அம்மை நோய்க்கு சிறந்த பரிகார ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ புற்றுமாரியம்மன் திருக்கோவில், கடலூர் மாவட்டத்தில் 15 அடி உயரத்தில் அம்மன் புற்று வடிவில் அருள்பாலிக்கிறார்.
அம்மன்/தாயார் : புற்றுமாரியம்மன்
தல விருட்சம் : வேம்பு
ஆகமம்/ பூஜை : சிவ ஆகமம்
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : கிள்ளை
ஊர் : கிள்ளை
மாவட்டம் : கடலூர்
தல வரலாறு :
கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் கிள்ளை என்னும் ஊரைச் சேர்ந்த முனுசாமி பிள்ளை குடும்பத்தினர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டனர். அதனால் 10 கி.மீ., தொலைவில் உள்ள பள்ளம் மகாமாரியம்மன் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்து கொண்டு வந்தனர்.
அன்று இரவு அவருடைய மனைவி அமிர்தவள்ளி அம்மை நோயுடன் படுத்திருந்த போது அவர் கனவில் அம்மன் தோன்றி தில்லைவிடங்கன் சங்கிலி கொண்டவன் மதகு என்ற இடத்தில் சிறிய புற்று வடிவில் குடி கொண்டுள்ளேன்.
அங்கு வேம்பும், மஞ்சளும் உள்ளது அவற்றை எடுத்து உடம்பில் பூசி விட்டு வேம்பை அருகில் வைத்துக் கொள் என்று கூறி அம்மன் மறைந்துள்ளார். காலை விடிந்ததும் அவர்கள் அந்த கோவிலுக்கு சென்று பார்த்த போது அம்மன் கூறியது போல வேம்பு, மஞ்சள் இருந்தது.
அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்த மஞ்சளை உடம்பில் பூசிக்கொண்டு, வேம்பை எடுத்துக் கொண்டனர். அந்த இடத்தில் அம்மனுக்கு சிறியதாக கொட்டகை அமைத்து வழிபாடு நடத்தினர்.
அதுவே, காலப்போக்கில் புற்றுவளர்ந்து தற்போது 15 அடி உயரத்தில் அம்மன் உருவில் அருள் பாலிக்கிறார். பல்வேறுப்பகுதியில் இருந்து இன்று குல தெய்வ வழிபாட்டிற்கும், அம்மை நோய் குணமடைய இங்குள்ள கோவிலில் இருந்து மஞ்சள், வேம்பும் வழங்கப்படுகிறது.
தலபெருமை :
சிதம்பரம் நடராஜர், தில்லை காளி மற்றும் கீழத்தெரு மாரியம்மன், ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி ஆகிய கடவுள்கள் இக்கோவிலில் அமைந்திருப்பது இத்திருத்தலத்தின் பெருமையாகும்.
மேலும், உள் பிரகாரத்தில் எட்டு கரங்களுடன் ரத்த காளி, நான்கு கரங்களுடன் பேச்சியம்மன், இரு கரங்களுடன் பெரியாச்சியும், மூன்றடியில் கிராம தேவதையாக பெரியாச்சியும் வடக்குப்பக்கம் பார்த்து அருள் புரிகின்றனர்.
விமானத்தில் ஒரு கலசம் மற்றும் நான்கு பக்கம் பூதகனங்கள். வெளி பிரகாரத்தில் வடக்குப் பக்கம் பார்த்து துர்க்கை அருள் பாலிக்கிறார். அதிசயத்தின் அடிப்படையில் அமைந்த இந்த கோவிலில் 15 அடி உயரத்தில் அம்மன் புற்று வடிவில் காட்சியளிக்கிறார்.
பிரார்த்தனை :
கல்வி, திருமணத்தடை, புத்திர பாக்கியம், கண் நோய் மற்றும் அம்மை உள்ளிட்ட நோய்களுக்கு சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. தங்களுடைய பிரார்த்தனை நிறைவேறியதும் பக்தர்கள் நெய் தீபம், தானியங்கள் மற்றும் காணிக்கை செலுத்தி வழிபடுவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக