Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

மண்டோதரியின் துயரம்...!

ஜாம்பவான் விபீஷணனின் இந்த நிலைமையைக் கண்டு அவனின் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறினான். மதிநலம் படைத்தவரே! தாங்கள் இவ்வாறு புலம்பி அழுவது அறிவுடைமையாகாது. இவ்வுலகில் விதியை வென்றவர் யார்? விதி இராவணனை வேரோடு அழித்துவிட்டது. நீ அழுவதால் ஒன்றும் நடைபெற போவதில்லை.
ஆதலால் நீ உன் தமையனுக்கு செய்ய வேண்டிய ஈமச்சடங்குகளை செய்வாயாக எனக் கூறினான். இராவணன் இறந்தச் செய்தி மண்டோதரிக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு மண்டோதரி கதறிக் கொண்டு ஓடி வந்தாள். வருகின்ற அவசரத்தில் அவள் கூந்தல் அவிழ்ந்து விழுந்தது. கரிய நீண்ட கூந்தல் அவள் பாதத்தை தொடும் அளவிற்கு கீழே விழுந்தது. மண்டோதரியுடன் ஏனைய மனைவிமார்களும், அரக்கியர்களும் உடன் வந்தனர்.
 போர்க்களத்தில் இறந்து கிடக்கும் இராவணன் மேல் விழுந்து புலம்பி அழுதாள். என் ஆருயிரே! பஞ்சணையில் காண வேண்டிய உங்களை இன்று உதிரங்கள்(இரத்தம்) நிறைந்திருக்கும் போர்க்களத்தில் காண நேரிட்டதே. உங்களின் வலிமை மிகுந்த தவம் மற்றும் நீங்கள் பெற்ற வரம் ஒரு சாதாரண மனிதனின் அம்பால் வீழ்த்த முடியுமா? உங்களை இராமனின் பாணம் வீழ்த்தி விட்டதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
என் கணவனை யாராலும் வீழ்த்த முடியாது என்று எண்ணியிருந்தேனே. சீதையின் பேரழகும், சீதையின் கற்பும், அவள் மேல் கொண்ட காதலும், சூர்ப்பனகை இழந்த மூக்கும், தசரதன் போ என்று இராமனிடம் சொன்ன சொல்லும் எல்லாம் சேர்த்து இந்திரனின் தவத்திற்கு துணை போய் உங்களை கொன்று விட்டதே.
 இராமனுடன் பகை கொள்ள வேண்டாம். சீதையை சிறைப் பிடித்து வந்தது தவறு என்றும், சீதையைக் கவர்ந்து வந்தது அறத்துக்குப் புறம்பானது எனவும் சீதையை இராமனிடம் சேர்த்துவிடுங்கள் என்று எத்தனை முறை சொல்லியிருப்பேன்! நான் சொன்ன சொல்லை நீங்கள் கேட்கவில்லை. நல்லது செய்தவனுக்கு நல்லதே நடக்கும். தீமை செய்பவனுக்கு தீமையே நடக்கும். உன்னுடன் பிறந்த சகோதரன் நன்மை செய்தான். அதனால் இன்று அவன் நலமுடன் இருக்கிறான். தாங்களோ தீமை செய்தீர்கள். அதனால் தான் இன்று இறந்து கிடக்கிறீர்கள். சீதையின் அழகில் வீழ்ந்த நீங்கள், உயிர் பெற்று வருவது என்பது இயலாத ஒன்று. பதிவிரதையின் கண்ணீரானது, பூமியில் விழுந்தால், ஏதேனும் ஒன்று நடந்தே தீரும். அதுதான் தங்களை இன்று பழிவாங்கியது! பெண்ணாசை என்பது அழிவில் தான் முடியும்.
 தங்களை இழந்த பின் இனி நான் உயிருடன் இருந்து என்ன செய்யப்போகிறேன் என கூறிக்கொண்டு இராவணனின் மார்பில் விழுந்தாள். அப்பொழுது மண்டோதரி பெருமூச்சுவிட்டாள். அத்துடன் மண்டோதரியின் உயிரும் பிரிந்தது. இதனைப் பார்த்து அனைவரும் மண்டோதரி கற்புக்கரசி எனப் போற்றி வாழ்த்தினர்.
பிறகு விபீஷணன், இராவணனையும், மண்டோதரியையும் ஒன்றாக வைத்து பன்னீரால் குளிர்வித்து, மலர் மாலை சூட்டி, சந்தனம் முதலிய வாசனை கட்டைகளை அடுக்கி அவர்களுக்கு தீமூட்டி இறுதி சடங்குகளை செய்தான். விபீஷணன், இராவணனின் ஈமச்சடங்குகளை செய்து முடித்த பின் இராமரிடம் சென்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக