வியாழன், 30 ஜூலை, 2020

இந்திரஜித் இலட்சுமணனால் அழிதல்!...

இலட்சுமணன், படைக்கலன்கள் அழித்ததை பார்த்து தேவர்கள் பாராட்டினர். ஆனால் இந்திரஜித் இதைக் கண்டு திகைத்து நின்றான். பிறகு இந்திரஜித் இலட்சுமணனை பார்த்து, இலட்சுமணா! இப்பொழுது நான் விடும் அஸ்திரத்தால் நிச்சயம் நீ மாண்டொழிவாய்.

உன்னால் இதிலிருந்து தப்பிக்க முடியாது எனக் கூறி விட்டு மிகச்சிறந்த அஸ்திரமான நாராயணஸ்திரத்தை ஏவினான். இலட்சுமணனும், அதே அஸ்திரத்தைக் கொண்டு அதை தூள்தூளாக்கினார்.

இதைப் பார்த்த இந்திரஜித் மிகவும் கோபங்கொண்டு இதற்கெல்லாம் விபீஷணன் தான் காரணம். அதனால் அவனை கொல்ல ஓர் அஸ்திரத்தை ஏவினான். அந்த அம்பு விபீஷணனை நோக்கி வரும்போது, இலட்சுமணன் அதையும் உடைத்தெறிந்தார். பிறகு இந்திரஜித் அங்கிருந்து மறைந்து அரண்மனையில் வீற்றிருக்கும் இராவணன் முன் தோன்றினான்.

இந்திரஜித் இராவணனை பார்த்து, உன் தம்பி விபீஷணனால் இன்று என் யாகம் தடைப்பட்டு போனது. பிறகு அங்கு நடந்த போரை பற்றிக் கூறினான். இலட்சுமணனின் வில்வேகத்தையும், போர்திறமையும் பற்றிக் கூறினான். அதனால் நீ சீதையை மறந்து விடு.

இதுவே உனக்கு நன்மை. அவர்களும் போரை நிறுத்திக் கொள்வார்கள் எனக் கூறினான். இராவணன் கோபத்துடன், நான் சீதையை அவர்களிடம் ஒப்படைப்பதற்கு பதில், அவர்கள் முன் என் உயிரைத் துறப்பது மேல். உனக்கு போருக்குச் செல்ல பயமாக இருந்தால் என்னிடம் சொல், நானே போருக்குச் செல்கிறேன் எனக் கூறினான்.

பிறகு இந்திரஜித் இராவணனிடம், தந்தையே! தாங்கள் கோபம் கொள்ள வேண்டாம். நானே போருக்கு செல்கிறேன் என்றான். இந்திரஜித் இராவணனிடம் இருந்து விடைப்பெற்று போர் நடக்கும் இடத்திற்குச் சென்றான்.

அங்கு இலட்சுமணனுக்கும் இந்திரஜித்துக்கும் கடும்போர் நடந்தது. இலட்சுமணன், ஒரு அம்பை ஏவி இந்திரஜித்தின் தேரை உடைத்தெறிந்தார்.

பிறகு இந்திரஜித் கையில் வாளை ஏந்திக் கொண்டு வானத்தில் சென்று மறைய முற்பட்டான். அப்போது இலட்சுமணன், அம்பை எய்தி இந்திரஜித்தின் வாளோடு கையை வெட்டினான். தன் கையை இழந்த நிலையில் இந்திரஜித் இலட்சுமணனை நோக்கி, ஒரு சூலாயுத்தை வீசினான். இலட்சுமணன் அதையும் உடைத்தெறிந்தார்.

பிறகு இலட்சுமணன் வேதங்களைத் தெளிந்து கூறும் கடவுளும், அந்தணர்கள் வணங்கும் கடவுளும் இராமனே என்பது உண்மை என்றால், இந்திரஜித்தைக் கொல் என்று ஓர் கடிய பாணத்தை ஏவினான். அப்பாணம் இந்திரஜித்தின் தலையை சீவிக் கொண்டு விழுந்தது.

மாவீரனும், மந்திர வேலையில் வல்லவனான இந்திரஜித் அந்த இடத்திலேயே தன் உயிரை விட்டான். இதைக்கண்டு விபீஷணன் ஆர்ப்பரித்தான். வானரர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

தேவர்கள் இலட்சுமணனை வாழ்த்தி பூமாரி பொழிந்தனர். பிறகு அங்கதன், இந்திரஜித்தின் தலையை கையில் ஏந்திக் கொண்டு, அனுமன் இலட்சுமணனை தோளில் ஏற்றிக் கொண்டு இராமரிடம் இச்செய்தியைக் கூறச் சென்றனர். இதைக் கேட்டு இராமர், இலட்சுமணனைத் தழுவிக்கொண்டு, இராவணனுக்கு இனி யார் இருக்கிறார்கள்?

அவனின் முடிவு காலம் வந்து விட்டது எனக்கூறி தன் மகிழ்ச்சியை காட்டினார். பிறகு இராமர் இலட்சுமணனிடம், தம்பி இலட்சுமணா! இந்த வெற்றிக்கு நீயும் காரணம் இல்லை, நானும் காரணம் இல்லை. இதற்கு காரணம் விபீஷணன் தான் எனக் கூறி விபீஷணனை பாராட்டினார். பிறகு அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்