வெள்ளி, 31 ஜூலை, 2020

மாடு பிடிப்போம் நாடு ஆள்வோம்

அழகாபுரி என்ற ஊரில் பொங்கல் பண்டிகை ஆரம்பம் ஆனதால் மக்கள் ஒரே மகிழ்ச்சியாக இருந்தனர். பரமார்த்தரும் சீடர்களும் கூட மிகவும் சுறுசுறுப்பாய் இருந்தனர்.

மறுநாள் மாட்டுப்பொங்கல் அன்று குருவே என்று கத்திக் கொண்டே ஓடி வந்தான் மண்டு. இன்று மாலை, நிறைய பந்தயம் நடக்கப் போகுதாம்! பந்தயமா? என்ன அது? என்று குருவும் சீடர்களும் அவனைக் கேட்டார்கள்.

காளை மாட்டின் கொம்புகளுக்கு வண்ணம் பூசி, ஜல்லிக்கட்டு நடக்கப் போகுதாம். வெற்றி பெறுபவர்களுக்குப் பல கிராமங்களைத் தரப்போகிறாராம் நம் அரசர் என்று சொன்னான் மண்டு. இதைக் கேட்டதும் பரமார்த்தரின் மூளை தீவிரமாக வேலை செய்தது.

சீடர்களே! பந்தயத்தில் நாம் ஜெயித்து விட்டால், நான் பல ஊர்களுக்குத் தலைவன் ஆகிவிடுவேன்! உங்களுக்கும் பதவி கிடைக்கும். அப்புறம் நமக்கு எந்தத் துன்பமும் இல்லை. நம் குரு மட்டும் எப்படியாவது ராஜா ஆகி விட்டால், விதம் விதமான குதிரைகள் பூட்டிய தேரில் ஜம்மென்று ஊர்வலம் வரலாம், என்று சிரித்தனர். ஆமாம், எனக்கும் கூட இலவசமாக நிறைய சுருட்டுகள் கிடைக்கும். பணத்துக்குப் பதில் சுருட்டையே வரியாகக் கட்டச்சொல்ல வேண்டும்! என்றார் பரமார்த்தர்.

ஒரு வீதியில் குருவும் சீடர்களும் எதிர்பாராமல், ஐயா! அந்த மாட்டைப் பிடியுங்கள் என்று கூச்சலிட்டுக் கொண்டு ஒரு தடித்த அம்மாள் நடந்து வந்தாள். எலும்பும் தோலுமாய் ஒரு பசுமாடு நொண்டி நொண்டித் தள்ளாடி நடந்து வந்தது. பொங்கல் தயாரித்த பின் அதைத் தன் அருமையான பசுமாட்டுக்கு ஊட்டுவதற்காக ஒரு பெரிய கிண்ணத்தில் வைத்திருந்தால் அதை உண்ணாமல் பசு ஓட்டம் பிடிக்கத் தொடங்கியிருந்தது.

இதோ ஒரு ஜல்லிக்கட்டு காளை! மைதானத்திலிருந்து தப்பி வந்திருக்கிறது! என்று நினைத்து அந்த பசுவை சீடர்கள் பிடித்தனர். வேதனை தாளாமல் பசு ஒரு உதை விட்டது. இது மாடா? அல்லது கழுதையா? என்று திகைத்த குரு, கொம்பைப் பிடியுங்கள்! அப்போதுதான் அடங்கும்! என்று பதறியவாறே சொன்னார்.

இவர்கள் பாய்ந்த வேகத்தில் இரண்டு கொம்புகளும் பிடித்து கையோடு வந்து விட்டன. பசு கால்களை விரித்துப்படுத்தே விட்டது. ஆ..! மாடு அடங்கி விட்டது! என்று குருவும் சீடர்களும் குதித்தார்கள்.

ஐயோ! என் கண்ணுடா! என் செல்லம். போச்சே! தினமும் நாலுபடி பால் கறக்கும் அருமைப் பசுவைக் கொன்று விட்டீர்களே! என்று குண்டுக் கிழவி கண்ணீர் விட்டு ஒப்பாரி வைத்தால். மாட்டை அடக்கியதற்க்கு மன்னர் கொடுக்கும் பரிசுப் பணத்தில் உனக்கு நஷ்ட ஈடு கொடுத்து விடுகிறோம்! என்று கூறி சீடர்கள் மாட்டை ஒரு கட்டை வண்டியில் தூக்கிப்போட்டு ஜல்லிக்கட்டு மைதானத்துக்குப் போனார்கள். போய் சேருவதற்குள் மாடு இறந்து விட்டது.

ஜல்லிக்கட்டுக் காளையை அடக்குவதாக நினைத்து நோஞ்சான் பசு மாட்டின் உயிரை போக்கிய குருவையும், சீடர்களையும் கண்டு மைதானத்தில் திரண்டிருந்த மக்கள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்கள். ஒரு பசுவைக்கொன்ற குற்றத்திற்காகக் குருவுக்கும், சீடர்களுக்கும் சாட்டையடிகள் தரப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்