அமெரிக்காவின் மிகப்பெரிய விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங், பெங்களூரில் விமானக் கட்டுமான தளத்தை அமைக்கத் திட்டமிட்டு 2 வருடங்களுக்கு முன்பு கர்நாடக அரசிடம் ஒப்புதல் பெற்று தனது பணிகளைத் துவங்கிய நிலையில், தற்போது இத்திட்டத்தைக் கைவிட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதனால் இந்திய விமானப் போக்குவரத்து மற்றும் வர்த்தகச் சந்தை ஒரு மிகப்பெரிய வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு பெறும் ஆதாரத்தை இழந்துள்ளது.
போயிங் நிறுவனம்
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு உலக நாடுகளுக்கு விமான, ராக்கெட், செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு கருவிகள், ஏவுகணைகள் எனப் பலவற்றைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் உலகின் மிகப்பெரிய விமானக் கட்டுமான நிறுவனமாகவும், 2வது பெரிய டிபென்ஸ் கான்டிராக்டர் நிறுவனமாகவும் விளங்குகிறது.
கொரோனா பாதிப்பு
இந்நிலையில் போயிங் தனது வர்த்தகம் மற்றும் உற்பத்தியை விரிவாக்கம் செய்ய இந்தியாவில் பெங்களூரில் புதிதாக விமானக் கட்டுமான தளத்தை அமைக்க முடிவு செய்தது.
ஆனால் கொரோனா பாதிப்பின் எதிரொலியாக இந்தியா மற்றும் உலக நாடுகளில் விமானங்களின் தேவை அதிகளவில் குறைந்துள்ள காரணத்திற்காக உற்பத்தி தளத்தை அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டுள்ளது.
இந்தியாவைக் குறிவைத்த போயிங்
உலகில் வேகமாக வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்து சந்தை கொண்டு இந்தியாவைக் குறிவைத்து, அதிகளவிலான வர்த்தகத்தையும், சிறப்பான உற்பத்தி தளத்தையும் அமைக்க முடியும் என்றே போயிங் பெரும் தொகையை முதலீடு செய்யத் தயாரானது. ஆனால் கொரோனா பாதிப்புப் போயிங் முடிவை மாற்றிவிட்டது.
உற்பத்தி தளம்
2 வருடங்களுக்கு முன்பு கர்நாடக அரசு விமான உற்பத்தி தளத்தை அமைக்கப் போயிங் நிறுவனத்திற்குச் சுமார் 36 ஏக்கர் நிலத்தைப் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் ஏரோஸ்பேஸ் பார்க்-ல் ஒதுக்கியது. இதற்காகப் போயிங் சுமார் 1,150 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்தது
கர்நாடக அரசு ஒப்புதல்
போயிங் நிறுவனம் உற்பத்தி திட்டத்தைக் கைவிட்ட நிலையில் இந்த 36 ஏக்கர் தளத்தை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்காகப் பயன்படுத்த போயிங் முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் மாற்றம் குறித்துப் போயிங் நிறுவனம் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையிலான state high level clearance committee (SHLCC) குழுவிடம் தெரிவித்த நிலையில், இக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய திட்டம்
இதேவேளையில் கர்நாடக அரசு புதிதாக இம்மாநிலத்தில் புதிதாக வர்த்தக துவங்குவோருக்குச் சிறப்பான மற்றும் எளிமையான தளத்தை அமைத்துக்கொடுக்கும் பொருட்டு affidavit based clearance (ABC) என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் படி தேர்வு செய்யப்பட்ட 15 துறை சார்ந்த நிறுவனங்கள், அமைப்புகள், உற்பத்தி நிறுவனங்கள் உடனடி ஒப்புதல் பெறத் தகுதி பெறுவார்கள்.
26,659 கோடி ரூபாய் முதலீடு
போயிங் அமெரிக்காவை அடுத்து பெரிய தொழிற்சாலையை இந்தியாவில் அமைக்க வேண்டும் என திட்டத்துடன் பெங்களூர் திட்டத்தை கையில் எடுத்தது. போயிங் தொழிற்சாலை தொடர்புடைய 5 திட்டங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் போயிங் சுமார் 26,659 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்ய தயரானது.
பெரும் இழப்பு
இதன் மூலம் பெங்களூரு தொழிற்சாலையில் மட்டும் சுமார் 13,341 வேலைவாய்ப்புகள் உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா-வால் ஏற்பட்ட வர்த்தக பாதிப்பால் போயிங் தனது முயற்சியை கைவிட்டுள்ளது. இது கர்நாடாகவிற்கு பெரும் இழப்பாக உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக