Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 24 டிசம்பர், 2020

தாய்ப்பால் தரும் போது இந்த 4 கீரையை மறந்துடாதீங்க, தாய்ப்பாலும் அதிகரிக்கும், சத்தும் கிடைக்கும்!

 

பிரசவித்த பெண்கள் கர்ப்ப காலம் போன்றே தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் கீரைகளை அதிகம் சேர்க்க வேண்டும்.

பிறந்த குழந்தைக்கு முதல் ஆறுமாதங்கள் வரை எந்த இணை உணவுமே இல்லாமல் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்றுதான் மருத்துவர்களும் ஊட்டச்சத்து நிபுணர்களும் வலியுறுத்துகிறார்கள். ஆனால் தற்போதைய சூழலில் பெண்கள் கர்ப்பகாலத்திலேயே பலவீனமாகிவிடுகிறார்கள். பிரசவகாலத்தில் இது அதிகமாகிறது. அதற்கு பிறகு தாய்ப்பால் கொடுக்கும் போதும் தாய் சேய் இருவருக்கும் ஊட்டச்சத்து பற்றாக்குறையாவதும் உண்டு. இதனால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி பெறுவதில் சிக்கலாகிறது. தாயின் உடல் தேறுவதும் தாமதமாகிறது. அதோடு குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் கிடைப்பதும் சிக்கலாகிறது.

பிரசவத்துக்கு பிறகு தாய் சேய் இருவருமே உடலளவில் அதிக ஆரோக்கியம் பெற உணவு தான் உதவுகிறது. அந்த வகையில் உணவில் தினம் ஒரு கீரை சாப்பிடுவதன் மூலம் தாய் சேய் இருவருக்குமே நிறைவான ஆரோக்கியம் கிடைக்கும். அப்படி சேர்க்க வேண்டிய கீரைகள் குறித்து தான் பார்க்க போகிறோம்
.

​தாய்ப்பால் சுரப்பு

இயற்கையான முறையில் தாய்ப்பால் சுரக்க கர்ப்பகாலம் முதலே பெண்கள் உடல் ஆரோக்கியம் குறைபாடில்லாமல் வைத்திருக்க வேண்டும். பிரசவத்துக்கு பிறகு தாயின் மார்பகத்தில் பால் சேமிக்காது. ஆனால் தாயின் மார்பக சுரப்புகள் கொழுப்பாக சேமித்துவைக்கப்படுகிறது. குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் போது இந்த கொழுப்பானது அத்தியாவசிய அமினோ அமிலங்களை புரதம் மற்றும் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ், கால்சியம் சேர்த்து பாலாக சுரக்கிறது.

ப்ரொலாக்டின் என்னும் சுரப்பு மார்பகத்தை தூண்ட செய்கிறது. ஆக்ஸிடோசின் என்னும் பெண் ஹார்மோன் கொழுப்பை பாலாக மாற்றி வெளியேற்றுகிறது. இந்த ஹார்மோன்கள் சீராக செயல்படும் வரையில் தாய்ப்பால் சுரப்பும் சீராக இருக்கு. வேகமாக இருக்கும். வெகு அரிதாக சில பெண்களுக்கு ஹார்மோன் சுரப்பில் பிரச்சனை உண்டாகும் போது தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் கிடைக்காது. அப்படி தாய்ப்பால் சுரக்க வேண்டிய சத்தான உணவு பொருள்களில் மிக முக்கியமானது கீரை வகைகள். தினம் ஒரு கீரை நிச்சயம் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும்.

​முருங்கைக்கீரை

முருங்கைக்கீரை மிக நன்மை அளிக்க கூடிய கீரை. எளிதாக எல்லா இடங்களிலும் இவை கிடைக்கவும் செய்யும். இரும்புச்சத்து நிறைந்த கீரை. கர்ப்பகாலத்தில் இரும்புச்சத்து குறைபாடு, ரத்த சோகையை போக்கி நல்ல ரத்தம் உருவாக்கும் கீரை பிரசவத்துக்கு பிறகு தாய்ப்பால் சுரப்பிலும் அதிக நன்மையை தருகிறது. பிரசவத்துக்கு பிறகு பெண்கள் விரைவாக உடல் பலம் பெற இது உதவுகிறது.

முருங்கைக்கீரையை பறித்து இலைகளை தனியாக எடுத்து ஒருகப் அளவு வைக்கவும். பூக்கள் இருந்தாலும் சேர்க்கலாம். 5 டீஸ்பூன் அளவு துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பை சேர்த்து வேகவைத்து எடுக்கவும். வாணலியில் இலேசாக எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து, காரமில்லாத வரமிளகாய் சேர்த்து கால் கப் நறுக்கிய சாம்பார் வெங்காயம் போட்டு வதக்கி கீரையை சேர்க்கவும்.

கீரை வேகும் அளவு இலேசாக தன்ணீர் விட்டு 15 நிமிடங்கள் மிதமான தியில் வைத்து இறக்கும் போது பருப்பு, உப்பு சேர்த்து இறக்கவும். கீரையை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இது மலச்சிக்கலையும் தீர்க்கும். வெகு சிலருக்கு இந்த கீரை ஒவ்வாமையை உண்டாக்க வாய்ப்புண்டு என்பதால் அவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

அரைக்கீரை

அரைக்கீரை அனைத்துவகை சத்துக்களையும் கொண்டுள்ளது. தங்கச்சத்தும், இரும்புச்சத்தும் அதிகமாகவே இதில் உள்ளது. மேலும் இதில் புரதம், சுண்ணாம்புச்சத்தும் உள்ளது. மகப்பேறு காலங்களில் இருக்கும் பெண்களுக்கு மட்டும் அல்லாமல் பிரசவக்காலத்துக்கு பிறகும் நோய்கள் வராமல் தடுக்க உதவும் உணவாக இருக்கிறது.

சளி, இருமல் தவிர்க்கவும், மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடவும் இவை உதவும். பிரசவக்காலத்துக்கு பிறகு பெண்கள் இழந்த சக்தியையும், பலத்தையும் இவை தருகிறது. உடல் பலவீனத்தை போக்குவதில் இவை வேகமாக செயல்படுகிறது. இடுப்பு எலும்புகளை வலுப்படுத்துகிறது.

அரைக்கீரையை மென்மையான காம்புகளோடு சேர்த்து நறுக்கி பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு போல் செய்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். மசித்தும் சாப்பிடலாம். தாய்ப்பால் மிக மிக குறைவாக இருக்கும் பெண்கள் அரைக்கீரையோடு பூண்டு பல்லையும் சேர்த்து சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பு நிச்சயம்.

​பொன்னாங்கண்ணி கீரை

மின்னும் மேனி பொன்னாங்கண்ணி என்று சொன்னாலும் இந்த கீரையில் அதிக அளவு புரதமும், மாவுச்சத்தும், வைட்டமின்களும் நிறைந்திருக்கிறது. இது ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்க செய்வதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கிறது.

பொன்னாங்கண்ணியில் சிவப்பு பொன்னாங்கண்ணி, பச்சை பொன்னாங்கண்ணி இரண்டுமே உண்டு. இதை தேங்காய் சேர்த்து சாப்பிடுவது வழக்கம் என்றாலும் தேங்காய் ஜீரணத்தை தாமதமாக்கும். குழந்தைக்கு பால் கக்கும் தன்மை அதிகரிக்கும்.

பொன்னாங்கண்ணி கீரையை சிறு துண்டுகளாக நறுக்கி பூண்டு பல், சாம்பார் வெங்காயம் சேர்த்து இலேசாக காரம் சேர்த்து வேகவிட்டு மண்சட்டியிலேயே கடைந்து விடவும். இதை சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். காலை, இரவு வேளை தவிர்த்து மதியம் ஒரு வேளை மட்டும் இதை எடுத்துகொள்ளலாம்.

​அவுத்திக்கீரை

தாய்ப்பால் சுரக்கும் தாய்மார்களுக்கு தேடி வாங்கித்தரும் பொருள் அகத்திக்கீரை சற்றே கசப்பு நிறைந்த பொருள் இருந்தாலும் இது தாய்ப்பால் சுரப்புக்கு பெரிதும் உதவும். இது வயிற்றை சுத்தம் செய்ய கூடிய பொருள். செரிமானம் வெகு தாமதமாக ஆக கூடும்.

அகத்திக்கீரையை சுத்தம் செய்து நன்றாக அலசி விடவும். இதை அரிசி களைந்த நீரில் வேகவைத்து பொரிக்க வேண்டும். இது இரண்டு மடங்கு சத்து கொடுக்ககூடியவை. அரிசி கழுவிய நீர் என்பதால் இது கசப்பு சுவையை குறைக்க கூடியவை. அகத்திக்கீரை நன்மை செய்யகூடிய அளவுக்கு தீமையும் கொடுக்கும்.

அதனால் இந்த கீரையை தினசரி எடுக்காமல் பத்து நாட்களுக்கு ஒரு முறை எடுக்கலாம். அதே நேரம் இது செரிமானத்தை தாமதமாக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே போன்று இது வாயுவை உண்டாக்கும் என்பதால் சீரகம், பெருங்காயம் சேர்த்து சமைக்க வேண்டும்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக