Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 31 ஜூலை, 2020

இராவணன் சீதையின் மேல் கோபம் கொள்ளுதல்!

இந்திரஜித் மாண்டச் செய்தியை இராவணனிடம் கூறினால் நம்மை கொன்று விடுவானோ என அஞ்சி தூதர்கள் சொல்ல பயந்தனர். தேவர்களும், அரக்கர்களும் பயந்து ஓடி ஒளிந்தனர். கடைசியில் அரக்கன் ஒருவன் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இராவணனிடம் சொல்லச் சென்றான்.
அவன் இராவணன் முன் கை கால்கள் நடுங்க நின்றான். அசுர குலத்தின் வேந்தனே! இளவரசர் இந்திரஜித் போரில் இலட்சுமணனால் மாண்டார் எனக் கூறினான். இதைக்கேட்டு இராவணன் கோபங்கொண்டு அவன் தலையை வெட்டி வீசினான். இந்திரனையே வென்ற இந்திரஜித்தை இலட்சுமணன் கொன்றுவிட்டான் என்பதை நினைத்து மிகவும் கோபங்கொண்டான். உடனே இராவணன் போர்க்களத்திற்குச் சென்று இந்திரஜித்தின் உடலைக் கண்டு கதறி அழுதான்.
என் செல்வமே! எனக்கு முன் நீ மாண்டாயே! உன் ஆற்றல் மேரு மலையை போன்றது. நீ எனக்குச் செய்ய வேண்டிய ஈமச்சடங்குகளை, நான் உனக்கு செய்யும் படி விதி செய்துவிட்டதே. நீ இறந்த செய்தியை அறிந்து இந்திரன் முதலான தேவர்கள் மகிழ்ந்திருப்பார்களே! நீ இன்றி இனி நான் என்ன செய்யப் போகிறேன் என தலையில் அடித்துக் கொண்டு மிகவும் புலம்பி கதறி அழுதான்.
 அப்போது அவன், இந்திரஜித் வில்லோடு அறுப்பட்ட கையைக் கண்டு ஆறாத் துயரம் அடைந்தான். இராவணன், இந்திரஜித்தை அரண்மனைக்குச் கொண்டு சென்று பஞ்சு மெத்தையில் படுக்க வைத்து அழுதான். இந்திரஜித் இறந்த செய்தி மண்டோதரிக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு மகனே! மகனே! என அலறிக் கொண்டு இந்திரஜித் காலடியில் வந்து வீழ்ந்தாள்.
என் அன்பு செல்வமே! என் ஆருயிரே! இனி உன்னை நான் என்று காண்பேன்! எவரும் வெல்ல முடியாத வலிமை உன்னிடம் இருந்தததே! நீ சிறு வயதில் அரண்மனைக்கு சிங்க குரளைக் கொண்டு அவற்றிற்கு சினமூட்டி விளையாடி மகிழ்வாயே. அது போன்ற காட்சியே இனிமேல் நான் எப்போது காணப் போகிறேன். உனக்கு நேர்ந்த இந்த நிலைமை தானே, நாளை உன் தந்தைக்கும் உண்டாகும் எனக் கூறி புலம்பி அழுதாள்.
இந்திஜித்தின் மனைவிமார்களும், இந்திரஜித்தைக் கண்டு கதறி அழுதனர். இலங்கையில் உள்ள அரக்கர்கள் அனைவரும் இந்திரஜித் மாண்ட செய்தியை அறிந்து கதறி அழுதனர். இராவணன் இவற்றை எல்லாம் கண்டு மிகவும் கோபம் கொண்டான். உடனே அவன் இவ்வளவு துன்பத்திற்கும் காரணம் சீதை தான். நான் இப்பொழுதே சீதையை வெட்டி வீழ்த்துகிறேன் எனக் கூறிக் வாளை உருவிக் கொண்டு அசோக வனத்தை நோக்கிச் சென்றான்.
இராவணனை தடுக்க மந்திரிமார்களும், இராவணனின் மனைவிமார்களும் எவ்வளவோ முயற்சித்தும் முடியாமல் போயிற்று. அப்போது மகோதரன் இராவணனை தடுத்து, அரசே! சற்று பொறுமையாக இருங்கள். அவரப்பட்டு அந்நியாய செயலை செய்து விடாதீர்கள். ஒரு பெண்ணை கொல்வது வீரனுக்கு அழகல்ல. அவ்வாறு தாங்கள் கொன்றாலும் தேவர்கள் முதலானோர் தங்களை பார்த்து கைக்கொட்டி சிரிப்பார்கள்.
நீங்கள் சீதையை அடைவது தான் நல்லது. தங்களுக்கு கோபமும், ஆத்திரமும் வந்தால் அதை இராம இலட்சுமணன் மேல் காட்டுங்கள். சீதையை கொன்றுவிட்டு நாளை போரில் இராமனையும், இலட்சுமணனையும் வெல்வதில் என்ன பயன் உள்ளது? அதனால் தாங்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என ஆறுதல் கூறினான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக