய்யக்கூடிய பல வேளாளர் குடிகள் வாழ்ந்து கொண்டு இருந்தனர். அந்த வேளாளர் மரபில் எம்பெருமானின் திருவருளால் அவதரித்தவர் விறண்மிண்டர் நாயனார். சிறுவயது முதலே எம்பெருமானின் மீது அன்பும், பக்தியும் அதிகமான அளவில் கொண்டிருந்தார்.

தினந்தோறும் எம்பெருமானை வழிபட்ட பின்பே அனைத்து செயல்களையும் மேற்கொள்ளக்கூடியவராக இருந்து வந்தார். எம்பெருமானை வழிபடுவது மட்டுமல்லாமல், எம்பெருமானை வழிபட்டு கொண்டிருக்கும் அடியார்கள் இடத்திலும் மதிப்பும், பக்தியும் வைத்திருந்தார். எவரேனும் எம்பெருமானை வழிபட்டு கொண்டிருக்கக்கூடிய அடியார்களை மதிப்பு குறைவாக பேசினாலோ அல்லது நடத்தினாலோ அதை அறிந்து கொண்ட நொடி முதல் அவர்களை தண்டிக்க தொடங்கி விடுவார்.

அடியார்களுக்கு துன்பம் ஏற்படாத வரையில் அமைதி சொரூபமாக இருக்கக்கூடிய விறண்மிண்டர் நாயனார், அவர்களுக்கு துன்பம் ஏதேனும் நேரிட்டால் கோபம் நிறைந்த ஆக்ரோஷமான பெரும் வீரனாக மாறி அவ்விடத்தில் பிழை இழைத்தோர்களை உடனே தண்டித்து விடுவார். குழந்தைப் பருவம் முடிந்து, வாலிப பருவம் அடைந்து, இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் எம்பெருமானின் திருவருளால் கிடைக்கப் பெற்றார்.

இல்லற வாழ்வில் இருந்தாலும் எம்பெருமானை வழிபடுவதும், எம்பெருமான் தொடர்பான புனித யாத்திரை மேற்கொள்வதும், எம்பெருமானை வழிபடும் அடியார்களுக்கு தேவையான உதவிகளை புரிவதிலும், எந்தவித குறையும் இல்லாமல் தன்னால் முடிந்த அளவு மேற்கொண்டு வந்திருந்தார். அறம் தவறாமல் வாழ்ந்து வந்த விறண்மிண்டர் நாயனார் எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் பல திருத்தலங்களுக்கு சென்று இறைவழிபாடுகளை மேற்கொண்டு மனம் மகிழ்ந்து கொண்டிருந்தார்.

விறண்மிண்டர் நாயனார் எம்பெருமானையும், எம்பெருமானை வழிபட்டு கொண்டிருக்கக்கூடிய அடியார்களையும் போற்றி வழங்குவதையே தம்முடைய பெரும் பாக்கியமாகவும், பிறவியின் நோக்கமாகவும் கொண்டு யாத்திரை மேற்கொண்டிருந்தார். எம்பெருமான் எழுந்தருளியுள்ள பல திருத்தலங்களுக்கு பயணங்களை மேற்கொண்டிருந்த விறண்மிண்டர் நாயனார் திருவாரூரில் எழுந்தருளியுள்ள தியாகராஜ பெருமானை வழிபட சென்று இருந்தார்.

தியாகராஜர் ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் பிரம்மாண்டமான ஒரு பெரிய ஆயிரங்கால் மண்டபம் ஒன்று வடகிழக்கு பகுதியில் அமையப்பெற்று இருந்தது. அந்த மண்டபம் 'தேவாசிரியன் மண்டபம்" என்று அழைக்கப்படுகின்றது. தியாகராஜரை வணங்கி வழிபட வருகின்ற தேவாதி தேவர்களும் எம்பெருமானை வழிபடுவதற்கான காலம் வரும்வரை மண்டபத்தில் காத்திருக்கும் இடம் என்பதனால் அந்த மண்டபத்தை 'தேவாசிரியன் மண்டபம்" என்று அழைக்கிறார்கள்.

தேவாசிரியன் மண்டபத்தினை சிலர் 'ராஜதானி மண்டபம்" என்றும் அழைப்பார்கள். அதாவது செல்வத்தியாகர் ஆழித்தேர் விழா முடிந்ததும் இந்த மண்டபத்தில் வந்து மகாபிஷேகம் செய்து செங்கோல் செலுத்துவர். ஆகையினால் இந்த மண்டபத்தை 'ராஜதானி மண்டபம்" என்றும் அழைப்பார்கள். இந்த மண்டபத்தில் எம்பெருமானை வழிபடும் சிவனடியார்கள் தங்கியிருப்பார்கள்.

திருவாரூரில் எழுந்தருளியுள்ள எம்பெருமானை வழிபட வருபவர்கள் இந்த தேவாசிரியன் மண்டபத்தை வலம் வந்து அங்கு தங்கியிருக்கும் அடியவர்களை பணிந்து வணங்குவர். அதன் பின்பே அக்கோவிலின் மூலவரான திருமூலட்டான நாதரையும், தியாகேசப் பெருமானையும் வழிபடுவது வழக்கமாக இருந்தது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாரூரில் தங்கியிருந்த காலங்கள் யாவும் தேவாசிரியன் மண்டபத்தை வலம் வந்து, அங்கிருக்கும் அடியார்களை பணிந்து வணங்கிய பின்பு, தமது தோழரான திருவாரூரில் எழுந்தருளியுள்ள புற்றிடங்கொண்ட நாதரை வணங்கி வழிபட்டு வந்து கொண்டிருந்தார்.

திருவாரூரில் எழுந்தருளியுள்ள புற்றிடங்கொண்ட நாதரை வணங்கி, வழிபட்டு வந்து கொண்டிருந்த சமயத்தில் திருவாரூரில் தேவாசிரியன் மண்டபத்தில் விறண்மிண்டர் நாயனார் அங்கிருந்த அடியார்களுடன் தங்கியிருந்தார். இவ்விடத்தில் எவராலும் புரிந்து கொள்ள முடியாத வகையில் எம்பெருமான் தமது திருவிளையாடலை நடைபெற ஏதுவாக இருக்கக்கூடிய சூழ்நிலைகளையும், காரணங்களையும் உருவாக்கி திருவிளையாடலை நடத்த உள்ளார்.

இவ்விதம் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில் சுந்தரர் புற்றிடங்கொண்ட நாதரை வழிபட எண்ணம் கொண்டு திருக்கோவிலை அடைந்தார். எம்பெருமானை வழிபட வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர் இருந்தமையால் தேவாசிரியன் மண்டபத்தில் இருந்த அடியார்களை அவர் கண்டதும் மனதார அவர்களை எண்ணி வணங்கிவிட்டு, வேறொரு வழி பக்கமாக புற்றிடங்கொண்ட நாதரை வழிபட சென்று கொண்டிருந்தார்.

இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் எதையும் அறியாத விறண்மிண்டர் நாயனார், சுந்தரர் மண்டபத்தில் இருக்கும் அடியார்களை கண்டும் காணாதது போல சென்று கொண்டு இருக்கின்றார் என்று தவறாக நினைத்துக் கொண்டார். பின்னர் நீர் வணங்கத்தக்க வேண்டிய அடியார்கள் எல்லோரும் இங்கு இருக்கும்போது அங்கு செல்கின்றீரே... என்ன பயன்? அடியார்களை வணங்க தெரியாத இவர் அவ்வடியார்களுக்கு புறம்பானவனே... என்று கூறினார். அதுமட்டும் அல்லாமல் அவனை வலிய சென்று ஆட்கொண்ட வீதிவிடங்கப் பெருமானும் இவ்வடியாருக்கு புறம்பானவனே... என்று கடுமையாக குற்றம் சாட்டினார் விறண்மிண்டர் நாயனார்.

இவர் கூறியதை கேட்ட அடியார்கள் சிலர் விறண்மிண்டர் நாயனாரிடம் சுந்தரர் எம்பெருமானிடமிருந்து பரிபூரணமாக அருள் பெற்றவர் என்றும், அவரை இவ்விதம் உரைப்பது முறையானது அல்ல என்றும் கூறினார்கள். இதைக்கேட்டதும் அடியார்களை மதித்து அவர்களிடம் உரையாட தெரியாதவன் எம்பெருமானிடம் அருள் பெற்றவனாக இருந்தாலும் அவன் அடியார்களுக்கு புறம்பானவனே... என்றும், இனியும் இம்மண்ணில் இருப்பது எமக்கு சரியானதாக தோன்றவில்லை என்றும் கூறினார் விறண்மிண்டர் நாயனார்.

சுந்தரரும், திருவாரூரில் எழுந்தருளி இருப்பவர்களும் அடியார்களுக்கு புறம்பானவர்களே... இனியும் இம்மண்ணிற்கு யாம் வரமாட்டோம் என்று சினம் கொண்டு உரைத்த வண்ணமாக திருவாரூரை விட்டு வெளியேறினார் விறண்மிண்டர் நாயனார். சுந்தரரின் மீது கோபம் கொண்ட விறண்மிண்டர் நாயனார் சுந்தரரையும், திருவாரூரையும் வெறுத்தார். எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் செல்வேன்... ஆனால், திருவாரூருக்கு மட்டும் செல்லப்போவதில்லை என்று உறுதிபூண்டார். இந்த கோபமானது அடியார்களிடத்தில் வேறுவிதமாக செயல்பட துவங்கியது. அதாவது வீட்டிற்கு வரும் அடியார்களை உபசரிப்பதற்கு முன் அவர்களது ஊரைப் பற்றி விசாரிப்பார் விறண்மிண்டர் நாயனார்.

அவர்கள் திருவாரூர் என்று சொன்னால் அவர்களது காலை வெட்டிவிடுவார். இதனால் விறண்மிண்டர் நாயனாரின் மனைவி தம் வீட்டிற்கு வருகைத் தரும் அடியார்களிடம் சென்று, எந்த ஊரின் பெயரை வேண்டுமானால் உரையுங்கள். ஆனால், திருவாரூர் பெயரை மட்டும் உரைக்க வேண்டாம் என்று முன்கூட்டியே தெரிவித்துவிடுவார். அடியார்கள் சிலரின் மூலம் அன்று நிகழ்ந்த நிகழ்வுகளை மட்டுமல்லாமல் அந்த நிகழ்வின் மூலம், இன்றும் விறண்மிண்டர் நாயனார் அடியார்களிடத்தில் பாரபட்சமின்மை பார்த்து அவர் செய்து வரும் செயல்களை அறிந்து மிகவும் மனம் வருந்தினார் சுந்தரர்.

பின்பு சுந்தரர், விறண்மிண்டர் நாயனாரிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தினை நிவர்த்தி செய்து, மீண்டும் பழைய நிலைமைக்கு மாற்றி அருளிட வேண்டும் என புற்றிடங்கொண்ட நாதரை வேண்டினார். சுந்தரரின் விருப்பத்திற்கு இணங்கி எம்பெருமானும் திருவிளையாடலை நிகழ்த்துவதற்கான செயல்களை மேற்கொள்ள துவங்கினார். அடியார்களிடத்தில் அன்பு கொண்ட எம்பெருமான், அடியார்களிடத்தில் உள்ள வேறுபாட்டினை கலைக்க, எம்பெருமானே சிவனடியார் வேடம் பூண்டு, விறண்மிண்டர் நாயனார் இல்லத்திற்கு வந்து குரல் கொடுத்தார்.

அவரது மனைவி ஓடி வந்து சிவனடியாரை கண்டதும் முகம் மலர வரவேற்றாள். சுவாமி தங்களிடம் ஒரு விண்ணப்பம் என்றாள். என்ன மகளே?... என்று அடியார் வேடத்தில் வந்த எம்பெருமான் கேட்க... தாங்கள் எந்த ஊரிலிருந்து வந்திருக்கின்றீர்கள்? என்று என் கணவர் கேட்டால் திருவாரூர் என்று சொல்லாதீர்கள் என்றாள். ஆனால், அடியார் எனக்கு பொய் பேச தெரியாது என்று மறுத்தார். எனினும் ஒரு உதவி செய் என்று விறண்மிண்டர் நாயனாரின் மனைவியிடம் வேண்டினார் அடியார் வேடத்தில் வந்த எம்பெருமான்.

அடியார் வடிவில் இருந்த எம்பெருமான், விறண்மிண்டர் நாயனாரின் மனைவியிடம் உணவருந்தும்போது உன் கணவர் வைத்திருக்கும் அரிவாளை இடதுபுறம் வைத்துவிடு என்றார். விறண்மிண்டர் நாயனாரின் மனைவியும் அடியாரின் கூற்றுக்கு சம்மதித்தார். இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் எதையும் அறியாத விறண்மிண்டர் நாயனார் அவ்விடத்திற்கு வருகை தந்திருந்தார். விறண்மிண்டர் நாயனாரின் துணைவியார் எப்போதும் போல இருவரையும் அமரவைத்து அவர்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டு இருந்தார்.

அப்பொழுது எப்போதும் போல தம்முடைய இல்லத்திற்கு வந்திருந்த அடியாரிடம்,

தாங்கள் எந்த ஊரிலிருந்து வந்து இருக்கின்றீர்கள்? என வினவினார்.

அடியார் கோலத்தில் இருந்த எம்பெருமான், இவ்வுலகமே எனக்கு சொந்த ஊர் ஆகும் என்றும்,

இதில் தனித்து எனக்கென்று எந்த ஊரும் இல்லை என்றும்,

எனினும் நான் பிறந்த ஊர் என்பது சுந்தரர் அவதரித்து இருந்த திருவாரூர் தான் என் பிறந்த ஊர் ஆகும் என்று கூறினார்.

அடியாரிடமிருந்து சற்றும் எதிர்பார்க்காத இந்த விடையை அறிந்ததும் விறண்மிண்டர் நாயனாருக்கு கண்களில் கோபம் அதிகரிக்க தொடங்கியது. அடியார்களை மதிக்கத் தெரியாத அந்த அற்ப மானிடன் பிறந்த ஊர் நீ பிறந்த ஊராம். இந்த நொடியே உன்னை என்ன செய்கின்றேன்? பார்... என்று உரைத்த வண்ணமாக எப்போதும் போல தனது வலதுபுறத்தில் இருக்கும் அரிவாளை நோக்கினார்.

அவ்விடத்தில் அரிவாள் இல்லாமல் இருப்பதை அறிந்ததும் தனது மனைவியை நோக்கி எங்கே அரிவாள்? என்று வினவினார். உடனே விறண்மிண்டர் நாயனாரின் துணைவியார் தவறுதலாக இடதுபுறம் வைத்துவிட்டேன் என்று கூறினார். மனைவி உரைத்ததும் உடனே இடதுபுறம் திரும்பி அரிவாளால் அடியாரை வெட்டுவதற்கு அவரின் பக்கம் திரும்புவதற்குள் அடியார் எழுந்து ஓடிவிட்டார்.

விறண்மிண்டர் நாயனார், அடியார் ஓடுவதை கண்டதும் அவரை துரத்திய வண்ணமாக ஓட துவங்கினார். அடியார் எங்கும் நிற்காமல் ஓட... அவரை துரத்திக் கொண்டு திருவாரூரின் எல்லைக்கு வந்துவிட்டார். திருவாரூர் என்பதை உணராமல் விறண்மிண்டர் நாயனார் அடியாரை பிடிக்கும் வேகத்தில் ஓடி வந்து கொண்டு இருந்த பொழுது நிலத்தில் விழுந்தார்.

ஓடி வந்ததினால் களைத்து போயிருந்த விறண்மிண்டர் நாயனாரை நோக்கி அடியார் கோலத்தில் இருந்த சிவபெருமான் சிரித்துக் கொண்டே...

அடியனே...!

நீர் இப்பொழுது எங்கே வந்திருக்கிறீர்கள் என்பதை தெரியுமா? நீர் எப்போதும் வெறுக்கும் திருவாரூரில் தான் இருக்கின்றீர்கள்...

என்று உரைத்த வண்ணமாக நகைத்துக் கொண்டு இருந்தார்.

இதைக் கேட்டதும் விறண்மிண்டர் நாயனார் மனம் பதறினார்.

கோபத்தில் தவறு செய்து விட்டோமோ? என்று எண்ணி மனம் வருந்தினார். பின்பு செய்வதறியாமல் திருவாரூருக்குள் நுழைந்த எம்முடைய காலை நானே வெட்டிக் கொள்கிறேன் என்று உரைத்து விட்டு தன்னுடைய காலை வெட்டிக் கொண்டார். நாயனாரின் செயலைக் கண்டதும் எம்பெருமான் மேலும் தன்னுடைய பக்தனை சோதிக்க விருப்பமில்லாமல் உடனேயே தம்பதி சமேதராய் விறண்மிண்டர் நாயனாருக்கு காட்சி அளித்தார்.

தம்மை ஆட்கொண்டது எம்பெருமான் தான் என்பதை உணர்ந்த விறண்மிண்டர் நாயனாருக்கு கண்களில் ஆனந்த கண்ணீர் தழும்பியது. எம்பெருமான், சுந்தரர் அடியார்களின் மீது கொண்டிருந்த பக்தியை விறண்மிண்டர் நாயனார் உணரவே இதை செய்ததாகவும் கூறப்படுகிறது. அடியார்களின் மீதும், எம்பெருமானின் மீதும் அளவற்ற பக்தியையும், பேரன்பையும் கொண்ட விறண்மிண்டர் நாயனார் திருக்கயிலையில் இறைவனின் திருவருளை பிரியாமல் வாழும் பேறை பெற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக