இந்திரஜித் தேரில் ஏறிக் கொண்டு தேவர்களையெல்லாம் வென்ற வில்லை கையில் ஏந்திக் கொண்டு போருக்கு புறப்பட்டான். அவனுடன் அரக்க சேனைகள் புடைசூழ பின் தொடர்ந்து வந்தன. போர்க்களத்தில் இலட்சுமணன் அதிகாயனைக் கொன்று விட்டு, அடுத்து இராவணன் அல்லது இந்திரஜித் தன் படைகளோடு வருவார்கள் என எதிர்நோக்கி காத்து கொண்டு தயாராக நின்று கொண்டிருந்தான்.
இந்திரஜித், இலட்சுமணனின் எதிரே வந்து நின்றான். இந்திரஜித், என் தம்பிகளான அதிகாயன், நிகும்பன், கும்பனை கொன்ற இலட்சுமணனை இன்று போரில் கொல்லாமல் நான் நகர் திரும்ப மாட்டேன்.
இலட்சுமணனின் இரத்தத்தை நான் பூமி தேவிக்கு பருக கொடுப்பேன். நான் அவனை வெல்லவில்லையென்றால் தேவர்களும், விண்ணுலகத்துவரும் என்னை இகழ்வார்கள் என கோபத்துடன் கூறினான்.
இலட்சுமணன், இந்திரஜித்தை பார்த்து இவன் யார்? என விபீஷணனிடம் கேட்டான். இலட்சுமணா! இவன் இராவணனின் மகன். மிகவும் வலிமை படைத்தவன். மாய வேலைகள் செய்வதில் வல்லவன். இந்திரனை வென்றவன்.
இவனிடம் தாங்கள் தனியாக போர் புரிய வேண்டாம். அனுமன், ஜாம்பவான், சுக்ரீவன், அங்கதன், நீலன் ஆகியோர் உன்னுடன் இருக்கட்டும் என வணங்கி கூறினான். இலட்சுமணன், நீ கூறியது நன்று எனக் கூறிவிட்டு போருக்கு தயாரானான்.
இலட்சுமணனுக்கு துணையாக அனுமன் அங்கு வந்து சேர்ந்தான். சுக்ரீவன் தன் பெரிய சேனைகளை அழைத்துக் கொண்டு இலட்சுமணனுக்கு முன் வந்து நின்றான். அங்கதனும் இலட்சுமணனுக்கு துணையாக அங்கு வந்து நின்றான்.
இந்தப் போரைக் காண தேவர்கள் வானத்தில் வந்து தோன்றினர். இரு படைகளும் எதிரெதிரே மோதிக் கொண்டன. வானரங்கள் அரக்கர்களின் மீது குன்றுகளை தூக்கி எறிந்தனர்.
அரக்கர்களும், வானரங்களின் மீது வாள், சூலாயுதம் முதலியவற்றை கொண்டு தாக்கினர். போர்க்களத்தில் எங்கு பார்த்தாலும் இரத்த பூமியாக காட்சி அளித்தது. ஒரு புறத்தில் அங்கதன் மிக கடுமையாக போர் புரிந்து கொண்டிருந்தான். மற்றொரு புறம் நீலன், இடபன், ஜாம்பவான், மயிந்தவன் முதலானவர்கள் போர் புரிந்து கொண்டிருந்தனர். இந்திரஜித் தனியாக நின்று போர் புரிந்து கொண்டிருந்தான்.
அப்போது சுக்ரீவன் முதலிய வானர வீரர்கள் இந்திரஜித்தை எதிர்த்து போர் புரிய தொடங்கினர். அப்பொழுது இந்திரஜித் அனுமனை பார்த்து, அடேய்! அனுமனே! நில்லடா! என் தம்பிகளை கொன்ற உன்னை, நினைத்துக் கொண்டு தான் நான் போருக்கு வந்தேன்.
வானரங்களாகிய நீங்கள் குன்றுகளையும், பாறைகளையும் தூக்கி எறிந்தால் நீங்கள் வெற்றி பெற முடியுமா என்ன? நான் போருக்கு வராததால் நீ உன் ஆண்மை பெரிதென கூறிக் கொண்டிருக்கிறாய். நீ எறியும் இந்த மலைகளும், பாறைகளுமா? என்னை கொல்ல போகிறது.
நான் இப்பொழுது போருக்கு வந்துவிட்டேன். இனி உங்களால் என்னை கொல்ல முடியாது. உங்கள் அனைவரின் உயிரையும் நான் எடுப்பேன் என்றான். இதைக் கேட்ட அனுமன் இந்திரஜித்தை பார்த்து, போர் புரிபவர்கள் தங்களை பெருமையாக கூற மாட்டார்கள். வீரத்தில் நீ மட்டும் தான் சிறந்தவன் என பெருமை கொள்ளாதே என்றான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக