Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 28 ஜூலை, 2020

வாழ்க இராமர் - வாழ்க சீதை

ஒரு கோயிலுக்குள் இரண்டு திருடர்கள், பூட்டை உடைத்துச் சாமி சிலைகளைத் திருடிக் கொண்டிருப்பதை அந்த வழியே சென்ற பரமார்த்தரும் சீடர்களும் பார்த்தனர். ஐயா! யார் நீங்கள்? ஏன் இந்தச் சிலைகளை எடுக்கிறீர்கள்? என்று பணிவுடன் கேட்ட பரமார்த்தரைப் பார்த்து, திருடர்கள் முதலில் சற்று பயந்தார்கள். பிறகு, நாங்கள் வெளியூரில் இருந்து வருகிறோம். இங்கே உள்ள சிலைகளை எல்லாம் அங்கே கொண்டுபோகப் போகிறோம் என்றனர்.

 வெளியூருக்கா? ஏன்? என்று கேட்டான், மட்டி. இந்தச் சிலைகள் இங்கேயே இருப்பதை விட வெளியூருக்குப் போனால்தான் உங்கள் ஊரின் பெருமை மற்ற ஊருக்கும் தெரியும் என்றான், திருடரில் ஒருவன்.

ஆழ்வார்கள், நாயன்மார்கள் செய்த தொண்டைவிட, நீங்கள் செய்யும் தொண்டுதான் பெரியது. உங்கள் பக்தியை மெச்சுகிறேன் என்று பாராட்டினார், பரமார்த்தர். ஆனால், மட்டி சந்தேகப்பட்டு, இதை நீங்கள் திருடிக்கொண்டு போகிறீர்கள் என்றான்.

அதைக் கேட்ட திருடர்கள், திருடுவதாய் இருந்தால் யாருக்கும் தெரியாமல் அல்லவா திருட வேண்டும்? உங்களுக்குத் தெரிந்துதானே எடுத்துக்கொண்டு போகிறோம்? இது எப்படித் திருடுவது ஆகும்? என்று கேட்டனர். ஆமாம்! எங்கள் முன்னிலையில் நடப்பதால் இது திருட்டு இல்லைதான்! என்று ஒப்புக் கொண்டான் மட்டி.

திருடர்கள், சாமி சிலைகளைப் பெயர்த்து எடுக்க கஷ்டப்படுவதைக் கண்டு குருவும், சீடர்களும் சேர்ந்து ஒரு வழியாக இராமர் சிலை, சீதை சிலை, ஆஞ்சநேயர் சிலை எல்லாவற்றையும் பெயர்த்து எடுத்தனர்.

குருவே! இவ்வளவு காலமாக நம் ஊரில் இருந்த சாமி சிலைகள் இன்று விசேஷ பூசை செய்துதான் அனுப்ப வேண்டும் என்றான், முட்டாள். யாராவது ஆள் வந்துவிடப் போகிறார்கள் என்று பயந்த திருடர்கள், சீக்கிரம் செய்யுங்கள் என்று அவசரப்படுத்தினர். பரமார்த்தரும் அவசரம் அவசரமாக மந்திரம் சொல்லி பூஜை செய்தார். பூஜை முடிந்ததும் வெளியில் தயாராக இருந்த வண்டியில் சிலைகளைத் தூக்கிக் கொண்டு போக திருடர்கள், நினைத்தனர்.

அப்போது பரமார்த்தரும், மூன்று சீடர்களுக்கும் மகிழ்ச்சியில் இருந்தனர். சாமிக்கு விடை கொடுத்து அனுப்ப வேண்டும் என்று வாழ்க இராமர்! வாழ்க சீதை! ஆஞ்சநேயருக்கு ஜே! என்று காட்டுக்கத்தலாகக் கத்தினார்கள்.

அடப் பாவிகளா! கடைசி நேரத்தில் சத்தம் போட்டு எங்கள் காரியத்தையே கெடுத்து விடுவீர்கள் போலிருக்கிறதே என்று திருடன் திட்டினான். குதிரை மீது ஏறிக் கொண்ட திருடர்கள், வண்டியை ஓட்டியபடியே, முட்டாள்களே! நாங்கள் இந்தச் சிலைகளைத் திருடிக் கொண்டு போகிறோம், என்று உண்மையைக் கூறினர்.

அதைக் கேட்ட பரமார்த்தருக்கும் சீடர்களுக்கும் ஐயோ, திருடர்கள்! திருடர்கள்! என்று கத்தினார்கள். அவர்களைப் பிடிப்பதற்குக் குதிரை வண்டியின் பின்னே ஓடிப்போய், கீழே விழுந்து உருண்டான், மடையன்.

பரமார்த்தரோ, அதிர்ச்சியில் சாமிபோல் சிலையாகி நின்றார். பரமார்த்தரின் மடத்தருகே வந்ததும், திருடர்கள் வண்டியை நிறுத்தினர். சிலைகளுடன் மடத்துக்குள் சென்றனர். உள்ளே மண்டுவும், மூடனும் இருந்தனர்

அடேய்! நாங்கள் கொஞ்ச நேரம் இங்கே தூங்கப்போகிறோம். அதுவரை இந்தச் சிலைகளைப் பத்திரமாக வைத்திருங்கள் என்று கட்டளை இட்டனர். அவர்களைப் பார்த்து பயந்து போன மண்டுவும், மூடனும், சரி என்று சம்மதித்தனர். சிறிது நேரத்தில் திருடர்கள் குறட்டை விட்டுத் தூங்கி விட்டனர்.

சிலைகளைப் பத்திரமாகப் பாதுகாக்க முடியாது, தொலைத்து விடுவோம். இல்லாவிட்டால் நாமும் தூங்கி விடுவோம். என்பதால், நேராக அரண்மனைக்குப் கொண்டு போனார்கள். அரண்மனையில் பரமார்த்தரும் மற்ற சீடர்களும் அழுது கொண்டு இருந்தனர்.

மண்டுவும், மூடனும் சிலைகளுடன் வருவதைக் கண்டு, அரசன் உட்பட அனைவரும் வியப்படைந்தனர். நடந்தவற்றை கேள்விப்பட்ட அரசன், சிலைகள் திருடு போவதற்கு உதவியாக இருந்ததும் நீங்களே! அதைப் பத்திரமாக கொடுத்ததும் நீங்களே, என்பதால் தண்டனையும் தராமல், பரிசும் தராமல் அனைவரையும் சும்மா விட்டு விடுகிறேன் என்றான்.

குருவும், சீடர்களும் தப்பித்தால் போதும் என்று அரண்மனையை விட்டு ஓடிவந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக