Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

நந்தினியின் மறைவு !(ஐந்தாம் பாகம் : தியாக சிகரம்)

ஓடி வந்த குதிரைகளைப் பார்த்து வியந்தவர்களில் முதலில் சுய உணர்வு பெற்றவன் ரவிதாஸன்தான்.

'தேவி! இந்தப் போலி வைஷ்ணவன் தன் வேலைத் தனத்தைக் காண்பித்துவிட்டான். 'இவன் ஒற்றன், இவனை நம்ப வேண்டாம்!" என்று எத்தனையோ தடவை தங்களுக்கு நான் எச்சரித்திருக்கிறேன். நம்மைப் பிடிப்பதற்கு இவன் தன் ஆட்களைக் கொண்டு வந்திருக்கிறான். ஆனால் இவனால் நம்மைப் பிடிக்க முடியாது. இவனுடைய தெய்வமாகிய நாராயணனே வந்தாலும் முடியாது. வாருங்கள் போகலாம். குதிரைகள் வருவதற்குள் மலை மேல் ஏறிவிடலாம்!" என்றான் மந்திரவாதி.

ஆழ்வார்க்கடியான், 'நந்தினி! இந்தப் பாதகர்களுடன் நீ போகாதே! இவர்களுடன் நீ சேர்ந்ததினால் நேர்ந்த விபத்துக்கள் எல்லாம் போதும்!" என்றான்.

நந்தினி ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, 'திருமலை! நான் வெகு நாளாக ஒன்று கேட்டுக் கொண்டிருந்தேன்; அது நினைவு இருக்கிறதா? என் அன்னையிடம் அழைத்துப் போகும்படி உன்னை வேண்டிக் கொண்டிருந்தேன். இப்போதாவது என்னை நீ என் தாயிடம் அழைத்துப் போவதாக வாக்களித்தால் உன்னுடன் வருகிறேன், இல்லாவிடில் இவர்களுடன் போகிறேன்" என்றாள்.

'நந்தினி! இனி என்னால் அது இயலாத காரியம்...!" என்று திருமலை சொல்வதற்குள் ரவிதாஸன் குறுக்கிட்டு, 'இவன் என்ன அழைத்துப் போவது? நான் அழைத்துப் போகிறேன், வாருங்கள்!" என்றான்.

'ஆமாம், ஆமாம்; இவன் உன்னை உன் அன்னையிடம் யமலோகத்துக்கு அழைத்துப் போவான்! உன் அன்னையைக் கொன்றது போல், உன்னையும் கொன்று யமலோகத்துக்கு அனுப்பி வைப்பான்! நந்தினி! இந்தப் பாதகர்களுடைய சகவாசம் இனியும் உனக்கு வேண்டாம். இவர்களில் ஒருவன் உன் தாயைக் கொன்றவன்! மந்திரவாதியின் முகத்தைப் பார்! கொலைக்காரன் என்று எழுதியிருக்கிறது!" என்று சொன்னான் ஆழ்வார்க்கடியான்.

ரவிதாஸன் முகத்தில் கொந்தளித்த கோபத்துடன், 'பொய்! பொய்!" என்று கத்தினான்.

சற்றுமுன் சாந்தம் குடிகொண்டிருந்த நந்தினியின் கண்களின் வெறியின் அறிகுறி காணப்பட்டது.

'திருமலை! இது உண்மையா? என் அன்னை உண்மையிலேயே இறந்துவிட்டாளா? அவளை இனி நான் பார்க்க முடியாதா?" என்றாள்.

'சந்தேகமிருந்தால், இதோ இந்தப் பெண்ணைக் கேட்டுத் தெரிந்துகொள். இவர்களில் ஒருவனான சோமன் சாம்பவன் தான் வேல் எறிந்து உன் அன்னையைக் கொன்றவன்; இவள் நேரில் பார்த்தாள். அத்தையைக் கொன்றவனைப் பின் தொடர்ந்து வந்தாள்! பூங்குழலி! சொல்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

'ஆமாம்! நானே என் கண்ணால் பார்த்தேனே! என் அத்தையைக் கொன்றவனைப் பழி வாங்கவே இங்கு வந்தேன்!" என்றாள் பூங்குழலி.

நந்தினி பைத்தியம் பிடித்தவள்போல் வெறி கொண்ட சிரிப்புச் சிரித்தாள். 'பழி வாங்க வந்தாயா? பழி! பழி! நான் ஒருத்தி பழி வாங்கிய இலட்சணம் போதாதா?" என்று சொல்லி விட்டு ரவிதாஸனைப் பார்த்து, 'துரோகி! சண்டாளா! இப்படியா செய்தாய்?" என்றாள்.

'ராணி! நீ நினைப்பது தவறு! நான் ஒரு துரோகமும் செய்யவில்லை. சோமன் சாம்பவன் சக்கரவர்த்தியின் மீது வேலை எறிந்தான். அந்த ஊமைப் பைத்தியக்காரி குறுக்கே விழுந்து செத்தாள்! அவள் தலைவிதி! இப்போது நீ என்ன சொல்கிறாய்? எங்களுடன் வரப் போகிறாயா, இல்லையா? அதோ குதிரைகள் நெருங்கி வந்துவிட்டன!" என்றான்.

அவனுடைய வார்த்தைகளை நந்தினி காதில் வாங்கி கொண்டதாகத் தோன்றவில்லை. திடீரென்று கீழே உட்கார்ந்து கொண்டாள். இரண்டு கண்களையும், இரண்டு கரங்களால் பொத்திக் கொண்டாள். அவள் உடம்பெல்லாம் குலுங்கும்படி விம்மி அழுதாள். அழுகையுடன் வெறிச் சிரிப்பும் கலந்து வந்தது.

ரவிதாஸன் தன் ஆட்களைப் பார்த்து, 'ஓடுங்கள்! ஓடிப் போய் மலையேறிக் கொள்ளுங்கள்! இனி, ராணியை நம்புவதில் பயனில்லை" என்றான். எல்லோரும் ஓடினார்கள்.

ரவிதாஸன், 'வைஷ்ணவனே! இந்தா, உன் விஷமத்துக்குக் கூலி!" என்று சொல்லிக் கையிலிருந்த தடியினால் வைஷ்ணவனின் தலையில் ஒரு அடி போட்டு விட்டு ஓட்டம் எடுத்தான்.


ஆழ்வார்க்கடியான், 'நமோ, நாராயணா!" என்று சொல்லித் தலையை ஒரு முறை தடவிக் கொண்டான்.

ஓடியவர்கள் எல்லாரும் மலைக் குகைக்குள் நுழைந்தார்கள். சற்று நேரத்துக்கெல்லாம் குகைக்கு மேலே குன்றின் உச்சியில் கானாரி ஆறு அருவியாக மாறி விழும் இடத்தின் அருகே நின்றார்கள்.

அதே சமயத்தில் குதிரைகள் மலை அடிவாரத்துக்கு வந்து சேர்ந்தன. சரியான வழியில்லாமல் பெரிய பெரிய பாறைக் கற்கள் எங்கும் பரவிக் கிடந்தபடியால் குதிரைகள் வந்து சேர்வதற்கு இத்தனை நேரம் பிடித்தது.

குதிரைகள் மீது வந்தவர்களில் முன்னால் வந்தவர்கள் சின்னப் பழுவேட்டரையரும், கந்தமாறனுந்தான் என்பதை ஆழ்வார்க்கடியான் பார்த்துக் கொண்டான். அவர்களுக்குப் பின்னால் சேந்தன் அமுதன் ஒரு குதிரையின் மீது கயிற்றினால் சேர்த்துக் கட்டப்பட்டு வருவதையும் பார்த்தான்.

'வாருங்கள்! வாருங்கள்! நல்ல சமயத்தில் வந்து சேர்ந்தீர்கள்" என்றான். சின்னப் பழுவேட்டரையரும் கந்தமாறனும் குதிரைகளின் மீதிருந்து கீழே குதித்தார்கள். கீழே உட்கார்ந்து விம்மிக் கொண்டிருந்த நந்தினியின் பேரில் முதலில் அவர்கள் கவனம் சென்றது.

கந்தமாறன் நந்தினியின் அருகில் சென்றான். ஏதோ சொல்லப் பிரயத்தனப்பட்டான் ஆனால் அவன் வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை.

சின்னப் பழுவேட்டரையர் ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, 'வைஷ்ணவனே! நீ எப்படி இங்கே வந்தாய்? எதற்காக வந்தாய்?" என்று கேட்டார்.

'தளபதி! தாங்கள் யாரைத் தேடிக் கொண்டு வந்தீர்களோ, அவரைத் தேடிக் கொண்டு தான் நானும் வந்தேன். பெரிய பழுவேட்டரையர் அதோ அந்தக் குகைக்குள் இருக்கிறார்!" என்றான்.

'நிஜமாகவா? உயிரோடு இருக்கிறாரா?" என்று சின்னப் பழுவேட்டரையர் ஆவலோடு கேட்டார்.

'ஆமாம், இன்னும் உயிரோடு இருக்கிறார். தங்கள் தமையனாரிடம் அணுகுவதற்கு யமனும் பயப்படுவான் அல்லவா? ஆகையால் அதோ அந்தக் கொலைக்காரர்கள் செய்த முயற்சி தங்கள் தமையனார் விஷயத்தில் பலிக்கவில்லை!" என்று சொல்லிவிட்டுத் திருமலை குன்றின் உச்சியில் நின்ற ரவிதாஸன் முதலியவர்களைச் சுட்டிக் காட்டினான்.

'அவர்கள் யார்? ஏன் அவர்களைக் கொலைக்காரர்கள் என்று சொல்கிறாய்?"

'அவர்கள் தான் மந்திரவாதி ரவிதாஸனும் அவனுடைய கூட்டத்தாரும், வீரபாண்டியனுடைய ஆபத்துதவிப் படையைச் சேர்ந்தவர்கள். சக்கரவர்த்தியைக் கொல்ல முயன்றவர்கள் அவர்கள்தான். இளவரசர் ஆதித்த கரிகாலரைக் கொன்ற பாவிகளும் அவர்களேதான்!" என்றான் திருமலை.

கந்தமாறன் குறுக்கிட்டு, 'பொய், பொய்! இளவரசரைக் கொன்றவன் வந்தியத்தேவன்! உன் சிநேகிதன் செய்த குற்றத்தை மறைக்கப் பார்க்கிறாயா?" என்றான்.

'முட்டாளே! சும்மா இரு!!" என்று சின்னப் பழுவேட்டரையர் அவனை அதட்டினார்.

பின்னர் வைஷ்ணவனைப் பார்த்து, 'தனாதிகாரியையும் அவர்கள் கொல்லப் பார்த்தார்களா? எப்படித் தப்பினார்?" என்று கேட்டார்.

'இதோ உட்கார்ந்து விம்மிக் கொண்டிருக்கும் பழுவூர் இளைய ராணியின் உதவியினால் தான் தப்பினார்!"

'ஏன் இளைய ராணி அழுது கொண்டிருக்கிறாள்?"

'அவருடைய அன்னை இறந்து விட்டாள் என்று கேள்விப்பட்டார். அதனால் அழுகிறார்! இதெல்லாம் பிறகு விசாரித்துக் கொள்ளக்கூடாதா?"

'ஆம், ஆம்! பெரிய பழுவேட்டரையரை முதலில் பார்க்க வேண்டும். நீ போய் நான் வந்திருப்பதைச் சொல்லு!"

சின்னப் பழுவேட்டரையருக்குத் தம் தமையனாரிடம் உள்ள பயபக்தி அச்சமயம் கூடச் சிறிதும் குன்றவில்லை. ஆகையால் திடீரென்று தமையனாரைப் போய்ப் பார்க்க அவர் தயங்கினார்.

'ஐயா! தங்கள் தமையனார் இனி எங்கும் போய்விடமாட்டார். நான் போய்த் தாங்கள் வந்திருப்பதைச் சொல்லுகிறேன். அதோ அந்தக் கொலைக்காரர்களைப் பிடிக்கத் தாங்கள் எதுவும் செய்யப் போவதில்லையா?"

சின்னப் பழுவேட்டரையர் தம் நெற்றியைக் கையினால் அழுத்திக் கொண்டு 'ஆம், ஆம்! முன்னொரு சமயம் இப்படித் தான் என் புத்தி தவறிவிட்டது! சக்கரவர்த்தியைக் கொல்ல முயன்றவனைத் தப்பி ஓடும்படி விட்டேன்!" என்றார்.

'அவனும் தப்பிவிடவில்லை. அதோ அந்தக் குன்றின் மேலே தான் இருக்கிறான். உங்கள் ஆட்களுக்குச் சீக்கிரம் கட்டளையிடுங்கள்!"

உடனே தளபதி காலாந்தகக்கண்டர் தம்முடன் வந்த வீரர்களைப் பார்த்துக் கட்டளை பிறப்பித்தார். அவர்கள் குதிரைகள் மீதிருந்து இறங்கிக் கானாரி நதி குன்றின் மீதிருந்து அருவியாக விழும் இடத்துக்கு அருகாமையில் போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் அங்கே சேர்ந்ததும் மேலிருந்து பெரிய பெரிய உருண்டைக் கற்கள் கீழே விழ ஆரம்பித்தன. வீரர்கள் அந்தக் கற்கள் தங்கள் தலையில் விழாமல் தப்புவதற்காக அங்குமிங்கும் அவசரமாக நகர்ந்தார்கள். இரண்டொருவர் அக்கற்களினால் தாக்குண்டு கீழே விழுந்தார்கள்.

சின்னப் பழுவேட்டரையர், 'அவர்கள் எப்படி மேலே ஏறினார்கள் தெரியுமா?" என்று கேட்டார்.

'குகைக்குள் புகுந்து ஏறினார்கள். குகையில் இரகசிய வழி இருப்பதாகத் தோன்றுகிறது. வாருங்கள், போய்ப் பார்க்கலாம்!" என்று ஆழ்வார்க்கடியான் முதலில் சென்றான். காலாந்தககண்டரும் கந்தமாறனும் பின் தொடர்ந்தார்கள்.

குகைக்குள்ளேயிருந்து ஒரு நெடிய கம்பீரமான உருவம் தட்டுத்தடுமாறித் தள்ளாடிக் கொண்டு வெளியே வந்தது. குகை வாசலில் நின்று நெருங்கி வருகிறவர்களை உற்றுப் பார்த்தது. தமையனாரை அடையாளம் கண்டு கொள்ளத் தம்பிக்குச் சிறிது நேரம் பிடித்தது.

உடம்பெல்லாம் காயங்களுடன் முகம் வெளுத்துப் பிரேதக் களைபெற்று நின்ற பெரிய பழுவேட்டரையரை அடையாளம் தெரிந்ததும், சின்னப் பழுவேட்டரையர், 'அண்ணா!" என்று அலறிக் கொண்டு போய்ப் பெரிய பழுவேட்டரையரைக் கட்டிக் கொண்டார்.

அண்ணனின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. அவருடைய வாய், 'தம்பி! நீ பலமுறை எச்சரிக்கை செய்தாய்! அதைப் பொருட்படுத்தாமல் மோசம் போனேன்!" என்று தழுதழுத்த மெல்லிய குரலில் முணுமுணுத்தது. அச்சமயம் ஆழ்வார்க்கடியானும், கந்தமாறனும் குகைக்குள் பிரவேசிக்க யத்தனித்தார்கள்.

பெரிய பழுவேட்டரையர் அவர்களைத் தடுத்து நிறுத்தி 'எங்கே போகிறீர்கள்?" என்று கேட்டார்.

'கொலைக்காரர்கள் இந்தக் குகைக்குள்ளே புகுந்தார்கள்..."

'எந்தக் கொலைக்காரர்கள்?"

'மந்திரவாதி ரவிதாஸனும் அவனுடைய கூட்டாளிகளும்."

'அவர்கள் கொலைகாரர்கள் அல்ல" என்றார் பெரிய பழுவேட்டரையர்.

'பார்த்தீர்களா? வந்தியத்தேவன்தான் கொலைகாரன் என்று நான் சொல்லவில்லையா?" என்றான் கந்தமாறன்.

பெரிய பழுவேட்டரையர் அவனை உற்றுப் பார்த்துவிட்டு 'இந்த முட்டாள் வாலிபன் எப்படி இங்கே வந்து சேர்ந்தான்!" என்றார்.

'கந்தமாறன் தான் கடம்பூரிலிருந்து செய்தி கொண்டு வந்தான்."

'என்ன செய்தி?"

'இளவரசர் கரிகாலர் இறந்து விட்ட செய்தியைக் கொண்டு வந்தான். நம்முடைய பலத்தை உடனே திரட்டிச் சேர்த்து மதுராந்தகரைச் சிம்மாசனம் ஏற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சம்புவரையர் இவன் மூலமாகச் செய்தி அனுப்பி வைத்திருக்கிறார்!"

'ஆகா! அப்படியா!" என்று பெரிய பழுவேட்டரையர் சிறிதும் உற்சாகமின்றிக் கூறினார். பிறகு, 'தஞ்சாவூரில் நிலைமை எப்படி இருக்கிறது?" என்று கேட்டார்.

'அண்ணா! விவரமாகக் கூற வேண்டும். தாங்கள் மிக்க பலவீனமாக இருக்கிறீர்கள். தயவுசெய்து உட்கார்ந்து கொண்டு பேசலாமா?" என்றார் சின்னப் பழுவேட்டரையர்.

தனாதிகாரி குகையின் வாசலிலேயே உட்கார்ந்து கொண்டார்.

'ஐயா! சற்று இடம் கொடுத்தால், குகைக்குள்ளே போய்க் குன்றின் மேல் ஏற வழி இருக்கிறதா என்று பார்க்கலாம்" என்றான் வைஷ்ணவன்.

'எதற்காக?" என்றார் பெரிய பழுவேட்டரையர்.

'ரவிதாஸன் கூட்டத்தார் இந்தக் குகையில் புகுந்துதான் குன்றின் மேலே ஏறினார்கள்" என்றான் திருமலை.

பெரிய பழுவேட்டரையர் தலையை அசைத்துவிட்டு 'குகைக்குள் போவதில் உபயோகமில்லை, அப்பனே! அவர்கள் மேலேயிருந்து பாறையைப் புரட்டித் தள்ளிக் குகை வழியையும் அடைத்து விட்டார்கள். பாறை என் மேல் விழுவதற்கிருந்தது. என் உயிர் தப்பியதே தெய்வச் செயல்தான்! போங்கள்! நீங்கள் இருவரும் போங்கள்! மலை மேல் ஏறுவதற்கு வேறு வழி இருக்கிறதா, பாருங்கள்!" என்றார்.

ஆழ்வார்க்கடியானும், கந்தமாறனும் அப்பால் சென்ற போது பெரிய பழுவேட்டரையருடைய பார்வை சேந்தன் அமுதன் - பூங்குழலி இவர்கள் பேரில் விழுந்தது.

'அவர்கள் யார்? எங்கு வந்தார்கள்?" என்று கேட்டார்.

'அந்தப் பெண் கோடிக்கரைத் தியாக விடங்கரின் மகள் பூங்குழலி. அவள் தன் அத்தையைக் கொன்றவனைத் தேடிக் கொண்டு வந்தாள். அவளைத் தேடிக் கொண்டு சேந்தன் அமுதன் வந்தான். சேந்தன் அமுதன் வழி காட்டித்தான் நாங்கள் இங்கு வந்து தங்களைக் கண்டுபிடித்தோம்!" என்றார் சின்னப் பழுவேட்டரையர்.

'தஞ்சாவூரில் நடந்ததையெல்லாம் விவரமாகச் சொல்!" என்றார் பெரிய பழுவேட்டரையர். சின்னப் பழுவேட்டரையர் அவ்வாறே சொல்லலுற்றார். மந்திரவாதிக் கூட்டத்தில் ஒருவன் பொக்கிஷ நிலவறையில் ஒளிந்திருந்து, சக்கரவர்த்தியைக் கொல்லுவதற்காகச் சமயம் பார்த்திருந்து வேலை எறிந்ததையும், சக்கரவர்த்தியைக் காப்பாற்றுவதற்காக மந்தாகினி தேவி இடையில் புகுந்து உயிரை விட்டதையும் சொன்னார். பிறகு அவர் தொடர்ந்து கூறியதாவது:

'அண்ணா! இதற்கிடையில் கொடும்பாளூர் வேளான் பெரிய சைன்யத்துடன் திடீர் என்று தஞ்சாவூர்க் கோட்டையை முற்றுகையிடத் தொடங்கினார். தாங்கள் இல்லாதபடியால் வேளானுடன் போர் தொடங்குவதா, இல்லையா என்று என்னால் நிச்சயிக்க முடியவில்லை. சக்கரவர்த்தியை யோசனை கேட்கவும் முடியவில்லை. முதன்மந்திரி அநிருத்தர் கோட்டைக்குள்ளே தான் இருக்கிறார். அவர் தாங்கள் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றும், அதுவரை கோட்டையைப் பாதுகாத்தால் போதும் என்றும் கூறினார். நல்லவேளையாக இச்சமயத்தில் இளவரசர் அருள்மொழிவர்மரும் கொடும்பாளூர் வேளாருடைய மகள் வானதியும் கோட்டைக்குள் வந்து சேர்ந்தார்கள். இளவரசர் யானைப் பாகன் வேடத்தில் வந்தார். வானதி பழையாறை இளைய பிராட்டியிடமிருந்து அவசரச் செய்தி கொண்டு வந்திருப்பதாகக் கூறினாள். வேளானுடைய மகள் கோட்டைக்குள்ளே இருப்பது நமக்கு அனுகூலந்தானே என்று நினைத்து அவன் ஏறி வந்த யானையை உள்ளே விட்டேன். சக்கரவர்த்தியின் அரண்மனை வாயிலிலே யானைப்பாகன் தான் இளவரசர் அருள்மொழிவர்மர் என்று தெரிந்தது. நான் கொஞ்சம் மிரண்டுதான் போய் விட்டேன். அண்ணா! சின்ன இளவரசரிடம் ஏதோ அதிசய சக்தி இருக்கத்தான் செய்கிறது. அவர் திருமுகத்தைப் பார்த்ததும் எனக்கே கை கால் வெலவெலத்து விட்டது. நெஞ்சம் இளகிவிட்டது. என்னை அறியாமல் என் கைகள் கூப்பிக் கொண்டன. அவரை வணங்கி வரவேற்க வேண்டியதாகி விட்டது. சோழ நாட்டு மக்கள் இளவரசர் அருள்மொழிவர்மர் என்றால் தலை கால் தெரியாமல் கூத்தாடுவதில் வியப்பில்லைதானே?..."

'போதும் போதும்! அதுதான் தெரிந்திருக்கிறதே! அருள்மொழிவர்மன் கடலில் முழுகி இறந்தான் என்பதெல்லாம் கட்டுக்கதை என்று நான் எண்ணியதும் சரியாய்ப் போய்விட்டது. அப்புறம் நடந்ததைச் சொல்லு! இளவரசர் எதற்காக யானைப்பாகன் போல வேஷம் பூண்டு கோட்டைக்குள் வந்தார்?" என்று பழுவேட்டரையர் கேட்டார்.


'இளவரசர் என்று தெரிந்தால் கொடும்பாளூர் வேளான் அவரைத் தடுத்து நிறுத்திக் கொள்வான். கோட்டைக்குள் போக விட மாட்டான். வேளானுடைய படை வீரர்களும் பெரிய ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என்று எண்ணி, அவ்வாறு மாறுவேடம் பூண்டு வந்தாராம். அந்த வரையில் இளவரசரைப் பாராட்டத்தான் வேண்டும். இளவரசர் சக்கரவர்த்தியைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த சமயத்திலேதான் மேலேயிருந்து கொலைகாரன் வேல் எறிந்தான். தெய்வாதீனமாக அது அந்த ஊமைப் பைத்தியத்தின் பேரில் விழுந்து அவள் இறந்தாள். சக்கரவர்த்தியின் பேரில் விழுந்து அவர் இறந்திருந்தால், நம்முடைய குலத்துக்கு என்றும் அழியாத களங்கம் ஏற்பட்டிருக்கும்..."

பெரிய பழுவேட்டரையர் தமது வாய்க்குள்ளே 'இப்போது களங்கம் ஏற்படவில்லையா, என்ன? தீராத களங்கள் ஏற்பட்டுத் தான் விட்டது!" என்று முணுமுணுத்தார்.

'அண்ணா! என்ன சொன்னீர்கள்?" என்று காலாந்தககண்டர் கேட்டார்.

'ஒன்றுமில்லை. மேலே நடந்ததைச் சொல்லு!" என்றார் தனாதிகாரி.

'அப்புறம் ஒரு பெரிய அற்புதம் நடந்தது. வெகு காலமாக நடமாட முடியாமலிருந்த சக்கரவர்த்திக்கு திடீரென்று கால்களில் சக்தி உண்டாகிவிட்டது. ஓடிப்போய் அந்த ஊமையை எடுத்து மடியில் போட்டுக் கொண்டு புலம்ப ஆரம்பித்தார். சிறிது நேரம் நாங்கள் எல்லாரும் அந்தக் காட்சியைக் கண்டு பிரமித்து நின்று கொண்டிருந்தோம். பூங்குழலி என்னும் இந்த ஓடக்காரப் பெண்தான் 'கொலைகாரனைப் பிடிக்கப் போகிறேன்" என்று கூவிக் கொண்டு ஓடினாள். அவள் நன்றாயிருக்க வேண்டும். அவள் மூலமாகத்தான் இன்று தங்களை இந்த கோலத்திலாவது பார்க்கும் பாக்கியம் கிடைத்தது..."

பெரிய பழுவேட்டரையர் கண்களில் நீர் ததும்ப, 'தம்பி! புராண இதிகாசங்களில் தமையனிடம் பக்தியுள்ள தம்பிகளைப் பற்றி கேட்டிருக்கிறேன். ஆனால் உன்னைப் போல் பக்தியுள்ள சகோதரன் அவர்களில் யாரும் இருக்க முடியாது. போகட்டும். அப்புறம் நடந்ததைச் சொல்!" என்றார்.

'பூங்குழலியைப் பின்பற்றி நானும் பொக்கிஷ நிலவறையிலுள்ள சுரங்கப்பாதையில் சென்றேன். அங்கே இருட்டில் ஒருவனைக் கைப்பற்றினேன். அவன்தான் கொலைகாரனாயிருக்க வேண்டும் என்று நினைத்தேன். குரலைக் கேட்டதும், மதுராந்தகத் தேவன் என்று தெரிந்தது."

'அவன் எதற்காக நிலவறைப் பாதையில் வந்தானாம்?"

'அது எனக்கும் தெரியவில்லை, கேட்டதற்குச் சரியான மறுமொழியும் சொல்லவில்லை. கொலைகாரன் அவன்தான் என்ற சந்தேகம் யாருக்காவது உண்டாகிவிடப் போகிறதே என்று எனக்குப் பயமாயிருந்தது."


'ஒருவேளை உண்மை அதுதானோ, என்னமோ?"

'இல்லை, அண்ணா, இல்லை! அந்தச் சாதுப்பிள்ளை அவ்வளவு தூரத்துக்குப் போகக் கூடியவனல்ல. மேலும், வேலை எறிந்து விட்டு ஓடியவனை நானே கண்ணால் பார்த்திருந்தேன். மதுராந்தகன் பொக்கிஷ நிலவறையிலிருந்து வருவதற்குள் இலேசில் சம்மதிக்கவில்லை. அவனை மெதுவாகச் சரிப்படுத்தி அரண்மனையில் கொண்டு போய் சேர்த்து விட்டுக் காவலும் போட்டுவிட்டு, மறுபடியும் பொக்கிஷ நிலவறைக்குப் போக எண்ணினேன். அதற்குள் வேறு பெரிய சம்பவங்கள் நடந்து விட்டன. 'சக்கரவர்த்தி இறந்து விட்டார்" என்றும், யாரோ அவரைக் கொன்று விட்டார்கள் என்றும் வெளியிலே வதந்தி பரவிவிட்டது. உடனே கொடும்பாளூர் வேளார் அவருடைய படை வீரர்களைக் கோட்டையைத் தாக்கும்படிக் கட்டளையிட்டு விட்டாராம். வேளிர் படையுடன் கைக்கோளர் படையும் வந்து சேர்ந்து கொண்டிருந்தது. நமது வீரர்கள் அச்சமயம் ஆயத்தமாக இல்லை.

அவர்களுக்குக் கட்டளையிட நானும் கோட்டை வாசலில் இல்லை. ஆகையால் வேளிர் படை கைக்கோளர் படை வீரர்கள் கோட்டைக் கதவுகளை உடைத்துக் கொண்டும், சுவர்களில் ஏறிக் குதித்தும் உள்ளே வரத் தொடங்கி விட்டனர். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு நான் கோட்டை வாசல் போய் சேர்வதற்குள் பதினாயிரம் வீரர்கள் கோட்டைக்குள் நுழைந்துவிட்டார்கள். நம்முடைய வீரர்கள் சுமார் இரண்டாயிரம் பேர்தான்.

அவர்கள் வெளியிலிருந்து வந்தவர்களோடு தீரத்தோடு போரிட்டார்கள், நான் போய்க் கட்டளையிட்டுச் சண்டையை நிறுத்தினேன். நமது வீரர்களையெல்லாம் ஒரே இடத்தில் சேர்த்துக்கொண்டேன். இனி கோட்டைக்குள் இருப்பதில் பயனில்லை என்று முடிவு செய்து கொண்டு நமது வீரர்களுடன் வெளிக் கிளம்பினேன். வேளிர், கைக்கோளர் படைகள் எங்களைத் தடுத்து நிறுத்தப் பார்த்தன. தடுத்தவர்களையெல்லாம் வெட்டி வீழ்த்தி அதாஹதம் செய்து கொண்டு வந்து விட்டோ ம்.

'பழுவூர்க் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்காவது, மதுராந்தகத் தேவருக்காவது ஒரு சிறிய கெடுதல் நேர்ந்தாலும் கொடும்பாளூர் வம்சத்தைப் பூண்டோ டு அழித்து விடுவேன்" என்று பூதி விக்கிரம கேசரிக்கு செய்தி அனுப்பினேன்.

பிறகு தாங்கள் கடம்பூரில் இருப்பீர்கள் என்று எண்ணிக் கொண்டு தங்களைச் சேர்வதற்காக விரைந்து வந்தேன். எதிரில் குடமுருட்டி ஆற்றின் கரையில் கந்தமாறன் குதிரை மேல் ஏறிப் பறந்து விழுந்து கொண்டு வந்தான். பழுவூர்ப் பனை கொடியைக் கண்டதும் நின்றான், அவன் கொண்டு வந்த செய்தி என்னை மேலும் திகைக்கும்படி செய்தது. தாங்கள் கடம்பூரிலிருந்து தஞ்சைக்குக் கிளம்பி சில நாட்கள் ஆயினவென்றும், தங்களுக்குப் பெரிய சம்புவரையர் செய்தி அனுப்பியிருப்பதாகவும் கூறினான். தாங்கள் தஞ்சைக்கு வந்து சேரவே இல்லையென்று தெரிந்ததும் அவனும் திகைத்துப் போய்விட்டான். பிறகு சம்புவரையர் என்னதான் செய்தி சொல்லி அனுப்பினார் என்று கேட்டேன். இளவரசர் கரிகாலர் இறந்து விட்டார் என்றும், அவரை வந்தியத்தேவன் கொன்றுவிட்டான் என்றும், ஆகையால் மதுராந்தகத்தேவரைச் சிம்மாசனத்தில் அமர்த்த இதுதான் தக்க சமயம் என்றும், அதற்கு வேண்டிய முயற்சிகளை உடனே செய்ய வேண்டும் என்று, நம்மைச் சேர்ந்தவர்களுக்கெல்லாம் ஓலை அனுப்பிப் படை திரட்ட வேண்டும் என்றும் பெரிய சம்புவரையர் சொல்லி அனுப்பினாராம்.

இது எனக்குச் சரியாகப்பட்டது. தாங்களும் நமது பலத்தைத் திரட்டும் வேலையில் தான் ஈடுபட்டிருப்பீர்களென்றும் சீக்கிரத்தில் வந்து விடுவீர்கள் என்றும் நம்பினேன். நமது பழுவூர்ப் படைகளை மண்ணியாற்றுக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவில் திருப்புறம்பயம் மேட்டில் கொண்டு போய் நிறுத்தினேன். உடனே ஓலைகள் எழுதச் சொல்லி, மழபாடித் தென்னவன், மழவராயர், குன்றத்தூர்க் கிழார், மும்முடிப் பல்லவராயர், தானதொங்கிக் கலிங்கராயர், வணங்காமுடி முனையதரையர், தேவசேநாதிபதிப் பூவரையர், அஞ்சாத சிங்க முத்தரையர், இரட்டைக் குடை இராஜானியர் ஆகியவர்களுக்கெல்லாம் குதிரைத் தூதுவர்களை விரைந்து போகும்படி அனுப்பினேன். அவர்கள் எல்லாரையும் படைகளைத் திரட்டிக் கொண்டு திரும்புறம்பயத்துக்குக் கூடிய சீக்கிரம் வந்து சேரும்படி எழுதியிருக்கிறேன். அண்ணா! தங்களுக்கு சிறிதும் கவலை வேண்டாம்! கொடும்பாளூர் வேளானையும், திருக்கோவலூர் மலையமானையும் மறுபடியும் தலை எடுக்க முடியாதபடி அழித்துப் போட்டு விடுவோம் மதுராந்தகத்தேவரையும் சிங்காதனத்தில் ஏற்றி வைத்துவிடுவோம்!" என்று சின்னப் பழுவேட்டரையர் உற்சாகம் ததும்ப வீர கர்ஜனை புரிந்தார்.

ஆனால் அவருடைய வார்த்தைகள் பெரிய பழுவேட்டரையருக்குச் சிறிதும் உற்சாகம் அளித்ததாகத் தெரியவில்லை. அவருடைய கவனம் திடீரென்று வேறு பக்கம் திரும்பியது.

'தம்பி! அது யார்? முகத்தில் கையை வைத்துக் கொண்டு விம்மி அழுது கொண்டிருப்பது யார்?" என்று கேட்டார்.

'அண்ணா! தெரியவில்லையா? அவர்தான் இளைய ராணி! பாவம்! தங்களைக் காப்பாற்ற முயன்றதில் ரொம்பக் கஷ்டப்பட்டுப் போயிருக்கிறார் போலும்! அவரைப்பற்றி நான் குறை கூறியதையெல்லாம் மன்னித்து விடுங்கள், அண்ணா! மந்திரவாதி ரவிதாஸனும் அவனுடைய கூட்டாளிகளும் தங்களைச் சிறைப்பிடித்துக் கொண்டு வந்தார்கள் என்றும் இளைய ராணிதான் தங்களைத் தொடர்ந்து வந்து காப்பாற்றினார் என்றும் அறிகிறேன் அது உண்மைதானே?" என்றார் காலாந்தகக்கண்டர்.

பெரிய பழுவேட்டரையர், 'ஆம், ஆம்! இளைய ராணி தான் என் உயிரை காப்பாற்றினாள். நந்தினி பணிவிடை செய்திராவிட்டால் என்னை நீ உயிரோடு பார்த்திருக்க மாட்டாய். உலகத்துக்கு உண்மை தெரியாமலே போயிருக்கும்!" என்று கூறினார்.

'இளைய ராணியின் ஒப்பற்ற பெருங்குணம் எனக்கே தெரியாமல் போய்விட்டதே! உலகத்துக்கு எப்படித் தெரியும்?" என்றார் காலாந்தகக்கண்டர்.

பெரிய பழுவேட்டரையர் அதைக் கவனியாமல், 'நந்தினி இன்னும் இங்கிருந்து போகவில்லையா? குகைப் படிகள் வழியாக ஏறிச் சென்றவர்களோடு அவளும் போயிருப்பாள் என்றல்லவா நினைத்தேன்?" என்றார்.

'தங்களை விட்டுவிட்டு இளைய ராணி எப்படிப் போவார், அண்ணா!" என்றார் சின்னப் பழுவேட்டரையர்.

'அது போகட்டும்! நீங்கள் இந்த இடத்துக்கு நாங்கள் வந்திருப்பதை எப்படிக் கண்டுபிடித்து வந்தீர்கள்?" என்று பெரியவர் கேட்டார்.

'திருப்புறம்பயம் பள்ளிப்படையருகில் நாங்கள் தங்கியிருந்தோம். கந்தமாறன் கொள்ளிடக் கரையோரமாகக் காவல் புரிந்து கொண்டிருந்தான். அங்கே சேந்தன் அமுதன் படகில் ஏற முயன்று கொண்டிருப்பதைப் பார்த்து, அவனைப் பிடித்துக் கொண்டு வந்தான். சேந்தன் அமுதன் முன்னொரு தடவை வந்தியத்தேவன் தப்ப உதவி செய்ததற்காக அவனைச் சில காலம் நான் சிறையில் வைத்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கும். அவன் பேரில் கந்தமாறனுக்கு ஏற்கெனவே ரொம்பக் கோபம். இப்போதும் ஏதோ ஒற்றன் வேலை செய்கிறான் என்று சந்தேகித்துப் பிடித்துக் கொண்டு வந்தான். அவனிடம் விசாரித்தபோது தங்களைப் பற்றித் தெரிந்தது. அவனுடைய மாமன் மகள் பூங்குழலி யாரோ கொலைகாரனைத் தொடர்ந்து தனியே சென்றதைக் கேள்விப்பட்டு இவன் அவளைத் தேடிக் கொண்டு புறப்பட்டானாம். பூங்குழலி அவனைத் தன்னுடன் வரக்கூடாது என்று சொல்லித் திருப்பி அனுப்பி விட்டாளாம். ஆயினும் இவன் அவள் அறியாமல் பின்னோடு தொடர்ந்து போனானாம். அப்போது திருப்புறம்பயம் பள்ளிப்படைக்கருகில் சதிகாரர்கள் சிலர் சேர்ந்து பேசுவதை அவன் ஒளிந்திருந்து கேட்டானாம். அப்போதுதான் தங்களை ரவிதாஸன் கூட்டம் சிறைப் பிடித்துப் பச்சை மலைப் பிராந்தியத்துக்குக் கொண்டு போயிருப்பதாகத் தெரிந்ததாம். பூங்குழலியும், வைஷ்ணவன் ஆழ்வார்க்கடியானும் பச்சை மலைக்குப் போவதை அறிந்து கொண்டு இவனும் அவர்களுக்குத் தெரியாமல் பின் தொடர முயற்சித்தானாம். இதையெல்லாம் கேட்டதும் நானும் கந்தமாறனும் ஐம்பது வீரர்களை அழைத்துக் கொண்டு புறப்பட்டோ ம். சேந்தன் அமுதன் தானும் வருவதாகப் பிடிவாதம் பிடித்தான். அதுவும் நல்லதுதான் என்று அவனை ஒரு குதிரை மேல் கட்டிப்போட்டு அழைத்து வந்தோம். வந்தது நல்லதாய்ப் போயிற்று. தங்களைக் கண்டுபிடித்து விட்டோ ம். இனி என்ன கவலை அண்ணா! உடனே புறப்படுங்கள். தங்களுக்கு யாதொரு சிரமமும் ஏற்படாமல் ஆட்களைக் கொண்டு தூக்கிப் போக ஏற்பாடு செய்கிறேன். இதற்குள்ளே திருப்புறம்பயத்தில் பெரும் சைன்யம் சேர்ந்திருக்கும். தஞ்சாவூர்க் கோட்டையை ஒரு ஜாம நேரத்தில் திரும்பக் கைப்பற்றி விடலாம்!" என்று கூறினார் சின்னப் பழுவேட்டரையர்.

'ஆமாம், தஞ்சாவூருக்கு உடனே போக வேண்டியது தான்!" என்று சொல்லிக் கொண்டே பெரிய பழுவேட்டரையர் எழுந்து நின்றார். நந்தினி தேவி உட்கார்ந்திருந்த இடத்தை நோக்கி மெல்ல மெல்ல நடந்தார்.

அத்தனை நேரமும் ஒரு பாறைக் கல்லின் மீது உட்கார்ந்து விம்மி அழுது கொண்டிருந்த நந்தினி, பெரிய பழுவேட்டரையர் தொண்டையை கனைத்த கர்ஜனையைக் கேட்டுத் திடீரென்று எழுந்து நின்றாள். வெறி கொண்ட கண்களால் சுற்றுமுற்றும் பார்த்தாள். அவளுக்கு மிக்க அருகாமையில் நின்ற ஆழ்வார்க்கடியான் மெதுவான குரலில் 'நந்தினி! இப்போதாவது உன் சம்மதத்தைச் சொல், என்னுடன் வருகிறேன் என்று ஒரு வார்த்தை கூறு! இந்த நாட்டை விட்டு வடநாட்டுக்குப் போவோம். பிருந்தாவனம் வடமதுரை, அயோத்தி, காசி, ஹரித்வாரம், ரிஷிகேசம் முதலிய க்ஷேத்திரங்களுக்குப் பிரயாணம் செய்வோம். ஸ்ரீமந்நாராயணனுடைய திருநாமத்தைச் சொல்லிக் கொண்டு ஆழ்வார்களுடைய பாசுரங்களைப் பாடிக் கொண்டு நம்முடைய வாழ்க்கையை ஆனந்தமாகக் கழிப்போம். நான் என் அரசாங்க அலுவலை விட்டுவிட்டு உன்னுடன் வருவதற்கு ஆயத்தமாயிருக்கிறேன்" என்றான்.

நந்தினி கண்களில் நீர் ததும்ப அவனை நோக்கி, 'திருமலை! உனக்கு நான் இத்தனை துரோகம் செய்தும், நீ என்னிடம் வைத்த அபிமானம் மாறவில்லை, உனக்கு நீ வணங்கும் நாராயணன் அருள் புரிவார்!" என்றாள்.

அதே சமயத்தில் பூங்குழலி, சேந்தன் அமுதனிடம், 'அதோ! பழுவூர் இளைய ராணியைப் பார்! என் அத்தையைப் போலவே தோன்றுகிறாள் அல்லவா?" என்று கேட்டாள்.

'ஆம், தலையை விரித்துப் போட்டுக் கொண்டால், தத்ரூபமாக உன் அத்தை மாதிரியே இருக்கிறது!" என்றான் சேந்தன் அமுதன்.

'இனிமேல் என் அத்தை இவள்தான். அத்தையிடம் இத்தனை நாள் வைத்திருந்த அன்பை இனிப் பழுவூர் இளைய ராணியிடம் வைப்பேன்!" என்றாள்.

'என்னையும் சேர்த்துக்கொள் பூங்குழலி!" என்றான் அமுதன்.

பெரிய பழுவேட்டரையர் இதற்குள் நந்தினி நின்ற இடத்துக்குச் சமீபமாக வந்து விட்டார்.

அதைக் கண்ட நந்தினி அவருக்கு முன்னால் பூமியில் விழுந்து வணங்கினாள். அவருடைய பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொண்டாள். பூமியிலிருந்து எழுந்ததும், நந்தினி பெரிய பழுவேட்டரையரை ஒருமுறை பார்த்தாள், சட்டென்று திரும்பினாள். சற்றுத் தூரத்தில் சின்னப் பழுவேட்டரையர் முதலியோர் கொண்டு வந்து நிறுத்தியிருந்த குதிரைகள் மீது அவள் பார்வை விழுந்தது. அவை நின்ற இடத்தை நோக்கி மிக விரைவாக ஓடினாள். எல்லாவற்றுக்கும் முன்னால் நின்ற குதிரையின் மீது தாவி ஏறிக் கொண்டாள். குதிரையின் முகக் கயிற்றைக் கையில் பிடித்துக் கொண்டு ஒரு குலுக்குக் குலுக்கித் தட்டிவிட்டாள். குதிரை பாய்ந்து ஓடத் தொடங்கியது.

அதுவரைக்கும் நந்தினியின் நோக்கம் இன்னதென்று அறியாமல் செயலற்று நின்றவர்கள் இப்போது அவளைத் தொடர யத்தனித்தார்கள். சின்னப் பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான், சேந்தன் அமுதன், பூங்குழலி எல்லாருமே ஓர் அடி முன்னால் எடுத்து வைத்தார்கள்.

பெரிய பழுவேட்டரையர் 'நில்லுங்கள்!" என்று ஒரு கர்ஜனை செய்தார். எல்லாரும் மறுபடியும் செயலிழந்து நின்றார்கள். பெரிய பழுவேட்டரையரையே பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

பெரிய பழுவேட்டரையர் குதிரை மேல் சென்ற நந்தினியின் உருவத்தைப் பார்த்துக் கொண்டே நின்றார். அதிவேகமாகக் காற்றைப் போல் பறந்து சென்ற அந்தக் குதிரை வெகு விரைவில் மலை அடிவாரத்தின் திருப்பம் ஒன்றில் திரும்பியது. அவர்களுடைய பார்வையிலிருந்து குதிரை மறைந்தது.

ஆம். பழுவூர் இளைய ராணி நந்தினி தேவியும் மறைந்து விட்டாள். இனி அவளை இக்கதையிலே நாம் காண மாட்டோம்.

ஒருவேளை பல ஆண்டுகளுக்குப் பின்னால் வேறு இடத்தில், வேறு சூழ்நிலையில் காணும்படி நேரலாம் யார் சொல்ல முடியும்?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக