Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

வாகனங்களின் விலை எப்போது குறையும்?

இருசக்கர வாகனங்களுக்கு 28% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதனால் வாகனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மத்திய அரசும் கைவிட்டுவிட்டது. இந்த சூழலில் வரி குறைக்கப்படாதது பெரும் ஏமாற்றமாக இருப்பதாக தொழில்துறையினரும், வாடிக்கையாளர்களும் அதிருப்தியில் உள்ளனர்.

இருசக்கர வாகனம் சொகுசுப் பொருளா?

ஜிஎஸ்டி வரி முறையில் 28% வரி என்பது சொகுசுப் பொருட்களுக்கும், பாவப் பொருட்களுக்கும் மட்டுமே விதிக்கப்படுகிறது. உதாரணமாக, ஒரு சொகுசு காருக்கோ, புகையிலை பொருட்களுக்கோ 28% ஜிஎஸ்டி விதிக்கலாம். ஆனால் சாதாரண மக்களும் பயன்படுத்தும் ஸ்கூட்டர்களுக்கு 28% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.


இது நியாயமா?


இருசக்கர வாகனங்கள் சொகுசுப் பொருள் பிரிவில் வராது எனவும், ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டுமெனவும் கடந்த 1.5 ஆண்டுகளாக இருசக்கர வாகன தொழில்துறையினர் அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். தொழில்துறையினர் மட்டுமல்லாமல் பொதுமக்களும் இதே கோரிக்கையை முன்வைக்கின்றனர். ஏனெனில், ஜிஎஸ்டியால் வாகனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

​ஜிஎஸ்டியை குறைத்தால் என்ன நடக்கும்?


28% ஜிஎஸ்டியை குறைத்தால் முதலில் வாகனங்களின் விலை குறையும். கொரோனா காலத்தில் தனிநபர் போக்குவரத்துக்கு அதிக தேவை இருப்பதால் வாகனங்களின் விற்பனை உயரும். இதன் விளைவாக, கொரோனா நெருக்கடியில் சிக்கியுள்ள வாகன நிறுவனங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஊழியர்களும் பயனடைவார்கள். எனவே, வரியை குறைப்பதால் பல தரப்பினரும் பயனடைய முடியும்.

அரசும் ஒப்புக்கொண்டது!


சில தினங்களுக்கு முன் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்த காணொளிக் காட்சி கருத்தரங்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியபோது, “இருசக்கர வாகனங்கள் சொகுசுப் பொருளும் இல்லை, பாவப் பொருளும் இல்லை. எனவே, அவை வரிக் குறைப்புக்கு தகுதியானவை” என்று ஒப்புக்கொண்டார்.

பெரும் ஏமாற்றம்


ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று ஜிஎஸ்டி கவுன்சிலின் 41ஆவது கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. எனினும், இருசக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகாமல் தொழில்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது.

எப்போது விலை குறையும்?


ஜிஎஸ்டி கவுன்சிலும் கைவிட்ட நிலையில், இருசக்கர வாகன நிறுவனங்கள் தற்போது விற்பனையில் மந்தநிலையை எதிர்கொண்டு வருகின்றனர். ஒருபுறம் வாகனங்களுக்கு தேவை இருக்கிறது. மறுபுறம் விலை உயர்வாக இருப்பதால் மக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

கொரோனா பாதிப்பால் மக்களும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, ஜிஎஸ்டியை விரைந்து குறைப்பதே அனைவருக்கும் பயனளிக்கும். இருசக்கர வாகனங்களுக்கு வரியை குறைக்கலாம் என நிதியமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளதால், கூடிய விரைவில் வாகனங்களின் விலை குறைவதை எதிர்பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக