Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 24 டிசம்பர், 2020

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கின் சேல்ஸ் தூள் கௌப்புது... பொங்கலுக்கு டெலிவரி எடுத்தால் கெத்து காட்டலாம்...

 

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கின் சேல்ஸ் தூள் கௌப்புது... பொங்கலுக்கு டெலிவரி எடுத்தால் கெத்து காட்டலாம்...

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கின் விற்பனை உயர்ந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

350 சிசி செக்மெண்ட் நீண்ட காலமாகவே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கோட்டையாக இருந்து வருகிறது. அதை தகர்க்க போட்டி நிறுவனங்கள் பல முறை படையெடுத்துள்ளன. ஆனால் போட்டி நிறுவனங்களின் முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. இதற்கு பஜாஜ் நிறுவனத்தை கூட ஒரு உதாரணமாக சொல்லலாம்.

ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களை விட அதிக சக்தி வாய்ந்த மற்றும் நவீன தயாரிப்புகள் மூலமாக சாத்தியமுள்ள வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்க பஜாஜ் முயற்சிகளை செய்தது. ஆனால் அந்த முயற்சிகள் எல்லாம் இறுதியில் வீணாக போனதுதான் மிச்சம். இதற்கு அடுத்தபடியாக, ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

எனினும் வாடிக்கையாளர்கள் வழங்கிய வரவேற்பை கிளாசிக் லெஜண்ட்ஸ் தக்க வைத்து கொள்ள தவறியது. ஜாவா பைக்குகளை டெலிவரி எடுப்பதற்கு நீண்ட காலம் ஆனதால், முன்பதிவு செய்த பலர் மீண்டும் ராயல் என்பீல்டு பைக்குகளின் பக்கமே வந்து விட்டனர். இப்படி பல நிறுவனங்களின் முயற்சி பலனளிக்காத நிலையில், ராயல் என்பீல்டின் கோட்டையை தகர்க்க சமீபத்தில் படையெடுத்துள்ளது ஹோண்டா.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மற்றும் புதுவரவான மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக, ஹைனெஸ் சிபி350 பைக்கை ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 350 சிசி மோட்டார்சைக்கிள்களை எதிர்கொள்ள சரியான பாதையில் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பயணித்து கொண்டிருப்பது போலதான் தெரிகிறது.

கடந்த நவம்பர் மாதம் ஹோண்டா நிறுவனம் 4,067 ஹைனெஸ் சிபி350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது சுமார் 215 சதவீதம் அதிகம் ஆகும். ஏனெனில் கடந்த அக்டோபர் மாதம் ஹோண்டா நிறுவனம் வெறும் 1,290 ஹைனெஸ் சிபி350 பைக்குகளை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது.

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 தனது இன்னிங்ஸை சிறப்பாக தொடங்கியிருப்பதை இதன் மூலமாக புரிந்து கொள்ளலாம். தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஹோண்டா நிறுவனம் தற்போது ஹைனெஸ் சிபி350 பைக்குகளின் உற்பத்தியை அதிகரித்துள்ளது. ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கின் விற்பனை எண்ணிக்கை ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு அச்சுறுத்தல் எல்லாம் கிடையாது.

இருந்தாலும் புத்தம் புதிய மோட்டார்சைக்கிள், குறிப்பிட்ட நகரங்களில் உள்ள ஹோண்டாவின் பிரீமியம் பிக்விங் டீலர்ஷிப்கள் வாயிலாக மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது என்பது போன்ற விஷயங்களை எல்லாம் வைத்து பார்க்கையில் ஹைனெஸ் சிபி350 பைக்கின் விற்பனை எண்ணிக்கை சிறப்பான ஒன்றாகவே தோன்றுகிறது.

ஒரு வேளை ஹோண்டா தனது வழக்கமான டீலர்ஷிப்களிலும் ஹைனெஸ் சிபி350 பைக்குகளை கிடைக்க செய்தால், அதன் விற்பனை நன்றாக உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதற்கிடையே ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கின் போட்டியாளர்களில் ஒன்றான ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் கடந்த நவம்பர் மாதம் 7,031 யூனிட்கள் என்ற சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கும் புதுவரவுதான். கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில்தான் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் விற்பனைக்கு வந்தது. அதே சமயம் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கின் நேரடி போட்டியாளரான ராயல் என்பீல்டு கிளாசிக் 350 கடந்த நவம்பர் மாதம் 39,391 யூனிட்கள் என்ற விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

ஆனால் கடந்த அக்டோபர் மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் 41,953 கிளாசிக் 350 பைக்குகளை விற்பனை செய்திருந்தது. இது 6.11 சதவீத வீழ்ச்சியாகும். ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குகளின் விற்பனை குறைந்துள்ளதற்கு ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிளின் வருகையும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஹைனெஸ் சிபி350 பைக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், ஹோண்டா நிறுவனம் எடுத்து வரும் முயற்சிகள் காரணமாக காத்திருப்பு காலம் தற்போது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. டெல்லி போன்ற ஒரு சில நகரங்களில் இந்த பைக்கிற்கு வெறும் 15-20 நாட்கள் மட்டுமே காத்திருப்பு காலம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் சென்னையில் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கிற்கான காத்திருப்பு காலம் சுமார் ஒரு மாதம் என்ற அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே நீங்கள் உடனடியாக முன்பதிவு செய்தால் பொங்கல் பண்டிகை சமயத்தில் பைக்கை டெலிவரி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பொதுவாக காத்திருப்பு காலமானது, நகரங்கள் மற்றும் வேரியண்ட்களை பொறுத்து மாறுபடும்.

எனவே துல்லியமான தகவல்களுக்கு உங்கள் அருகில் உள்ள ஹோண்டா பிக்விங் டீலர்ஷிப்களை அணுகலாம். ஹோண்டா நிறுவனம் தற்போது தனது பிரீமியம் பிக்விங் டீலர்ஷிப்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளது. வெகு சமீபத்தில் கூட கோவையில் ஹோண்டா பிக்விங் டீலர்ஷிப் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக