Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 20 ஜூலை, 2020

இந்த 5 விதமான சத்து உருண்டைகள் உங்கள் உடலை அதிகபடியாக வலுவாக்கும்! பிறகு நோயாவது தொற்றாவது!

samayam tamil

சத்தான உணவு சக்கை உணவு என்று வகைப்படுத்தி வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால் நமது முன்னோர்கள் காலத்தில் எல்லாமே சத்து என்பதால் வகைப்படுத்த வேண்டிய அவசியம் இருந்ததில்லை.

 
சத்தான உணவு எதிலெல்லாம் இருக்கு என்று தேடிக்கொண்டிருக்கிறோம். உணவே மருந்தாக சாப்பிட்டாலும் அதன் சுவையும் ருசியும் அபாரமாகவே இருந்தது என்பதை மறுக்கவும் முடியாது. இன்று பெரும்பாலான நோய்த் தொற்றுக்கு காரணமே சத்தில்லாத உணவுகள் தான். உடல் ஆரோக்கியத்தின் மீது விழிப்புணர்வு கொண்டிருந்தாலும் இன்றைய நிலையில் பூச்சிக்கொல்லி அதிகம் தெளித்த உணவுபொருள்களின் பயன்பாடும் கூட நம்மை நோயாளிகளாக மாற்றிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் உடலை பதமாக ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பு நம்மிடம் தான் உண்டு. நொறுக்குத்தீனிகள் விரும்பும் சிறுசுகள் முதல் பெருசுகள் வரை உடலை வலுவாக வைத்திருக்க இந்த வகையான ஸ்நாக்ஸ் வகையறாக்கள் உதவும். அது குறித்து தெரிந்துகொள்வோம்.
சத்து உருண்டை
தானியங்களும், உலர் பருப்புகளும் சேர்த்து தயாரிக்கப்படும் சத்து மாவு தயாரிக்கும் முறை குறித்து ஏற்கனவே விளக்கமாக கொடுத்திருக்கிறேன். அதற்கான லிங்க் இங்கு கொடுத்துள்ளேன்.
சத்து மாவு ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை தாங்கும் என்பதால் இதை மொத்தமாக அரைத்து வைத்தும் பயன்படுத்தலாம். வாரத்துக்கு இரண்டு நாள் மட்டும் இதை கொடுத்தாலும் போதும்.
எப்படி செய்வது?
( ஐந்து உருண்டைகளுக்கான அளவு)
சத்துமாவு - 1 கப்
கருப்பட்டி - 1 கப் (இனிப்புக்கேற்ப கூடுதலாகவும் சேர்க்கலாம்)
நெய் - கால் கப் ( தேவைக்கு குறைத்தும் பயன்படுத்தலாம்)
கொப்பரை தேங்காய் துண்டுகள் - கால் கப்,
உப்பு - சிட்டிகை,
சுக்குத்தூள், ஏலத்தூள் - கால் டீஸ்பூன்
அகலமான பாத்திரத்தில் கருப்பட்டி அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கருப்பட்டி கரைய விடவும். பிறகு இதில் சிறிது சிறிதாக சத்துமாவை கலக்கவும். உடன் நெய் சேர்த்து விடவும். மாவு கருப்பட்டியில் கலந்ததும் இறக்கி விடவும். கொப்பரைத் தேங்காய்த்துண்டுகளை நெய்யில் வதக்கி சேர்க்கவும். பிறகு உப்பு, சுக்குத்தூள், ஏலத்தூள் கலந்து நெய் தொட்டு உருண்டைகளாக்கி பிடிக்கவும். ஒரு நாள் வரை வைத்திருக்கலாம்.
பாசிப்பயறு உருண்டை
முழு பாசிப்பயறை சுத்தமாக கழுவி மிஷினில் கொடுத்து மாவாக்கவும். இதை மூன்று முதல் ஆறுமாதங்கள் வரை பயன்படுத்தலாம். வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உருண்டை இது.
எப்படி செய்வது?
பாசிப்பயறு மாவு - 1 கப்,
நாட்டுசர்க்கரை - 1 கப், ( நீரிழிவு நோயாளிகளுக்கு தயாரிக்கும் போது கால் கப் போதுமானது )
ஏலத்தூள் - சிட்டிகை,
முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை - தேவைக்கேற்ப
நெய் - அரை கப்
மாவை இலேசாக வாணலியில் பச்சை வாசனை போகும் வரை வறுத்து நாட்டுச்சர்க்கரை சேர்த்து இறக்கி விடவும். பிறகு இதில் ஏலத்தூள், வறுத்த முந்திரி பருப்புகள் அனைத்தையும் நன்றாக கிளறி எடுக்கவும். பத்து நிமிடங்கள் வரை வைத்திருந்தால் நாட்டுசர்க்கரை இலேசாக உருகியிருக்கும். பிறகு நெய்யை உருக்கி அல்லது இலேசாக சூடேற்றி உருண்டைளாக பிடித்தெடுக்கவும். 3 முதல் 4 நாட்கள் வரை இந்த உருண்டை தாங்கும்.
கம்பு மாவு உருண்டை
தானியங்களில் கம்பு குளிர்ச்சித்தன்மை கொண்டது. தீரா நோயாளிகளான நீரிழிவு இருப்பவர்களுக்கு ஏற்ற உணவு இது.
எப்படி செய்ய வேண்டும்?
கம்பை கல் நீக்கி சுத்தம் செய்து கழுவி ஒரு மணி நேரம் ஊறவிடவேண்டும். பிறகு நீரை வடிகட்டி மிக்ஸியில் அரைக்கவேண்டும். நீர் தெளித்தும் அரைக்கலாம். சற்று கெட்டியாக இறுக்கமாக இருந்தால் போதுமானது. இதை இட்லி துணியில் முடிந்து இட்லி தட்டில் ஆவியில் வேக வைக்க வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து அகலமான பாத்திரத்தில் கொட்டி விடவும்.
கார உருண்டை
கார உருண்டை தேவையெனில் கடுகு, உளுந்து, வரமிளகாய் தாளித்து, சாம்பார் வெங்காயம் பொடியாக நறுக்கி வதக்கி இதில் சேர்த்து உப்பு நீர் தெளித்து உருண்டையாக்கி மீண்டும் இட்லி தட்டில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும். தேவையெனில் வேக வைக்கலாம். ஒரு நாள் வரை வைத்திருக்கலாம்.
இனிப்பு உருண்டை
நாட்டு சர்க்கரை அல்லது வெல்லத்தை பொடித்து இனிப்புக்கேற்ப சேர்த்து தேங்காய்த்துருவல் கலந்து நெய் விட்டு உருண்டைகளாக்கவும். இரண்டு நாட்கள் வரை தாங்கும்.
கேழ்வரகு வெல்லம் வேர்க்கடலை


தானியங்களில் கேழ்வரகுக்கு தனி இடம் உண்டு. கேழ்வரகுடன் வெல்லம் வேர்க்கடலை இரண்டையும் சேர்ப்பதால் மூன்றில் இருக்கும் சத்துகளும் உடலுக்கு கிடைக்கும்.
கேழ்வரகை நீர் தெளித்து கட்டியில்லாமல் பிசறி இட்லி பானையில் வேக வைக்கவும். பிறகு அதை எடுத்து தட்டில் கொட்டி சூடாக இருக்கும் போதே வெல்லத்தைப் பொடித்து சேர்த்து, வறுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்த வேர்க்கடலை சேர்க்கவும். கேழ்வரகை காட்டிலும் அதிக அளவு வெல்லம் சேர்ப்பதால் மாவுடன் கலந்து உருகிய பதத்தில் கிடைக்கும் இதை அப்படியே உருண்டைகளாக்கி பிடிக்கவும். மூன்று முதல் நான்கு நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
அரிசி உப்பு உருண்டை
இன்றும் பெரியவர்கள் வீட்டில் இருந்தால் மாலை நேரத்தில் ஒரு நாளாவது இந்த ஸ்நாக்ஸ் இருக்கும்.
எப்படி செய்வது
உப்பு உருண்டை
கடுகு, உளுந்து, க. பருப்பு வரமிளகாய் சேர்த்து தாளித்து சாம்பார் வெங்காயம் நறுக்கி அரிசி ரவை சேர்த்து உப்பு, நீர் சேர்த்து கலந்து பிடித்த வடிவில் உருண்டைகளாக்கவும். இதை இட்லி பானையில் வைத்து ஆவியில் வேகவைத்து இறக்கவும். இது உப்பு உருண்டை.
புழுங்கல் அரிசியை கழுவி காயவைத்து மிஷில் கொடுத்து சிறு ரவையாக சன்னமாக அரைக்க வேண்டும். ஒருகப் அரிசி ரவைக்கு ஒன்றரை கப் வெல்லம் எடுத்து பாகு காய்ச்சி பதம் வந்ததும் அரிசி ரவையை சேர்த்து கிளறவும். இதில் தேங்காய்த்துருவல், ஏலத்தூள் சேர்த்து உருண்டைகளாக்கி பிடிக்கவும். இது இனிப்பு உருண்டை..
பலன்கள்
மேற்கண்ட ஐந்துமே உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டசத்துகளையும் தருகிறது. உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் என்பதால் தினமும் மாறி மாறி எடுத்துகொள்ளலாம். அதோடு நீரிழிவு நோயாளிகளுக்கும் சாப்பிட ஏற்ற உருண்டைகள். இதில் இனிப்பு மட்டும் சேர்க்காமல் காரம் சேர்த்து அல்லது மிதமான இனிப்பு சேர்த்து சாப்பிடலாம். வளரும் பிள்ளைகளுக்கு வேண்டிய வளமான சத்துகள் இந்த உருண்டைகளில் நிறைவாகவே இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக