இந்தியாவின் மிகப் பெரிய மின்னணு வர்த்தகச் சேவை நிறுவனங்களில் ஒன்றான பேடிஎம் சந்தையில் நிலவும் கடுமையான போட்டியைச் சமாளித்து தனது தொழிலை விரிவாக்கம் செய்து வருகிறது. பணமதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து இந்திய மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகமாக மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, மொபைல் செயலிகள் மூலமான பரிவர்த்தனைகள் அதிகமாக உள்ளன. இதைப் பயன்படுத்தி பேடிஎம் உள்ளிட்ட ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் பல்வேறு சிறப்புச் சலுகைகள் வழங்கியும் அதிகம் முதலீடு செய்தும் தொழிலை விரிவுபடுத்தி வருகின்றன. இதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.
இந்தியாவின் பிரபலமான ஈ-காமர்ஸ் நிறுவனமான பேடிஎம் இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தொழிலை விரிவாக்கம் செய்வதாகவும், அதன் மூலம் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்குள் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் எனவும், நிதிச் சேவைகள் ஆய்வாளர்கள், டேட்டா தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்றோருக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேடிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’பேடிஎம் நிறுவனமும் கடன் வழங்குதல், காப்பீடு, சொத்து மேலாண்மை உள்ளிட்ட இதர பிரிவுகளும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளன. எனவே இதற்கான பணியில் தொழில்நுட்பம் சார்ந்த பணியாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். நிதிச் சேவைகள் பிரிவில் புதிய கண்டுபிடிப்புகள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் வேலையின்மைப் பிரச்சினை அதிகமாக இருக்கும் சூழலில் பேடிஎம் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வரவேற்பைப் பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக