இறைவனை மனமார நினைத்து, உள்ளம் உருக வழிபடுவோருக்கு வீடுபேறு (முக்தி) அளிக்கவல்ல அற்புதமான திருத்தலம் இதுவாகும்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது கழுகுமலை.
இந்த ஊரில் அமைந்துள்ள கழுகாசலமூர்த்தி திருக்கோவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆலயத்தில் முருகப் பெருமான், கழுகாசலமூர்த்தி என்கிற சுப்பிரமணியராக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.
அவருடன் வள்ளி- தெய்வானை தேவியரும் அருள்புரிகின்றனர். ஆலயத்தின் தீர்த்தம், ‘குமார தெப்பம்’. தல விருட்சம் மலைக்குன்று.
இந்தக் கோவிலில் மயில் மீது அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமான், ஒரு முகமும், ஆறு கரங்களும் கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.
மயிலின் தலைப்பகுதி இறைவனின் இடப்பக்கத்தில் இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். வள்ளி- தெய்வானை தேவியர் இருவரும் முருகப்பெருமானின் முன்பு பக்கவாட்டில் நின்ற கோலத்தில், இறைவனை நோக்கும் விதத்தில் அமைந்திருப்பதும் மிகவும் வித்தியாசமான கோலமாக உள்ளது.
பொதிகை மலையில் உறையும் அகத்திய முனிவருக்கு ஞானத்தை அருளும் ஞான குருவாகவும், செவ்வாய் தோஷம் உள்ளவர்களின் தோஷத்தை நீக்கி மங்கள வாழ்வளிக்கும் மூர்த்தியாகவும் இத்தல சுப்பிரமணியர் திகழ்கிறார்.
எனவே இத்தலம் ‘குரு-மங்கள ஷேத்திரம்’ என்றும் போற்றப்படுகிறது. இறைவனின் கருவறை மலையின் குகையில் அமைந்து இருப்பதால், இக்கோவிலின் மலையே ஆலயத்தின் கோபுரமாக விளங்குகிறது.
இறைவனை மனமார நினைத்து, உள்ளம் உருக வழிபடுவோருக்கு வீடுபேறு (முக்தி) அளிக்கவல்ல அற்புதமான திருத்தலம் இதுவாகும்.
தல வரலாறு :
முற்காலத்தில் இந்த ஆலயம் இருந்த இடம் வனமாக இருந்தது. உவணகிரி என்று அழைக்கப்பட்ட இத்தலத்திற்கு தெற்கே, பழங்கோட்டை என்னும் ஊரில் அதிமதுர பாண்டியன் என்ற மன்னன் தன் இருப்பிடத்தை அமைத்து ஆட்சி புரிந்து வந்தான்.
அந்த மன்னன் வேட்டையாடுவதற்காக இந்த வனப்பகுதிக்கு வந்தான். அப்போது ஓய்வெடுக்க விரும்பி வனத்தில் இருந்த வேங்கை மரத்தடியில் அமர்ந்தான். மிகுந்த களைப்பின் காரணமாக தூங்கிப் போனான்.
நண்பகலில் பூஜை செய்வது போன்றும், மணி ஒலிக்கும் சத்தம் கேட்டும் கண் விழித்துப் பார்த்தான். அப்போது அங்கு பசு ஒன்று பாறையில் தானாக பாலை சுரந்து கொண்டு இருந்ததைக் கண்டான்.
சிறிது நேரம் கழித்து அந்த பாறையை அகற்றிப் பார்த்தபோது, அங்கு ஒரு குகையும், அதனுள் மயில் மீது அமர்ந்த கோலத்தில் முருகப்பெருமானும் காட்சியளித்தனர். இதனைக் கண்டு மனம் மகிழ்ந்த மன்னன், இறைக் காட்சியால் உள்ளம் நெகிழ்ந்து வழிபட்டான்.
மனிதர்களால் பிரதிஷ்டை செய்யப்படாமல், தேவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தி என்றும், தேவர்கள் வந்து பூஜிக்கின்ற மூர்த்தி என்றும் உணர்ந்து மக்கள் வழிபட வசதிகள் செய்து வைத்தான் என்கிறது தல வரலாறு.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக