Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 7 நவம்பர், 2020

உடம்பில் உள்ள அழுக்கை வெளியேற்றி, தொப்பையைக் குறைக்கும் பப்பாளி டயட் பற்றி தெரியுமா?

உலகெங்கிலும் பெரும்பாலான மக்கள் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை உடல் பருமன். உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையால் தற்போது ஏராளமானோர் தொப்பை மற்றும் உடல் பருமனால் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். இந்த அதிகப்படியான உடல் எடையைக் குறைக்க பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டும் வருகின்றனர். அதில் உடல் எடையைக் குறைக்க தற்போது டயட் மக்கள் மத்தியில் பின்பற்றப்பட்டு வரும் ஒரு செயலாகும்.

உடல் எடையைக் குறைக்க ஏராளமான டயட்டுகள் இணையத்தில் உள்ளன. அனைத்துமே எதிர்பார்த்த பலனைத் தரும் என்று கூற முடியாது. அதோடு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான உடல்வாகு என்பதால், நாம் தான் நமக்கு பொருத்தமான டயட்டை சரியான ஊட்டச்சத்து நிபுணரிடம் கேட்டறிந்து மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் உடல் எடையைக் குறைக்க உதவும் ஓர் டயட் தான் பப்பாளி டயட்.

பப்பாளி

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய ஒரு பழம் தான் பப்பாளி. தினமும் பப்பாளி சாப்பிடுவது மிகவும் நல்லது என்று பல கட்டுரைகளில் படித்திருப்பீர்கள். ஏனெனில் பப்பாளியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளது மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது. மேலும் இந்த பழத்தில் உள்ள நொதிப் பொருள், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைக்கக்கூடியது. ஆகவே தான் உடல் எடையைக் குறைக்க பப்பாளி பெரிதும் உதவி புரிகிறது.

பப்பாளியில் உள்ள சத்துக்கள்

ஆரஞ்சு நிற பழமான பப்பாளியில் 90% நீர்ச்சத்து உள்ளது. அதே சமயம், இதில் வைட்டமின் சி மற்றும் பீட்டா-கரோட்டீனும் உள்ளது. அதோடு பப்பாளியில் ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் ஈ, பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், ஆல்பா லினோலினிக் அமிலம், கரையக்கூடிய நார்ச்சத்து, அல்கலாய்டு போன்றவையும் அடங்கியுள்ளது.

இவ்வளவு சத்துக்களை தன்னுள் கொண்ட பப்பாளி பல்வேறு செரிமான பிரச்சனைகளைப் போக்கும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும், உடலைத் தாக்கும் பல நோய்களைத் தடுக்கும், உடல் பருமன் மற்றும் நீர்தேக்கத்தை எதிர்த்துப் போராட உதவி புரியும்.

பப்பாளி டயட் என்றால் என்ன?

பப்பாளியால் எடை இழப்பு ஏற்படுவதற்கு காரணம், பப்பாளி செரிமான பிரச்சனைகளை தடுப்பதுடன், இதில் உள்ள சுத்திகரிப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தான். பப்பாளி டயட்டை ஒருவர் சில நாட்கள் மேற்கொண்டால், அது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஆனால் பப்பாளி டயட்டானது நீண்ட நாட்கள் பின்பற்ற வேண்டிய ஒன்றல்ல. இந்த டயட்டை 5 நாட்களுக்கு மேல் மேற்கொள்ளக்கூடாது. இந்த டயட்டை 5 நாட்கள் பின்பற்றினால் வேகமாக 2 கிலோ வரை குறைவதோடு, கல்லீரல், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புக்களில் உள்ள நச்சுக்கள் நீங்கி சுத்தமாகும் மற்றும் அடிவயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் குறைக்கும்.

இப்போது இந்த 5 நாள் பப்பாளி டயட்டை எப்படி மேற்கொள்வது என்பதைக் காண்போம்.

முதல் இரண்டு நாட்கள்

பப்பாளி டயட்டின் முதல் இரண்டு நாட்கள் மிகவும் கடினமானவை மற்றும் முக்கியமானவை. ஏனென்றால், முதல் இரண்டு நாட்கள் உடலை சுத்தம் செய்வதில் கவனம் செலுத்துகின்றன. இந்நாட்களில் அனுமதிக்கப்பட்ட ஒரே விஷயம், பப்பாளியை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் மற்றும் தண்ணீர் அல்லது ஸ்மூத்திகளை அதிகமாக குடிக்க வேண்டும்.

இறுதி மூன்று நாட்கள்

காலை உணவிற்கு முன்...

காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

காலை உணவு

காலை எழுந்ததும் எலுமிச்சை ஜூஸ் குடித்த 30 நிமிடம் கழித்து, காலை உணவாக ஒரு பௌல் ஓட்ஸ் அல்லது விருப்பமான ஏதேனும் முழு தானிய செரில்களை தயிர் மற்றும் பப்பாளியுடன் சாப்பிட வேண்டும்.

காலை மற்றும் மதிய ஸ்நாக்ஸ் நேரம்

காலை உணவிற்குப் பின் மற்றும் மதிய உணவிற்கு பின் ஸ்நாக்ஸாக ஏதேனும் சாப்பிட வேண்டுமானால், ஒரு பௌல் நறுக்கிய பப்பாளியின் மீது 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிடலாம்.

மதிய உணவு மற்றும் இரவு உணவு

கடைசி மூன்று நாட்கள் மதியம் மற்றும் இரவு வேளையில் கலோரி குறைவான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். அப்படி சாப்பிட அனுமதிக்கும் உணவுகளாவன: வெஜிடேபிள் சூப், வேக வைத்த காய்கறிகள், பருப்பு வகைகள், சாலட் மற்றும் மீன் அல்லது சிக்கன்.

நினைவில் கொள்ள வேண்டியவை:

இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஒரு கண்டிப்பான டயட் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனால் தான் இந்த டயட் 5 நாட்களைத் தாண்டக்கூடாது என்று பரிந்துரைக்கப்படுகிறது. அதேப் போல் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக செயல்புரியும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அதில் இந்த டயட்டை மேற்கொள்ளும் போது சிலர் செரிமான பிரச்சனைகள், தலைவலி மற்றும் சோர்வு போன்றவற்றை சந்திக்கலாம். இருப்பினும், நீண்ட கால மற்றும் ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைக்க ஊட்டச்சத்து நிபுணரை அணுகவே எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக