தேவஸ்தான ஊழியர்கள் மீது குற்றம்சாட்டி ஸ்ரீவானி ட்ரஸ்ட் பக்தர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததால் திருமலையில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக ஸ்ரீவானி ட்ரஸ்ட் தரிசன டிக்கெட்கள் ரூ.11,000 என்ற கட்டணத்தில் விற்கப்பட்டுள்ளன. இந்த டிக்கெட்களை வாங்கிக் கொண்டு நேற்றைய தினம் திருமலைக்கு பக்தர்கள் வருகை புரிந்தனர். அப்போது சாமி தரிசனம் செய்ய சிறப்பு வரிசையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சூழலில் ஜெயா - விஜயா பகுதியை தாண்டி உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த பக்தர்கள் தங்களை உள்ளே அனுமதிக்குமாறு தேவஸ்தான ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே
காவல்துறைகளின் உதவியுடன் சம்பந்தப்பட்ட பக்தர்களை தரதரவென இழுத்து வந்து வெளியே தள்ளியிருக்கின்றனர்.
இதனால் கோபமடைந்த பக்தர்கள் தேவஸ்தான நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி பாதிக்கப்பட்ட பக்தர்கள் கூறுகையில், ஸ்ரீவானி ட்ரஸ்ட் விஐபி தரிசனத்திற்கு
ரூ.11,000 கொடுத்து டிக்கெட் வாங்கி வந்துள்ளோம்.
ஆனால் உரிய சலுகைகளை
அளிக்காமல் தேவஸ்தான நிர்வாகம் ஏமாற்றியுள்ளது.
அப்படியெனில் எங்களுக்கும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்று வருபவர்களுக்கும்
எந்த வித்தியாசமும் இல்லையா? அவர்களுக்கு அளிக்கும் அதே சலுகைகள் தான் வழங்கப்பட்டிருக்கின்றன.
ஸ்ரீவானி ட்ரஸ்ட் தரிசனத்தின் பெருமையை குலைத்துவிட்டனர். பெண்கள், குழந்தைகள் என்று
கூட பாராமல் எங்களை இழுத்து வெளியே தள்ளியிருக்கின்றனர்.
திருமலையில் கோவிட்-19 வழிகாட்டுதல்கள் மிகத் தீவிரமாக அமல்படுத்தியிருப்பதாக
தேவஸ்தான நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் உண்மையில் அப்படியெல்லாம் எதுவும் செய்யவில்லை
என்று குற்றம்சாட்டியுள்ளனர். திருமலையில் பக்தர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருவதை அறிந்ததிருமலை 2 டவுன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
உடனே அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதுபற்றி திருப்பதி திருமலை
தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டியிடம் கேட்ட போது, ஸ்ரீவானி பக்தர்கள் அளித்த புகார்
தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளேன். எங்கள் தரப்பில் யார் தவறு செய்திருந்தாலும்
அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக