Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

சில சீன கம்பெனிகளின் தகிடு தத்தோம்! அதிரடி சோதனையில் சிக்கிய ரூ.1,000 கோடி பண மோசடி!

வருமான வரித் துறை ரெய்ட்
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பல தசாப்தங்களாகவே ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. அதிலும் கடந்த ஜூன் 2020-ல் சீனர்களின் தாக்குதலால், 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்த பின் இந்த புகைச்சல் இன்னும் அதிகமாகிவிட்டது.
தொடர்ந்து மத்திய அரசு, சீன நிறுவனங்களுக்கு தடை விதிப்பது, இந்திய அரசு ஒப்பந்தங்களில் இருந்து சீன கம்பெனிகளை கழட்டி விடுவது என சீனாவுக்கு எதிராக பல செயல்களைச் செய்து கொண்டு இருக்கிறது.
இத்தனை ரண களத்துக்கு நடுவிலும், சில தவறான சீன கம்பெனிகள், இந்தியாவில் ஹவாலா பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
 வருமான வரித் துறை ரெய்ட்
சமீபத்தில் சில சீன கம்பெனிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய லோக்கல் ஆட்களையும் சோதனை செய்து இருக்கிறது வருமான வரித் துறை. இவர்கள் ஹவாலா பணப் பரிமாற்றங்களில் ஈடுபட்டதாக வந்த உறுதியான தகவல்கள் அடிப்படையில், ரெய்ட் நடத்தி இருப்பதாக நேரடி வரிகள் வாரியம் நேற்று (11 ஆகஸ்ட் 2020) சொல்லி இருக்கிறது.
எந்த இடங்களில் எல்லாம் ரெய்ட்
இந்தியாவின் தலை நகரான டெல்லி, காசியாபாத், குருகிராமம் போன்ற நகரங்களில் 21 இடங்களில் வருமான வரித் துறையினர் ரெய்ட் நடத்தி இருக்கிறார்கள். ஏற்கனவே, இந்தியா மட்டுமின்றி உலக அளவில் கொரோனாவால் பலரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நேரத்தில் கூட சீனர்கள் ஹவாலா பணப் பரிமாற்றங்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பது வருத்தமான செய்தி தான்.
எவ்வளவு தொகை
சீன தனி நபர்கள் சிலர் வழி காட்டியது போல, 40-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள், பல்வேறு போலி நிறுவனங்கள் பெயரில் தொடங்கப்பட்டு, சுமாராக 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஹவாலா பணத்தை பரிமாற்றம் செய்து இருக்கிறார்கள் என நேரடி வரிகள் வாரியமே சொல்லி இருக்கிறார்களாம்.
வெளிநாட்டு கரன்ஸிகள்
ஹாங் காங் டாலர் மற்றும் அமெரிக்க டாலர் போன்ற வெளிநாட்டு கரன்ஸிகளிலும் ஹவாலா பணப் பரிமாற்றங்கள் செய்ததற்கான ஆதாரங்களையும் வருமான வரித் துறை அதிகாரிகள் கண்டு பிடித்து இருக்கிறார்களாம். சில வங்கி அதிகாரிகள் கூட இந்த ஹவாலா தொடர்பாக ரெய்ட் செய்யப்பட்டு இருக்கிறார்களாம்.
என்ன கிடைத்தது
ஹவாலா பணப் பரிமாற்றங்கள் தொடர்பான டாக்குமெண்ட்கள், பணச் சலவை தொடர்பான டாக்குமெண்ட்கள் இந்த ரெய்ட் மூலம் கிடைத்து இருக்கிறதாம். இந்த தவறான பணப் பரிமாற்றங்களில் சில வங்கி அதிகாரிகள் மற்றும் சில பட்டையக் கணக்காளர்கள் (CA) ஈடுபட்டு இருப்பதும் தெரிய வந்து இருக்கிறதாம்.
சீன கம்பெனி முதலீடு
ஒரு சீன கம்பெனி மற்றும் அது சார்ந்த சில கம்பெனிகள், போலி நிறுவனங்களிடம் இருந்து 100 கோடி ரூபாயை போலி கடனாக (Bogus Advance) பெற்று இருக்கிறார்களாம். ஏன் இந்த கடன் என்று கேட்டால், புதிதாக ரீடெயில் ஷோரூம்களை இந்தியாவில் திறக்கத் தான் இந்த முதல் பணம் எனச் சொல்லி இருக்கிறார்களாம்.
விசாரணை
தொடர்ந்து வருமான வரித் துறையினர், இந்த ஹவாலா தொடர்பாக விசாரித்துக் கொண்டு இருக்கிறார்களாம். ஒரு சீனர், போலி இந்திய பாஸ்போர்ட் உடன் சிக்கி இருக்கிறாராம். அந்த பாஸ்போர்ட், மனிப்பூரில் வழங்கி இருக்கிறார்களாம். இந்த சீன தனி நபர், இந்தியாவில் சுமாராக 10 வங்கிக் கணக்குகளை பல்வேறு போலி பெயர்களில் இயக்கி வருவதாக விசாரணையில் தெரிய வந்திருக்கிறதாம். மேலும் பல விவரங்கள் விசாரணையில் வெளி வரும் என எதிர்பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக