இங்கிலாந்தில் 1.26 கோடி ரூபாயை கொட்டி கொடுத்து ஒருவர் நம்பர் பிளேட்டை ஏலம் எடுத்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
வாகனங்களின் பதிவு எண் ஃபேன்ஸியாக இருக்க வேண்டும் என பலர் விரும்புகின்றனர். எனவே பல லட்ச ரூபாய் மதிப்பிலும், பல கோடி ரூபாய் மதிப்பிலும் வாங்கும் வாகனங்களுக்கு ஃபேன்ஸி பதிவு எண்ணை பெறுவதற்கு என தனியாக பெரும் தொகையை அவர்கள் செலவு செய்கின்றனர். இப்படிப்பட்ட செய்திகள் பலவற்றை கடந்த காலங்களில் நாம் கேள்விபட்டுள்ளோம்.
இதுபோன்ற சம்பவம் வெகு சமீபத்தில் கேரளாவில் கூட நடைபெற்றது. திருச்சூரை சேர்ந்த இளம் தொழில் அதிபரான டாக்டர் பிரவீன் என்பவர், 6.25 லட்ச ரூபாய் செலவு செய்து தனது புத்தம் புதிய காருக்கு ஃபேன்ஸி பதிவு எண்ணை வாங்கினார். ஜீப் வ்ராங்கலர் ரூபிகான் எஸ்யூவிக்காக இவ்வளவு பெரிய தொகையை செலவழித்து, ஃபேன்ஸி பதிவு எண் வாங்கப்பட்டது.
ஆனால் இதை விட அதிக தொகையை செலவழித்து ஒருவர் நம்பர் பிளேட் ஒன்றை தன்வசமாக்கியுள்ளார். 1902ம் ஆண்டை சேர்ந்த மிகவும் அரிதான நம்பர் பிளேட் ஒன்று இங்கிலாந்தில் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. இந்த நம்பர் பிளேட்டை ஒருவர் 1,28,800 பவுண்டுகளுக்கு ஏலம் எடுத்துள்ளார். இந்திய மதிப்பில் இது சுமார் 1.26 கோடி ரூபாய் ஆகும்!
உலகில் விற்பனை செய்யப்படும் ஒரு சில சிறந்த ஸ்போர்ட்ஸ் கார்களின் விலையை விட அதிகமான தொகைக்கு இந்த நம்பர் பிளேட் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது வெறும் எண்களை மட்டும் உள்ளடக்கிய பலகை கிடையாது. பல தசாப்தங்களுக்கு முந்தையது என்பதால், இவ்வளவு அதிகமான தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டிருக்கலாம்.
தற்போது மிகப்பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள நம்பர் பிளேட் முதல் முறையாக கடந்த 1902ம் ஆண்டு, இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் வழங்கப்பட்டது என கூறப்படுகிறது. அத்துடன் சார்லஸ் தாம்ப்சன் என்பவர்தான் இந்த நம்பர் பிளேட்டை முதன் முதலில் வைத்திருந்தார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் கடந்த 1874ம் ஆண்டு பிறந்தவர் எனவும், எழுது பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை அவர் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. அன்றைய கால கட்டத்தில் வாகனங்கள் என்பவையே மிகவும் அரிதானவை. அத்துடன் அவரது நம்பர் பிளேட் மிகவும் தனித்துவமானது என்பதால், அனைவராலும் எளிதிலும் அடையாளம் காணக்கூடியதாக இருந்தது.
ஆனால் கடந்த 1955ம் ஆண்டு சார்லஸ் தாம்ப்சன் மறைந்ததையடுத்து, பேரி தாம்ப்சன் என்பவரிடம் இந்த நம்பர் பிளேட் சென்றது. இவர் சார்லஸ் தாம்ப்சனின் மகன் என கூறப்படுகிறது. இந்த சூழலில் கடந்த 2017ம் ஆண்டு பேரி தாம்ப்சனும் உயிரிழந்தார். எனவே சில்வர்ஸ்டோன் ஏல நிறுவனத்தால் சமீபத்தில் ஏலம் விடப்படும் வரை, வாகனங்களில் இருந்து அந்த நம்பர் பிளேட் விலகியிருந்தது.
ஆனால் இவ்வளவு பெரிய தொகையை கொடுத்து இந்த நம்பர் பிளேட்டை ஏலம் எடுத்தவரின் பெயர்
என்ன? என்ற விபரம் எதுவும் வெளியாகவில்லை. எனினும் முதன் முதலில் இந்த நம்பர்
பிளேட்டை வைத்திருந்த சார்லஸ் தாம்ப்சனின் பேரன்தான், தனது தாத்தாவிற்கு மரியாதை
செலுத்தும் விதமாக இந்த நம்பர் பிளேட்டை வாங்கியதாக கூறப்படுகிறது. 'O 10' என்ற
நம்பர் பிளேட்தான் இவ்வளவு அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக