Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 3 ஜூலை, 2020

ஜெகத்தை ஆளும் ஜெர்மனி காமாட்சி அம்மன் கோவில்.

ஜெகத்தை ஆளும் ஜெர்மனி காமாட்சிஅம்மன் கோவில்.            மதங்களைக் கடந்து மனித நேயத்தை வளர்க்கும் ஆலயம் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது ஜெர்மனி நாட்டில் அமைந்துள்ள ஹம் ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் ஆகும்.     

 ஐரோப்பா கண்டத்திலேயே பெரிய ஆலயம், கலை, கலாசாரம் கற்பிக்கும் கோவில், ஜெர்மனி அரசால் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்ற ஆலயம், மதங்களைக் கடந்து மனித நேயத்தை வளர்க்கும் ஆலயம் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது ஜெர்மனி நாட்டில் அமைந்துள்ள ஹம் ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் ஆகும்.

வெளிநாட்டு ஆலயங்கள் :

பல்லவர் காலந்தொட்டு, இந்து சமய ஆலயங்கள் இந்தியாவையும் கடந்து, இலங்கை, மலேசியா, ஜாவா, சுமத்திரா, கம்போடியா என பல்வேறு நாடுகளிலும் எழுப்பப்பட்டுள்ளன. அந்த வகையில் ஜெர்மனி நாட்டில் ஹம் நகரின் எல்லைக்குள் உன்ட்ராப் என்ற ஊரில் அமைந்துள்ளது ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம். இவ்வாலயத்தின் சிறப்புகளையும், வரலாற்றினையும் காண்போம்.

ஆலய வரலாறு :

இந்த ஆலயத்தை நேரில் தரிசிக்கும்போது, ஜெர்மனி நாட்டு ஆலயம் என்ற நினைப்பு மறந்து, தமிழ்நாட்டில் உள்ள பழமையான ஆலயத்திற்கு வந்துள்ள உணர்வே தோன்றுகிறது. இலங்கை நாட்டின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரால் இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. பாஸ்கரன் இலங்கை போர்ச்சூழல் காரணமாக 1985-ம் ஆண்டு பிரான்சு நாட்டிற்குப் பயணம் செய்தபோது, நண்பரின் வேண்டு கோளின்படி, ஜெர்மனி நாட்டில் தங்க நேர்ந்தது. அவர் தங்கியிருந்த இடம் வெளிநாடு என்றாலும், தன் காமாட்சி வழிபாட்டினை அவர் தொடர்ந்து செய்து வந்தார்.

அப்பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதிலுள்ள அறையையே கோவிலாக்கினார். அங்கே விநாயகர், முருகன், லட்சுமி முதலிய படங்களை வைத்து பூஜை செய்து வந்தார். இதையறிந்த அப்பகுதிவாழ் தமிழர்களும் அங்கு வந்து வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

1989-ம் ஆண்டு மற்றொரு இடத்தில் படங்களை வைத்து வழிபட்ட போது, அங்கும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே வந்தது. இதனால் பாஸ்கரனுக்கு, அவ்வூரில் தனி ஆலயம் அமைக்க ஆவல் எழுந்தது. அமைதியை விரும்பும் நாடான ஜெர்மனியில் இங்கு நடைபெறும் பூஜைகளின் ஓசைகள் இடையூறாக இருந்ததால், அப்பகுதி மக்கள் ஜெர்மனி அரசிடம் புகார் செய்தனர்.

இதனால் அரசு அதிகாரிகள் அங்கு வந்து விசாரணை செய்து ஆலயத்தை மூடலாமா? என்று வினவினர். பின்னர் அதிகாரிகளே, மனமுவந்து ஹம் நகரின் எல்லைக்குள் 10 கி.மீ. தொலைவில் உள்ள உன்ட்ராப் கிராமத்தில் கோவில் அமைக்க இடம் ஒதுக்கித் தந்தனர். அடியார்களின் பொருளுதவியோடு அவ் விடத்தை விலைக்கு வாங்கிய பாஸ்கரன், அங்கேயே ஆலயம் எழுப்பத் தொடங்கினார். பல அடியவர்களின் உதவியின் காரணமாக ஆலயம் கம்பீரமாக எழுப்பப்பட்டது.

காமாட்சி அம்மன்:

தொடக்கத்தில் படங்களை வைத்து வழிபட்டு வந்த நிலையில், ஜெர்மனியில் வசித்து வரும் பரம் வசந்தி என்பவரிடமிருந்து காமாட்சி சிலை ஒன்று கிடைக்கப்பெற்றது. அதை வைத்து வழிபாடு செய்யப்பட்டு வந்தது. இதன்பின், ஆலயம் எழுப்பும் கட்டத்தில், இந்தியாவிலிருந்து சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு, ஜெர்மனி வந்து சேர்ந்தன. திருப்பணி வேலை காரணமாக, இந்தியாவில் மாமல்லபுரத்திற்கு சுவாமிகள் வருகை தந்தபோது ஒரு சிற்பக் கூடத்திற்கு வந்தார். அப்போது, அங்கிருந்த காமாட்சி அம்மன் சிலையைக் கண்டார்.

அச்சிலை ஜெர்மனி செல்வதற்காக செய்தது என்று அறிந்த போது அன்னையின் திருவருளை நினைத்து மெய்சிலிர்த்தார். ஆனால், அச்சிலையை வாங்க அவரிடம் பணமில்லாததால், அரை மனதோடு ஜெர்மனி திரும்பினார். அதன்பின், இறையருளால் இலங்கை நாட்டின் நெடுந்தீவைச் சேர்ந்த தில்லையம்பலம் குடும்பத்தார் உரிய தொகை கொடுத்து அச்சிலையை இந்தியாவிலிருந்து ஜெர்மனிக்கு வரவழைத்தனர். அதுவே இன்று ஜெர்மனியில் ஜெகம் போற்றும் காமாட்சியாக அருளாட்சி செய்துவருகின்றது. இச்சிலை காஞ்சி காமாட்சியின் மறு வடிவமாகவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

ஆலய அமைப்பு :

இயற்கை எழில் தவழும் உன்ட்ராப் கிராமத்தில், கிழக்கு முகமாய் பதினைந்து ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட திருக்கோவில் அமைந்துள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்ததும், கொடிமரம், அதனடியில் கொடிமர விநாயகர், இடதுபுறம் விநாயகர் சன்னிதி, சிவன் சன்னிதி, வள்ளி தெய்வானையுடன் முருகன் சன்னிதி, லட்சுமி நாராயணர் சன்னிதி, கோமுகத்தின் எதிரே சண்டிகேஸ்வரி, வசந்தமண்டபம், சோமாஸ்கந்தர், நவக்கிரக சன்னிதி, ஐயப்பன் மற்றும் பைரவர் சன்னிதிகள் ஆகியவை ஒருங்கே அமைந்துள்ளன. இவற்றின் நடுநாயகமாக அன்னை காமாட்சியின் சன்னிதி அமைந்துள்ளது. ஆலயத்தின் மேற்கே மூன்று நிலை கோபுரம் அமைந்துள்ளது. ஆலயத்தின் வெளியே தனி சன்னிதியில் சனிபகவான் அமைந்துள்ளார். ஆலயத்தின் வெளியே ஈசான்ய மூலையில் திருத்தேர் மண்டபம் இருக்கிறது.

இத்திருக்கோவிலுக்குத் தெற்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் டால்ட்டென் கெனால் என்ற ஜீவநதி ஓடுகிறது. இந்த நதியில்தான் இவ்வாலயத்தின் தீர்த்தவாரி நடைபெறுகிறது. ஆலயத்தின் அருகாமையில் ஜீவநதி ஓடுவதும் இறையருளே என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலப் புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், மாசி மகம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், தமிழ்ப்புத்தாண்டு, சித்திரா பவுர்ணமி, திருவாதிரை, ஜூனில் பிரமோற்சவம், தேரோட்டம், நவராத்திரி, தீபாவளி என ஆலய விழாக் களுக்குப் பஞ்சமில்லை. இது தவிர, மாதந்தோறும் தேவி மகாத்மிய ஹோமமும் நடைபெறுகிறது.

ஜெர்மனி நாட்டின் நேரப்படி, காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலய தரிசனம் செய்யலாம்.

அமைவிடம் :

ஜெர்மனி நாட்டின் மேற்கு மாநிலமான நோட்டைன் வெஸ்ட் பேலியா மாநிலத்தில் உள்ள ஹம் நகரின் எல்லைக்குள் சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைதியான உன்ட்ராப் கிராமத்தில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள பிராங்க்பட் நகரிலிருந்து வடமேற்கே 250 கிலோ மீட்டர் தொலைவிலும், டுசல் டார்ப் நகரத்திலிருந்து கிழக்கே 120 கிலோமீட்டர் தொலைவிலும், ஹம் நகரம் அமைந்துள்ளது. விமானம் நிலையம் அமைந்துள்ள இந்த இரு நகரங்களிலிருந்தும், ரெயில் மூலமாகவும், சாலை வழியாகவும் ஹம் நகருக்கு எளிதில் செல்ல முடியும். அங்கிருந்து இவ்வாலயத்தை எளிதில் அடையலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக