Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

மனித உரிமை மீறலாகும் இ-பாஸ் சர்ச்சை; விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்!


இ-பாஸ் சர்ச்சை தொடர்பாக உரிய பதிலளிக்கக் கோரி தலைமைச் செயலாளருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் இ-பாஸ் முறைகேடுகள் தொடர்பான சர்ச்சை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் மாநில மனித உரிமை ஆணையத்திற்கு திண்டுக்கல் மாவட்டத்தின் தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை தலைவர் விஸ்வ ரத்தினம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக பொதுமக்கள் பல்வேறு துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

ஊரடங்கு விதிகளுக்குக் கட்டுப்பட்டு தமிழக மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்கின்றனர். இந்த சூழலில் மருத்துவக் காரணங்கள், இறப்பு போன்ற துக்க காரியங்கள், திருமணம் போன்ற அத்தியாவசிய நிகழ்ச்சிகளுக்கு செல்லும் காரணங்களின் அடிப்படையில் ஒரு மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.

ஏனெனில் அத்தியாவசிய காரியங்களுக்கு செல்ல இணைய வழி இ-பாஸ் பெற்றுத் தான் செல்ல வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் மக்களின் துயரங்களை உணர்ந்து இ-பாஸ் முறையை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இ-பாஸ் முறை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. முக்கிய நிகழ்வுகளுக்கு செல்ல இ-பாஸ் விண்ணப்பித்து அனுமதி கிடைக்காமல் மக்கள் ஏமாந்து போகின்றனர்.

பலர் மனக்குமுறல்களுக்கு ஆளாகின்றனர். தமிழகத்தில் இ-பாஸ் வழங்குவதில் முறைகேடு நடந்து அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் இ-பாஸ் திட்டத்தால் கடந்த 4 மாதங்களாக பலர் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். அப்படியே வந்தாலும் தொழில் செய்யும் இடத்திற்கு திரும்ப முடியவில்லை.

இன்னும் சிலர் வேறு மாவட்டங்களில் இருக்கும் வயதான பெற்றோர்களை கவனிக்க முடியாத சூழலுக்கு ஆளாகியுள்ளனர். மாணவர்களை சரியான கல்வி நிலையங்களில் சேர்க்க நேரில் சென்று ஆய்வு செய்ய இ-பாஸ் திட்டம் தடுக்கிறது. நமது இந்திய நாட்டில் அரசியலமைப்புச் சட்டப்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் நகரும் உரிமை இருக்கிறது.

ஆனால் தமிழக அரசின் இ-பாஸ் திட்டம் தனி மனித உரிமையை மறைமுகமாக தடுக்கிறது. தமிழக அரசின் இந்த செயல் மனித உரிமை மீறல். எனவே ஒவ்வொரு குடிமகனும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சுதந்திரமாக நகரும் உரிமையை மீட்டுத் தர வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தலைமைச் செயலாளர் அடுத்த 4 வாரங்களுக்குள் உரிய பதிலளிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக