பெனெல்லி லியோன்சினோ 800 பைக் மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த புதிய மாடல்கள் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளதால், இந்த பைக்குகள் குறித்த முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பெனெல்லி நிறுவனத்தின் லியோன்சினோ வரிசையில் அறிமுகம் செய்யப்படும் க்ளாசிக் ரோட்ஸ்டெர் வகை பைக் மாடல்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு இத்தாலியில் நடந்த ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில்தான் பெனெல்லி லியோன்சினோ வரிசையில் லியோன்சினோ 800 மற்றும் லியோன்சினோ 800 ட்ரெயில் ஆகிய இரண்டு பைக் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
இதில், பெனெல்லி லியோன்சினோ 800 பைக் மாடலானது ட்ரெல்லிஸ் ஃப்ரெம், ஸ்டைலான பெட்ரோல் டேங்க், எளிமையான வால் பகுதி, ஸ்போக்ஸ் சக்கரங்களுடன் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
லியோன்சினோ 800 பைக் மாடலில் முன்புறத்தில் 50 மிமீ மர்ஸோச்சி அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு சக்கரங்களிலும் பிரெம்போ பிரேக்குகள் உள்ளதும் மிக முக்கிய அம்சமாக உள்ளது.
பெனெல்லி லியோன்சினோ 800 ட்ரெயில் பைக் மாடலானது கூடுதல் ஆக்சஸெரீகளுடன் அதிக கவர்ச்சியாக, ஸ்க்ராம்ப்ளர் மாடலாக மாறி இருக்கிறது. உயர்த்தப்பட்ட அமைப்புடன் சைலென்சர்கள், பாடி கலர் ஹெட்லைட் ஃபேரிங் பேனல், 19 அங்குல முன்சக்கரம் ஆகியவை முக்கிய மாறுதல்களாக உள்ளன. இரண்டு பைக்குகளிலும் டியூவல் பர்போஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
லியோன்சினோ 800 மற்றும் லியோன்சினோ 800 ட்ரெயில் ஆகிய இரண்டு பைக் மாடல்களிலும் பேரலல் ட்வின் சிலிண்டர்கள் கொண்ட 754சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 75 பிஎச்பி பவரையும், 68 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.
இந்த பைக்கில் ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் யூரோ-5 (பிஎஸ்-6) மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது. எனவே, இந்தியாவில் எந்த பிர்சனையும் இல்லாமல் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
இந்த புதிய பைக் மாடல்கள் விரைவில் சர்வதேச அளவில் விற்பனைக்கு செல்ல இருக்கின்றன. இதைத்தொடர்ந்து இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக