Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

அக்னிதேவன் இராமர் முன் தோன்றுதல்...!

சீதையின் கற்பு கனலால் தீ சுடசுடவென சுடப்பட்டது. சீதையின் கற்பு என்னும் வெப்பம் தாங்கமுடியாமல் அக்னிதேவன் சீதையுடன் வெளியே வந்தான். அக்னிதேவன் இராமரை பார்த்து, பெருமானே! நான் என்ன தவறு செய்தேன்.

என்னை ஏன் கற்பு என்னும் நெருப்பால் சுட வைத்தீர்கள். சீதையின் கற்பு தீ என் வலிமையை அழித்துவிட்டது என்றான். சீதை, தீயினில் விழுவதற்கு முன் எவ்வாறு இருந்தாலோ அப்படியே இருந்தாள்.

இராமரின் கடுஞ்சொற்களை கேட்டு சீதையின் முகத்தில் ஏற்பட்ட வியர்வைகளும் அப்படியே இருந்தன. சீதை சூடியிருந்த பூக்களும் வாடாமல் அப்படியே இருந்தது. இராமர் அக்னிதேவனை பார்த்து, நீ யார்? யார் சொல்லி நீ சீதையை சுடாதபடி காப்பாற்றினாய் எனக் கேட்டார்.

அதற்குஇ  நான் தான் அக்னிதேவன். சீதையின் கற்பு தீ என்னை சுட்டெரித்துவிட்டது. அதனால் தான் நான் தங்களை சரணடைந்துள்ளேன்.

இவள் கோபம் கொண்டாள், இந்த உலகமே அழிந்துவிடும். சீதை கற்பு நெறி தவறாதவள். ஆதலால் தாங்கள் சீதையை ஏற்று கொள்ள வேண்டும் என்றார். அப்பொழுது சிவபெருமான், தோன்றி இராமரிடம், எம்பெருமானே! சீதை கற்பின் தெய்வம்.

இவள் கோபங்கொண்டால் இந்த உலகமே அழிந்துவிடும். அதனால் நீ நெருப்புடன் விளையாடாதே. சீதையை ஏற்றுக்கொள் எனக் கூறினர். இராமர் அதன்பின் சீதையை ஏற்றுக் கொண்டார்.

பிறகு இராமர் சீதையை கருணையுடன், அன்பாக பார்த்தார். இதைப்பார்த்த தேவர்களும், வானர வீரர்களும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். அதன்பின் சிவபெருமான் வைகுந்தப் பதவியை அடைந்த தசரதனிடம் சென்று, இராமனை பிரிந்து தான் அடைந்த துன்பத்தை இராமனை சந்தித்துப் போக்கி கொள்ளுமாறு கூறினார்.

சிவபெருமானுடைய கட்டளைப்படி, தேவர்கள் புடைசூழ விண்ணுலகத்தில் வாழ்ந்த தசரதரை வானுலக விமானத்தில் ஏற்றி அழைத்து வந்தனர். தந்தையை கண்ட இராமர் மகிழ்ச்சி பொங்க அவரின் திருவடியில் விழுந்து வணங்கினார்.

இராமரை கண்ட தசரதர், இன்பக் கடலில் திழைத்து, ஆனந்த கண்ணீர் அவரின் கண்களில் ஆறாய் பெருக்கெடுத்து ஓடியது. பிறகு இராமரை அன்போடு தழுவிக் கொண்டார். அதன் பின் சீதை, தசரதரின் திருவடியில் விழுந்து ஆசி பெற்றார்.

தசரதர் இராமரிடம், மகனே! நான் உனக்கு தந்தையாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். முன்பு மண்ணுலகத்தில் இருந்த போது நான் வணங்கிய தேவர்கள், இப்பொழுது என்னை வணங்குகிறார்கள். எனக்கு பிரம்மனுக்கு சமமான ஒப்பற்ற பெருமை உண்டாகியிருக்கின்றது என்றார்.

பிறகு தசரதர் சீதையிடம் சென்று, மருமகளே! உன் கற்பின் பெருமையை உலகுக்கு உணர்த்துவதற்காக தான் இராமன் இவ்வாறு செய்தான். அதனால் நீ இராமன் மீது கோபம் கொள்ள வேண்டாம் என்றார்.

அதன் பின் தசரதர் இலட்சுமணன் அருகில் வந்தார். இலட்சுமணன் தந்தையின் திருவடியில் விழுந்து வணங்கினார். தசரதர், இலட்சுமணனை அன்போடு தழுவிக் கொண்டார். என் அருமை மகனே! உன்னுடைய தமையனுக்காக உண்ணாமலும், உறங்காமலும் சேவை செய்தாயே.

தேவர்கள் எவராலும் வெல்ல முடியாத இந்திரஜித்தை வென்று தேவர்களின் துயரை நீக்கினாயே. விண்ணுலகில் எங்கு பார்த்தாலும் உன் புகழ் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். உன் புகழ் என்றென்றும் வாழ்க என வாழ்த்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக