இந்தியாவின் 10 தலைசிறந்த ஸ்மார்ட் சிட்டி எது என்ற பட்டியலை இந்திய அரசாங்கம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதில் எந்த-எந்த நகரங்கள் என்ன இடத்தை பிடித்துள்ளது என்று பார்க்கலாம். குறிப்பாகத் தமிழகத்திலிருந்து எத்தனை நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் இடம் பிடித்துள்ளது என்று தெரிந்துகொள்ளுங்கள். தமிழகத்தின் ஸ்மார்ட் சிட்டி ரேங்கிங் நிச்சயம் உங்களை அதிர்ச்சியடையச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
முதலில் ஸ்மார்ட் சிட்டி என்றால் என்ன? ஒரு ஸ்மார்ட் சிட்டியில் என்ன அடிப்படை விஷயங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்? எதை வைத்து ஒரு நகரத்தை ஸ்மார்ட் சிட்டி என்று தரம் பிரித்து ரேங்கிங் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிந்துகொள்ளலாம். அதற்குப் பின், ரேங்கிங் பட்டியலைப் பார்த்தால் நமக்கே விஷயம் தெளிவாகப் புரிந்துவிடும். சரி, முதலில் ஸ்மார்ட் சிட்டி எப்படித் தேர்வு செய்யப்படுகிறது என்று தெரிந்துகொள்வோம்.
ஒரு ஸ்மார்ட் சிட்டி இப்படி தான் தரம் பிரிக்கப்படுகிறதா?
ஒரு நகர்ப்புற பகுதியில், இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர் (Infrastructure) என்று கூறப்படும் உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட், தகவல் தொடர்பு மற்றும் சந்தை கிடைக்கும் தன்மை ஆகியவற்றில் மிகவும் முன்னேறிய ஒரு நகரம் ஸ்மார்ட் சிட்டி என்று அழைக்கப்படுகிறது. இதுதவிர ஒரு ஸ்மார்ட் சிட்டி என்பது கல்வி மற்றும் சுகாதாரத் துறையின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு தேர்வு செய்யப்படுகிறது. அதேபோல், நகரத்தின் நீர் நிர்வாகமும் முக்கிய கருத்தில் சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
முழு வைஃபை நகரமாக உருவாக்கப்படும்
இப்படித் தேர்வு செய்யப்படும் ஸ்மார்ட் சிட்டி நகரங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் உள்ள நகரங்கள் அனைத்தும் முழு வைஃபை நகரமாக உருவாக்கப்படும், இணைய அணுகல் என்பது ஒவ்வொரு பொது இடத்திலும் கிடைக்கும்படி மாற்றப்படும். இது புதிய வளர்ச்சியைக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், தற்போதுள்ள உள்கட்டமைப்பின் மறுவடிவமைப்பை உருவாக்கும்.
முதல் கட்டமாக இருபது நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிகளாக தேர்வு
பல மாநில தலைநகரங்கள் உட்பட மொத்தம் 98 நகரங்கள் இப்பொழுது ஸ்மார்ட் சிட்டிகளாக மேம்படுத்தப்படவுள்ளது. தகவல் தொழில்நுட்பத்தின் செயல்பாட்டில் இந்த இடங்கள் ஒரு முழுமையான ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படும். முதல் கட்டமாக இந்தியா முழுவதிலுமிருந்து இருபது நகரங்களை ஸ்மார்ட் சிட்டிகளாக மாற்றம் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள நகரங்களை இப்போது பார்க்கலாம்.
முதல் 10 ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தமிழகம் இருக்கா?
இந்தியாவின் முதல் பத்து ஸ்மார்ட் நகரங்கள் என்று புவனேஸ்வர், புனே, ஜெய்ப்பூர், சூரத், லூதியானா, கொச்சி, அகமதாபாத், சோலாப்பூர், புது தில்லி மற்றும் உதய்பூர் ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் ரேங்கிங் விபரம் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. முதல் 10 ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தமிழகத்திலிருந்து எந்த ஒரு நகரமும் தேர்வு செய்யப்படவில்லை என்பது வருத்தம். ஆனால், அடுத்த 10 நகரங்களின் பட்டியலில் தமிழக நகரங்கள் இடம்பிடித்துள்ளது.
டாப் 10 ஸ்மார்ட் சிட்டி ரேங்கிங் விபரம்
1. புவனேஸ்வர்
2. புனே
3. ஜெய்ப்பூர்
4. சூரத்
5. லூதியானா
6. கொச்சி
7. அகமதாபாத்
8. புது தில்லி
9. சோலாப்பூர்
10. உதய்பூர்
தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்ட நகரங்கள் இது தான்
வெளியான கடைசி அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி தமிழகத்திலிருந்து இரண்டு நகரங்கள் மட்டுமே முதல் 20 ஸ்மார்ட் சிட்டி ரேங்கிங் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இதில் கோவை மற்றும் சென்னை ஆகிய இரண்டு நகரங்கள் மட்டும் ஸ்மார்ட் சிட்டி ரேங்கிங் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. நம்பமுடியாத வகையில் ரேங்கிங் பட்டியலில் சிங்கார சென்னை 18 ஆம் இடத்தை பிடித்துள்ளது. அதேபோல், கோவை 13 ஆம் இடத்தை பிடித்துப் பிரமிக்க வைத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக