Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

கால் முளைத்த மீன்கள்

  கடலுக்குச் சென்று மீன் பிடிக்கும் ஆசையை மட்டி குருவிடம் தெரிவித்தான். அதற்கு சீடர்கள், குருவே! பகலில் போனால், பெரிய பெரிய அலைகள் நம்மைச் சாகடித்து விடும். அதனால் இரவில் போகலாம் அப்போது தான் கடல் தூங்கிக் கொண்டு இருக்கும்.!
 ஒரே இருட்டாக இருக்குமே? என்ன செய்வது? என்று யோசித்தான். என் கையில் தான் கொள்ளிக்கட்டை இருக்கிறதே! என்றான், முட்டாள்.
  கடல் என்றதுமே பரமார்த்தர் பயந்தார். பின், சீடர்கள் தன்னைக் கோழை என்று நினைத்து விடக்கூடாது என்பதால் சம்மதம் தெரிவித்தார். சீடர்கள் மகிழ்ச்சியோடு ஆளுக்கு ஒரு தூண்டில் எடுத்துக்கொண்டு குருவுடன் இரவில் கொள்ளிக்கட்டை வெளிச்சத்தில் மீன் பிடிக்கச் சென்றனர்.
  கடற்கரையில் படகு ஒன்றில் பரமார்த்தரும், அவரது ஐந்து சீடர்களும் ஏறிக் கொண்டனர். மட்டியும், மடையனும் துடுப்புப் போட்டனர். மூடன் தூண்டிலைப் போட்டான். அவன் போட்ட தூண்டிலில் தவளை ஒன்று மாட்டியது.
 அதைக் கண்ட சீடர்கள், இதென்ன? விசித்திரமாக இருக்கிறதே! என்று கேட்டனர். அது தவளை என்பதை மறந்த பரமார்த்தர் இதுவும் ஒரு வகை மீன்தான் அதிகமாக தின்று கொழுத்து விட்டால் இப்படிக் கால்கள் முளைத்து விடும் என்று விளக்கம் கூறினார்
  அப்படியானால் கால் முளைத்த மீன்களைக் கட்டிப் போட்டு, வீட்டிலேயே வளர்க்கலாம்! என்றான் மட்டி. மண்டு தூண்டிலில் ஒரு சிறிய மீன் மட்டுமே மாட்டியது.
 முட்டாள் குருநாதாவிடம்! படகில் சில ஓட்டைகளைப் போட்டு, பக்கத்தில் கொஞ்சம் பூச்சிகளை வைத்து விடுவோம்! அந்தப் பூச்சிகளைத் தின்பதற்காக, மீன்கள் ஓட்டை வழியாகப் படகுக்குள் வரும். உடனே லபக் என்று பிடித்துக் கொள்ளலாம்! என்றான்.
  அவன் யோசனைப்படி படகிலிருந்த ஆணிகளால், ஆளுக்கு ஒரு ஓட்டை போட்டனர். அவ்வளவு தான்! அப்போதே கடல் நீர் குபு, குபு என்று படகுக்குள் வந்ததும். சீடர்கள் எகிறிக்குதித்தனர். அதன் பின் படகு கடலுக்குள் மூழ்கியது. குருவும் சீடர்களும் லபோ திபோ என்று அலறியபடி நீருக்குள் தத்தளித்தனர்.
 அவர்கள் போட்ட சப்தத்தைக் கேட்டு அங்குள்ள மீனவர்கள் காப்பாற்றினர். மடத்துக்கு வந்து சேர்ந்த சீடர்கள், நம் படகு எப்படிக் கவிழ்ந்தது? என்று கேட்டனர்.
 கடலும், மீன்களும் சேர்ந்து செய்த சதித் திட்டத்தால் படகு கவிழ்த்து விட்டன! என்றார் பரமார்த்தர். அப்படியானால், கடலின் திமிரையும் மீன்களின் கொட்டத்தையும் அடக்க வேண்டும் மறுபடியும் மீன்களைப் பிடிப்போம். பிடித்துக் கொன்று விடுவோம், என்றனர் சீடர்கள்.
 மறுநாளும் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றதும், குருவே! எங்களை விட உங்கள் மீது தான் மீன்களுக்குக் கோபம் அதிகமாக இருப்பதால், தூண்டில் போடுவதற்குப் பதில், உங்களையே கயிற்றில் கட்டி கடலுக்குள் இறக்கி விடுகிறோம் உங்களைக் கடிப்பதற்காகக் கடலில் உள்ள எல்லா மீன்களும் வரும். உடனே நாங்கள் எல்லா மீன்களையும் பிடித்து விடுகிறோம்என்றனர் சீடர்கள். குரு சற்று நேரம் யோசித்து விட்டு சரி என்றார்.
 உடனே சீடர்கள் அவரைக் கயிற்றில் கட்டி, கடலில் தூக்கிப் போட்டனர். நீச்சல் தெரியாத பரமார்த்தர், நீருக்குள் மூச்சுவிட முடியாமல் துடித்தார். நீரின் காற்றுக் குமிழிகள் வருவதைக் கண்ட சீடர்கள், அடேயப்பா! நம் குரு நிறைய மீன்களைப் பிடிக்கிறார்" என்று நினைத்தனர்.
 பரமார்த்தரின் வயிறு முழுவதும் நீர் நிரம்பியதால் குமிழிகள் வருவது நின்றன. எல்லா மீன்களையும் பிடித்து விட்டார் என்று நினைத்த சீடர்கள், நீரிலிருந்து குருவைத் தூக்கினர்.ஆனால் பரமார்த்தரோ மயங்கிக் கிடந்தார்.
 மீன்களோடு நீண்ட நேரம் சண்டை போட்டதால் களைத்து விட்டார்! என்றான் மட்டி. கண் விழித்த பரமார்த்தர், சீடர்களே! இன்னும் நம் மீது, கடலுக்கு இருக்கும் கோபம் தீரவில்லை. எப்படியோ இந்தத் தடவை தப்பித்துக் கொண்டோம். இனிமேல், கடல் பக்கமே போகவேண்டாம்! என்றார்.
இறுதியில் கடலையும் மீன்களையும் திட்டிய படி அனைவரும் கரை சேர்ந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக