ஐபிஎல் தொடரில் கோடிகளில் கொழிக்கும் வீரர்களுக்கு விரைவில் அதிர்ச்சி செய்தி வர உள்ளதாக கூறப்படுகிறது. 2021 ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு முன்பு கிடைத்ததை விட குறைந்த சம்பளமே கிடைக்கக் கூடும் என ஒரு தகவல் வலம் வருகிறது.
சில ஐபிஎல் அணிகள் நஷ்டத்தில் இருப்பதாகவும், கடந்த சீசனில் வெற்றிகளை குவித்த ஐபிஎல் அணிகளும் கூட பெரிய லாபம் ஈட்ட முடியாத நிலையிலேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மாபெரும் வெற்றி
2௦20 ஐபிஎல் தொடர் மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால், பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகள் அதனால் லாபம் பார்க்கவில்லை. போட்டிகளை ஒளிபரப்பிய தொலைக்காட்சி குழுமம் மட்டுமே கடந்த ஆண்டை விட ஓரளவு லாபம் ஈட்டியதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டில் ஐபிஎல்
ஐபிஎல் அணிகள் 2020 ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறும் என்ற அடிப்படையில் டிசம்பர் 2019 ஏலத்தில் வீரர்களை வாங்கின. விளம்பர ஒப்பந்தங்களையும் இந்தியாவில் நடக்கும் தொடரை மனதில் வைத்தே செய்தன. ஆனால், எல்லாமே கடைசியில் மாறியது.
நிறுவனங்கள் பின்வாங்கின
2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றதால் விளம்பர ஒப்பந்தங்கள் செய்த பல நிறுவனங்கள் பின்வாங்கின. போட்டிகளை நேரில் காண ரசிகர்கள் வர மாட்டார்கள் என்பதாலும் பல கோடி விளம்பர வாய்ப்புகளை இழந்தன ஐபிஎல் அணிகள்.
டிக்கெட் வருவாய்
குறிப்பாக போட்டிகளை நேரில் காண வரும் ரசிகர்கள் தாங்கள் ஆதரிக்கும் ஐபிஎல் அணியின் உடையை வாங்குவார்கள். மேலும், டிக்கெட் வருவாயில் அணிக்கும் பங்கு கிடைக்கும். இந்த வருவாய் 2020 ஐபிஎல் தொடரில் எந்த அணிக்கும் கிடைக்கவில்லை.
ஸ்பான்சர்கள்
சில அணிகளுக்கு போதிய ஸ்பான்சர்கள் கூட கிடைக்கவில்லை. பிசிசிஐ கூட தங்களின் டைட்டில் ஸ்பான்சரை கடைசி நேரத்தில் இழந்தது. விவோ ஸ்மார்ட்போன் நிறுவனம் சீன நிறுவனம் என்பதால் எதிர்ப்பு எழுந்து அந்த நிறுவனம் ஓராண்டுக்கு மட்டும் ஒப்பந்தத்தில் இருந்து பின் வாங்கியது.
குறைந்த தொகை
440 கோடி போடப்பட்ட ஒப்பந்தம் குறைக்கப்பட்டு 222 கோடி ரூபாய்க்கு ட்ரீம் 11 நிறுவனம் டைட்டில் ஸ்பான்சரை கைப்பற்றியது. இப்படி பிசிசிஐ, ஐபிஎல் அணிகள் விளம்பர ரீதியாக அடி வாங்கியது. அதே சமயம், வீரர்களுக்கு முன்பு அவர்களை ஏலத்தில் எடுத்த அதே சம்பளத்தை அளிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.
85 கோடி
ஐபிஎல் அணிகள் வீரர்கள் சம்பளத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 85 கோடி வரை செலவு செய்யலாம். இது தான் ஐபிஎல் அணிகளின் பெரிய செலவினம். 2020 ஐபிஎல் தொடரில் நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டு வீரர்கள் சம்பளத்தை குறைக்க ஐபிஎல் அணிகள் திட்டமிட்டு வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.
மெகா ஏலம்
ஏற்கனவே, ஏலத்தில் எடுத்த தொகையை அணிகளால் குறைக்க முடியாது. ஆனால், 2021 ஐபிஎல் தொடருக்கு முன் மெகா ஏலம் நடைபெற உள்ளது. அப்போது அனைத்து அணிகளும் ஒரீரு வீரர்களை தவிர தங்கள் வீரர்களை மொத்தமாக நீக்கி விட்டு ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்.
திட்டமிட்டு செயல்பட்டால்..
அப்போது ஐபிஎல் அணிகள் திட்டமிட்டு ஏலத் தொகையை குறைக்கலாம் என்கிறார்கள். இது ஒன்றிரண்டு அணிகள் மட்டும் திட்டமிட்டு செய்ய முடியாது. அனைத்து அணிகளும் குறிப்பிட்ட ஏலத் தொகையை அதிகபட்சமாக வைத்துக் கொண்டு செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியம்.
மாறலாம்
எனினும், 2020 ஐபிஎல் தொடர் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால் அடுத்த ஆண்டு ஐபிஎல் அணிகள் அதிக விளம்பர வருவாய் ஈட்டக் கூடும் என சந்தை நிபுணர்கள் கூறி உள்ளனர். அப்படி நடந்தால் சம்பளத்தை குறைக்காமல் விடவும் வாய்ப்புள்ளது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்உள்ளூர் முதல் உலகம் வரை , பொழுதுபோக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக