Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

பூவரசம் மரமே புத்திகொடு

மரத்தடியில், உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிக்கொண்டிருந்தார், பரமார்த்தர். திடீரென்று விழித்து சீடர்களே! புத்தருக்குப் போதி மரத்தடியில் ஞானம் பிறந்ததாம். அதுபோல் இப்போது எனக்கு இந்த பூவரசம் மரத்தடியில் புத்தி பிறந்து விட்டது! என்று மகிழ்ச்சியுடன் கத்தினார்.

 அதைக்கேட்ட சீடர்கள், புத்தருக்கு ஒரு போதி எங்கள் பரமார்த்தருக்கு ஒரு பூவரசம்! புத்தி கொடுத்த மரமே, நீ வாழ்க! என்று அந்த மரத்தைச் சுற்றி வந்து வணங்கினார்கள். சீடர்களே! நாம் கூட்டு சேர்ந்து பயிர் வைப்போம், கொள்ளை லாபம் அடிப்போம்! என்றார் குரு.

 பரமார்த்தரின் யோசனையைக் கேள்விப்பட்ட ஒருவன், இவர்கள் ஏமாந்து விடுவார்கள், என்று நினைத்து அவர்களுடன் கூட்டாகப் பயிர் செய்வதற்கு ஒப்புக்கொண்டான்.

 கூட்டு வாணிகம் என்பதால், மண்ணுக்கு மேலே விளைவதை ஒருவரும், பூமிக்குக் கீழே கிடப்பதை இன்னொருவரும் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் இருவருக்கும் லாபம் சமமாக இருக்கும். உங்களுக்குப் பூமிக்குக் கீழே விளைவது வேண்டுமா? மேலே கிடைப்பது வேண்டுமா? என்றான் கூட்டாளி.

 குருவும் சீடர்களும் தனியாகச் சென்று யோசித்தார்கள். பூமிக்குக் கீழே இருப்பது எல்லாம் எங்களுக்கே என்று குரு கூறினார்.

 ஏமாற்ற நினைத்த கூட்டாளியோ, சோளம், கம்பு, கேழ்வரகு என்று மண்ணுக்கு மேலே கிடைப்பவையாகப் பயிரிட்டான்!

 செடிகள் நன்றாகச் செழித்து வளர்வதைக் கண்ட பரமார்த்தர், பலே! மண்ணுக்கு மேலேயே இவ்வளவு செழிப்பாக இருந்தால், அடியில் இன்னும் வளமாகக் காய்க்குமே! இந்தத் தடவை நமக்கு நல்ல லாபம் நிச்சயமாகக் கிடைக்கப் போகிறது! என்று மகிழ்ந்தார்.

 அறுவடைக் காலம் வந்தது. குருவையும் சீடர்களையும் அழைத்து வந்த கூட்டாளி, பேசியபடி பூமிக்கு அடியில் இருப்பதை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். மேலே இருப்பதை மட்டும் நான் கொண்டு போகிறேன் என்று கூறினான்.

 அவன் எல்லாவற்றையும் அறுத்துச் சென்ற பிறகு, குருவும் சீடர்களும் வெறும் மண்ணைக் கிளற ஆரம்பித்தார்கள். எங்கு தோண்டினாலும் வெறும் வேர் மட்டுமே இருந்தது. குருவே! மோசம் போனோம்! ஏதோ மாய வேலை நடந்து விட்டது! என்று அழுதான் மடையன்.

 குருவே! பாதாள உலகத்தில் இருப்பவர்கள் தான் எல்லாவற்றையும் அடியிலிருந்தே திருடிக்கொண்டு போய் விட்டார்கள்! என்றான் முட்டாள். இத்தனை நாட்கள் கஷ்டப்பட்டு உழைத்தோம். எல்லாம் பாழாகி விட்டதே! என்று வருத்தப்பட்ட, குருவிடம் அடுத்த முறை பயிர் செய்யும் போது மேலே இருப்பதை நாம் எடுத்துக்கொள்வோம். நாம் ஏமாந்தது போல அவனும் ஏமாற வேண்டும்! என்றான் மூடன்.

 அடுத்த முறை பயிர் செய்யும் காலம் வந்தது. இந்தத் தடவை மண்ணுக்கு மேலே இருப்பது எல்லாம் எங்களுக்கு! என்று கூறிவிட்டனர், குருவும் சீடர்களும்.

 மறுபடியும் ஏமாற்ற நினைத்த கூட்டாளி, இந்தத் தடவை வேர்க்கடலையும், மரவள்ளிக்கிழங்கும் பயிர் வைத்து செடிகள் வளமாக வளர்கின்றன. கொள்ளை லாபம் கிடைக்கப் போகிறது! என்றான் மண்டு. அறுவடை நேரம் வந்தது. செடியை பார்த்ததும் செடியில் ஒன்றுமே காய்க்க வில்லை, குருதேவா! இந்தத் தடவையும் மோசம் போய் விட்டோம்! என்று கண்ணீர் விட்டான் மட்டி.

 இரவு பகலாகக் காவல் காத்தும் பயனில்லாமல் போச்சே! என்றும் புலம்பினான் மடையன். இது ஏதோ சைத்தான் வேலையாகத்தான் இருக்கும்! என்றான் முட்டாள். பரமார்த்தர், சிந்தனை செய்து ஒரு முடிவுக்கு வந்தார்! சீடர்களே! இது சைத்தான் வேலையுமல்ல, சனீஸ்வரன் வேலையுமல்ல! எல்லாம் நான் செய்த தவறுதான்!

 மரத்தடியில் படுத்துத்தூங்கியபோது, புத்தி வந்ததாகக் கூறினேன், அது தவறு. அந்த மரம் பூவரசம் மரம் இல்லை என்பது நேற்று தான் தெரிந்தது. வேறு ஏதோ ஒரு மரத்தடியில் மாறிப் போய்த் தவறுதலாகத் தூங்கி விட்டேன்! வாருங்கள், உண்மையாக பூவரசம் மரத்தடிக்குப் போவோம்! என்றார்

 சீடர்களும், பூவரசம் மரமே! புத்தி கொடு! என்று மீண்டும் தவம் செய்யத் தொடங்கினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக