பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் முறையை
அம்மாக்கள் தெரிந்துவைத்துகொள்ள வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்கும் முறையிலும் அம்மா மற்றும் குழந்தையின் ஆரோக்கியம் அடங்கியிருக்கிறது. குறிப்பாக முதல் குழந்தை பெற்றெடுக்கும் அம்மாக்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். இதை சரிவர செய்யாவிட்டால் பால் சுரப்பு குறைந்துவிடும். குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் கிடைக்காஅது. அதோடு அம்மாவுக்கு மார்பகத்தில் பால் கட்டிகொள்ள நேரிடும்.
எப்போதும் தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தையை அணைத்து தாயின் உடலோடு ஒட்டி இருக்க செய்தால் தாய்ப்பால் சுரப்பு சீராக இருக்கும். குழந்தையும் கவனமாக பசியாறக்கூடும். அதற்கு செய்ய வேண்டிய முதல் விஷயம் குழந்தையை எப்படி கையில் ஏந்தி பால் புகட்ட வேண்டும் என்று தெரிந்துகொள்வதுதான்.
தொட்டில் நிலை
அம்மா இரண்டு கைகளையும் மார்பை ஒட்டி
தொட்டில் போல் கைகளை கட்டியிருக்க வேண்டும். குழந்தையை முன்னங்கையில் மென்மையாக
கிடத்தி கொண்டு குழந்தையின் தலையை முழங்கைகளை வளைத்து அந்த இடத்தில் வைத்தபடி
அணைக்கவேண்டும். குழந்தையின் தாடை முழங்கையில் ஒட்டி இருக்க வேண்டும்.
இப்போது குழந்தையின் மூக்கு
மார்பகத்தை ஒட்டியும் இருக்க வேண்டும். பிறகு குழந்தையை மெல்ல அணைத்து குழந்தையின்
வாயருகில் மார்பக காம்பை வைக்க வேண்டும். இந்நிலையில் குழந்தை மிக செளகரியமாக
மெத்தென்ற உணர்வுடன் இருக்கும். இந்த நிலையில் பால் புகட்டும் போது உடலை குறுக்கி
உட்காராமல் நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும்.
இடைப்பட்ட நிலை அல்லது
குறுக்குத்தொட்டில் நிலை
இதுவும் ஏறத்தாழ தொட்டில் நிலை போன்றதுதான். ஆனால் இதில் ஒரு கையில் உள்ளங்கையில் குழந்தையின் தலையை மென்மையாக பிடித்திருக்க வேண்டும். பெருவிரல் குழந்தையின் ஒரு காது பகுதியையும் மற்ற நான்கு விரல்கள் அடுத்த பக்கத்தின் காது முனையையும் பிடித்திருக்கும்படி வைக்கவேண்டும். மற்றொரு கையால் மார்பகத்தை பிடித்தபடி பால் புகட்ட வேண்டும். இந்நிலையில் குழந்தையின் தலை உள்ளங்கையில் மென்மையாக வலியற்று இருக்கும். அதே போன்று குழந்தையின் உடலை ஒரு கை தாங்கி இருக்கும்.
பக்க சாய்வு நிலை
இந்த நிலை பொதுவாக அதிக ரத்தபோக்கு
கொண்ட தாய்க்கும், சிசேரியன் பிரசவம் நடந்தவர்களுக்கும், வலி மிகுந்த பிரசவம்
செய்துகொண்டவர்களுக்கும் ஏற்ற முறை. குழந்தையை மார்புக்கு அருகில் அணைத்து படுத்து
தாய் தலை முதல் கழுத்து வரை உடலை மேலே தூக்கி குழந்தையை அணைத்த நிலையில் பால்
புகட்டும் முறை. பெரும்பாலும் அனைவருமே இந்த முறையை செய்யலாம். குறிப்பாக இரவு
நேரங்களில் இந்த நிலையில் பால் புகட்டலாம்.
பக்கவாட்டு நிலை அல்லது பந்து நிலை
சிசேரியன் மூலம் பிரசவித்தவர்களுக்கு குழந்தையை வயிற்றில் கிடத்துவதில் சிரமம் இருக்கும். ஏனெனில் வயிற்றில் பளு வைக்க கூடாது. இந்த முறையில் பிரசவித்தவர்களுக்கு ஏற்ற நிலை இதுதான். குழந்தையின் தலையை பந்து போல் ஒரு கையில் பிடித்து குழந்தையின் உடல் தாயின் தோள்பட்டை பக்கமாக இருக்கும்படி பிடித்து கொள்ள வேண்டும். அப்படியே அணைத்து பால் புகட்ட வேண்டும். பிறகு அடுத்த மார்பகத்துக்கு மாற்றும் போதும் குழந்தையை அந்த பக்கமான தோள்பட்டையின் கீழ் பிடித்து கொள்ள வேண்டும். இரட்டை குழந்தைகளை பெற்றவர்களுக்கு இம்முறையில் பால் புகட்ட அறிவுறுத்தப்படுகிறது.
படுத்துக்கொண்டு பால் புகட்டும் நிலை
இது பெரும்பாலும் பெரியவர்களால்
அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் பாதுகாப்பாக தாய்ப்பால் புகட்டினால் குழந்தையை தூங்க
வைக்க தனி தூளி தேவையில்லை. அம்மா தலை முதல் வயிறு பகுதி வரை நன்றாக சாயும்
நிலையில் படுத்துக்கொண்டு, குழந்தையின் தலை முதல் உடல் வரை மேலேயே வைத்துகொள்ள
வேண்டும். இந்நிலையில் குழந்தை குப்புறப்படும்படி இருக்க கூடாது. மார்போடு வைத்து
அணைத்தபடி பால் புகட்ட வேண்டும்.
மேற்கண்ட ஐந்து நிலைகளில் பால்
புகட்டுவதன் மூலம் குழந்தைக்கு அசெளகரியம் இருக்காது. இருபுறமும் மாறி மாறி பால்
புகட்டுவதும், மார்பக காம்போடு சுற்றியிருக்கும் முகடும் வாயில் வைத்து உறிஞ்ச
பழக்க வேண்டும். அப்போதுதான் பால் சுரப்பு அதிகமாக இருக்கும். பால் அதிகமாக
சுரந்து குழந்தைக்கு மூச்சு திணறல் இருந்தால் சிறிது நேரம் இடைவேளை விட்டு பால்
புகட்டலாம். பால் புகட்டிய பிறகு குழந்தையை தோளில் தட்டி பிறகு கீழே படுக்கையில்
படுக்க வைக்க வேண்டும். இதனால் குழந்தைக்கு செரிமானம் எளிதாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக