Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 8 ஜூலை, 2020

நலம் அருளும் சிவா-விஷ்ணு ஆலயம் - சுண்ணாம்பு கொளத்தூர்

சுண்ணாம்பு கொளத்தூரில் பழமையான மரகத லிங்கத் திருமேனியையும், விஷ்ணு திருமேனியையும் கொண்ட திருக்கோவில் ஒன்று அமைந்துள்ளது.

சென்னை மாநகரையொட்டி அமைதி தவழும் கிராம சூழலில் அமைந்த ஊர் சுண்ணாம்பு கொளத்தூர். கோவிலம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள இந்த ஊரில், பழமையான மரகத லிங்கத் திருமேனியையும், விஷ்ணு திருமேனியையும் கொண்ட திருக்கோவில் ஒன்று அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தை அந்தப் பகுதி மக்கள் ‘சிவா-விஷ்ணு ஆலயம்’ என்று அழைக்கிறார்கள். நாலரை ஏக்கர் பரப்பளவில் பழமையான திருக்குளத்தோடு கூடிய இந்த ஆலயம் மனதுக்கும், சிந்தனைக்கும் இதமளிக்கும் சூழ்நிலையில் இருப்பது தனிச் சிறப்பு.

பழங்காலத்து வீடு கட்டும் முறையில், முக்கிய பொருளாக விளங்கிய சுண்ணாம்பு வளம் மிகுந்த ஊராகவும், நீர் ஊற்றுகள் கொண்ட குளம் அமையப்பெற்றதாகவும் திகழ்ந்ததால், இந்த ஊர் ‘சுண்ணாம்பு குளத்தூர்’ என்று பெயர் பெற்றதாக பெயர்க்காரணம் கூறப்படுகிறது.

ஆலய வரலாறு :

மன்னர் காலத்தில் ஜெயங்கொண்ட சோழமண்டலத்துக் குலோத்துங்க சோழ வள நாட்டின் பகுதியாக, இந்த ஊர் இருந்திருக்கிறது. அப்போதே இந்த ஊரில் மரகத லிங்கத்திற்கும், விஷ்ணுவுக்கும் தனித்தனியாக ஆலயங்கள் இருந்திருக்கின்றன. இவை அன்னிய படையெடுப்பின் போது தரைமட்டமாக்கப்பட்டு விட்டன.

ஒரு முறை இந்தப் பகுதியில் உள்ள முனீஸ்வரர் கோவிலில் விழா நடைபெற்றது. அப்போது முனீஸ்வரருக்கு புனித நீர் கொண்டு செல்வதற்காக, விழா நடத்திய மக்கள் இங்குள்ள குளக்கரைக்கு வந்துள்ளனர். அப்போது வேகமாக காற்று வீசியதுடன், பலத்த மழையும் பெய்யத் தொடங்கியது.

இதனால் நீர் எடுக்க வந்தவர்கள் அனைவரும் குளக்கரையோரம் இருந்த ஆலமரத்தின் கீழ் ஒதுங்கி நின்றிருக்கிறார்கள். அங்கு செடிகொடிகளுடன் மண் மூடிக்கிடந்த ஒரு மேடானப் பகுதி பலத்த மழையால் கரையத் தொடங்கியது. அந்த இடத்தில் பச்சை நிறத்தில் குழவிக்கல் போன்ற ஒன்று தென்பட்டது.

அங்கிருந்த அனைவரும் அது ஒரு குழவிக்கல் என்றே நினைத்து அதனை எடுத்தபோது, அதன் அடியில் லிங்க பாணம் இல்லாத ஆவுடையார் இருப்பதைக் கண்டனர். இதையடுத்து லிங்கத்தை அந்த ஆவுடையாரில் பொருத்தி வெளியே எடுத்துவிட்டு புதரை அப்புறப்படுத்தினர். அப்போது அங்கிருந்து அழகிய நந்தி சிலையும், பழமையான விஷ்ணு உருவமும் கிடைத்தன.

பூமியில் தெய்வச் சிலைகள் கிடைத்ததால், முன்பு இங்கு ஆலயம் இருந்திருக்கலாம் என்று எண்ணி பொதுமக்கள், இது தொடர்பாக பிரசன்னம் பார்த்தபோது இங்கு ஒரு கோவில் இருந்த விஷயம் தெரியவந்திருக்கின்றன. இதனால் மனம் மகிழ்ந்த அடியவர்களில் சிலர் ஒன்று கூடி சிறு ஓலைக் கொட்டகை அமைத்து தெய்வச் சிலைகளை அங்கு வைத்து வழிபட்டு வந்தனர்.

புதிய ஆலயம் :

நாளடைவில் அது மக்கி விடவே, இறைவன் வானம் பார்த்த பூமியாக வாழ்ந்துவந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு பெண்மணிக்கு அருள் வந்து, ‘இறைவனை வெயிலில் வைப்பது முறையா? உடனே நல்ல கொட்டகை அமைத்து அதன்பிறகு வழிபடுங்கள்’ என்று கூறினார்.

இதையடுத்து ஊர் மக்கள் அனைவரின் நடவடிக்கையின் பேரில் ஆலயம் கொஞ்சம் கொஞ்சமாக உருப்பெறத் தொடங்கியது. இந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமானையும், விஷ்ணுவையும் வழிபடுபவர்களுக்கு நல்ல விஷயங்கள் பல நடைபெறத் தொடங்கியதைத் தொடர்ந்து ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. எனவே ஆலயத்தை மேலும் அழகுற அமைத்துள்ளனர்.

தற்போது திருக்குளத்தை உள்ளடக்கிய பெரிய அளவிலான சிவா- விஷ்ணு ஆலயம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. இத்தல மரகத லிங்கத்தை, பிரம்மதேவன் வழிபட்டதாக பிரசன்னம் பார்த்தபோது தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஆலயம் மயிலை கபாலீசுவரர், மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர், திருவிடந்தை நித்திய கல்யாணப் பெருமாள் ஆலயங்களோடு தொடர்பாக இருந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.

ஆலய அமைப்பு :

கிழக்கு நோக்கிய சிவன், விஷ்ணுவிற்குத் தனித்தனி ஆலயங்கள், பழமையான திருக்குளத்தோடு அமைந்துள்ளன. இறைவன் மரகத லிங்கத் திருமேனியுடன், சதுர வடிவ ஆவுடையாருடன், கிழக்கு முகமாய் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். இவர் மரகதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

லிங்கத் திருமேனியில் பொன்னிற சொர்ண ரேகை அமைந்துள்ளது. இதனை அபிஷேக நேரங்களில் மட்டுமே கண்டுகளிக்க முடியும். இவரே பிரம்மன் வழிபட்ட இறைவன் என்று கூறப்படுகிறது. (தொண்டை நாட்டில் திருவடிசுரத்திலும் மரகத சிவன் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.)

இங்குள்ள சிவபெருமான் கருவறைக்கு எதிரே, இடதுபுறம் தெற்கு நோக்கிய அன்னை மரகதாம்பிகை சன்னிதி அமைந்துள்ளது. அன்னை நின்ற கோலத்தில் எளிய உருவில் அருளாசி வழங்குகிறாள். இதன் இடதுபுறம் தனி ஆலயமாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசப் பெருமாள் ஆலயம் கிழக்கு முகமாய் அமைந்துள்ளது. பழமையான இந்தப் பெருமாள், அபயகரம் காட்டி பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.

இவை தவிர விநாயகப் பெருமான், வள்ளி - தெய் வானை சமேத முருகப்பெருமான் சன்னிதி, சண்டிகேசுவரர், மகாலட்சுமி, கருடாழ்வார், ஆஞ்சநேயர், பைரவர், மற்றும் நவக்கிரக சன்னிதிகளும் ஒருங்கே அமையப்பெற்றுள்ளன.

இக்கோவிலில் மரகதலிங்கம், விஷ்ணு, நந்திதேவர் மட்டுமே பழமையானவர்கள் என்றாலும், புதியதாக வடிக்கப்பட்ட தெய்வத் திருமேனிகளும் கூட அதே தனித்தன்மையுடன் விளங்குவது அற்புதமானதாகும். ஆலய தல மரமாக ஆலமரம் விளங்குகிறது. இது திருக்குளத்தின் கரையோரத்தில் அமைந்திருக்கிறது. ஆலய தலத் தீர்த்தம் ‘மரகதத் தீர்த்தம்’ எனும் திருக்குளமாகும்.

விழாக்கள் :

சிவ, வைணவ ஆலயங்களில் நடத்தப்படும் அனைத்து விழாக்களும் இங்கே சிறப்புடன் நடத்தப்படுகின்றன. இது தவிர, சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் திருமண நிகழ்ச்சிகள் அனைத்தையும், இந்த ஆலயத்தில் வைத்துதான் நடத்துகின்றனர். இறைவன் மணமக்களை நன்முறையில் வாழ வைப்பார் என்ற நம்பிக்கையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம் :

காஞ்சீபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டத்தில் கோவிலம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கிராமமாக சுண்ணாம்பு கொளத்தூர் அமைந்துள்ளது. துரைப்பாக்கம் - பல்லாவரம் புறவழிச் சாலையில் இவ்வூர் இருக்கிறது. வாகனத்தில் வர, சாலை வசதி உள்ளது.

பேருந்து மூலம் வருபவர்களுக்கு, திருவான்மியூர், பள்ளிக் கரணை, பல்லாவரம் முதலான இடங்களில் இருந்து பேருந்து வசதியும் உள்ளது. சுண்ணாம்பு கொளத்தூரிலேயே பஸ்கள் நின்று செல்லும். இந்த ஆலயத்தின் அருகில், பழமையான மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர், பள்ளிக்கரணை ஆதிபுரீசுவரர் ஆகிய திருக்கோவில்களும் அமையப்பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக