புகைப்படத்தில் இருக்கும் ஸ்டைலில் புதிய மினிபைக் ஒன்றை ஹோண்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
ஹோண்டா நிறுவனம் முன்னதாக தயாரித்து வந்த மிக பழைமையான இருசக்கர வாகனம் ஒன்றிற்கு மீண்டும் உயிர்ப்பளிக்க திட்டமிட்டுள்ளது. எஸ்டி 125 எனும் மாடலை மீண்டும் நவீன ஸ்டைல் மற்றும் வசதிகளுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்ய அது திட்டமிட்டிருக்கின்றது. இந்த இருசக்கர வாகனத்தின் உற்பத்தி, விற்பனை என அனைத்து நடவடிக்கைகளையுமே இந்நிறுவனம் கடந்த சில தசாப்தங்களுக்கு முன்னரே கைவிட்டிருந்தது.
இந்நிலையில், மீண்டும் இந்த ஸ்கூட்டரின் தயாரிப்பு பணியை அது தொடங்க இருக்கின்றது. பிரத்யேக வெளிநாடுகளில் மட்டுமே இதனை விற்பனைச் செய்ய ஹோண்டா திட்டமிட்டிருக்கின்றது. இதன்படி, அமெரிக்காவில் எஸ்டி 50, எஸ்டி 70 மற்றும் எஸ்டி 90 ஆகிய மாடல்களில் இந்த இருசக்கர வாகனத்தை அது அறிமுகம் செய்ய இருக்கின்றது.
அமெரிக்காவில் மட்டுமின்றி மேலும் சில நாடுகளிலும் இந்த பழைமையான இருசக்கர வாகனத்தை ஹோண்டா களமிறக்க இருக்கின்றது. அந்தவகையில், ஐரோப்பா சந்தையில் எஸ்டி 125 என்ற பெயரிலும், தனது சொந்த நாடான ஜப்பானில் டேக்ஸ் (Dax) என்ற பெயரிலும் அது அறிமுகமாக உள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பழைமையான எஸ்டி125 இருசக்கர வாகனத்தின் தயாரிப்பை ஹோண்டா தூசி தட்டத் தொடங்கியுள்ளது. இது பழைமையான தோற்றத்தில் இருந்தாலும் நவீன யுகத்திற்கு ஏற்ற பிரத்யேக வசதிகளைக் கொண்டே இது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை உறுதி செய்யும் வகையிலேயே தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் உள்ளன.
இந்த இருசக்கர வாகனத்தை ஸ்கூட்டர் மற்றும் மொபட் ரகத்தைச் சாராத ஓர் மாடலாகும். இதனை மினி-பைக் என்றே உலக வாகனச் சந்தை அழைக்கின்றது. இதற்கேற்ப மிகவும் கவர்ச்சியான உருவத்தை இந்த வாகனம் பெற்றிருக்கின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் தற்போது விற்பனையில் இருக்கும் எந்தவொரு வாகனத்தையும் இம்மாதிரியான தோற்றத்தில் பார்ப்பது மிக மிக கடினம்.
புதிய டி-போன் வடிவிலான ஸ்டீல் ஃபிரேம்களே இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்துடன், ஒற்றை நீளமா இருக்கை, மேலோங்கிய சைலென்சர், குரங்கு ஸ்டைலிலான சஸ்பென்ஷன் மற்றும் கொழுத்த டயர்கள் இந்த வாகனத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதில், 125சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினையே ஹோண்டா பொருத்த இருக்கின்றது.
இதனை களமிறக்குவதற்கு செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் நிறுவனம் செய்து முடித்திருக்கின்றது. அதாவது, டிரேட்மார்க் உரிமம் பெறுவது உள்ளிட்ட அனைத்தையும் அது முன்கூட்டியே பெற்றுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்தே புதுமுக இருசக்கர வாகனத்தின் அறிமுகம் பற்றிய தகவல் வெளியுலகிற்கு தெரியவந்திருக்கின்றது.
மினி பைக்குகளுக்கான வரவேற்பு இந்தியாவில் மிகக் குறைவு. இதற்கு, ஹோண்டாவின் நேவி மொபட் பெற்ற மிகப்பெரிய தோல்வியே மிகப் பெரிய சான்று. எனவே இந்த மினி பைக்கின் இந்திய வருகை சாத்தியமில்லாத ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக