Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 18 நவம்பர், 2020

சிறிய தீக்காயங்களுக்கு ஏற்ற தீர்வு நம் வீட்டிலேயே இருக்கிறது தெரியுமா

சிறிய தீக்காயங்களுக்கு ஏற்ற தீர்வு நம் வீட்டிலேயே இருக்கிறது தெரியுமா

இணையத்தில் நாம் பார்க்கும் பல புதிய உணவு வகைகளை செய்து பார்க்கும் போதோ அல்லது கவனக்குறைவு காரணமாகவோ நாம் அவ்வப்போது நமது கைகளில் சூடு பட்டுக்கொள்வது உண்டு. இவை எளிதில் சரியாகி விடும் என்றாலும், சில சமயம் இவை விரைவில் குணமடையாமல் நமக்கு எரிச்சலையும் அதிகமான வலியையும் அளிக்கின்றன.

சில நேரங்களில் தீக்காயங்கள் (Burns) கொப்புளங்களாக மாறி சருமத்தில் பெரிய வடுக்களை ஏற்படுத்தும். தீக்காயங்களால் அரிப்பு மற்றும் பிற தோல் பிரச்சனையும் உருவாகலாம். நம்மில் பலர் தீக்காயங்களுக்கு எந்த மருத்துவ உதவியையும் நாடுவதில்லை. பின்வரும் தீர்வுகள் தோலில் ஏற்படும் சிறிய மேலோட்டமான தீக்காயங்களுக்கு சிகிச்சையளிக்க உதவும்:

1. கற்றாழை

கற்றாழை (Aloe Vera) பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது ஃபர்ஸ்ட் டிகிரி தீக்காயங்களுக்கு சிகிச்சையளிக்க உதவும். கற்றாழை தீக்காயத்தைச் சுற்றியுள்ள இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. இதனால் காயம் விரைவாக குணமடைகிறது. அந்த இடத்தில் ஏற்படக்கூடிய பாக்டீரியாக்களின் வளர்ச்சியையும் கற்றாழை தடுக்கிறது. கற்றாழை வலியைக் குறைப்பதோடு கொப்புளங்கள் மற்றும் வடுக்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது.

2. உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவற்றை பச்சையாகவோ, வேகவைத்ததாகவோ, தோல் உரிக்கப்பட்ட விதத்திலோ பிசைந்து எரிந்த தோலில் நேரடியாக வைக்கலாம். உருளைக்கிழங்கு தோலுக்கு ஈரப்பதத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல், தீக்காயத்தை குணப்படுத்தவும் உதவுகின்றது. தோலில் உலர்ந்த தீக்காயம் ஒப்பீட்டளவில் மிகவும் வேதனையானது மற்றும் குணமடைய அதிக நேரம் எடுக்கும். உருளைக்கிழங்கில் உள்ள சாறுகள் காயத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகின்றன. இது குணப்படுத்தும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. தீக்காயம் ஏற்பட்டவுடன் இதை காயத்தில் போட்டு, அதை ஒரு மணி நேரம் அப்படியே விட்டுவிட வேண்டும்.

3. தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் (Coconut Oil) பாரம்பரியமாக பல வீடுகளில் தீக்காயங்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இது தீக்காயங்களுக்கு சிகிச்சையளிப்பது மட்டுமல்லாமல் சருமத்தை குணப்படுத்துகிறது. சருமத்தில் ஏற்படும் வடுக்களை மறைக்கச்செய்யவும் தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது. தேங்காய் எண்ணெயில் பல பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக அறியப்படுகிறது. இது தீக்காயங்களால் தோல் இன்னும் அதிகமாக பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது.

4. தேன்

தேன் அனைத்து வீடுகளிலும் இருக்கும் ஒரு அருமருந்தாகும். இது சிறிய தீக்காயங்களை குணப்படுத்த உதவும். தேன் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது வலியைக் குறைக்க உதவுகிறது மற்றும் எரியும் உணர்வை மந்தமாக்குகிறது. தீக்காயம் நன்றாக குணமடையும் வரை தேனை தொடர்ந்து அந்த இடத்தில் தடவ வேண்டும்.

5. கடலை மாவு

தீக்காயம் ஏற்பட்டவுடனேயே அந்த இடத்தில் கடலை மாவை தூவி பரப்புவதால், உடனடியாக அந்த காயம் இன்னும் அதிகமாகாமல் தடுக்கப்படுகின்றது. கடலை மாவு தீக்காயம் அல்லது சூடான எண்ணய் தெறித்ததால் ஏற்பட்ட காயம் ஆகியவற்றின் வீரியத்தைத் தடுத்து, காயம் ஏற்பட்ட இடம் விரைவில் குணமடைய உதவுகிறது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக