Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 8 ஜூலை, 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 058

மெய்ப்பொருள் நாயனார்...!!

சோழ நாட்டில் உள்ள திருக்கோவிலூர் நகரத்திற்கும், தொண்டை நாட்டிற்கும் இடையில் அமைந்துள்ள பகுதி நடுநாடு ஆகும். இரண்டு பகுதிகளுக்கும் இடையில் அமைந்திருப்பதால் இப்பகுதி நடுநாடு என்று அழைக்கப்படுகின்றது. 

அப்பகுதியில் சேதியர் என்னும் மரபினை சேர்ந்த மக்கள் அதிகமாக வாழ்ந்து வந்தார்கள். மலாடர் என்னும் மரபினை சேர்ந்தோர் அங்கு ஆட்சி புரிந்து வந்தனர்.

எம்பெருமானிடத்திலும், அவரை வழிபடும் அடியார்களிடத்தும் எப்போதும் எந்த வேளையிலும் அன்பு கொண்டு வாழ்ந்து வந்தனர். இந்த மரபில் தோன்றியவர்தான் மெய்ப்பொருள் நாயனார். 

அதர்மத்தை வளரவிடாமல் அறநெறி வழியில் நின்று ஆட்சி புரிந்து வந்தார். பகை அரசர்களால் தன்னுடைய குடிகளுக்கு எவ்விதமான இன்னல்களும் நேரிடாத வண்ணம் ஆட்சி புரிந்து வந்தார்.

திருத்தலங்களில் பூஜை மற்றும் விழாக்கள் குறைவின்றி நடைபெறக் கட்டளையிட்டார். சிவனடியார்களின் திருவடிகளையே துணையாகக் கொண்டிருந்தார். இவர் படைவலிமையும், தோள் வலிமையும் கொண்ட மன்னன் ஆவார். 

அடியார்களின் தேவைகளை அறிந்து அதை உடனே நிறைவேற்றக்கூடியவர். சிவனடியார்களின் தோற்றப்பொலிவு மன்னனின் மனதில் நன்கு பதிந்து இருந்தது.

இவ்விதமாக வாழ்ந்து வந்த மன்னனின் வாழ்க்கையில் இன்னல்கள் தோன்ற துவங்கின. அதாவது, நேரிடையான பகைமை இல்லாமல் சூழ்ச்சியான பகைமை கொண்டு மெய்ப்பொருள் நாயனாரை வீழ்த்துவதற்கான காலங்கள் உருவாக துவங்கின. மெய்ப்பொருள் நாயனாரிடம் முத்தநாதன் என்பவன் நீண்ட காலமாக பகை கொண்டு இருந்தான்.

வீரத்தோடு எதையும் நேருக்கு நேர் சந்திக்கக்கூடிய மெய்ப்பொருள் நாயனாரிடத்தில் பலமுறை போரிட்டு அவரை வெற்றி கொள்ள முடியாமல் தோற்று புறமுதுகு காட்டி ஓடியவன் எதிரி நாட்டு மன்னன் முத்தநாதன். நிகழ்ந்த போர்களில் ஒருமுறை கூட முத்தநாதனால் வெற்றி பெற முடியவில்லை. 

இவரின் போர் வியூகத்தையும், வீரத்தையும் நன்கு அறிந்து கொண்ட முத்தநாதன் மெய்ப்பொருள் நாயனாரை நேரடியாக வெற்றி கொள்வது என்பது முடியாத காரியம் என்பதை அறிந்து கொண்டு அவரை சூழ்ச்சியால் வென்றிட திட்டமிட்டான்.

மெய்ப்பொருள் நாயனாரை சூழ்ச்சி வலையில் விழ வைப்பதற்காக நாயனாரை பற்றி பல தகவல்களை சேகரித்தான் முத்தநாதன். பின் அவரை மிகவும் எளிதாக நெருங்கும் வழியாக அவருடைய பக்தியான அதாவது, எம்பெருமானின் மீது கொண்ட பக்தியையும், அடியார்களிடத்தில் கொண்ட அன்பையும் பயன்படுத்தி சூழ்ச்சி வலையை உருவாக்கினான். 

முத்தநாதன் சைவ வேடம் சூடிக்கொண்டு எம்பெருமானிடத்தில் அன்பு கொண்ட அடியார்களை போல் வேடம் தரித்து கொண்டவனுக்கு திருநீற்றை உடலில் எந்தெந்த இடத்தில் பூச வேண்டும் என்பது கூட தெரியாமல் உடல் முழுவதும் பூசிக் கொண்டான்.

சடைமுடியை முடித்துக் கட்டிக் கொண்டான். கரங்களில் ஓலைக்கட்டு ஒன்றை ஏந்திக்கொண்டு அந்த ஓலைக்கட்டுக்குள் எவரும் காண முடியாத வண்ணம் சிறு கத்தி ஒன்றையும் மறைத்துக் கொண்டான். 

வஞ்சனை நிறைந்த மனதோடு இருந்தாலும் புறத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் பொய்யான தவக்கோலம் பூண்டு திருக்கோவிலூருக்குள் நுழைந்தான். திருக்கோவிலூர் வழி நெடுகிலும் இருந்த மக்கள் இவரை சிவனடியாராக எண்ணி வழிநெடுகிலும் அவனை வரவேற்று வணங்கினார்கள். வழிநெடுகிலும் எந்தவிதமான இன்னல்களும் இன்றி அரண்மனையை அடைந்தான்.

அரண்மனை காவலரை கண்டதும் யாம் வேந்தனை காண வேண்டும் என்று கூறினார் பொய் வேடம் பூண்ட முத்தநாதன். வாயிற்காவலர் வந்திருப்பவர் சிவனடியாரென எண்ணி அவரை வணங்கி உள்ளே போகவிட்டனர். 

பல வாயில்களையும் கடந்து மன்னரின் பள்ளியறை வாயிலை அடைந்தான். பள்ளியறை வாயிலிலேயே மன்னவனின் மெய்க்காப்பாளனாக தத்தன் என்பவன் கரத்தில் வாளோடு நின்று கொண்டிருந்தான். முத்தநாதன் யாம் வேந்தனை உடனே காண வேண்டும் என்ற எண்ணம் கொண்டு தத்தனை ஏற இறங்கப் பார்த்தான்.

அவருடைய பார்வையிலும், அவருடைய முகத்தில் தோன்றிய எண்ண பிரதிபலிப்பையும் நன்கு குறிப்பால் உணர்ந்த தத்தன் போலி வேடம் தரித்த தவசியான முத்தநாதனிடம் மன்னர் உறங்கி கொண்டிருப்பதாக கூறி அவரை மென்மேலும் செல்லவிடாமல் தடுத்தான். 


தத்தன் உரைத்த வார்த்தைகளை போலி வேடம் தரித்த தவசியான முத்தநாதன் செவிமடுத்து கேட்பதாக இன்றி தத்தன் தடையையும் மீறி மன்னவருக்கு ஆகமத்தின் உட்பொருளான உறுதிப் பொருளை (வீடு, பேறு தருவதற்குரிய வழி முறை) உரைத்து செல்லவே யாம் இங்கு எழுந்தருளியுள்ளோம் என கூறி உள்ளே நுழைந்தான்.

துயில் கொண்டிருந்த அரசரின் அருகில் அமர்ந்திருந்த அரசியார் ஏதோ சப்தம் கேட்டுத் திரும்பி பார்க்க அந்த நேரத்தில் சிவனடியார் மன்னனை காண வந்து கொண்டிருப்பதை புரிந்து கொண்டதும் அவர் அருகில் இருந்து எழுந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் தம் தலைவரையும் எழுப்பினாள். 

சிவாயநம என்று குரல் கொடுத்தான் முத்தநாதன். துயிலில் இருந்த எழுந்த அரசர் அவரின் எதிர்சென்று அடியாரை வரவேற்று வணங்கி மங்களவரவு கூறி மகிழ்ந்தார்.

பின்பு, ஐயனே...!! தாங்கள் இவ்விடத்தில் எழுந்தருளியதன் காரணம் யாதோ? என்று மலையமநாட்டு மன்னர் மிகவும் பணிவுடன் வினவினார். அவ்விடத்தில் சிறிதும் ஐயம் கொள்ளாமல் பண்டைக்காலத்தில் சிவபெருமான் திருவாய் மலர்ந்தருளிய ஆகம நூல் ஒன்று எம்மிடம் உள்ளது. 

அதனை உமக்கு அருளவே யாம் இங்கு வந்துள்ளோம் என்று உரைத்த வண்ணம் தான் எடுத்து வந்த ஏட்டுச் சுவடிக்கட்டைக் காண்பித்தான். இதனைக் கேட்ட நாயனார் போர்க்களத்தில் எதிரியினை வெற்றி கொண்டது போல மனம் மகிழ்ந்தார். மனம் மகிழ்ச்சி கொண்டதோடு மட்டுமல்லாமல் முகமும் மலர்ந்தது. 

அரசியாரின் முகமும் மகிழ்ச்சியில் பூரித்த வண்ணம் நின்று கொண்டிருந்தாள். அரசரோ அடியவர் வேடத்தில் இருந்தவர் எவர்? என்று அறியா வண்ணம் அவரை வணங்கி... எம்பெருமான் அருளிச் சென்ற ஆகம நூலை வாசித்து அவ்வாகமப் பொருள் அடியேனுக்கு புரியும் வண்ணம் எடுத்துரைக்க வேண்டும் என்று வேண்டினார். அடியார் பொருள் உரைக்க ஏற்ற வண்ணமாக அவருக்கு உயர்ந்த ஆசனத்தை அளித்து மன்னர் அரசியுடன் தரையில் அமர்ந்து கொண்டார். 

மன்னர் அரசியருடன் அமர்ந்ததும் தன்னுடைய திட்டத்திற்கு இந்த அரசியால் தமக்கு ஏதேனும் பங்கம் ஏற்பட்டுவிடுமோ என்றும், இவ்வேளையில் மன்னருடன் தனிமையில் இருந்தால்தான் தன்னுடைய திட்டம் நிறைவேறும் என்பதை சிந்தித்துக்கொண்டே அதற்கான செயல்பாடுகளை துவங்கினான். மனதில் வஞ்சக எண்ணம் கொண்ட முத்தநாதனோ மன்னரையும், அரசியாரையும் மாறி மாறிப் பார்த்து கொண்டே ஏதோ சொல்ல வந்து தயங்குவது போல் நின்று கொண்டான்.

அடியாரின் செயல்பாடுகளில் உள்ள தயக்கத்தை உணர்ந்து கொண்ட மன்னன் ஏதாவது குறை ஏற்பட்டுள்ளதா? என்று அடியாரை நோக்கி வினவினார். உடனே போலியான தவசி கோலத்தில் வந்திருந்த முத்தநாதன் யாம் ஆகமத்தின் பொருளை உரைக்க வேண்டுமாயின் யானும், நீயும் மட்டும் தனித்து இருக்க வேண்டும். வேறு எவரும் இவ்விடத்தில் இருக்கக்கூடாது. அதில் உன்னுடைய மனைவியும்தான். இதை யான் உரைக்கவில்லை... ஆகம நெறிதான் இவ்விதம் உரைக்கின்றது என்று முத்தநாதன் கூறினான்.

உடனே மன்னரும் தன்னுடைய மனைவியான அரசியாரைப் பார்த்தார். கணவரின் உள்ளக்குறிப்பை அவருடைய விழி குறிப்பால் புரிந்து கொண்ட கற்புடைச் செல்வியான அரசியார், அரசரையும், முத்தநாதனையும் வணங்கிவிட்டு அந்தப்புரம் நோக்கிச் சென்றாள். முத்தநாதனோ அரசியார் அவ்விடத்தில் இருந்து முழுமையாக சென்றதும் தம்முடைய திட்டத்தின் அடுத்த செயல்பாடுகளை மேற்கொள்ள துவங்கினான். மன்னரும் அரசியாரை அனுப்பிவிட்டு பொய் வேடத்தில் அமர்ந்து இருக்கும் அடியாரின் பீடத்திற்கு அருகில் சென்று கீழே அமர்ந்து கொண்டு அடியாரே...!! இப்பொழுது அருள் செய்வீர்களாக என்று கூறினார்.

முத்தநாதன் இறைவனின் திருநாமத்தை உரைத்தபடியே திருவெண்ணீற்றை எடுத்து உடம்பிலும், நெற்றியிலும் தேய்துக் கொண்டு மன்னனுக்கும் கொடுத்தான். மன்னரும் திருவெண்ணீற்றை வாங்கி ஐந்தெழுத்தை மனதில் நினைத்தபடி முறையோடு அணிந்து கொண்டார். பின்பு தனக்கு அருள் செய்தல் வேண்டும் என்று வேண்டி நின்றார் மன்னர். அரசன் முத்தநாதனின் பாதங்களில் விழும் சமயத்தில் ஓலை சுவடிகளில் மறைத்து வைத்திருந்த சிறு உடைவாளை வெளியே எடுத்து தனது திட்டத்தின் படியே நினைத்ததை செய்து முடித்தான். முத்தநாதனின் எதிர்பாராத இந்த தாக்குதல்களால் நிலை தடுமாறி கீழே சிறு சத்தத்துடன் விழுந்தார் மன்னர். 

அவன் செய்த செயல்களினால் குருதி வெள்ளத்தில் மிதந்த மெய்ப்பொருள் நாயனார் போலி தவசியான முத்தநாதன் உடம்பைப் பார்த்து எம்பெருமானை எண்ணினார். அவன் மீது கோபமோ, வெறுப்போ இல்லாமல் இருந்தார். மன்னரின் அறையில் சத்தம் கேட்டதுடன் உள்ளே பார்த்த தத்தன், மன்னர் குருதி வெள்ளத்தில் இருப்பதையும், தவசியான முத்தநாதனின் கரங்களில் உடைவாள் இருப்பதையும் பார்த்துவிட்டு தன்னுடைய உடைவாளை உருவிய வண்ணம் முத்தநாதனை தாக்க தத்தன் மிகுந்த வேகத்துடன் செயல்பட்டு அவரை தாக்க முற்பட்டான்.

உடலில் இருந்து குருதி வெளியேறி கொண்டிருந்த நிலையிலும் தமது கரத்தினை உயர்த்தி போலி தவசியான முத்தநாதனை தாக்க வேண்டாம் என்பதை தத்தா நமர் என்று கூறி சாய்ந்தார். மன்னன் உரைத்த சொல்லின் பொருளை அறிந்த தத்தன், மன்னன் எம்பெருமானின் மீது கொண்ட அன்பிற்கும், பக்திக்கும் அடிபணிந்தான். தன்னுடைய மனதில் எழுந்த கோபத்தையும், தாபத்தையும் கட்டுப்படுத்தி உடைவாளை உறையில் போட்டப்படியே அரசரின் அருகில் சென்றார்.

தாங்க முடியாத வேதனையில் தத்தனிடம் இவ்வடியாருக்கு நமது எல்லைக்குள் எந்தவிதமான துன்பமும் நேரிடாத வண்ணம் நமது எல்லை வரை அவருடன் துணை சென்று அவரை விட்டு விட்டு வா என்று ஆணையிட்டார். மன்னனின் ஆணையை ஏற்றுக்கொள்ள வேண்டிய பகை அரசனுக்கு துன்பம் ஏதும் நேரிடாத வண்ணம் தமது மன்னனின் பெரும் குணத்தை எண்ணிய படியே விழிகளில் கண்ணீர் வர பகையரசனோடு புறப்பட்டான் தத்தன். இதற்கிடையில் மன்னருக்கு ஏற்பட்ட துன்பமானது காட்டுத்தீ போல் அரண்மனை வாசிகளுக்கும், மக்களுக்கும் பரவியது.

இந்த செய்தியை அறிந்ததும் ஆரா துன்பத்துடன் அந்தப்புரத்தில் இருந்து அரசியார் மனம் பதை பதைக்க ஓடி வந்தார். தரையில் விழுந்த மன்னவனை எடுத்து தன் மடியில் தாங்கிய வண்ணம் பலவாறாக புலம்பி அழுதாள். வஞ்சக எண்ணம் கொண்டு கபட நாடகம் ஆடிய கொடிய அரக்கன் முத்தநாதனின் செயலைக் கேள்வியுற்ற மக்கள் மிகுந்த சினம் கொண்டு அவனை தாக்க முற்பட்டனர்.

ஆனால் மன்னரின் மெய்காவலரான தத்தன் முத்தநாதனை ஊர் எல்லையில் பாதுகாப்பாக விட்டுவர வேண்டும் என்பது மன்னரின் ஆணையாகும் என்பதை எடுத்து உரைத்தார். மன்னரின் ஆணையை மீற முடியாமல் மக்கள் தங்களுக்குள் எழுந்த கோபத்தை தங்களுக்குள் அடக்கிக் கொண்டு மன்னரை காண அரண்மனைக்கு சென்றனர். அரண்மனை மருத்துவர்களோ மன்னருக்கு மருத்துவம் செய்து கொண்டிருந்தனர்.

அரண்மனை மருத்துவர்கள் பலவாறாக முயற்சிகள் மேற்கொண்டும் மன்னரின் உடல்நிலையில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. ஆயினும் மன்னர் ஒருவரின் பதிலுக்காக உயிர் நீக்காமல் காத்திருந்தார். அதாவது, மன்னரின் கவலை என்பது முத்தநாதனுக்கு எவ்வித ஆபத்தும் நேரக்கூடாது என்பதாகும்.

மன்னரின் ஆணையை ஏற்று எவ்விதமான துன்பமும் நேரிடாமல் போலி தவசியான முத்தநாதனை எல்லையைக் கடந்து அனுப்பி வைத்துவிட்டு மன்னரை காண விரைவாக அரண்மனைக்கு வந்த தத்தன் மன்னரை கண்டு முத்தநாதன் எவ்விதமான இடர்பாடுகளுமின்றி சென்றுவிட்டார் என்று கூறினார். அதைக் கேட்டதும் 'இன்றைக்கு என் ஐயன் செய்தது யாரே செய்யவல்லார்" என்று கூறிய வண்ணம் தலையைச் சாய்த்தார்.

அவரது ஆவியும் பிரிந்தது. அத்தருணம் அறையில் பேரொளி பிறந்தது. விடையின் மேல் எம்பெருமான் சக்தி சமேதராய் எழுந்தருளினார். எம்பெருமானின் திருவருளால் மெய்பொருளார் இளமையுடன் உயிர் பெற்று எழுந்தார். மன்னர் உயிர் பெற்று எழுந்ததை கண்டதும் அரசியார், தத்தன் மற்றும் மக்கள் என அனைவரும் மனம் மகிழ்ந்தனர். மன்னரும், அரசியாரும் எம்பெருமானை நிலத்தில் வீழ்ந்து வணங்கினர்.

உயிர் போகும் சமயத்தில் கூட அடியாரிடமும், திருநீறு தரித்தவரிடமும் நீங்கள் கொண்ட பக்தியால் அறநெறி தவறாமல் வாழ்ந்து மீண்டும் எம்மிடம் வந்து சேர்வீர்கள் என்று அருளி அவ்விடத்தில் இருந்து மறைந்தார். எம்பெருமானின் அருளால் அகம் மகிழ்ந்த தம்பதியர்கள் எம்பெருமானின் மீது கொண்ட பக்தியிலும், அடியார்களின் மீது கொண்ட அன்பிலும் எந்த குறைவும் இல்லாமல் வாழ்ந்து தம்பதியராய் சிவபெருமானின் திருவடிகளில் சரணடைந்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக