இந்த பனாமா கால்வாய் உலகம் கண்ட மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டமாகும். 10 ஆண்டு கால கட்டுமானத்திற்குப் பிறகு 1914 ஆம் ஆண்டில் 77 கிலோமீட்டர் நீளமுள்ள பனாமா கால்வாய் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளாக திட்டமிடப்பட்ட ஒரு கனவு திட்டம் அது. நீண்ட காலமாக அது சாத்தியமற்றதாகவே எல்லாருக்கும் தோன்றியது.
"இயற்கையோடு இணைந்த இதுபோன்ற அதிசயங்களை நிகழ்த்த மனிதன் கனவு கூட கண்டதில்லை" என்று பத்திரிகையாளர் ஆர்தர் புல்லார்ட் பிரமிப்புடன் எழுதியிருந்தார்.
ஆனால் 40,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய இந்த திட்டம், மனிதவாழ்க்கையுடன் கொடூரமாக விளையாடியது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
அதிகாரப்பூர்வமாக சுமார் 5,609 பேர் இறந்ததாக சொல்லப்பட்டாலும், உண்மையான எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும் என வரலாற்றாசிரியார்கள் கருதுகின்றனர். பல்லாயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
இந்த திட்டத்திற்கு பொறுப்பான அமெரிக்க அரசு, இதை எப்படி சரிசெய்தது என்று தெரியுமா? இன்றும் அரசாங்கங்கள் என்ன செய்கிறார்களோ அதையே தான் அப்போதும் செய்தனர்.
எதற்கும் உதவாத வாக்குறுதிகளை வைத்து கொண்டு, விமர்சகர்களைத் தக்க வைத்துக் கொள்ள என்ன என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தார்கள்.
அமெரிக்காவின் பொறியியல் வலிமை
இந்த கால்வாய் திட்டம், அமெரிக்காவின் சக்தி மற்றும் திறனை உலகுக்கு காட்ட வேண்டும் என முனைப்புடன் இருந்தது.
1880 களில் ஒரு கால்வாயைக் கட்ட பிரெஞ்சுக்காரர்கள் முயன்று தோல்வியுற்றனர். அவர்கள் நிலப்பரப்பு, மூர்க்கமான கொள்ளை நோய், 20,000 தொழிலாளர்களின் இறப்பு மற்றும் சுழல் செலவுகளை எதிர்த்துப்போராடி கட்ட முடியாமல் தோற்றனர். ஆனால் பிரெஞ்சு நிறுவனத்தின் உபகரணங்களை வாங்கிய யு.எஸ், வித்தியாசமாக இதை செய்யப்போவதாக கூறினார்கள்.
முதலாவதாக, கால்வாய் கட்டுவதற்கு தேவையான நிலத்தை கட்டுப்படுத்திய கொலம்பியாவுடன், யு.எஸ் அரசாங்கம் ஒரு ஒப்பந்தத்தை செய்ய முயன்றது. அது சாத்தியப்படாத போது, யு.எஸ். என்ன செய்தது தெரியுமா? பனாமாவின் பிரிவினைவாத கிளர்ச்சியை ஆதரித்தது, புதிய நாட்டோடு விரைவாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். இதனால் யு.எஸ் க்கு 16 கிலோ மீட்டர் அகலமுள்ள கால்வாய் அமையப்போகும் இடத்தின் முழு கட்டுப்பாட்டும் கிடைத்தது.
இந்த திட்டத்தை நிர்வகித்த இஸ்த்மியன் கால்வாய் ஆணையம், முதலில் அந்த நிலப்பரப்பு மற்றும் அதில் வசிக்கும் மக்களை ஒழுங்குபடுத்த தீவிரமாக செயல்பட தொடங்கியது. இந்த ஆணையம் சதுப்பு நிலங்களை சரிபடுத்தினர், கொசுக்களைக் கொன்றனர் மற்றும் முழு அளவிலான துப்புரவுத் திட்டத்தைத் தொடங்கினர். ஒரு புதிய போலிஸ் படை, பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் என அந்த இடமே மாறியது. ஆங்கில புவியியலாளரான வாகன் கார்னிஷ் இந்த மாற்றங்களை "அற்புதமான மரியாதை" என்று கூறியிருந்தார்.
அழிவின் பாதை
ஆனால் இந்த மாற்றங்கள் வெறும் ஆரம்பம் மட்டுமே. உலகின் மிகப்பெரிய அணை அந்த இடத்தில் கட்டப்பட வேண்டியிருந்தது. சாக்ரஸ் நதியைக் கட்டுப்படுத்தவும், கால்வாயின் பூட்டு அமைப்புக்கு மின்சாரம் வழங்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அதுமட்டுமின்றி இதனால் உருவாகும் பெரிய கட்டூன் ஏரியை (Gatún Lake) பாதுகாக்க வேண்டும். இந்த ஏரி அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களுக்கு இடையிலான மூன்றில் ஒருபங்கு தூரத்திற்கு போக்குவரத்தை வழங்குமாறு அமைந்தது.
பேரழிவுக்கான ஆரம்பம்
கட்டமைப்பின் போது அங்கே ஏற்பட்ட பேரழிவுகள் மிகவும் மோசமானதாக இருந்தன. சுற்றிருந்த கிராமங்களும், காடுகளும் வெள்ளத்தில் மூழ்கின. மேலும் 1850 களில் கட்டப்பட்ட ஒருரயில்வே இடமாற்றம் செய்யப்பட வேண்டியிருந்தது. அனைவருக்கும் இது மிகப்பெரிய சவாலாக இருந்தது. இப்போது கெயிலார்ட் கட் என்று அழைக்கப்படும் குலேப்ரா வெட்டு, இது ஒரு செயற்கை பள்ளத்தாக்கு சுமார் 13 கிலோமீட்டர் மலைப்பாங்கான நிலப்பரப்பில் தோண்டப்பட்டது.
இதனால் 100 மில்லியனுக்கும் அதிகமான கன மீட்டர் அளவுக் கொண்ட சேதமான பொருட்கள், குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டியிருந்தது; இந்த வேலைக்காக மூன்று ஆண்டுகளில் மட்டும் எட்டு மில்லியன் கிலோகிராம் டைனமைட் செலவழிந்தது. 130 கால்பந்து மைதானங்களின் நீளத்திற்கு, 90 மீட்டருக்கும் அதிகமான அகலமும், 10 மாடி ஆழமும் கொண்ட அகழிதோண்டுவதை கற்பனை செய்து பாருங்கள். யோசிக்கவே கடினமாக உள்ளதல்லவா? அதுவும் பெரும்பாலும் 30 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருந்த வெப்பநிலையில், சில நேரங்களில் பெய்யும் மழையையும் சமாளித்து செய்ய வேண்டும். அதுவும் 1910 ம் ஆண்டில் இருந்த டைனமைட், பிக்ஸ் மற்றும் நிலக்கரி எரியும் நீராவி திண்ணைகள் போன்ற எளிமையான கருவிகளுடன். நினைக்கவே கஷ்டமாக உள்ளது.
வேலையாட்களுக்கு நடந்த அவலம்
பல சாதனை பேச்சுக்களால் பின்னணியில் நடந்த திகிலூட்டும் நிலைமைகளை மறைக்க முயற்சி செய்தது அமெரிக்கா.
பனாமா கால்வாய் கட்டப்படுவதற்காக ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களால் பெரும்பாலும் கரீபியனிலிருந்து வரவழைக்கப்பட்டனர். அவர்கள் குலேப்ரா கட் இடத்தை “ நரகத்தின் வாசல்” என்று அழைத்தனர்.
அந்த தொழிலாளர்கள் மோசமான உணவு, நீண்ட நேர வேலை, குறைந்த ஊதியம், எப்போதும் இருக்கும் ஆபத்து என எல்லா கஷ்டத்துடன் இரண்டாம் தர குடிமக்களைப் போல பாவமாக வாழ்ந்தனர்.
1980 களில், திரைப்படத் தயாரிப்பாளர் ரோமன் ஃபாஸ்டர் இந்த தொழிலாளர்களைத் தேடினார்; இந்த ஆபத்திலிருந்து தப்பியவர்கள் பெரும்பாலோர் 90 வயதுகளில் இருந்தனர்.
டிகர்ஸ் (1984)
ஃபாஸ்டரின் திரைப்படமான “டிகர்ஸ் (1984)” இன் சில பிரதிகள் மட்டுமே இன்று உலகெங்கிலும் உள்ள நூலகங்களில் உள்ளன.
பனாமா கால்வாய் கட்டும் போது தொழிலாளர்களுக்கு நடந்த அநியாயத்தின் முதல் சாட்சியம் இதில் தான்உள்ளது.
கான்ஸ்டன்டைன் பார்கின்சன் என்பவர்,தனது கதையை இந்த ஃபோஸ்டரிடம் சொன்ன தொழிலாளர்களில் ஒருவர், அவரது குரல் தெளிவாக கேட்டாலும், கேமராவில் அவரது முகம் தெளிவாக இல்லை.
அவர் 15 வயதில் கால்வாய் வேலையில் ஈடுபட தொடங்கினாராம்; பலரைப் போலவே, அவரும் தனது வயதைப்பற்றி பொய் சொல்லியிருக்கலாம். அவர் ஒரு பிரேக்மேனாக வேலை பார்த்ததாக கூறியுள்ளார், ஒரு ரயிலில் பாறைகளை பிரேக்வாட்டருக்கு கொண்டு செல்லும் வேலை அது.
ஜூலை 16, 1913 அன்று, அவர் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு கொடூரமான நாள், ஆம்! அவர் தனது வலதுகாலை இழந்தார், மேலும் அவரது இடது குதிகால் நசுக்கப்பட்டது.
பார்கின்சன் கூறியிருக்கிறார், அவரது பாட்டி கால்வாயின் தலைமை பொறியாளரான ஜார்ஜ் கோதால்ஸிடம் உதவி கேட்கச் சென்றாராம். அதற்கு கோதலின் பதில்: “பாட்டி, தொழிலாளர்கள் கைகால்களை இழக்கும்போது இழப்பீடு பெற காங்கிரஸ் எந்தச் சட்டத்தையும் நிறைவேற்றவில்லை… இருப்பினும், கவலைப்பட வேண்டாம். உங்கள் பேரன் சக்கர நாற்காலியில் வேலை செய்ய வந்தால் அவனை கவனித்துக்கொள்கிறோம் என்று. ”
கோதல்ஸ் கூறியது ஓரளவு மட்டுமே சரி. ஆரம்பத்தில், பார்படாஸ், ஜமைக்கா, ஸ்பெயின் மற்றும் பிற இடங்களிலிருந்து வந்த பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பாதுகாக்க யு.எஸ். அரசாங்கம் எந்த சட்டத்தையும் இயற்றவில்லை.
தொழிலாளர்களின் பொருளாதார தேவைகள், அவர்களின் அதிகப்படியான போராட்டத்தை தடுக்கும் என்று கோதல்களைப் போன்ற அதிகாரிகள் நம்பினர். அவர்களின் சூழ்ச்சியும் வேலை செய்தது.
வாழ்க்கை நிலைமைகள் குறித்து அச்சம் இருந்தபோதிலும், தொழிலாளர்களின் காயங்கள் கொஞ்சமாக கருத்தில் எடுத்து கொள்ளப்பட்டன. மேலும் நிர்வாகத்தின் தொண்டு மிக மெதுவாக தான் கூடியது, தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அழைத்துச் செல்ல தேவையான ஊதியத்தை மட்டும் தான் வழங்கியது.
சில நிவாரணங்கள்
1908 ஆம் ஆண்டில், பல ஆண்டு கால கட்டுமானத்திற்குப் பிறகு, இஸ்த்மியன் கால்வாய் ஆணையம் இறுதியாக, சில குறிப்பிட்ட இழப்பீட்டுக் கொள்கைகளைப் பயன்படுத்தத் தொடங்கியது. அவர்கள் ஏ.ஏ. மார்க்ஸ் என்ற நியூயார்க் உற்பத்தியாளர்கள் சங்கத்தை தொடர்பு கொண்டு, பணியில் இருக்கும்போது காயமடைந்த ஆண்களுக்கு செயற்கை கால்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்தனர். “நிறம், தேசியம், அல்லது வேலையில் ஈடுபடும் தன்மை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் இந்த உதவி வழங்கப்பட்டது”.
இழப்பீடு?
இந்த மாதிரியான சூழ்நிலைகள் அனைத்தும் இருந்தபோதிலும், 1912 ஆம் ஆண்டு வாக்கில், ஏ.ஏ. நிறுவனம் 200 க்கும் மேற்பட்ட செயற்கை கால்களை பணியாளர்களுக்கு வழங்கியிருந்தது.
விபத்துக்கள், எதிர்பாரா குண்டுவெடிப்புகள், இரயில் பாதை விபத்துகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பல ஆண்களுக்கு இந்த செயற்கை கை, கால்கள் எவ்வாறு உதவியது என்பதை மார்க்ஸ், தி நியூயார்க் சன் பத்திரிகையின் ஒரு முழு பக்க விளம்பரத்தின் மூலம் மக்களுக்கு தெரிவித்தனர். இந்த விளம்பரங்களை மருத்துவ பத்திரிகைகளில் கூட வெளிவர செய்தார்கள்.
ஆனாலும் இந்த இழப்பீடுகள் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு போதுமானதாக இல்லை. பல தொழிலாளர்களின் கதைகளை கண்டுபிடிக்க கடினமாக இருந்தது. ஆனால் காலேஜ் பார்க்கில் உள்ள தேசிய ஆவணக்காப்பகத்தில் ஒரு சில தொழிலாளர்களின் கதைகள் உள்ளது.
ஜமைக்கா அல்லது பார்படோ நாட்டை சேர்ந்த வில்பிரட் மெக்டொனால்ட் என்பவர், மே 25, 1913 அன்று கால்வாய் நிர்வாகிகளுக்கு எழுதிய கடிதத்தில் தனது கதையைச் இவ்வாறு சொல்லியிருந்தார்
" நான் இந்த கால்வாய் அமைக்கும் பணியில் 1906 ஆம் ஆண்டிலிருந்து வேலை பார்த்துகொண்டு வந்தேன். 1912 ல் எனக்கு விபத்து நடக்கும் வரை நான் அங்கு தான் இருந்தேன். கால்களை இழந்துவிட்ட எனக்கு இதுவரை எந்த நிவாரணமும் வரவில்லை. என் மீது கருணை காட்டுமாறு நான் உங்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறேன், என் கால்களை நான் இழந்துவிட்டதால் எனக்கு ஒரு ஜோடி செயற்கை கால்களை வழங்குவதன் மூலம் எனக்கு உதவி செய்யுங்கள்.எனது விதவை தாய், மற்றும் தாய் இல்லாத குழந்தைகள், என இவர்கள் அனைவருக்கும் நான் தான் ஒரே உதவியாக இருந்தேன்.” என தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் இவர் எழுதிய கடிதம் பார்க்கும் யாருக்கும் கண்ணீரை வரவழைக்கும். மெக்டொனால்டின் வலியை அவரது எழுத்தின்மூலம் நாம் உணரலாம்.
முடிவு
கால்வாய் மண்டலத்தின் அதிகாரத்துவம் மற்றும் மன்னிக்க முடியாத கொள்கைகளை எதிர்கொள்வதில் தனது நிலைப்பாட்டை மிகத் தெளிவாக சாட்சி கூறுமாறு "ட்ரூலி சோபாடனேட்டட் கிளையன்ட்" என்ற கடிதத்தில் அவர் கையெழுத்திட்டார்.
சர்க்கரை விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியால், கரீபியனின் பெரும்பகுதி 1900 ஆண்டின் ஆரம்பத்தில் கடும் பொருளாதார சிக்கலில் இருந்தது, பல தொழிலாளர்கள் அடிப்படை வாழ்வாதாரத்தை அடைய கூட சிரமப்பட்டனர்; மெக்டொனால்டு போன்றவரை நம்பி தான் அவரது குடும்பங்கள் இருந்தன. ஆனால் அவரது“துரதிர்ஷ்டம்” அவருக்கு ஏற்பட்ட காயம் அவரது சொந்த தவறு என்று கருதப்பட்டுவிட்டது.
சட்டப்படி, மெக்டொனால்டுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இறுதியில் கால்வாய் ஆணையம், பொதுக்குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும் என்ற பயத்தில் அவருக்கு உதவி செய்ய முடிவு செய்தனர், எனவே அவர்கோரிய செயற்கை கால்களை அவருக்கு வழங்கினர், ஆனால் அவருடைய வழக்கை யாரும் முன்னுதாரணமாக எடுக்க கூடாது என தெளிவாக கூறிவிட்டனர்.
மற்ற ஆண்கள் அவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் அல்ல. பலர் நாடு கடத்தப்பட்டனர், சிலர் தொண்டு நிறுவனம் அளித்த வேலையில் வாழ்க்கையை கழித்தனர்.
நிலப்பரப்பு மூலம் இலாபகரமான பொருட்கள் மற்றும் இராணுவ வலிமையை காட்டும் அரசாங்கத்தின் கனவுக்காக, இந்த அப்பாவி தொழிலாளர்களின் இரத்தமும் உடல்களும் சிதைக்கப்பட்ட கண்ணீர் கதை தான் இது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக