கொரோனா தொற்றுநோய் பல நாடுகளை ஆழ்ந்த பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. இதனால் மக்கள் பலவித போராட்டங்களை எதிர்கொள்கிறார்கள். இருப்பினும், இந்த உலகில் மனிதநேயமும் இரக்கமும் இன்னும் உள்ளன என்பதைக் காட்டும் பல நிகழ்வுகளும் தினமும் நடந்து வருகின்றன. இன்னும் பல நல்ல உள்ளங்கள் நம் மத்தியில் உள்ளன என்பதை நாம் தினமும் கண்டு வருகிறோம்.
ஒரு உன்னதமான சைகையின் எடுத்துக்காட்டாக, பாலி (Bali) நகரில் உள்ள ஒரு கல்லூரி, கொரோனா தொற்றால் நிதி பற்றாக்குறையால் தவிக்கும் மாணவர்களுக்கு உதவ, மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்கு பதிலாக தேங்காய்களை பெற்றுக்கொள்ள முன் வந்துள்ளது.
கல்லூரியின் இந்த செயலால் பல மாணவர்கள் நெகிழ்ந்து நன்றி தெரிவித்தார்கள். பெற்றோரும் கல்லூரிக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர். கல்லூரிக்கு பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன.
வீனஸ் ஒன் சுற்றுலா அகாடமி என்ற விருந்தோம்பல் கல்லூரி, தேங்காய் (Coconut) மற்றும் பிற இயற்கை பொருட்களின் வடிவத்தில் கல்விக் கட்டணங்களை ஏற்கத் தொடங்கியுள்ளது. பொருளாதார மந்த நிலை காரணமாக பொது மக்களிடையே நிதி நெருக்கடி அதிகரித்துள்ளதால், மாணவர்களால் சரியான நேரத்தில் கல்லூரிக்கான கல்விக் கட்டணத்தை (Fees) செலுத்த முடியவில்லை. இதனால் இந்த கல்லூரி இப்படிப்பட்ட தீர்வை அளித்துள்ளது.
பள்ளியில் தேங்காய் எண்ணெயை செய்ய தேங்காய்கள் பயன்படுத்தப்படும் என்று அந்த நிறுவனத்தின் அதிகாரி வயன் பசேக் ஆதி புத்ரா தி பாலி சன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
“முதலில் நாங்கள் மாணவர்கள் கல்விக் கட்டணத்தை செலுத்த ஒரு தவணைத் திட்டத்தைத் தொடங்கினோம். ஆனால் இப்போது நாங்கள் அதையும் தாண்டி உதவ முன்வந்துள்ளோம். இந்த COVID தொற்றுநோயால், நாங்கள் ஒரு நெகிழ்வான கொள்கையை பின்பற்றியுள்ளோம். நாங்கள் தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்கிறோம், எனவே மாணவர்கள் தேங்காயைக் கொடுத்து தங்கள் கல்விக்கான தொகையை செலுத்திக் கொள்ளலாம். அது எங்களுக்கு பயன்படுகிறது.” என்றார் புத்ரா.
மூலிகை சோப்புகள் உள்ளிட்ட தயாரிப்புகளை தயாரிக்க பயன்படும் மோரிங்கா இலைகள் மற்றும் கோட்டு கோலா இலைகள் போன்றவற்றிலும் கல்லூரி கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது.
மாணவர்கள் தங்கள் தொழில் முனைவோர் திறனை வளர்த்துக் கொள்ள தங்கள் சொந்த தயாரிப்புகளை மறுவிற்பனையும் செய்யலாம்.
"அவர்களது சூழலில் உள்ள இயற்கை வளங்களை மேம்படுத்த நாங்கள் அவர்களுக்கு கற்பிக்க வேண்டும். இதன் மூலம் தொற்றுநோய் முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பும்போது, அவர்கள் பல திறமைகள் கொண்டவர்களாகத் திகழ்வார்கள்” என்று புத்ரா கூறினார்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக