Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 13 ஜூலை, 2020

அருள்மிகு கோட்டைவாசல் விநாயகர் திருக்கோவில்


மந்திரங்களில் ஓம் எனும் பிரணவ மந்திரம் எல்லா வினைகளையும் தீர்க்கவல்லதாகும்.

 அந்த ஓம் மந்திரத்தின் வடிவமாக இருக்கும் தெய்வம் தான் விநாயகர் பெருமான்.

 இந்த விநாயகப் பெருமானை வழிபடுபவர்களுக்கு எப்போதும் எதிலுமே வெற்றி தான்.

 விநாயகப் பெருமானுக்கு தமிழகம் முழுவதும் பல புகழ் பெற்ற ஆலயங்கள் இருக்கின்றன.

 அப்படியான ஒரு கோவில் தான் அருள்மிகு கோட்டை வாசல் விநாயகர் கோவில். இக்கோவிலின் மேலும் பல சிறப்புகள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

அருள்மிகு கோட்டைவாசல் விநாயகர் திருக்கோவில் வரலாறு

சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கோயிலாக இந்த கோட்டைவாசல் விநாயகர் கோயில் இருக்கிறது.

 இக்கோயிலின் பிரதான தெய்வமாக விநாயகப் பெருமான் இருக்கிறார். இவர் கோட்டைவாசல் விநாயகர் எனும் பெயரில் அழைக்கப்படுகிறார்.


 ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி அரச வம்சத்தினரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது இந்த விநாயகர் ஆலயம்.



தல புராணங்களின்படி ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்கள் தாங்கள் எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பும் இந்த கோட்டை வாசல் விநாயகருக்குப் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். அப்படி சேதுபதி மன்னர்கள் விநாயகப்பெருமானை வணங்கி சென்ற எல்லா காரியங்களிலும் அவர்கள் வெற்றிகளையே பெற்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது, இந்த விநாயகர் கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவதைக் கண்ட எரிச்சலடைந்த ஆங்கிலேய அதிகாரி ஒருவன், கோயிலுக்கு வெளியே அபிஷேக தீர்த்தம் வெளியேறும் கோமுகம் கட்டிட அமைப்பு போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக பொய்யாக ஒரு காரணம் கூறி, அதை எடுத்து விடுமாறு சேதுபதி மன்னர்களுக்கு உத்தரவிட்டான். அன்று இரவு அந்த ஆங்கிலேய அதிகாரி கனவில் வந்த விநாயகர் கோமுகம் பகுதியை எடுப்பதற்கான உத்தரவை வாபஸ் வாங்குமாறு கூறுவதாக கனவு கண்டான். தன் தவறை உணர்ந்த அந்த ஆங்கிலேய அதிகாரி மறுநாள் கோட்டைவாசல் விநாயகர் கோவிலுக்குச் சென்று விநாயகரை மனமுருக வணங்கி, தன்னுடைய தவறுக்காக வருந்தினான்

அருள்மிகு கோட்டைவாசல் விநாயகர் திருக்கோவில் சிறப்புகள்

கோயில் கிழக்கு திசை நோக்கியவாறு கட்டப்பட்டுள்ளது. முன் மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றைக் கடந்து கருவறையில் வல்லபையை மடியில் கட்டிக்கொண்டு பக்தர்களுக்கு காட்சி தருகிறார் மூலவரான கோட்டைவாசல் விநாயகர். உற்சவர் விநாயகர் கருவறைக்கு வெளியில் இருக்கிறார். நவராத்திரி விழா காலத்தில் விஜயதசமி தினத்தன்று மகர்நோன்பு திடலில் அம்பு போடும் திருவிழாவில் முதன்முதலாக செல்வதும், முதல் அம்பு போடுவதும் கோட்டைவாசல் விநாயகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு வந்து வழிபட்டால் நாம் நினைத்த காரியம் எதுவாயினும் அது விரைவில் நிறைவேறும் என்றும், காரிய வெற்றிகள் உண்டாகும் என்பது பக்தர்களின் திடமான நம்பிக்கையாகும். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் விநாயகருக்கு சிதறு தேங்காய் போட்டும், விநாயகருக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

கோயில் அமைவிடம்

அருள்மிகு கோட்டைவாசல் விநாயகர் திருக்கோவில் ராமநாதபுரம் மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்தில் அரண்மனை வாசல் பகுதியில் அமைந்துள்ளது.

கோயில் நடைதிறப்பு

அதிகாலை 5.50 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

கோயில் முகவரி

அருள்மிகு கோட்டைவாசல் விநாயகர் திருக்கோவில்
அரண்மனை வாசல்
ராமநாதபுரம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக