Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 28 ஜூலை, 2020

விபீஷணன் கேட்கும் அனுமதி...!

சீதை நலமுடன் இருக்கிறாள் என்பதைக் கேட்டு இராமர் மன நிம்மதி அடைந்தார். வானரங்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இராமர், இந்திரஜித் வெட்டியது மாய சீதை என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பிறகு விபீஷணனைக் கட்டித் தழுவிக் கொண்டார். விபீஷணா! எங்களின் துன்பங்களை நீக்க நீ இருக்கின்றாய். கடவுள் இருக்கிறார்.

அனுமன் இருக்கின்றான். எங்களின் ஆற்றலும், தவமும் இருக்கின்றது. இதையும் தாண்டி வேறென்ன வேண்டும் எங்களுக்கு என விபீஷணனை பாராட்டினார். பிறகு விபீஷணன், பெருமானே! இந்திரஜித் நிகும்பலா யாகத்தை முடிப்பதற்குள் நாம் அதனை தடுக்க வேண்டும்.

 ஆதலால் தங்களின் தம்பி இலட்சுமணனுக்கு விடைக்கொடுத்து என்னுடன் அனுப்புமாறு வேண்டுகிறேன் என்றான். இராமர் இலட்சுமணனிடம், தம்பி இலட்சுமணா! நீ பிரம்மாஸ்திரம், நாராயணாஸ்திரம், பாசுபதாஸ்திரம் முதலிய தெய்வ படைகலன்களை பயன்படுத்தக் கூடாது.

அவ்வாறு நீ உபயோகப்படுத்தினால் இந்த உலகம் அழிந்து விடும். இந்திரஜித் இப்படைகலன்களை பயன்படுத்தினால் அதனை தடுக்கும் பொருட்டு அப்படைகலன்களை பயன்படுத்துவாயாக.

இராமர், இலட்சுமணனுக்கு கவசத்தையும் திருமால் கொடுத்த அம்புறாத் துணியையும் கொடுத்து இப்போரில் தர்மம் தான் வெல்லும் அதர்மம் வெல்லாது எனக் கூறி அவர்களுக்கு விடைக் கொடுத்தார்.

அவர்களுடன் வானரங்களும் உடன் சென்றனர். இவர்கள் அனைவரும் நிகும்பலா யாகம் நடக்கும் இடத்திற்கு வந்தடைந்தனர். அந்த யாகத்தை காக்கும் பொருட்டு பல கோடி அரக்கர்கள் காவல் புரிந்துக் கொண்டிருந்தனர். விபீஷணன் இலட்சுமணனிடம், நாம் இப்போதே இந்த யாகத்தை சிதைக்க வேண்டும் என்றான். வானரப் படைகள் அரக்க படைகளுடன் போர் புரிய தொடங்கினர்.

வானரங்களுக்கும் அரக்கர்களுக்கும் இடையே கடும் போர் நடந்தது. இதில் அசுர சேனைகள் பல அழிந்தன. யாகத்திற்காக வைத்திருந்த யாக குண்டங்களும், தீர்த்த கும்பங்களும் சிதைந்து போயின. இலட்சுமணன், அரக்கர்களை வதம் செய்துக் கொண்டே வந்தான். போர் புரிந்து அனுமன் மிகவும் சோர்ந்து போனான்.

அவனை தொடர்ந்து அங்கதன் போர் புரிந்தான். போரில் மாண்ட அரக்கர்களை கண்டு இந்திரஜித் பெருங்கோபம் கொண்டான். அனுமன் இந்திரஜித்தை பார்த்து! அரக்கனே! மூடனே! ஓர் அரக்கனை சீதை போல் மாற்றி ஏமாற்றியவனே! அயோத்திக்கு போய் பரதனையும், சத்ருக்கனையும் கொல்வேன் என கூறினாயே! அவர்களுடன் போர் புரிந்தாயா? பொய்யே வடிவானவனே! உன் அழிவுக் காலம் வந்துவிட்டது.

நீ இறப்பது உறுதி. உன்னை நினைத்து உன் தந்தையும், தாயும் அழப் போகிறார்கள் என்றான். இதைக் கேட்ட இந்திரஜித் கோபங்கொண்டு, ஏ வானரமே! உங்களை நான் இன்றே அழிக்கப் போகிறேன்.

உங்களை வெல்வதற்கு எனக்கு இந்த யாகம் ஒன்றும் தேவையில்லை எனக் கூறிக்கொண்டு போருக்கு வந்தான். இலட்சுமணன் அனுமன் மீது ஏறினான். விபீஷணன், இலட்சுமணா! இந்திரஜித்தை கொல்ல இது தான் ஏற்ற நேரம். காலத்தை தாழ்த்தாமல் விரைந்து அவனைக் கொன்று வெற்றி வாகை சூடுவாயாக எனக் கூறினான்.

இந்திரஜித்திற்கும், இலட்சுமணனுக்கும் பெரும் போர் உண்டானது. அப்போரைக் காண விண்ணுலகத்தவர் வானில் வந்து தோன்றினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக