புதன், 12 ஆகஸ்ட், 2020

இராவணனை வீழ்த்தும் இராமர்...!

நிருதிப் படையை அழித்த இராமர் ஒரு சிறந்த கணையை இராவணன் மீது ஏவினார். அந்தக் கணை இராவணன் கழுத்தை அறுத்துச் சென்றது. இதைப் பார்த்த தேவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். ஆனால் அந்த தலை விழுவதற்குள் வேறொரு தலை இராவணனுக்கு முளைத்தது. பிறகு இராமர் மற்றொரு சிறந்த கணையை ஏவினார். அந்த கணை இராவணனின் கரங்களை அறுத்துச் சென்றது. அதேபோல், இராவணனின் கரங்கள் நிலத்தில் விழுவதற்குள் வேறு கைகள் முளைத்தது.
 இராவணன், மாதலியை நோக்கி ஒரு கணையை ஏவினான். அக்கணையால் மாதலி உடலில் இருந்து இரத்தம் கசிந்தது. இராமர், இராவணனின் பஞ்சமுகப் படையை ஆயிரமாயிரம் கணைகளை ஏவி அழித்தார். இராமரின் இப்போரைப் பார்த்து இராவணன் நிலைதடுமாறினான். இதனால் அவன் வலிமையும் குறைந்தது. பிறகு இராமர், இராவணனை நோக்கி அம்புகளை தொடுத்தார்.
 அக்கணைகள் இராவணனின் கவசத்துக்குள் நுழைந்து, அவன் உடலில் துளைத்து வெளியே வந்தது. இராவணனின் உடலில் இரத்தம் ஆறு போல் வலிந்தது. சிறிது நேரத்தில் இராவணன் மயங்கி விழுந்தான். இதைப் பார்த்த இராவணனின் தேர்ப்பாகன் தேரை வேறு வழியில் திருப்பிச் சென்றான். இதைப் பார்த்த மாதலி இராமரிடம், பெருமானே! இராவணனை உடனே விரைந்து கொல்லுங்கள்.
அவனுக்கு மயக்கம் தெளிந்துவிட்டால் அவனை கொல்வது அரிதாகும் என்றான். இராமர் மாதலியிடம், தேர்ப்பாகனே! மயக்கத்தில் இருக்கும் பகைவரை கொல்வது பாவச் செயல் ஆகும். இது ஆண் மகனுக்குரிய ஒரு வீரம் அல்ல எனக் கூறினார். இதைக்கேட்டு விண்ணுலகத்தவர் மகிழ்ந்தனர். சிறிது நேரத்தில் இராவணன் மயக்கம் தெளிந்து எழுந்தான். தேர் போர்க்களத்தை விட்டு வந்திருப்பதைப் பார்த்து, தேர்ப்பாகனிடம், அடேய், மூடனே! என் வீரத்திற்கு இழுக்கு தேடி கொடுத்துவிட்டாய்.
 தேவர்கள் என்னைப் பார்த்து சிரிப்பார்களே. நீ எனக்கு அவமானத்தை தேடி தந்துவிட்டாய். இனி உன்னை கொல்வது தான் சரி என்று தேர்ப்பாகனை கொல்லச் சென்றான். அப்பொழுது தேர்ப்பாகன் இராவணனை வணங்கி, அரசே! தாங்கள் வலிமை குறைந்து மயங்கி விழுந்ததால், தங்களை காக்கும் பொருட்டு நான் தேரை திருப்பி செலுத்தி வந்தேன். தங்கள் உயிரை காக்கவே நான் இவ்வாறு செய்தேன். இல்லையேல் தாங்கள் மாண்டிருப்பீர்கள் என்றான்.
இதைக் கேட்ட பின் இராவணனின் கோபம் தணிந்தது. பிறகு இராவணன் அங்கிருந்து போர்களத்தை அடைந்தான். இராமருக்கும், இராவணனுக்கும் இடையே கடும்போர் நடந்தது. இராவணன் இராமரை நோக்கி, சீறிக் கொண்டு இலட்சம் கணைகளை ஏவினான்.
இராமர் அக்கணைகளை எல்லாம் தகர்த்து எறிந்தார். பிறகு இராவணன் அங்கிருந்து மேகத்தின் நடுவே நின்று போர் புரிந்தான். இராமரின் தேரும் மேகத்தின் நடுவே சென்று இராவணனின் முன் நின்றது. இராமர் இராவணனை நோக்கி பல கணைகளை ஏவினார்.
அக்கணைகள் இராவணனின் உடலில் பல இடங்களில் துளைத்து வெளியே வந்தது. பிறகு இராவணன் அங்கிருந்து கீழே வந்தான். இராமரும் கீழ் இறங்கினார். இராவணன் தன்னிடம் இருந்த வாள், வேல், சூலாயுதம் முதலிய அஸ்திரங்களை இராமர் மீது ஏவினான். இராமர், இராவணனிடமிருந்த அஸ்திரங்கள் அனைத்தையும் துகளாக்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்