Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 27 ஜூலை, 2020

மாய சீதை...!

இராவணன் கோபங்கொண்டு, என் ஆற்றலை நீ அறியவில்லை. நாளை நானே போருக்குச் சென்று அவர்களை கொல்லுவேன் என்றான். இதைக்கேட்ட இந்திரஜித், தந்தையே! தாங்கள் என்னை மன்னித்தருள வேண்டும்.

நாளைக்கு நான் போருக்குச் செல்கிறேன். அதற்கு முன் நான் இராம இலட்சுமணனை வெல்ல நிகும்பலா யாகம் செய்ய வேண்டும். இதற்கும் ஒரு தடை உள்ளது. நான் நிகும்பலா யாகம் செய்வதை விபீஷணன் இராம இலட்சுமணனிடம் சொல்லாமல் இருக்க வேண்டும்.

இதனை தடுக்க நாம், மாய சீதையை கொன்றுவிட்டு பிறகு அயோத்திக்கு செல்வது போல் பாசாங்கு காட்ட வேண்டும். அதன்பின் நான் நிகும்பலா யாகத்தை செய்து முடிப்பேன் என்றான். இந்திரஜித்தின் யோசனையை ஏற்று இராவணன் இதற்கு சம்மதம் தெரிவித்தான்.

இந்திரஜித்தின் யோசனைப்படி, அனுமன் சஞ்சீவி மலையை வைத்துவிட்டு வான மார்க்கமாக வந்துக் கொண்டிருக்கும்போது இந்திரஜித் ஓர் அரக்கனை மாய சீதையாக மாற்றி அனுமன் முன்தோன்றினான். இந்திரஜித் மாய சீதையின் கூந்தலை கையில் பிடித்துக் கொண்டு, ஒரு வாளை கையில் வைத்திருந்தான்.

இந்திரஜித் அனுமனை பார்த்து, அடேய், வானரமே! இத்தனை விளைவுகளும் இந்த சீதையினால் தான் நிகழ்ந்தது. அதனால் இவளை நான் கொல்லப் போகிறேன். அது மட்டுமல்லாமல் நான் அயோத்திக்குச் சென்று பரதன், சத்ருக்கனையும் கொல்லப் போகிறேன் என்றான்.

அனுமன், அவனிடம் பணிவாக, பெண்ணை கொல்வது என்பது பாவச் செயலாகும். இதனால் உனக்கு பாவங்கள் தான் அதிகரிக்கும். அறநெறியை அழித்து பாவத்தை தேடிக் கொள்ளாதே என தடுத்தான்.

ஆனால் இந்திரஜித் அனுமனின் சொல்லைக் கேட்காமல் மாய சீதையை அனுமன் கண் முன் தன் வாளால் வெட்டிவிட்டு, நான் அயோத்திக்குச் சென்று பரதன், சத்ருக்கனையும் கொல்லப் போகிறேன் எனக் கூறி அயோத்திக்குச் செல்வதை போல் நிகும்பலா யாகம் செய்யும் இடத்திற்குச் சென்றான்.

அனுமன் நிஜமாகவே சீதை இறந்த விட்டதாக நினைத்து புலம்பி அழுதான். பிறகு அனுமன், விரைந்துச் சென்று இராமரிடம் சீதை இறந்தச் செய்தியையும், இந்திரஜித் அயோத்தி சென்றிருப்பதையும் கூறினான்.

இதைக் கேட்ட இராமர், அசைவற்று இருந்தார். வானரங்கள் எல்லாம் புலம்பி அழுதனர். இராமரின் நிலைமையை பார்த்த இலட்சுமணன், அண்ணா! தாங்கள் இவ்வாறு வருந்துவது அறிவுடைமையாகாது. நாம் இந்த மூவுலகங்களையும் அழிக்க வேண்டும் என்றான்.

அப்பொழுது விபீஷணன் இராமரை பணிந்து, பெருமானே! இது எல்லாம் அரக்கர்களின் மாய வேலையாகத் தான் இருக்க வேண்டும். உங்களை திசை திருப்பிவிட்டு, இந்திரஜித் நிகும்பலா யாகம் செய்யச் சென்றிருப்பான். அந்த யாகத்தை அவன் திறம்பட செய்துவிட்டால் அவனை வெல்ல எவராலும் முடியாது. தாங்கள் கவலை கொள்ளாமல் இருங்கள்.

நான் வண்டு போல் சிறு உருவம் எடுத்து அன்னை சீதை எவ்வாறு இருக்கிறார் என்பதை பார்த்துவிட்டு வருகிறேன் என்றான். பிறகு விபீஷணன் சிறு வண்டு போல் உருவம் எடுத்து, அசோக வனத்திற்குச் சென்றான்.

அங்கு சீதை நலமுடன் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தான். உடனே விபீஷணன் அங்கிருந்து விரைந்து வந்து இராமரிடம், அன்னை சீதை நலமுடன் இருக்கிறார் எனக் கூறினான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக